பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி
"நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது"

சனவரி 31

Mary Rita Schilke Korzan என்ற எழுத்தாளர், தன் அன்னைக்கு நன்றி கூறும் வகையில், 2004ம் ஆண்டு நூலொன்றை வெளியிட்டார். தன் குழந்தைப்பருவத்தில், அன்னை தன் மீது உருவாக்கியத் தாக்கத்தைப் பற்றி, அந்நூலில், ஒரு கவிதை வடித்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு: “When You Thought I Wasn't Looking” - "நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது". சமூக வலைத்தளங்கள் வழியே பல்லாயிரம் உள்ளங்களைக் கவர்ந்த இந்தக் கவிதையின் தமிழாக்கம் இது:

நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நான் வரைந்த  படம் ஒன்றை, குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டிவைத்தாய்;
அடுத்தப்படத்தை வரையும் ஆசை எனக்கு ஏற்பட்டது.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
தெருவில் போன பூனைக்குட்டிக்கு உணவளித்தாய்;
மிருகங்களிடம் அன்பாக இருப்பது நல்லதெனக் கற்றுக்கொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
எனக்குப் பிடித்த 'கேக்' செய்தாய்;
சின்ன, சின்ன விடயங்கள் போதும், அன்பை வெளிப்படுத்த, என்பதைத் தெரிந்துகொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நீ செபம் சொன்னாய்;
கடவுள் இருக்கிறார், அவரிடம் எந்நேரமும் பேசலாம் என்பதை நம்பினேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நீ கண்ணீர் வடித்தாய்;
துன்பமும், கண்ணீரும், வாழ்வில் வருவது இயல்பு என்பதைப் புரிந்துகொண்டேன்.
நான் பார்க்கவில்லை என்று நீ நினைத்தபோது,
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்...
நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு
நீ செய்த அனைத்திற்காகவும் நன்றி, அம்மா...
 ஒரு தாய் உண்மையான மகிழ்ச்சி அடைவது எப்போது?

சனவரி 30

சோழ நாட்டின் பூம்புகாரில் வாழ்ந்துவந்த ஞானசீலர் என்பவர், கல்வியிலும், குணநலனிலும், தான தர்மத்திலும் சிறந்து விளங்கினார். அவருக்குப் பல ஆண்டுகள் கழித்து, ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்த சில மாதங்களிலேயே அவர் உயிர் நீத்தார். குணசீலன் என்ற பெயர் கொண்ட அவன், தன் தந்தையைப் போலவே அனைத்திலும் சிறந்து விளங்கினான். ஞானசீலரின் மகன் என்பதால், அவனுக்கு ஊரில் மதிப்பும், மரியாதையும் கிடைத்தன. குருகுலத்திலும், அவனது அறிவுத் திறமையைக் கண்டு, ஞானசீலரின் மகனும் அறிவாளிதான் எனப் பெருமையாகப் பேசினர். ஆனால், தன் தாய், தன்னை ஒரு வார்த்தைகூட பாராட்டாமல் இருப்பது கண்டு குணசீலன் கவலை கொண்டான். குருகுலவாசத்துக்குப் பின், அவனுக்கு அரண்மனையில் பொறுப்பான பதவி கிடைத்ததால், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. தன் தந்தையைப் போலவே, தான தர்மத்திலும் சிறந்து விளங்கினான். பூம்புகார் முழுவதும், அவனது அறிவுக்கூர்மை பற்றியும், தர்ம குணம் பற்றியும் பெருமையாக பேசப்பட்டது. ஒருமுறை, அரண்மனையில் தீர்க்க முடியாத சிக்கலை, தன் அறிவுக்கூர்மையால் தீர்த்து வைத்தான்.

இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், குணசீலனை நேரில் அழைத்து, தன் தந்தையின் அறிவுக்கூர்மையை குணசீலன் மிஞ்சிவிட்டதாக புகழ்ந்து பேசி பாராட்டினார். அப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த அவனது தாய், தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டினார். இதைக் கண்டு குழப்பம் அடைந்த குணசீலன், "சிறுவயதில் இருந்து என்னை அனைவரும் பாராட்டும்போது, நீங்கள் மட்டும் எதுவும் பேசாமல் இருந்தீர்கள். இப்போது மட்டும் பாராட்டுகிறீர்களே?" எனக் கேட்டான். அதற்கு பதிலளித்த அவனது தாய், 'சிறுவயது முதலே உன் அறிவுக்கூர்மையைப் பார்த்து எல்லாரும் ஞானசீலரின் மகன் என்றே பாராட்டினார்கள். அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த பெருமை எல்லாம் உன் தந்தைக்கே சேரும். இன்று உன்னை, சான்றோன் என்றும், குணசீலனின் தந்தை, ஞானசீலர் என்றும் பாராட்டினார்கள். எனவேதான் இன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்றுதான் நான் உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்' என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்.

இதைதான் திருவள்ளுவரும், 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' எனச் சொல்கிறார்.

ஒரு தாய், தனக்கு மகன் பிறக்கும்போது அடையும் மகிழ்ச்சியைவிட, அவனை அறிஞன் என்றும், நற்குணமுடையவன் என்றும் ஊரார் போற்றும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறார்.
மன்னிப்பைச் சொல்லித்தரும் அன்னையர்

சனவரி 28

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி, ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட ஒரு காணொளித் தொகுப்பு, உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. லிபியா கடற்கரையில் 21 கிறிஸ்தவ இளைஞர்கள் கழுத்து அறுபட்டு கொலையுண்ட காட்சி, அந்த காணொளியில் பதிவாகியிருந்தது. இக்கொடூரத்தைக் கண்ட உலக அரசுகளில் சில, பழிக்குப் பழி என்ற பாணியில் அறிக்கை வெளியிட்டன, செயலாற்றின. ஆனால், இந்தக் கொடூரத்தில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது இளைய மகனும் கூறிய வார்த்தைகள், இவ்வுலகில் இன்னும் மனிதர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையைத் தந்தன.

Beshir என்ற 21 வயது இளைஞனின் அண்ணன்களான, Bishoy, Samuel இருவரும், கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர். "அந்த வீடியோவின் ஒலிப்பதிவை மௌனமாக்காமல், ISIS குழுவினர், அப்படியே வெளியிட்டதால், என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் சொன்னது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று Beshir கூறினார்.

இளையவர் Beshir, அந்த நேர்காணலில், தன் தாயைக் குறித்து சொன்னதும், நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. Bishoy, Samuel என்ற இரு மகன்களையும் பறிகொடுத்த தன் தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால், என்ன செய்வீர்கள்?" என்று Beshir கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று தன் அன்னை கூறியதாக, Beshir தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

மன்னிப்பைச் சொல்லித்தரும் அன்னையர், பேறுபெற்றோர், ஏனெனில், இவ்வுலகம், வெறுப்பில் வெந்துபோகாமல் அவர்கள் காப்பர்.
இறைவனின் சாயலில் தொடர்பவர் தாய்

சனவரி 27

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் (1 கொரிந்தியர் 13:4–7),
என புனித புவுல் கூறுகிறார்.

இதில் அன்பு என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, அதில் அம்மா என்ற பதத்தை இங்குள்ள குணங்களுடன் பொருத்திப் பாருங்கள். எவ்வித முரண்பாடும் தோன்றாது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த குணநலன்கள், அன்பைவிட, அம்மாவுக்கே அதிகம் பொருந்துவதுபோல் தோன்றும். ஏனெனில், அன்பிலெல்லாம் உயர்ந்த அன்பு, தாயிடம்தான் உண்டு. அப்படியானால், கடவுளின் அன்பை என்னச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். அந்த கடவுளின் அன்பிற்கே தாய் அன்பைத்தானே எடுத்துக்காட்டாக முன்வைக்க வேண்டி உள்ளது. மீண்டும் விவிலியத்தை எடுத்து எசயா நூலைப் பார்த்தால், “பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.”(எசாயா 49:15), என வாசிக்கிறோம். 'தாய் மறப்பாளோ', 'இரக்கம் காட்டாதிருப்பாளோ' என்று கேட்பதன் தொனியே நமக்கு உணர்த்துகிறது, அப்படி எந்த தாயும் இருக்கமாட்டார் என்பதை. இங்கு, தாயின் அன்பிலிருந்துதான் நாம் கடவுளின் அன்பை நெருங்கிப் போகிறோம். 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்', அதாவது, கடவுளுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டும் திறனுடன் மானிடர் படைக்கப்பட்டிருப்பதாக விவிலியம் சொல்கிறது (தொடக்கநூல் 1:27). இறைவனின் உன்னத குணங்களுடன் படைக்கப்பட்ட நாம், இன்று பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், அனைத்து உன்னத குணங்களையும் இன்றும் அழியாமல் காப்பாற்றி, தன்னில் செயல்படுத்தி வருபவர் தாய். அந்த அன்பைப் பற்றி புனித பவுல் கூறியதைத்தான், நாம் துவக்கத்தில் குறிப்பிட்டோம்.
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் தமிழ்த்தாய்

சனவரி 26

தன் நிறுவனம் அருகே, தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்துவரும் ஒரு பாட்டி பற்றி நண்பர் ஒருவர், சமூகவலைத்தளம் ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தப் பாட்டி, ஒரு நாளைக்கு பத்து கிலோ மீட்டர் தூரம், தன் சைக்கிளைத் தள்ளிச் சென்று வியாபாரம் செய்கிறார். கம்மங்கூழை, சமையல் வாயு அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று, விறகு அடுப்பில் பானை வைத்து இவரே தயாரிக்கிறார். அந்தப் பாட்டி விற்கும் ஒரு குவளை கம்மங்கூழின் விலை வெறும் ஐந்து ரூபாய்தான். அதனால் அந்தப் பாட்டியிடம், அந்த நண்பர், ஊரே பத்து ரூபாய்க்கு விற்கும்போது, நீங்கள் ஏன் விலையை ஏற்றவில்லை? இவ்வளவு சிரமப்பட்டு, ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள்? என்று, கேட்டார். அதற்கு அந்தப் பாட்டி, என் உழைப்புக்குரிய ஊதியம் இப்போதே கிடைக்கிறது, அதிக இலாபம் எனக்குத் தேவை இல்லை என்று பதில் சொன்னார். இந்தப் பாட்டியின் இந்தப் பதிலும், வியாபரத்தில் இவர் காக்கும் நாணயமும், தன் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என, அந்த நண்பர், தனது பகிர்வில் குறிப்பிட்டுள்ளார். இப்பாட்டி பற்றி வலைத்தளத்தில் வாசித்த சிலர், இவ்வாறு தங்களின் பாராட்டுக்களைப் பதிவுசெய்துள்ளனர்.

வயது ஆனாலும், யாரிடமும் கையேந்தாமல் தான் உழைத்து சாப்பிட வேண்டும் என்று உழைக்கும் அந்த அம்மாவுக்கு ஒரு சல்யூட்.

பெற்றோருக்கு, பசிக்கு உணவு வழங்க மறுக்கும் இந்தக் காலத்தில், என்னால் உழைத்து மூன்று வேளையும் சாப்பிட முடியும் என்று சாதித்துக் கொண்டிருக்கும் தாய்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

இந்த வயதில் ஓர் இளையவரைப்போல் உழைக்கும், என் தமிழ் பாட்டியின் இனிய பணி தொடர நல்வாழ்த்துக்கள்.

நோ்மையாக வாழ்வதற்கு நல்ல மனமும், மனத் துணிவும் மட்டும் போதும் என்று வாழும் இந்தப் பாட்டி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார். நன்றிகள் பலகோடியம்மா..

போதும் என்ற மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், நிம்மதியும், மகிழ்வும், நம் வாழ்வில் நிரந்தரம் என்பதை உணர்ந்த அம்மா, நீவீர் வாழ்க பல்லாண்டு!
தாயென்ற வார்த்தையே, தனி இன்பம்தான்

சனவரி 25

தாய் என்று எண்ணினாலே அங்கு இனிமையான ஒரு சூழல்தான் பரவி நிற்கும்.
எத்தனைமுறை நம் வாழ்வில் தாய்மீது எரிச்சல்பட்டிருப்போம்,
ஆனால், ஒருமுறையாவது, அந்தத் தாய் நம்மீது எரிச்சல்பட்டிருப்பார்களா?'
ஆம். பாசத்தைக் கொட்டிக் கொட்டியே வேண்டுமானால், எரிச்சலூட்டியிருப்பார்கள்.
அது அம்மாவால் மட்டுமே முடியும்.
சாப்பிடு, சாப்பிடு என நிலவொளியில் அம்மாவிடம் சோற்று உருண்டை வாங்கிச் சாப்பிட்ட கடைசி தலைமுறை, நிச்சயமாக நாமாகத்தான் இருக்க முடியும்.
௭வ்வளவோ தப்பு செய்தாலும், தண்டனையற்ற நீதி கிடைக்கிற ஒரே நீதிமன்றம் அம்மாதான்.
தூரமான இடத்தில் வாழும் தன் மகனைப் பற்றிப் பேசும்பொழுதெல்லம், தாய்கள் பயன்படுத்தும் ஆற்றாமை மந்திரம் இதுதான், "எம்புள்ள பசி தாங்காது!"
எத்தனை முறை கணவர்கள் தங்கள் மனைவியிடம், 'என்ன இருந்தாலும் எங்க அம்மா சமையல் மாதிரி இல்லை' என்று சொல்லி, திட்டு வாங்கியிருப்பார்கள்.
மனைவிக்குக் கோபம் வரும் எனத் தெரிந்திருந்தும், அவர்களால் பழைய நினைவுகளை அகற்ற முடியவில்லை என்றுதானே அர்த்தம்.
வீட்டுக்கு வந்த மருமகள், தன்னை அம்மா என அழைக்கும்போது, அந்த மாமியார் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவு என்பது இல்லை.
தன் குழந்தையைப் பார்த்து, கிராமத்து தந்தை, 'என்ன தாயி, சாப்பிட்டியா தாயி' என்று கேட்கும்போது இருக்கும் பாசம், வேறு எதில் இருக்கிறது?.
தாய் என்ற வார்த்தை, தருவதே தனி இன்பம்தான், அதை வர்ணிக்க, எந்த மொழியிலும் வார்த்தையில்லை.
என் அன்னைக்கு ஒருகவிதை

சனவரி 24

எழுத்து.காம் என்ற வலைத்தளத்தில், கவிஞர், ஈஸ்வர் தனிக்காட்டுராஜா அவர்கள் பதிவுசெய்துள்ள ஒரு கவிதையிலிருந்து சில வரிகள்...

கடவுளை யாரும் கண்டதில்லை
காணாதாரும் மண்ணிலில்லை
படைத்தவனே தெய்வமென்றால் - உனை
படைத்தவளே உந்தன் தெய்வம்.

மூச்சுக்காற்றும் ஈந்து
முன்னூறு நாள்தொடசுமந்து
மாசில்லா மாரமுதூட்டிய - பெரும்
தூசில்லா தூயவள் நீயம்மா!

கஷ்டமும் நஷ்டமும்
கடன்சோகமும் சூழ்ந்தபோது
பாரமேற்றும் படகைபோலெம்மை
பக்குவமாய் கரைசேர்த்தவள் நீயம்மா!
 
பலமாய்மழை பெய்தநாளெல்லாம் -உன்
புடவைமுந்தானையே குடையாய்மாறும்
நீ நனைந்தெனை காத்ததைஎல்லாம்
எங்கனம் நான் மறவேனம்மா?

மறுபடி பிறவி உண்டு என்றால்
மீண்டும் நானும் பிறந்திடுவேன்!
தேயா செருப்பாய் நான் பிறந்தே - என்
தெய்வம் உனையே நான் சுமப்பேன்.தந்தையாக வாழ்ந்த இலட்சியத் தாய்

சனவரி 23

எகிப்து தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்தவர் சிசா அபு தாவோக் (Sisa Abu Daooh 66). நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இவர் கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது கணவர் இறந்து விட்டார். இதனால், சிசாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அவரது குல வழக்கப்படி கணவரை இழந்த பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. அடுத்தவரை நம்பி வாழ வேண்டும் என்ற நிலை. இப்படி வாழ சிசாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதற்கிடையில், சிசா அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஹூடா எனப் பெயரிட்டார் சிசா.

தனது மகளை, சீரும் சிறப்புடன் வளர்க்க முடிவெடுத்த சிசா அவர்கள், வேலைக்குச் சென்று தன் சொந்தக் காலில் நிற்க விரும்பினார். எனவே, மற்றவர்களின் கண்களுக்குத் தப்ப, ஆண்வேடம் அணிந்தார். மிகவும் தளர்வான உடைகளை அணிந்த சிசா, தனது முடி அலங்காரத்தையும் மாற்றினார். செங்கல் சூளை மற்றும் கட்டட வேலைக்கு, ஆண்களைப் போலவே சென்றார். தெருக்களில், காலணிகளைப் பளபளப்பாக்கும் வேலை செய்தார். அதன் வழியாகக் கிடைத்த ஊதியத்தில், தனது மகளை வளர்த்து படிக்க வைத்தார். பின்னர் தன் சொந்த ஊதியத்திலேயே மகளுக்குத் திருமணமும் நடத்தி வைத்தார். மகளின் திருமணத்தை முடித்த கையோடு, தன் பொறுப்புகள் தீர்ந்தன எனக் கருதி, தனது வேடத்தைக் கலைக்க எண்ணினார் சிசா.

ஆனால், மகள் ஹூடா, குழந்தை பிறப்பின்போது நோய்வாய்ப்பட்டார். இதனால், மீண்டும், ஆண் வேடத்திலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சிசா அவர்களுக்கு உண்டானது. ஆண் வேடத்திலேயே வாழ்ந்துவரும் சிசா, தன் ஊதியத்திலேயே மகளையும், அவளது குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். சிசாவின் வாழ்க்கை பற்றி அறிந்த எகிப்து அரசு, அவருக்கு 2015ம் ஆண்டில், ‘இலட்சியத்தாய்’விருது வழங்கி கவுரவித்துள்ளது.

“தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார் (லூக்.1,50-53)” என்று, இலட்சியத்தாய் அன்னை மரியா பாடினார்.


"தேவை, ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே"

சனவரி 21

சான் பிரான்சிஸ்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர், ஜான் குவின் அவர்கள், தன் மறைமாவட்டத்தில் உழைக்க, புனித அன்னை தெரேசாவையும், சில சகோதரிகளையும் அழைத்திருந்தார். அருள்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஓர் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தார். அன்னை தெரேசா அவர்கள், அந்த இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். பின்னர், இல்லத்தின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை அகற்றச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளைக் கழற்றிவிடச் சொன்னார். இல்லத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில், ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயர் அவர்களே, இந்த இல்லத்தில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே" என்று சொன்னாராம். இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழ்ந்த புனித அன்னை தெரேசா, உலகில், இயேசுவின் பிரசன்னத்தை அதிகமாகப் பதித்தார் என்பதை, நாம் அனைவரும் அறிவோம்.
பிறப்பு முதல், கடைசிவரை தாய்தான்

சனவரி 20

அம்மாவுக்கு ஈடு இணை யாருமில்லை. பெற்ற தாய் தன் இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு கொடுப்பார். ஆனால், அது குழந்தைப் பருவம் வரையே! ஆனால், பிறப்பு முதல் கடைசி நாள் வரை நம்மை குழந்தையாகவே கருதி பாலைத் தருவது கோமாதாவாகிய பசு. பால் மட்டுமில்லாமல், பாலில் இருந்து நமது பயன்பாட்டிற்கு உரிய தயிர், மோர், நெய் ஆகியவையும் கிடைக்கின்றன. பசுவின் பால், தாய்ப்பாலை மிகவும் ஒத்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் பாலை பருகுவதுண்டு. அதனால், பெற்ற தாய்க்கு நிகராக, பசுவைக் "கோமாதா' என அழைக்கிறோம். பாற்கடலில் இருந்து பிறந்த, தேவலோகப் பசுவான காமதேனு, பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது எனவும், இந்தப் பசு, கேட்டதை வாரி வழங்கும் எனவும் இந்து சமயம் கூறுகிறது. பால் தரும் பசுவில், தாய் முகத்தைக் கண்டு அழகு பார்த்தவர்கள், இந்தியர்கள். எங்கெல்லாம் உயர்ந்த தியாகமும் தன்னலம் கருதா தாராள மனமும் உண்டோ, அங்கெல்லாம் தாய் முகத்தைக் காணும் மனிதர்களாக, இயற்கையோடு ஒன்றித்து வாழும் சூழலை உருவாக்குவோம்.
ஒரு தாயின் எதிர்பார்ப்பு

சனவரி 19

தாய் மகன் உரையாடல்

தாய் : மகனே, உன்னைப் பெற்றெடுத்தபோது மரணத்தோடு போராடினேன். நீ, நோயுற்றிருக்கும்போதும், அழுகின்றபோதும், தூங்காமல் எத்தனையோ இரவுகள் செலவிட்டேன். முதலில் உனக்கு உணவு கொடுக்காமல், நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. உன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர நான் எவ்வளவோ வேதனைகளைத் தாங்கினேன். என் குழந்தாய், இவற்றை நீ எனக்கு எப்படித் திருப்பித் தருவாய்?

மகன் : அம்மா, நான் வளர்ந்த பின், ஒரு நல்ல வேலையாய்த் தேடி, நிறைய பணம் சம்பாதித்து, இவ்வுலகின் எல்லா இன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கச் செய்வேன்.

தாய் : உனது தந்தை இவற்றையெல்லாம் ஏற்கனவே செய்து வருகிறார். இவற்றை நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நீ, சம்பாதிக்கும் காலத்தில், எனக்கு வயதாகி விடும். அப்போது எனக்கு இவ்வுலகின் எவ்வித ஆடம்பரங்களும் தேவைப்படாது.

மகன் : அப்படியானால் அம்மா, நான் பக்தியுள்ள ஒரு பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறேன். அப்பெண் உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்.

தாய் : மகனே, இது அப்பெண்ணின் கடமை அல்ல. நானும் அப்பெண்ணிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. இக்காரணத்திற்காகவும் நீ திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை. உனது திருமணம், உனது வசதிக்காக இருக்க வேண்டும். அதோடு, உனக்கு மனைவியாக வருபவர், உன் வாழ்வுப் பயணம் முழுவதும், உனக்கு ஆறுதலாக, உன்னோடு துணை நிற்பவராக இருக்க வேண்டும்.

மகன் : அப்படியானால், நான் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும் அம்மா...

தாய் : என்னை அடிக்கடி வந்து பார் அல்லது, என்னோடு அடிக்கடி தொலைபேசியில் பேசு. நான் இறக்கும்போது உனது தோளைச் சாய்த்துக்கொடு. என்னை நல்லடக்கம் செய். நீ செபிக்கும்போது எனது ஆன்மாவுக்காகச் செபம் செய். எனக்காக, பிறருக்கு நற்காரியங்களைச் செய். உனது ஒவ்வொரு நல்ல செயலும் எனக்கு நன்மை பயக்கும். எனவே, எப்போதும் நல்லவனாக, பாசமுள்ளவனாக இரு. உன்னைச் சுற்றியிருப்பவர்களின் உரிமைகளை மதித்து நிறைவேற்று. உனக்காக நான் விழித்திருந்த இரவுகள், வேதனைகள் அனைத்தும், உனக்காக அல்ல, என்னைப் படைத்தவருக்காகச் செய்தவை. அந்த இறைவன், உன்னை, எனக்கு, ஓர் அழகான கொடையாகத் தந்து, என்னை ஆசீர்வதித்திருக்கிறார். மகனே, நீ புரியும் ஒவ்வொரு நற்செயலும், நீ எனக்குத் திருப்பிச் செலுத்துவதாக அமையும்.
அன்னையின் அர்த்தம் மாறிவருவதேன்?

சனவரி 18

அன்னை என்பது பெருமைக்குரிய ஒரு சொல். அதனால்தான், தன் சொந்த அன்னை இல்லையென்றாலும், மரியாதைக்கும் மாண்புக்கும் உரியவர்களையும், உரியவைகளையும்கூட அன்னை என அழைப்பதுண்டு. இறைவன் மனிதருக்கு அளித்த மிக உன்னத உறவு, அன்னை எனும் உறவாகும். அந்த உன்னத உறவின் மேன்மை எங்கெங்கு பிரதிபலிக்கக் காண்கிறாரோ, அங்கெல்லாம் அன்னை என்ற பதத்தை நிலை நிறுத்துகிறார், மனிதர். புனித அன்னை தெரேசா அவர்களில், இறைவனின் குழந்தைகளுக்கான தியாக மனதைக் கண்டபோது, அன்னை என அழைத்தார், மனிதர். அன்னையரின் பொறுமையை பூமியில் கண்டபோது, அன்னை பூமி என்றார். ஆனால், இன்றைய உலகில் புதுப் புது பெயர்கள், புதுப் புதுச் செயல்கள் புகுந்து, மனிதரின் வளர்ச்சியை கீழ் நோக்கிக் காட்டுகின்றன. 'வாடகைத் தாய்' என்றொரு பதம். இது மட்டுமல்ல, பெற்ற சிசுவை, குப்பையில் வீசிவிட்டுச் செல்லும் கல்நெஞ்சு தாய்கள். கருவறைகளைக் கல்லறைகளாக மாற்றும் தாய்கள். பெண் சிசுக்களை அழிக்கும் தாய்கள்.

தாயைத் தெய்வமாக மதிக்கும் ஒரு நாட்டில், இத்தகைய நிலைகள் எங்கிருந்து, எதனால் புகுந்தன? நுகர்வுக் கலாச்சாரம் நம்மை இவ்வளவு தூரம் அடிமைப்படுத்தியதன் காரணம் என்ன? அமர்ந்திருந்து சிந்திக்க வேண்டிய நேரமிது.
மேதையைச் செதுக்கிய மாமேதை

சனவரி 17

ஒருவர் சிந்தனையில் புதியதோர் எண்ணம் உதித்தது என்பதைச் சொல்வதற்கு, ஒரு மின்விளக்கு 'பளிச்'சென்று எரிவதுபோன்ற அடையாளத்தைப் பயன்படுத்துவோம். அந்த மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் எடிசனின் குழந்தைப் பருவத்தில், அதிகம் ஒளி வீசவில்லை என்பதை அறிவோம்.

சிறுவன் தாமஸ் ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பியதும், தன் தாயிடம் சென்று, "அம்மா, இந்தக் கடிதத்தை என் வகுப்பு ஆசிரியர் உங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்று சொல்லி, ஒரு தாளை அவரிடம் கொடுத்தார். அந்த மடலைப் பிரித்துப் பார்த்த அன்னை நான்சி அவர்கள், மிகவும் மலர்ந்த ஒரு முகத்துடன், தன் மகனிடம் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததை சப்தமாக வாசித்தார்: "உங்கள் மகன் ஒரு தலை சிறந்த அறிவாளி. அவனுக்குச் சொல்லித்தரும் அளவு தகுதியான ஓர் ஆசிரியர் எங்கள் பள்ளியில் இல்லை. எனவே, உங்கள் மகனுக்கு இனி நீங்களே பாடம் சொல்லித்தாருங்கள்" என்று, அந்த அன்னை, மடலை வாசித்துவிட்டு, மகனை ஆரத்தழுவிக்கொண்டார். சிறுவன் தாமஸுக்கு அன்று முதல் அவரது அன்னையே ஆசிரியரானார்.

அறிவியல் உலகில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு உரிமையாளரான தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள், தன் தாயின் மறைவுக்குப் பின் ஒரு நாள், அவரது உடைமைகள் அடங்கிய ஒரு பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அப்பெட்டியின் ஓரத்தில் மடித்து வைக்கப்பட்ட ஒரு மடலைக் கண்டார். அது, அவரது வகுப்பு ஆசிரியர் எழுதியிருந்த மடல். அம்மடலைப் பிரித்துப் படித்தார், தாமஸ். அம்மடலில், "உங்கள் மகன் அறிவுத்திறனற்றவன். அவனுக்கு இனி எங்கள் பள்ளியில் இடமில்லை" என்று எழுதியிருந்தது.

அம்மடலை வாசித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள், பல நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுதார். பின்னர், தன் நாள் குறிப்பேட்டில் அவர் பின்வருமாறு எழுதினார்: "அறிவுத்திறனற்ற தாமஸ் எடிசனை ஒரு மேதையாக மாற்றிய பெருமை, மாமேதையான அவனது தாயைச் சாரும்."

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களது பெயரில், 1,093 கண்டுபிடிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் புகழ்பெற்றது, மின்விளக்கு.
மகனே என் அன்பை நினைத்துக்கொள்

சனவரி 16

அடிக்கடி நிலநடுக்கங்கள் இடம்பெறும் ஜப்பானில், ஒருசமயம், கடுமையான நிலநடுக்கம் நடந்த பின்னர், மீட்புக்குழு ஒன்று, ஓர் இளம் தாயின், இடிந்துபோன வீட்டிற்குச் சென்றது. அங்கே, இடிபாடுகளுக்கு நடுவே, அந்தத் தாயின் உடலை, அக்குழுவினர் கண்டனர். அவ்வுடல், ஒரு பிரார்த்தனைக்காக மண்டியிட்டிருப்பது போன்று, முழந்தாளிட்ட வண்ணம் முன்னோக்கி வளைந்திருந்தது. சுருட்டிய துணிக் குவியல் ஒன்று, அவரது இரு கைகளையும் தாங்கி நின்றிருந்தது. இடிந்து விழுந்த வீடு, அவர் முதுகிலும் தலையிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியிருந்தது. குளிர்ந்து விறைத்திருந்த அப்பெண்ணின் சடலம், சற்று வித்தியாசமாக இருந்ததால், அந்தக் குழுத்தலைவரின் உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. அவர், அந்தத் தாய்க்கு அடியில் இருந்த துணிக் குவியலை கைகளால் தடவிப் பார்த்தார். அதில், ஒரு குழந்தை இருந்ததைக் கண்டு, மற்றவர்களையும் உடனடியாக, அவர் உதவிக்கு அழைத்தார்.

எல்லாரும் சேர்ந்து, அந்தத் தாயின் சடலத்தை மூடியிருந்த சிதைவுகளை, மிகக் கவனமாக அகற்றினர். தாயின் சடலத்தின் அடியில், இன்னும் உறக்கம் கலையாத, மூன்று மாதப் பிஞ்சுக் குழந்தை, பூப்போட்ட ஒரு போர்வைத் துணிக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தையைக் கையில் எடுத்தபோதும், அதன் அமைதியான உறக்கம் கலையவில்லை. குழந்தையின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக மருத்துவர் அவசரமாக அழைக்கப்பட்டார். குழந்தையைச் சுற்றியிருந்த பூத்துணியை திறந்தபோது அதற்குள் ஒரு கைபேசி இருந்தது. அதன் முகப்பில் ஒரு text message : 'மகனே, நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை அன்புகூர்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்' என்ற அந்தச் செய்தியை, ஒருவர் மாற்றி ஒருவர் வாசித்தனர். வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும் விம்மியழுதது.

தாயன்பிற்கு இணையேதும் உண்டோ? ஆம். தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை.
அடையாளம் தந்த அன்னை சரோஜா

சனவரி 14

தமிழகத்தின் தீவட்டிப்பட்டி கிராமம் (சேலம் மாவட்டம்) தமிழர்கள் பலருக்கும்கூட அறிமுகமில்லாத ஒரு கிராமம். அந்தக் கிராமத்தை உலக வரைப்படத்தில் பெருமைக்குரிய ஒரு புள்ளியாக, ஒரு திலகமாகப் பதித்தவர், மாரியப்பன் தங்கவேலு.

2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் அவர்கள், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

மாரியப்பனின் வெற்றிக்கு வழிவகுத்தவர், அவரது அன்னை சரோஜா. திருமண வாழ்வில் தோல்வியைக் கண்டாலும், தன் குழந்தைகளை, தனியொரு தாயாக, போராடி வளர்த்தவர், சரோஜா.

ஐந்து வயதான மாரியப்பன், பள்ளிக்குச் செல்லும் வழியில், குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓர் ஓட்டுனரால், சிறுவன் மாரியப்பனின் வலது கால் மீது பேருந்து ஏறி, அது பெருமளவு சிதைந்துபோனது. இருப்பினும், அச்சிறுவன் தன் இயல்பு வாழ்வையும், விளையாட்டுக்களையும் தொடர, அன்னை ஊக்குவித்தார்.

"மாரியப்பனும், அவனது தம்பிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும்தான் அவர்களுக்கு என்னால் தரமுடிந்த செல்வமாக இருந்தது. வளரும்போது, மாரியப்பன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூட எனக்கு நேரம் இருந்ததில்லை" என்று அன்னை சரோஜா ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, தீவட்டிப்பட்டி கிராமத்தினர், இந்தக் குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. கால் ஊனமுற்ற மகன் இருந்ததால், வாடகை வீடு கிடைப்பதற்கும் அதிகம் போராட வேண்டியிருந்தது.

"எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை'' என்றார், அன்னை சரோஜா.

தமிழர் திருநாளான பொங்கலன்று, அன்னை சரோஜாவையும், இளையவர் மாரியப்பனையும் பெருமையுடன் எண்ணி, தலை நிமிர்வோம்.
நித்தம் நித்தம் சுமக்கும் பூமித்தாய்

சனவரி 13

பெற்றெடுத்தல், தாய் கடனாகவும், அம்மகனை சான்றோனாக்குதல், தந்தை கடனாகவும் நோக்கப்படுகிறது. பெற்றெடுத்தல் என்பது, கருவில் உருவானது முதல், கண்ணால் காணும் நிலை வரை, என அர்த்தம் சொல்வர். பத்து மாதம் சுமக்கும் கணக்கு இது. ஆனால், அன்னை பூமியோ நித்தம் நித்தம் நம்மைச் சுமப்பவர். அந்த பூமித் தாய் நமக்குத் தரும் கொடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல்.

உயிர்கள் அனைத்தையும் தாங்கிப் பிடித்து, அரவணைத்து, அவைகளின் தாயாகத் திகழ்பவர் பூமித்தாய். இந்தப் பூவுலகில் வாழ்வதற்கான உரிமை நம்மனைவருக்கும் இருப்பதுபோல், அன்னை பூமிக்கும் உள்ளது.

பூமி எனும் தாய், புனிதமானவர், பொறுமையானவர், வளம் தருபவர், உயிர் தருபவர். அதுமட்டுமல்ல, தன் கருவறையில் சுமக்கும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தந்து பாதுகாப்பவர். ஆனால் நாமோ, மண்ணையும், காற்றையும், நீரையும் களங்கப்படுத்தி, பூமித் தாயை காயப்படுத்தி வருகிறோம். இந்நிலையை மாற்றவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், பொங்கல் விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.
தூணின் அன்னை மரியா

சனவரி 12

இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள், பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரைப் பெற்ற பின்னர், உலகின் பல இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கச் சென்றனர். கி.பி. 40ம் ஆண்டில், திருத்தூதர் யாகப்பர் (James the Greater), அக்காலத்திய உரோமைப் பேரரசின் இஸ்பானிய மாநிலமான சரகோசாவில் (Zaragoza) நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரின் போதனையைக் கேட்டு, வெகு சிலரே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இதனால் யாகப்பர் மிகவும் மனம் சோர்வடைந்திருந்தார்.

அவ்வாண்டில், அக்டோபர் 12ம் நாளன்று, சில சீடர்களுடன், எப்ரோ (Ebro) ஆற்றங்கரையில், அவர் செபித்துக்கொண்டிருந்தார். அப்போது, அன்னை மரியா குழந்தை இயேசுவுடன், ஒரு கற்பாறைத் தூணின் உச்சியில், வானதூதர்கள் புடைசூழ அற்புதமாகக் காட்சியளித்தார். மக்கள் விரைவில் மனம்மாறுவார்கள் என்றும், அவர்களின் விசுவாசம், தான் நிற்கும் இந்தக் கற்பாறை போன்று உறுதியாக இருக்கும் என்றும், அன்னை மரியா, யாகப்பருக்கு ஆறுதல் சொன்னார். அதற்கு அடையாளமாக அந்தத் தூணையும், மரத்தாலான தனது உருவம் ஒன்றையும் அன்னை மரியா யாகப்பரிடம் கொடுத்தார்.

மேலும், அந்த இடத்தில், தனக்கென ஓர் ஆலயம் கட்டுமாறும் கேட்டுக்கொண்டு, அவ்விடத்தைவிட்டு மறைந்தார் அன்னை மரியா. அந்த இடத்தில் ஆலயம் கட்டியபின், யாகப்பர் எருசலேம் சென்று, கி.பி.44ம் ஆண்டில், ஏரோது அக்ரிப்பா அரசன் காலத்தில், தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக உயிர் நீத்தார். திருத்தூதர் யாகப்பரின் உடலை அவரின் சீடர்கள் இஸ்பெயினுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்தனர் என்று பாரம்பரியம் கூறுகிறது.

திருஅவை வரலாற்றில், அன்னை மரியா அளித்த முதல் காட்சி இதுவாகும். இந்த அற்புத அன்னை, தூணின் அன்னை மரியா என்று அழைக்கப்படுகிறார். இஸ்பானிய உலகின் பாதுகாவலராகப் போற்றப்படுபவர், தூணின் அன்னை மரியா. இவர் அளித்த திருவுருவம், சரகோசா பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. 1905ம் ஆண்டு மே 20ம் தேதி, திருத்தந்தை புனித 10ம் பத்திநாதர், இதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமளித்தார்.

இஸ்பானிய உள்நாட்டுக் கலவரத்தின்போது, மக்களுக்குப் பெரிதும் உதவிய தூணின் அன்னை மரியா, இன்றும், பல புதுமைகளை ஆற்றி வருகிறார். மரத்தாலான தூணின் அன்னை மரியா உருவம் 39 செ.மீ. உயரமுடையது. இஸ்பெயினில், யாகப்பருக்கு காட்சியளித்தபோது, அன்னை மரியா உயிரோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னை மரியா, கேட்டவர்க்கு கேட்ட வரம் தரும் தாயாக, எந்நாளும் இருந்து வருகிறார்.
மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?

சனவரி 11

திருவிழாவுக்கு வந்த இடத்தில், தங்களுடன் ஊருக்குத் திரும்பாமல், வந்த இடத்திலேயே தங்கிவிட்ட மகனைப் பார்த்து, பதட்டத்துடன் கேட்கிறார் தாய் இந்த கேள்வியை. ஏன் இப்படிச் செய்தாய், என்பது தாயின் பதட்டமான கேள்வி. ‘என் தந்தையின் அலுவல் தொடர்பாக நான் இங்கு இருந்துவிட்டேன்’ என்பது மகன் தன்னை வெளிப்படுத்திய பதில். லூக்கா நற்செய்தியில் நாம், தாய்க்கும் மகனுக்குமிடையேயான இந்த முதல் உரையாடலைக் காண்கிறோம். பதட்டமான ஒரு சூழலில் துவங்கியிருந்தாலும், தங்களையும் அறிஞர்களையும் தன் அறிவுத்திறனால் வியப்பிலாழ்த்திய நிகழ்வைக் கண்டபின்தான் இந்த கேள்வியைக் கேட்கின்றார் தாய். இயேசுவைப் பற்றிய உண்மையை அவர் வாயிலிருந்தே வெளிப்படுத்துவதற்கு உதவும் கேள்வியாக, அது இருந்தது எனலாம்.

ஆனால், இதே கேள்வியை இன்று எத்தனையோ தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளைப் பார்த்து கேட்கும் சூழ்நிலைகளை எண்ணிப் பார்ப்போம். அதில் அடங்கியிருக்கும் சோகம் எவ்வளவு தூரம் நம்மை வதைக்கிறது என சிந்தித்துப் பார்ப்போம். ‘இவ்வளவு பாசம் காட்டி வளர்த்த எங்களுக்கா இதைச் செய்தாய்?’ ‘உனக்காக இரவு பகலாக கண் விழித்து உழைத்த எங்களுக்கு இதைச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது?’ ‘குடும்பப் பெயரை ஏன் இப்படிக் கெடுத்தாய்?’ இப்படி இன்று எத்தனையோ அன்னையர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கேட்கின்றார்கள் என்றால், எப்படி இத்தகைய ஒரு நிலைக்கு மனித சமூகம் இறங்கி வந்தது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டாமா? ஆனால், அதேவேளை, இன்றைய ஒவ்வொரு குழந்தையும் தன் தாயை நோக்கி, 'அம்மா! நீங்கள் எனக்கு இவ்வளவு தூரம் நல்லவை ஆற்ற, நான் என்ன தவம் செய்தேன்?' என்று கேட்டுப் பெருமைப்படுத்தினால், உலகம் எப்படியிருக்கும்?
அன்னையரிடம் நான் கற்றுக்கொண்டது அதிகம்

சனவரி 10

இவ்வாண்டு புலர்ந்த நாளன்று கொண்டாடப்பட்ட 'மரியா, இறைவனின் தாய்' என்ற திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில், மரியன்னைக்கும், அன்னையருக்கும், புகழாரம் சூட்டினார்:

"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக்கா 2:19). தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றைப் புரிந்துகொண்டு, அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொணர மரியா விரும்பவில்லை. அவற்றை தன் உள்ளத்தில் வைத்து, பாதுகாத்து வந்தார். தனக்குள் இறைமகன் உருவான வேளையில், அவரது இதயத் துடிப்பை, செவிமடுத்து கேட்க அவர் கற்றுக்கொண்டார். இவ்வாறு, தன் வாழ்விலும், இவ்வுலக வரலாற்றிலும் இறைவனின் இதயத் துடிப்பை உற்றுக்கேட்க பழகிக்கொண்டார்.

மரியா, இறைவனின் தாய், நமது தாய் என்ற திருநாளை புத்தாண்டு நாளன்று கொண்டாடுவதால், நாம் அனாதைகள் அல்ல, ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வைப் பெறுகிறோம். தனிப்பட்டவர்களாய், தான் என்ற அகந்தை கொண்டவர்களாய் வாழும் நோய்க்கு ஒரு சிறந்த மருந்து, அன்னையர். திறந்த மனமின்றி, அக்கறையற்று வாழும் நமக்கு, மருந்தாக விளங்குபவர், அன்னையர்.

அன்னையர் அற்ற சமுதாயம், குளிர்ந்து, உறைந்துபோன சமுதாயமாகிவிடும்; அன்னையர் அற்ற சமுதாயம், இரக்கமற்ற சமுதாயமாகிவிடும்; அன்னையர் அற்ற சமுதாயம், செய்வது ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்க்கும் சமுதாயமாகிவிடும்.

ஏனெனில், மிகக் கொடுமையானச் சூழல்களிலும், நிபந்தனையற்ற அன்பையும், பரிவையும் வெளிப்படுத்துவது, அன்னையரின் உள்ளம். சிறையில் இருப்போர், நோயுற்றிருப்போர், போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியிருப்போர் ஆகியோரின் அருகில் எந்நேரமும் காவலில் இருக்கும் அன்னையரிடமிருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன்.

போரினால் அனைத்தையும் இழந்து, முகாம்களில் தங்கியிருப்போரிடையே, தன் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வை இழக்கும் அன்னையரிடம் நான் கற்றுக்கொண்டது அதிகம்.
வழிகாட்டும் விண்மீன் அன்னை மரியா

சனவரி 09

விடியற்கால விண்மீன், விடிவெள்ளி என்பது, சூரிய உதயத்திற்கு முன்பாக, கிழக்கில் தோன்றும் வீனஸ் (Venus) கோளுக்கு, பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர். நாய் நாள்களின்(Dog Days ஜூலை03-ஆகஸ்ட்11 வரையுள்ள நாற்பது நாள்கள்) போது, சூரிய உதயத்திற்கு முன்பாக, கிழக்கில் தோன்றும் சிரியுஸ் (Sirius) விண்மீனுக்கும் இந்தப் பெயர் உள்ளது.

வானில் தோன்றும் ஒவ்வொரு விண்மீனும், இயேசுவின் அன்னையாகிய தூய மரியாவோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. எனினும், விடியற்கால விண்மீன், ஆழ்கடலின் விண்மீன் (Ave maris Stella) என்ற பெயரே, அன்னை மரியாவுக்கு, மிகப் புகழ்பெற்ற பெயராக உள்ளது. இயேசு பிறப்பின்போது, வானில் தோன்றிய விண்மீனே, பெத்லகேம் குடிலில், மரியாவுக்கு உதவிய ஒரே விளக்கு.

கிழக்கிலிருந்து இயேசுவைத் தரிசிக்க வந்த மூன்று ஞானிகள், இந்த விண்மீனைக் கண்டே, பெத்லகேம் நோக்கிப் புறப்பட்டனர். பின்னர் அவர்கள், இந்த விண்மீனை, பெத்லகேம் குடிலில், மரியின் கண்களில் பிரதிபலிக்கக் கண்டார்கள். இந்த ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த அந்த விண்மீன், வழியில் சிறிதுநேரம் அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர், அவர்கள், அந்த விண்மீன், மரியாவின் கிணற்றுத் தண்ணீரில், மீண்டும் சுடர்விடுவதைக் கண்டனர்.

புனித பூமியிலுள்ள, ஒரு பழைய கிணறு, மரியாவின் கிணறு என அழைக்கப்படுகிறது. இக்கிணறு பற்றி, ஒரு கதை சொல்லப்படுகின்றது, இயேசு, யோசேப்பு, மரியா ஆகியோரைக் கொண்ட திருக்குடும்பம், ஒரு சமயம், பெத்லகேமிலிருந்து எருசலேமுக்குச் சென்றது. அப்போது, அந்தக் கிணற்றருகில் அவர்கள் இளைப்பாறி, அதன் நீரைப் பருகினர் என்று சொல்லப்படுகின்றது. ஆபத்தான கடல்பயணம் செய்வோர்க்கு, வழிகாட்டும் விடிவெள்ளி போன்று, அன்னை மரியாவும், ஆபத்தான நம் வாழ்வுப் பயணத்தில், வழிகாட்டும் விண்மீனாக விளங்குகிறார்.
மரியன்னையின் வாரிசுகள்

சனவரி 07

திருக்காட்சிப் பெருவிழா, கிறிஸ்மஸ் விழா காலத்தை நிறைவுக்குக் கொணரும் இறுதி விழா. இத்திருவிழா காலத்தில், குழந்தை இயேசுவுக்கு நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இடம் தந்தோமா என்ற கேள்வியை, இந்த இறுதி நாளன்று எழுப்புவது நல்லது.

தன் கருவறையில் இறைமகன் என்ற கருவூலத்தைத் தாங்கிச் சென்ற இளம்பெண் மரியா, அக்கருவூலத்தை இவ்வுலகிற்கு வழங்க ஓர் இடமின்றி தவித்தார். ஏனெனில், பெத்லகேம் சிற்றூரில் அக்குழந்தையை வரவேற்க யாரும் தயாராக இல்லை. மாடடைத் தொழுவமே அவர்களை வரவேற்றது. அன்னை மரியா, தன் மகனுக்கு, இவ்வுலகைப்பற்றி தந்த அறிமுகம், அதிர்ச்சியளிக்கிறது. மரியா, யோசேப்பு என்ற இரு மனித முகங்களைத் தவிர, அக்குழந்தை, இவ்வுலகில் நுழைந்ததும், கண்டதெல்லாம், மிருகங்களின் முகங்களே.

ஆனால், அந்த எளியத் தொழுவத்தில், இன்னும் பலருக்கு வரவேற்பளித்தனர், அன்னை மரியாவும், யோசேப்பும். குழந்தையைக் காணவந்த இடையர்கள், தொலைதூரத்திலிருந்து குழந்தையைத் தேடிவந்த ஞானிகள் என்று, அறிமுகமற்ற பலருக்கு, அன்னை மரியாவும், யோசேப்பும் வரவேற்பளித்தனர். இன்றும், அறிமுகமற்ற பலரை வரவேற்று, அடைக்கலம் அளிக்கும் அன்னையர், மரியன்னையின் வாரிசுகள்.
இதோ, ஆண்டவரின் அடிமை

சனவரி 06

இதோ, ஆண்டவரின் அடிமை என்ற அன்னைமரியாவின் சொற்கள், ஆழ்ந்து சிந்திப்பதற்கு உகந்தவை. அடிமை என்றால் யார்? கடமைகள் உள்ளவர், ஆனால் உரிமைகள் இல்லாதவர். ஊதியமும், முகவரியும் இல்லாதவர். தலைவரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி நடக்க வேண்டியவர். கொடுப்பதை உடுத்தவேண்டும். கிடைப்பதை உண்ணவேண்டும். இதுதான் அடிமையின் நிலை. இப்படிப்பட்ட ஒரு தாழ்நிலைக்குதான் மரியா தன்னை உட்படுத்துகிறார். இத்தகைய அடிமை நிலைக்கு மரியா தன்னை கையளிக்க காரணம் என்ன? கடவுள் மீது அவர் வைத்திருக்கிற நம்பிக்கையின் ஆழம்.

இங்கு அன்னை மரியா, தன்னை அடிமையாக கையளித்திருக்கலாம், ஆனால், கடவுளோ நம்மை அடிமைகளாக என்றும் கருதுவதில்லை என்பதை மனதில் கொண்டால், பல உண்மைகளுக்கு விளக்கம் கிட்டும். கடவுளாக இருந்த போதிலும், மரியாவின் மீது தனது திட்டத்தை கடவுள் திணிக்க விரும்பவில்லை, மாறாக, அவரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, சம்மதத்தை கேட்கிறார். அன்னை மரியா விரும்பிய நிலை தெய்வீகம் அல்ல, இறைவனுக்கு பணிப் பெண்ணாய் விளங்குதலே.

அன்னை மரியாவை சிந்திக்கும் இவ்வேளையில், நம் ஒவ்வொருவரின் தாய் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். பிள்ளைகள் தன்னைப் போற்றவேண்டும், தெய்வமாக வணங்கவேண்டும் என்று நினைத்து, எதிர்பார்த்து எந்தத் தாயும் தன் பணியைச் செய்வதில்லை. பிள்ளைகளின் வெற்றிகளுக்குப் பின்னால் எங்கோ ஓரிடத்தில், ஒன்றும் அறியாதவர் போல் ஒவ்வொரு தாயும் நின்று கொண்டிருக்கிறார் என்பது, அப்பட்டமான‌ உண்மை. எந்தத் தாய், தன் குடும்பத்திற்காக தன்னை அடிமையாக கையளிக்கவில்லை?

அதேவேளை, எந்தத் தாயும் அடிமையாக நடத்தப்படுவதில்லை. ஆனால், தானே விரும்பி, தன் குழந்தைகளின் நலனுக்காக, தன்னை அடிமை நிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார். பின் தூங்கி, முன் எழுவதிலிருந்து, அனைத்தையும் தன் குடும்பத்திற்காகவே செய்கிறார். உரிமைகளற்ற ஓர் அடிமைபோல் பணிபுரியும் அன்பு, நம் தாயன்பு. ஆனால், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது. கடவுளின் அன்புக்கு அடுத்தநிலையில் இருக்கும் தாயன்பின் வழியாகவே, கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது என்றால், தாயின் சக்தியைப் புரிந்துகொள்வோம்.
தன்னுயிர் இழக்கத் தயாராகும் தியாகி தாய்

சனவரி 05

ஒருசமயம், திரைப்படக் குழு ஒன்று, ஆப்ரிக்கக் காடு ஒன்றில், திரைப்படம் எடுப்பதற்கு, இடத்தை நிர்ணயம் செய்வதற்காகச் சென்றது. அப்போது அக்காட்டில் அக்குழு கண்ட காட்சி இது. அங்கு நடுக்காட்டில், ஓரிடத்தில், மான்கள் கூட்டம் ஒன்றை, செந்நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன. உடனடியாக எல்லா மான்களும், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தாறுமாறாக ஓடின. அப்போது, அந்த மான் கூட்டத்திலிருந்த ஒரு குட்டிமான், கால் இடறி, கீழே விழுந்து விட்டது. அதைப் பார்த்த செந்நாய்கள், அந்தக் குட்டிமானைச் சுற்றி வளைத்துக் கொண்டன. செய்வதறியாது திகைத்து, அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது குட்டிமான். செந்நாய்களும், மெல்ல மெல்ல, குட்டிமானை நெருங்கின. அச்சமயத்தில் எங்கிருந்தோ ஓடிவந்த குட்டிமானின் தாய், அதனருகில் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.

ஆம். தன் உயிரைப் பொருட்படுத்தாது, தன் குழந்தைக்காக, உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தது அந்தத் தாய்மான். தன்னலம் கருதாது, சேய்நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் அடையாளம், தாய். தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம், தாய். உடலில் உயிர் உள்ளவரை, ஒருபோதும் சேய்களை மறக்காதவர் தாய். இந்நிலவுலகில் நிகரற்ற புனித உறவு, தாயின் உறவு.
தாயை விட பெரிய உறவு இல்லை

சனவரி 04

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே
பெற்ற தாயும், பிறந்த நாடும் எல்லாவற்றையும் விட மேன்மையானது" என்றார் பாரதி.

உலகத்தில் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட துறக்க முடியாத உறவு தாயின் உறவு. ஒரு துறவியை, அவரை பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால் தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால் அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழவேண்டும். இதைத்தான் இந்து தர்மம் சொல்லித்தருகிறது. ஒரு நொடியில் உறவுகளை உதறித் தள்ளிய பட்டினத்து அடிகள்கூட தன் தாயின் மரணச் செய்தியறிந்து மயானம் போனார். உலகப்புகழ் பெற்றவர்களெல்லாம் தாயை நேசித்தவர்களே. அவர்களை வாஞ்சையோடு பாதுகாத்தவர்களே. மகன் நல்லவனோ, கெட்டவனோ, ஆனால், தாய் என்றைக்குமே நல்லவள்.

ஒரு பெண், மகளாக, சகோதரியாக, தாயாக, மனைவியாக, தோழியாக, பாட்டியாக... வேறுபட்ட பாத்திரங்களில் உலா வந்தாலும், இவை அனைத்திலும், தாய்மை என்பதே உன்னதம். தாயை விட பெரிய நிழல் ஏதுமில்லை. நம்மைத் தாங்கும் நிலத்தை விட தாய் பெரியவள். தாயே மனிதர்களுக்கு தெய்வங்களுள் சிறந்த தெய்வம். அம்மா என்பவள் இருக்கும்வரை எவரும் அநாதை ஆவதில்லை.

கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:
அதிக வலி எடுத்தபோது, ‘அம்மா’ என்று கத்திய அனாதைக் குழந்தை, உண்மை உறைத்ததும், நாக்கைக் கடித்துக் கொண்டதாம்.
பிறிதொரு கவிஞர் கூறுகின்றார்:
மறு பிறவி இருந்தால் அம்மாவின் செருப்பாக பிறக்க வேண்டும்,
என் அம்மாவின் காலில் மிதிபட அல்ல;
என்னை சுமந்த அவளை, ஒரு முறை நான் சுமப்பதற்காக...
'அப்படியே ஆகட்டும்'

சனவரி 03

1985... ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள் மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா, 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. அந்த இசை நிகழ்ச்சி, செயற்கைக்கோள் வசதிகளுடன், உலகெங்கும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுவரை, விளையாட்டுப் போட்டிகளும், திரைப்பட விழாக்களும் மட்டுமே, உலகின் பல நாடுகளில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது, இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. 150 நாடுகளில், 190 கோடிக்கும் மேற்பட்டோர், இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1260 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற Beatles என்ற பாடகர் குழுவில் ஒருவரான Paul McCartney என்பவர், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய "Let It Be" என்ற பாடல், மரியன்னையுடன் தொடர்புடைய ஒரு பாடல். Paul McCartney அவர்கள் பாடிய "Let It Be" என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:

"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.
'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்." என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.

"Let It Be" என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartneyன் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது, பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகின்றன. அதேபோல் "Let It Be" என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், மரியா, அன்று விண்ணகத்தூதர் கபிரியேலிடம், "உம சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொன்ன அந்தப் புகழ்பெற்ற சொற்களை நினைவுறுத்துகிறது. புகழ்பெற்ற இப்பாடலின் இன்னும் சில வரிகள் இதோ:

மனமுடைந்த மக்கள் மனமொத்து சேரும்போது,
அங்கு ஒரு விடை பிறக்கும் - 'அப்படியே ஆகட்டும்'.
இரவில் மேகம் சூழ்ந்தாலும், என் மீது ஒளி வீசுகிறது.
நாளைவரை வீசும் அந்த ஒளி சொல்வது - 'அப்படியே ஆகட்டும்'.
அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

Live Aid இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல் ஆழ்ந்ததொரு தாக்கத்தை உருவாக்கியது என்று சொன்னால், அது மிகையல்ல.

இந்த ஆங்கில பாடலின் வரிகளையும், காணொலி காட்சியைம் பார்வையிட க்ளிக் செய்யவும்
தாயின் தியாகத்திற்கு ஈடுகட்ட இயலுமா?

சனவரி 02

தனது வாழ்வில் உச்சகட்ட உயர்வை எட்டிய ஒருவர், தனது அம்மா செய்த தியாகங்களுக்கு, நன்றியாக, அவ்வன்னைக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒருநாள் அவர், அம்மாவிடம், தனது விருப்பத்தைத் தெரிவித்து, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால், வியப்புடன் மகனைப் பார்த்தார் அம்மா. என்னுடைய கடமையைத்தானே செய்தேன். அதை எப்படி நீ எனக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்? நீ விரும்பினாலும், எவ்வாறு அதைத் திருப்பி கொடுக்க முடியும்? என்றார் அம்மா. இருந்தாலும், மகன், தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அம்மாவும் தொடர்ந்து மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில் மகனின் ஆவலை நிறைவேற்ற நினைத்த அம்மா, மகனிடம், சரி, நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். மகனே, நீ குழந்தையாக இருந்தபோது எனதருகில் படுத்து உறங்கினாயே, அதைப்போல இன்று, ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு எனக் கூறினார் அம்மா. நீங்கள் கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும், அது உங்களுக்கு மகிழ்வைத் தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது அம்மாவின் படுக்கையில் படுத்துக்கொண்டார் மகன்.

மகன் தூங்கி விட்டார் என்று அறிந்த அம்மா, எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பிக்கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில், ஒரு குவளைத் தண்ணீரை வீசி நனைத்தார். தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறுபக்கத்தில் உருண்டு படுத்தார். மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து, அவர் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினார் அம்மா. மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் நோக்கி நகர முயன்றார். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும்போது, தனது அம்மா, தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, என்ன அம்மா செய்கிறாய்… தூங்கக்கூட விடமாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர்பார்க்கிறாய் எனக் கேட்டார்.

அப்போது அம்மா அமைதியாக இவ்வாறு சொன்னார். நீ குழந்தையாக இருந்தபோது, இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்துவிட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக்கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஓர் இரவு தூங்க முடியுமா? என்றார் அம்மா. இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடுகொடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன் என்றார் அம்மா.

ஒரு தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. உலகிலுள்ள அன்னையர்க்கெல்லாம் உன்னத அன்னையாம் இயேசுவின் அன்னை செய்த தியாகத்திற்கு நாம் எவ்வாறு ஈடுசெய்யப் போகிறோம்?
அன்னைக்கொரு அன்பு மடல்

சனவரி 01

எங்கள் அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய மரியன்னையே,
நாங்கள் துவக்கியிருக்கும் 2017ம் ஆண்டில் நீர் எம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று ‘இறைவனின் தாய்’ என்ற பட்டம் சூட்டி, உங்களுக்கு விழா எடுக்கிறோம். ஆனால், இறைவனின் தாயானதை உம்மால் கொண்டாட முடிந்ததா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது...

நீர் இறைவனின் தாயானதை எண்ணி, நன்றி கூறி, பெருமைபட்டு, கற்களால் எழுப்பிய கோவில்களில் பீடமேற்றி உம்மை நாங்கள் இன்று வணங்குகிறோம். நீர் வாழ்ந்த காலத்தில், திருமணம் ஆகாமல் இறைவனின் தாயானதற்காக, உமக்கு, கற்களால், கோவில் அல்ல... சமாதி எழுப்பியிருப்பார்கள் என்பதையும் உணர்கிறோம். கண்ணால் காணமுடியாத இறைவனை உள்ளத்தால் கண்டு, அவரை மட்டுமே நம்பி, உம் கருவறைக்குள் அவருக்குக் கோவில் கட்ட நீர் சம்மதித்ததால், உம் பெயரில் நாங்கள் இன்று கோவில்கள் கட்டுகிறோம்.

கடந்த இருபது நூற்றாண்டுகள் உலகில் பிறந்த, இனியும் பிறக்கப் போகும் ஒவ்வொரு மனித உயிரும் உம்மை ஏதோ ஒரு வகையில் சந்தித்துள்ளனர், இனியும் சந்திப்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லலாம். அத்தனை புகழ் பெற்றவர் நீர். உலகில் வரலாறு படைத்துள்ள பல கோடி பெண்கள் மத்தியில், நீர் உண்மையில் பேறு பெற்றவர்.

"கறைபட்ட எமது குலத்தின் தனிப்பெரும் பெருமை நீர்" என்று ஆங்கிலக் கவிஞர் William Wordsworth உம்மைப்பற்றிச் சொன்னது உமது புகழ்கடலில் ஒரு துளிதான். உமது புகழ்கடலில் நாங்களும் மூழ்கி மகிழ்கிறோம், பெருமைப் படுகிறோம்.

வாழ்க மரியே! வாழ்க எம் அன்னையே!

இப்படிக்கு, உமது குழந்தைகளாய் பிறக்க கொடுத்துவைத்தவர்கள்.