நமக்காக இயேசு இந்த உலகத்தில் ஏன் பிறந்தார்...
ஜோசப்பின் பிரான்சிஸ்
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வந்தது ஏன் என்று யாரிடமும் கேட்டால் அவர்கள் சொல்வது என்னவாக இருக்கும்? நிச்சயமாக, அவர் நமக்கு மீட்பளிக்க வந்தார் என்று சொல்வோம். மீட்பு என்றால் என்ன? என்று நாம் எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம். மீட்பில் நமக்கு உடல் நலம், மனநலம், ஆன்ம நலம், விடுதலை, பாதுகாப்பு, அமைதி, சமாதானம் என்று அனைத்து நலன்களும் உள்ளது. நம் சாபம் அழிக்கப்பட்டு பாவம் மன்னிக்கப்பட்டு, நாம் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம்.
இதில் முக்கியமான ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பகையை உடைத்தெறிய இயேசு வந்தார்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாவம் சுவராக நின்றது. மனிதனின் பாவத்திற்கான தண்டனையை நிறைவேற்ற இயேசு மனித உரு எடுத்து வந்தார். மனிதனை மீட்க இயேசு மனித உரு எடுக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் கடவுள் ஆதாமை மனிதனாகப் படைத்து அவனுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார். கடவுள் மனிதனை நித்திய காலமாய் அவரோடு இருக்கும்படி மனிதனை எந்தக் குறையுமின்றி தன்னைப் போலப் படைத்தார். ஆனால் மனிதன் பாவம் செய்தான். “அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். (தொடக்கநூல் 1:26) இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இருந்தும் கடவுளைச் சந்தேகித்தவனாகப் பாவம் செய்தான். “கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.” தொடக்க நூல் 1:28
“விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.” திருப்பாடல் 115:16) அதிகாரம் கொடுக்கப்பட்டும் அறியாது பாவம் செய்தான். அந்தப் பாவம் அவனுக்கு எதைக் கொண்டு வந்தது. சரீர மரணத்தைக் கொண்டுவந்தது. ஆவிக்குரிய மரணத்தை, சாபத்தை, நோயை, எல்லாவிதமான அழிவுகளையும் கொண்டு வந்தது. படைத்தவை அனைத்தும் நலன் பயப்பவையாக இருந்தது. இதைத் தொடக்கநூல் 1:11ல் காணலாம். “அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.”
ஆனால் மனிதன் பாவம் செய்த மாத்திரத்தில் தொடக்கநூல் 3:18ல் “முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.” வாசிப்பது போல் சாபம் வந்தது. “பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.” உரோமர் 6:23ல் சொல்லப்பட்டது பாவத்திற்கு தண்டனை மரணம், கடவுள் மனிதனிடம் (ஆதாமிடம்) தொடக்கநூல் 2:17ல் சொல்லியது போல் ”ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்.” அவன் சாகக்கடவான். கடவுள் தான் பேசிய வார்த்தையை மாற்றமாட்டார். ”என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.” (திருப்பாடல் 89:34)
அவர் சொல்வதை செய்பவர். வார்த்தை மாறாதவர். குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட்டால்தான் மனிதர்களின் பாவம் கழுவப்படும். ஆகவே இயேசு மனிதனாகப் பிறந்து மனிதன் செய்த பாவத்தின் தண்டனையை ஏற்றக் கொண்டு மனிதனை விடுவிக்க அவர் தம் இரத்தத்தை சிந்த வேண்டியதாயிற்று. “உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை.“(எபிரேயர் 9:22)
அவர் நம்மீது கொண்ட அன்பால் இங்கு இந்த உலகத்திற்கு வந்தார், நம்மை மீட்க... “இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!” எபேசியர் (3:18,19)
கடவுள் பாவத்தை வெறுக்கிறார். ஏன்? ஏனென்றால் பாவம் நம்மை அழித்துவிடும். கடவுள் நம்மை அதிகமாக நேசிப்பதால் இயேசு கிறிஸ்து இங்கு வந்து நமக்காகப் பாடுபட்டார். இரத்தம் சிந்தினார். “சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.”1 பேதுரு 2:24 சொன்னபடி அவர் நம்முடைய பாவங்களை அவர் உடலில் சுமந்து அவருடைய நீதியினால் நாம் வாழும்படி செய்தார். நாம் கடவுளுக்குப் பிள்ளைகள் ஆகும்படி செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் வருகை, அவருடைய பிறப்பு பற்றிய நற்செய்தி அங்குள்ள இடையர்களுக்குக் கொடுக்கப்பட்டது. “அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” (லூக்கா 2:8,9,10) இங்குக் கொடுக்கப்படும் நற்செய்தி என்ன? அவர் பிறந்தது நற்செய்தி அல்ல. அவர் நம்மை மீட்க வந்தது தான் நற்செய்தி. நாம் ஒவ்வொருவரும் பாவத்தினால் நரகம் போக வேண்டியதிலிருந்து நம்மை மீட்க வந்துள்ளார். அவர் தான் நம் மீட்பர் என்பது தான் நற்செய்தி.
மத்தேயு 1:21 “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்” இந்த வசனம் இன்னும் தெளிவாக நமக்குச் சொல்கிறது. அவர் நம் பாவங்களை நீக்கி நம்மை மீட்பார் என்று. (லூக்கா 2:14) விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது. அந்த வசனத்தில் நாம் இன்று தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. இந்த வார்த்தை பூமியில் சமாதானம் என்பது தேசத்திற்கு தேசம் மத்தியில் ஏற்படுகின்ற சமாதானமோ, மனிதனுக்கு மனிதன் மீது ஏற்படும் சமாதானமோ அல்ல. மாறாகக் கடவுளுக்கும் மனிதனுக்கும் மத்தியில் ஏற்படும் சமாதானம் பற்றிச் சொல்லப்படுகின்றது. கிறிஸ்துவினால் நாம் பெற்றுக் கொள்ளும் சமாதானமும், அன்பையும் குறித்தே சொல்லப்படுகிறது.
பிறந்த இயேசுவிற்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்குறித்த காரணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். அவைகள் ”பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும்” ஆகும்.
பொன் அவரை அரசராகக் குறிக்கின்றது. காரணம் இயேசு கிறிஸ்துவே அரசர், அவர் அரசராகப் பிறந்து இருக்கின்றார் என்பதை குறிக்கிறது. சாம்பிராணி குருத்துவத்தைக் குறிக்கின்றது. இயேசு கிறிஸ்துவே முதன்மை குரு என்பதை அவர் குழந்தையாக இருக்கும்பொழுதே இதைச் சுட்டிக் காட்ட காட்டுகின்றது. வெள்ளைப் போளமும் அவரது இறப்பைக் குறிக்கின்றது. இது பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள். இஃது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.(யோவான் 19:39,40)
மற்றொரு காரணம் மாற்கு 5:23 வசனம் சொல்கிறது ”அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.” ஏனெனில் அது ஒரு வலிநிவாரனி.” நம் பாவத்திற்கு தண்டனை அவர் பெற்றே ஆக வேண்டும் இரத்தம் சிந்தியே ஆக வேண்டும். நம் பாவத்தைக் கழுவ, அந்த வேதனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்புப் பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரைப் பணையமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார். இயேசுவின் குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட்டால்தான் நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து மன்னிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ”அப்பா பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுகிறோம்.
நம்மை நீதிமான்களாக்கி நாம் இழந்து போன உரிமைகளைக் கொடுப்பதற்காகவே இயேசு இந்த உலகத்தில் பிறந்தார். இன்றைக்கு இயேசு கிறிஸ்து நமக்காக எதற்குப் பிறந்தார் என்று அறிந்துக்கொண்ட நாம் அவருக்கு இன்றைய கிறிஸ்து பிறப்பு நன்னாளில் எதைக் கொடுக்கப் போகிறோம்? இயேசு எனக்காகவே பிறந்தார், எனக்காகவே பாடுகள் படவும், என் பாவத்தைப் போக்கவும், எனக்கு விடுதலைக் கொடுக்கவும் வந்தார் என்பதை விசுவசிக்க வேண்டும். அவர் பாடுகளினால் நான் நோயிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கின்றேன். ஏழ்மையிலிருந்து விடுபடுகின்றேன். பயத்திலிருந்து விடுபடுகிறேன். என் சாபங்களை எல்லாம் அவர் தீர்த்துவிட்டார். பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நான் அவரிடமிருந்து சமாதானத்தையும் அன்பையும் பெற்றுக் கொள்கின்றேன். அவருக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களும் இன்று அவரை விசுவசிக்கும்பொழுது, ஏற்றுக் கொள்ளும்பொழுது நான் பெற்றுக் கொள்கின்றேன் என்பதை அறிந்து உணர்ந்து விசுவசிப்பேன் என்பதே அவருக்கு நாம் கொடுக்கும் பரிசாகும்.
அவர் நம்மிடம் பொன்னோ, பொருளோ எதிர்பார்க்கவில்லை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் 1 சாமுவேல் 15:22 ல் சொல்லப்பட்டதுபோல அப்போது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பைவிட மேலானது!
நம்முடைய கீழ்ப்படிதல், நாம் அவரோடு உறவாடுவது, அவருக்கு நன்றி செலுத்துவது, அவரைப் புகழ்வது இவற்றையே ஆகும். கிறிஸ்மஸ் என்பது எனக்கு ஒரு மீட்பர் உள்ளார் என்பதையும் இக்கொண்டாட்டங்கள் என்பது என்னைத் தண்டனையிலிருந்து விடுவித்துவிட்டார் என்பதே ஆகும். இந்த உண்மைகளை அறிந்தவர்களாய் நாம் வாழ்வோம் பிறருக்கும் எடுத்துரைப்போம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்!