நம்பிக்கையின் மறு பக்கம் அன்னை மரியா

உங்கள் அயலான்

திருஅவையின் கொண்டாட்டங்களில் திருவருகைக்காலத்தில், முதல் ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சியாக நம்பிக்கை நினைவு கூறப்படுகின்றது சாமானியனின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளிலும் தேடல்களிலும் தேங்கி நிற்கும்போது, திருஅவை நமது கண்முன் நம்பிக்கையின் மறுபக்கமாக மரியாளை, அன்னை மரியாளை அலங்காரப் படுத்துகின்றது. அமைதியாக உற்றுப் பார்க்கும்போது நம்பிக்கையின் முழு உயிரோவியமாக அன்னையவள் மனக்கண் முன் நிற்கின்றார். விவிலியத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மரியாள் அடையாளப் படுத்தப்படுகிறார்.

முதலாவதாக அடிமைச் சாசன வாழ்வு.
இறைச் சித்தத்தைத் தனது சித்தமாக்கிய மாண்பு. தான் அடிமையானாலும் தனது எஜமான் இறைவன் என்ற மரியாளின் ஆழ் மனதின் உறுதியுள்ள நம்பிக்கையின் உன்னதத்தை உரக்கச் சொல்லும் உயிரோவியம். நமக்கோ அப்படியே ஆகட்டும் என்ற கீழ்படிதலின் கீழ்த்திசை நட்சத்திரம் அன்னை மரியா.

இரண்டாவதாக 12 வயது பாலகனைத் தேடி பயணித்தது…
வெறும் நம்பிக்கை வீணானது நம்பிக்கையோடு சார்ந்த தொடர்மிகு செயல்கள் மட்டுமே முடிவாக, நல்ல பலன்களை உரித்தாக்கும் என்று உணரச் செய்யும் அன்னை மரியா. காணாமல் போன தனது மகன் இறைவனே ஆனாலும் தனது கடமையின் நிறைவாக அவரைத் தேடி கண்டுபிடிப்பது தனது பொறுப்புள்ள கடமையாகும் என்று செயலால் செய்து காட்டியவர் அன்னை மரியா.

நம்பிக்கை, சலனங்களால் சாய்ந்தாடும்போது ஆலயக் கதவை நங்கூரம் எனப் பற்றிக் கொண்டால் நிலையான அமைதி உரித்தாகும் என்று எருசலேம் ஆலயம் சென்று பாலகனை கண்டு அமைதி அடைந்தவர் அன்னை மரியா.
ஆக நம்பிக்கை - செயல் வடிவமாகும்போது மட்டுமே உயிருள்ளதாக இருக்கும் என்று உணரச் செய்தவர் அன்னை மரியா.

மூன்றாவதாகக் கானாவூர் திருமணத்தில்
காலம் வரவில்லை என்றாலும் கடவுளை வர வைக்க முடியும் என்று செய்து காண்பித்தவர் அன்னை மரியா. எதிர்மறை பதிலானாலும், ஏமாற்றம் கொள்ளக் கூடாது என்று, ஏவல் புரிவோரைப் பணித்தவர் அன்னை மரியா.
பெருமை பாராட்டாமல் - தன்னார்வலராய்ப் பிறர் குறைப் போக்க வேண்டும் என்று வெறும் கல்தொட்டிகளைத் திராட்சை ரச கல்தொட்டிகளாகத் தன் மகன்மீது கொண்ட நம்பிக்கையால் நிரம்ப வைத்தவர் அன்னை மரியா. கொண்ட நம்பிக்கை நங்கூரம் எனில் நானிலத்தில் நன்மைகள் செய்யத் தடை ஏதும் இல்லையெனச் செவ்வனச் செய்து காட்டியவர் அன்னை மரியா.

நான்காவதாக
நம்பிக்கையின் கிளைமூலம் "காத்திருத்தல்" என்பதைத் தன் செயல்களில் கடைபிடித்தவர் அன்னை மரியாள். கூட்டத்தில் ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுக் கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறும் அளவிற்குத் தன்னையே தாழ்த்தித் தன் மகனின் இறைச் சித்தத்திற்கும் இறைப் பணிக்கும் இடையூறு வருவிக்காமல் அவருடைய அழைப்பிற்காகக் காத்திருந்த பெருமை மரியாளின் சொத்து.
எஜமானின் பெருமை என் பெருமை என்று அடக்கத்துடன் …அமரருள் உய்க்கும் - இறைவனில் இணையும் பேரு பெற்றவர் அன்னை மரியாள். விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் இவர்கள் என் தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்" என்று இயேசுவால் பறைசாற்றிக் கட்டியம் கூறப்பட்டவர் அன்னை மரியா. ஆகத் தன்னடக்கமும் தாழ்ச்சியும் அசைகக்க இயலாத நம்பிக்கையின் அழகான, வலிமைமிகு இரு தூண்கள் என உலகறியச் செய்தவர் அன்னை மரியா.

ஐந்தாவதாக
முடிவாகத் தன் துயர் மறுத்து மைந்தன் துயர் போக்கக் கல்வாரியிலும் கடிந்துத் துணைச் சென்றவர் அன்னை மரியா.
துன்பத்தில் தோளோடு தோள் கொடுக்க இயலாவிட்டாலும் தூரத்திலிருந்து ஆதங்கம் உள்ள பார்வையால் ஆறுதலும், துணிவோடு சிலுவையின் அடியில் நின்று இறைமகன் இயேசுவிற்கு மட்டுமல்ல நமக்கும் அவளே தாயென இறைமகனால் அடையாளப்படுத்திடவும், உன்னையும் என்னையும் உலகிற்கு மறு கிறிஸ்து அவனாக/அவளாக வாழ்ந்திட உறவும் உரிமையும் தந்திட அன்னையாகத் தன்னையே ஈந்தவளும் அன்னை மரியா. நெடுந் துயர் பயணத்தின் முடிவாக அன்பு மகனை வளர்த்தெடுக்கும் வாய்ப்பையும் பெற்றவர் அன்னை மரியா. கல்வாரியிலும் அன்னை மரியா இறைச் சித்தத்தோடு இணைந்துப் பயணித்தாளன்றி இடையூறாக நிற்கவில்லை என்பது திண்ணம். இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்பது எப்படி என்பதை அடிமையாய் ஆழமாய்ச் சிலுவை நிழலிலும் அசை போட வைத்தவர் அன்னை மரியா.

நம்பிக்கை என்பது வெறும் எண்ணங்கள் அல்ல மாறாக வாழ்வின் கடைசி மூச்சு வரை நாம் பயணிக்கும் வாழ்வியலின் உயிர்நாடி என்பதை உணர்வோமாக. அந்த "உயிர் நாடி" துடிப்புடன் நிறை வாழ்வுப் பயணத்தைத் தொடர மரியாளைப் போல் ஏற்றுக்கொண்ட நம்பிக்கைக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராகவும் அதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் மிக்கவராகவும் வாழ அழைக்கப்படுகிறோம். அப்படிச் செயல்படும்போது பெருமைக்கு இடம் தராமல் தாழ்ச்சியும் தன்னடக்கம் உள்ளவர்களாகத் தொடர்ந்து துணிவுடனும் தைரியத்துடனும் இன்பத்தில் மட்டுமல்ல மாறாகத் துன்பத்திலும் துணை நின்று, இறைச் சித்தத்தோடு இணைந்து பயணித்து நிறைவாழ்வை அடைவோம்.

விண்ணுலகிலும் இதோ என் மக்கள் என அன்னை மரியாள் நம்மைப் பார்த்துக் கட்டியம் கூற நமது நம்பிக்கை. இறைமகன் இயேசு நமது வாழ்வாகட்டும்

💒👆🎅