மகிழ்ச்சி
A.C.டிசில்வா
மகிழ்ச்சி.... என்றால் என்ன ஆங்கிலத்தில் Happiness எனப் பொருள்படுகிறது. பணப்பையில் இருக்கும் பணம், நிலத்திற்குள் மறைந்து இருக்கும் விலைமதிப்பற்ற புதையல். தாயின் கைப்பக்குவத்தால் படைக்கப்பட்டுப் பானைக்குள் இருக்கும் சுவைமிகு அமுது -உணவு.... என எதுவும் உங்கள் பார்வையால், செயல்களால் அடையாளப் படுத்தப்படும் வரை; அதனால் கிடைக்க வேண்டிய முழுப் பயன் - உங்களுக்கோ பிறருக்கோ கிடைக்க வாய்ப்பு கிடையாது. எதுவரை நீங்கள் அவற்றை எடுத்துப் பயன்படுத்தி *அனுபவித்து* நிறைவு பெறாதவர்களாக இருக்கிறீர்களோ அதுவரை அவை அவைகளாவே அங்கேயே நிலை நிறுத்தப்படும்.
கிறிஸ்துவும் அப்படித்தான்.
5000 பேருக்குப் பகிரப்படாதவரை அவை வெறும் ஐந்து அப்பங்களே... பகிரப்பட்டபட்டபோது அவை அப்பமல்ல, அம்மனிதர்களின் வாழ்வாதாரமாக; உயிர்தரும் உணவு ஆயிற்று. வெளிப்படுத்தப்பட்ட விலைமதிப்பற்ற புதையல் மாபெரும் செல்வமாயிற்று. இரண்டு வெள்ளிக் காசுகளே ஆனாலும் முழுமையான அர்ப்பணம் ஆனபோது அஃது ஒப்பற்ற காணிக்கை ஆனது. ஆக எதுவும் வெளிக் கொணர்ந்து பயன்படாதவரை, அனுபவிக்க முடியாத வரை அவைகளின் மகத்துவம் பயன்கள்- குறிக்கோள் முழுமை அடைவதில்லை.
கிறிஸ்துவின் வார்த்தைப்படியும் அவர் உலக மைந்தர்களை இரண்டு நிலைகளில் மட்டும் தெளிவாக உறுதியாக அடையாளப்படுத்த விரும்புகின்றார்.
1) நீங்கள் உலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்...என்றும் ....
2). நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கின்றீர்கள் என்றும் அறிவுறுத்துகின்றார்.
இந்த
இரண்டு- கொடுக்கப்பட்ட, அல்லது வாழ வேண்டிய நிலைகளும்; உணவில் சுவையுட்டப் பயன்படாத உப்பாகவோ, இருளை அகற்றாத ஒளியாகவோ இருக்க முடியாது. உணவு உப்பையும் இருள் ஒளியையும் இரண்டறக் கலந்து அனுபவிக்காமல் அதன் மகத்துவத்தைப் பறைசாற்ற முடியாது. சக மனிதருக்குச் சுவை ஊட்டப் பயன்படும் உப்பு சாரம்(உப்புத்தன்மை) உள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும். இல்லையெனில் அவை வீதிகளில் கொட்டப்பட்டு.... மனிதர்களால் மிதிபடும்.
இரண்டாவதாக... ஒளி பிறர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மரக்காலின் உச்சத்தில் அமர்ந்து ஒளி வீசும் விளக்காக வாழவே வாய்ப்பு பெற்றிருக்கிறது. தவறும் பட்சத்தில் ஒளி தராத விளக்கு உச்சத்தில் அல்ல நீச்சத்தில் இருளில் வைக்கப்படும்.
முடிவாக நாம் கையில் எடுத்திருக்கும் வாழ்வாகக் கொண்டிருக்கும் கிறிஸ்து பகிரப்படும் போதும் அனுபவிக்க அழைப்பு பெறும் போதும் மனிதத்திற்கு மேலும் சுவை தருபவராகவும் தனி மனிதனை இறைவன்முன் அடையாளப்படுத்தும் ஒளியாகவும் இருக்கின்றார்- இருப்பார் என்பதை யாரும் உணராமல் இருக்க முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.
எப்படி உப்பு சாரமுள்ளதாகவும் ஒளி மிகுந்த பிரகாசம் நிறைந்ததாகவும் இருந்தாலும் பிறர் அவைகளைச் சுவைத்து வெளிச்சத்தில் வாழ்ந்து மகிமைப்படுத்தும்போது மட்டுமே அவைகள் மேலும் சிறப்படைகின்றன. ஆக நமக்குள் இருக்கும் கிறிஸ்துவை நாம் சுவைத்து அனுபவித்து அடையாளப்படுத்தும்போது மட்டுமே தூய ஆவியின் கொடையான மகிழ்ச்சி உங்களில் உங்களுக்குள்ளும் - உங்களால் பிறர் உள்ளும் நிறைந்திருக்கும். அமைதியாக ஆனந்தமாகக் கிறிஸ்துவை அனுபவிப்போம். முடிவாக மகிழ்ச்சி மனிதனுக்கும் மண்ணுக்கும் உரித்தாகட்டும். நிறைவாக உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும்.