கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

திருமதி. மோி கிறிஸ்டோபர்

அன்பார்ந்தவர்களே!
ஆண்டவர் நம் வாழ்வில் ஏராளமான ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் செல்வங்களையும் வளமையையும் கொடுத்திருக்கிறார். இப்பொழுதும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் நம் மேல் கொண்ட அளவில்லாத அன்பினாலும் இரக்கத்தினாலும் இவற்றையெல்லாம் தருகிறார். நமது நன்மைதனத்தினால் அல்ல. ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட நாம் ஆண்டவருக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்கிறோமா? நாம் ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியது நன்றிபலியும், துதிகளும், புகழ்ச்சியுமே. ஆனால் பிறகுக்கு எதையெல்லாம் நாம் கொடுக்கப் போகிறோம். முதலாவதாக, நாம் அறிந்த ஆண்டவரை பிறரும் அறியும்படி செய்ய வேண்டும். புனித பவுல் எழுதிய மடலில் “நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ கேடு!” என்று அழுத்தமாகவும் அழகாகவும் கூறுகிறார்.

அடுத்தபடியாக நமக்கு ஆண்டவர் ஏராளமான தாலந்துகளையும், திறமைகளையும் கொடுத்திருக்கிறார். அந்தத் தாலந்துகளையும், திறமைகளையும் இலவசமாய்ப் பெற்றுக் கொண்ட நாம் அவற்றைப் பிறருடைய உயர்வுக்காகப் பயன்படுத்த வேண்டும். நாம் அவற்றைப் பிறருக்காகப் பயன்படுத்தும்பொழுது இன்னும் அதிகமாக ஆண்டவர் ஆசீர்வாதங்களல் நிரப்புவார்.

அடுத்தபடியாக நாம் பிறருக்குக் கொடுக்கவேண்டியது நமது நேரத்தை! நாம் எப்பொழுதும் சுயநலமாக “நாம், நம் குடும்பம்” என்றே நினைத்துக்கொண்டு வாழ்கிறோம். தேவையில் இருப்போருக்காக நம் நேரத்தைச் செலவு செய்கிறோமா, தனிமையில் இருக்கும் விதவைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், மனநோயாளிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோகள், உறவுகளை இழந்து தவிப்பவர்கள் என்று நாம் எத்தனை முறை தேடிச்சென்று பார்க்கிறோம். ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்கிறோமா?

“சின்னஞ்சிறிய சகோதரர், சகோதரிகளுக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.” மத் 25:40 என்று விவிலியத்தில் இயேசு கூறுகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்திருந்தால் நாமும் தேவையில் உழல்வோருக்காக நமது நேரத்தைக் கொடுத்திருப்போம். பலநேரங்களில் நமக்கு நேரமேயில்லை என்று கூறுகிறோம். தேவையில்லாத காரியங்களில் நம் நேரத்தைச் செலவு செய்வதைவிட ஆண்டவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட பிறமனிதருக்காய் நம் நேரத்தைக் கொடுப்போம்.

கடைசியாக மிகவும் முக்கியமாக நம் செல்வத்தை ஆண்டவர் நமக்கு இலவசமாய்க் கொடுத்த செல்வத்தை, வசதி வாய்ப்புகளைப் பிறருக்கு பகிர்ந்துகொள்வோம். நாம் இந்த உலகிற்கு வரும்பொழுது எதையும் கொண்டுவந்ததில்லை. இப்பொழுது நாம் அனுபவிக்கும் எல்லாச் செல்வமும் ஆண்டவர் நமக்குத் தந்த ஈவுகள். நாம் இவ்வுலகத்தை விட்டுப் போகும் போதும் எதையும் கொண்டுபோக முடியாது. ஆகவே நமக்குக் கிடைத்த செல்வத்தையும் பணத்தையும் பிறருக்கும் கொடுத்து உதவமுயலுவோம்.

1யோவான் 4:20 கண்முன்னே இருக்கும்சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது என்று கூறுகிறார் புனித யோவான்.

ஆகவே பிரியமானவர்களே, வரப்போகும் 2023 ஆம் ஆண்டில் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் அன்பையும், நேரத்தையும், திறமைகளையும், தாலந்துகளையும், நம் செல்வத்தையும் பிறருக்கும் கொடுத்து, ஆண்டவரிடமிருந்து அதிகமான ஆசீர்வாதகளைப் பெற்றுக் கொள்வோம். ஆண்டவருக்குப் பிரியமான சாட்சிய வாழ்க்கை வாழ்வோம்.

💒👆🎅