எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற மாவட்டம் El Zeitoun. இது, 1968ம் ஆண்டுமுதல் 1971ம் ஆண்டுவரை இடம்பெற்ற அன்னைமரியா காட்சிகளுக்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது. புனித யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவும் பெத்லகேமிலிருந்து வெளியேறி எகிப்துக்குச் சென்ற வேளையில், திருக்குடும்பமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக, பாரம்பரியம் சொல்கிறது. இவ்வாலயமும் திருக்குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காப்டிக் கிறிஸ்தவ சபைக்குரிய இவ்வாலயத்தில் 1968ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மாலை தொடங்கி, ஓராண்டுக்கு மேலாக இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளித்திருக்கிறார் அன்னைமரியா. இக்காட்சிகள் ஒளியால் நிறைந்திருந்ததால் இவ்வன்னை, ஒளியின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார்.
இக்காட்சிகளை எகிப்து நாட்டவர், மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என இலட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர், முஸ்லிம்கள், யூதர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என பல்வேறு மக்கள் இக்காட்சிகளுக்குச் சாட்சி பகர்ந்துள்ளனர். நோயுற்றோர் குணமடைந்துள்ளனர், மத நம்பிக்கையற்ற பலர் மனமாறியுள்ளனர். இக்காட்சி 1971ம் ஆண்டுவரை நீடித்தது. ஏறக்குறைய 2,50,000 பேர் இக்காட்சிகளைப் பார்த்ததாகச் சொல்லப்படுகின்றது.
அண்மைய வன்முறைகளால் காயப்பட்டு, அமைதியிழந்து தவிக்கும் எகிப்து நாட்டிற்கு, அமைதியின் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், ஒளியின் அன்னை மரியா அவருக்கும், எகிப்து மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பையும், அமைதியையும் வழங்குவாராக!
வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருபவர் தாய்
ஏப்ரல்27
அசோக், என்றும் இல்லாமல், அன்று காலையில் அவன் தாமதமாக எழுந்தான். வேக வேகமாகக் கிளம்பி சைக்கிளில் பயணப்பட்டபோது டயர்களில் காற்று வெடித்து விட்டது. இப்படிப்பட்ட அவசரத்திற்கு என்று, அப்பா கொடுத்திருந்த பணம் அன்று பார்த்து அவனுடைய பென்சில் பெட்டியில் இல்லை. எரிச்சலை அடக்கிக் கொண்ட அசோக் சைக்கிளை உருட்டிக் கொண்டே, இருபது நிமிடம் தாமதமாகப் பள்ளியை அடைந்தான். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. காலை நேரப் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன் பள்ளிக்கு வெளியே வந்த தலைமை ஆசிரியர் தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரையும் கண்டித்து உள்ளே அனுப்பினார். அப்பாடி.. என்று பெருமூச்சு விட்ட அசோக் விரைவாக வகுப்பறைக்குள் சென்றான். ஆனால் அவன், நேற்று பாடுபட்டுச் செய்த வீட்டுப் பாடங்களை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்து விட்டான். அதனால் அவனை, கணக்கு ஆசிரியர் வாசலில் முழங்கால் போட வைத்தார். மற்ற மாணவர்கள் அன்று முழுவதும் அசோக்கை கிண்டலடித்துச் சிரித்தார்கள். மாலையில் காற்று இல்லாத சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சோர்வாக வீடு திரும்பினான் அசோக். அவனுக்காகக் காத்திருந்த தாயைப் பார்த்ததும், ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டு அழுதான். அவன் தலையை ஆதரவாகக் கோதிய தாய், “முதலில் வந்து சாப்பிடு அசோக், சாப்பிட்டதும் உனக்கும் தெம்பு வரும்”என்று, அவனை உணவு உண்ண அழைத்துச் சென்றார். சாப்பிட்டுக் கொண்டே, அன்று நடந்தவற்றை அழுகையுடனே சொல்லி முடித்தான் அசோக். அவன் அழுது முடிக்கும்வரை காத்திருந்த அவனுடைய தாய், பிறகு இவ்வாறு சொன்னார். “அசோக், நமக்குத் துன்பம் வரும்போது அதை ஒரு சோதனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். துக்கத்தில் துவண்டுவிடக் கூடாது. சோதனையில் பாடங்கள் படிப்பவனே அறிவாளி. உனக்கு இன்று ஏற்பட்ட அனுபவங்கள், என்றாவது ஒருநாள், நல்ல முறையில் உனக்குப் பயன்படும்”என்று அவனைத் தேற்றி விளையாட அனுப்பினார் தாய்.
துன்பத்திலும் நன்மையைக் கண்ட தாய்
ஏப்ரல்26
அந்தப் பள்ளியின் பேருந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக காலை ஏழரை மணிக்கெல்லாம் அந்தத் தெருவுக்கு வந்துவிடும். அன்றும் அந்தப் பேருந்து வந்து நின்றது. தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை அதிகாலையிலே தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, காலை உணவு கொடுத்து பள்ளிச் சீருடை உடுத்தி பள்ளிப் பேருந்து நிற்குமிடத்திற்கு அழைத்து வந்தார். பேருந்தில் ஏற்றிவிட படியருகில் சிறுமியுடன் வந்தார் தாய். அந்நேரத்தில், நிலை தடுமாறிவந்த மற்றொரு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அந்தச் சிறுமி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். கண்மூடி கண் திறப்பதற்குள், தாயின் கண்முன்னே இது நடந்தது. இந்த விபத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை. அந்தச் சிறுமி, அந்தத் தாய்க்கு ஒரே பிள்ளை. ஓரிரு நாள்கள் சென்று, அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்வதற்காக பள்ளியிலிருந்து சில ஆசிரியர்கள் சென்றனர். ஆசிரியர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தாய், அவர்களிடம் இவ்வாறு சொன்னார். எனது ஒரே பிள்ளையை இழந்துவிட்டேன். ஆயினும், இந்த விபத்தை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால், இந்த விபத்தால் இப்பொழுது பள்ளிப் பேருந்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது. கடவுள் என் குழந்தை வழியே பல குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்துள்ளார்.
ஆம். துயரத்திலும் நன்மையைக் கண்டார் அந்தத் தாய். இறைவன் வடித்த ஓவியங்களுள் அம்மா என்ற இடத்தை நிரப்ப வேறு யாரும் உள்ளனரோ?
கடவுளோடு மதிய உணவு
ஏப்ரல்25
சிறுவன் ஆகாஷ் கடவுளைக் காண ஆசைப்பட்டான். அவரைக் காண அதிக தூரம் போகவேண்டும் என்று, அவனாகவே கற்பனை செய்துகொண்டதால், பயணத்திற்குத் தேவையான பழங்கள், சாக்லேட்டுகள், குளிர்பானம் எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.சிறிது தூரம் சென்ற ஆகாஷ், அங்கிருந்த ஒரு பூங்காவில் நுழைந்து, அங்கு அமர்ந்திருந்த வயதான ஒரு பாட்டிக்கு அருகே அமர்ந்தான். தன் பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து சாப்பிட நினைத்த ஆகாஷ், பாட்டி பசியுடன் இருப்பார் என்று நினைத்து, அவரிடம் அந்தப் பழத்தைக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட பாட்டி, அழகாகச் சிரித்தார்.
சிறிது நேரம் சென்று, ஒரு சாக்லேட்டையும், குளிர் பானத்தையும் பாட்டிக்குக் கொடுத்தான் ஆகாஷ். அவன் தந்ததையெல்லாம் அழகான புன்னகையோடு பாட்டி வாங்கி சாப்பிட்டார். ஆகாஷ் அங்கிருந்து புறப்படும்போது, பாட்டியை சிறிது நேரம் கட்டிப்பிடித்தான். பாட்டியும், ஆனந்த புன்னகையுடன், ஆகாஷைக் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தமிட்டு அனுப்பிவைத்தார்.
ஆகாஷ் வீட்டுக்குள் நுழைந்ததும், அவன் தாய், "ஆகாஷ், இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாயே. என்ன நடந்தது இன்று?" என்று கேட்டார். ஆகாஷ் அம்மாவிடம், "இன்று நான் கடவுளோடு மதிய உணவு சாப்பிட்டேன். கடவுள் எவ்வளவு அழகாய் சிரித்தார் தெரியுமா!" என்று சொன்னான்.
வயதான பாட்டி, அவரது வீட்டுக்குத் திரும்பியதும், அவரது மகன், "என்றைக்கும் இல்லாமல் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே! காரணம் என்னம்மா?" என்று கேட்க, பாட்டி அவரிடம், "இன்று நான் கடவுளோடு மதிய உணவு சாப்பிட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட, கடவுளுக்கு ரொம்ப சின்ன வயசு!" என்று கூறினார்.
பாசமுள்ள பார்வையில் பரமன் வாழ்கிறார். கனிவுள்ள நெஞ்சில் கடவுள் கோவில் கொள்கிறார்.
தாய்மைக்கு பாலினம் கிடையாது
ஏப்ரல்24
முப்பத்தேழு வயது நிரம்பிய கவுரி சாவந்த் அவர்கள், மும்பையை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர். ஆனால் இவருக்கு பதினெட்டு வயது நடந்தபோது இவரது தந்தையால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டார். பெற்ற தாயை பார்த்தவர் இல்லை இவர். தனியே எப்படி வாழ்வது என்று நினைத்தபோதே, இவரை வேதனை வாட்டியது. ஆயினும், தற்போது சமூக ஆர்வலராக உருவெடுத்து, அப்பணிக்கு, தன்னை அர்ப்பணித்துள்ளார். பாலியல் தொழில் செய்து வந்த இவரது நண்பர் ஒருவருக்கு, ஆறு வயதில் ஒரு மகள். அவர் பெயர் காயத்ரி. தன் அம்மா ஒருவித நோயால் தாக்கப்பட்டு அடிக்கடி சோர்ந்து படுப்பதைப் பார்த்தார் சிறுமி காயத்ரி. ஆனால் அந்நோய் என்னவென்பது காயத்ரிக்குத் தெரியவில்லை. ஒருநாள் தன் அம்மாவை அவசர மருத்துவ சிகிச்சை வண்டியில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் காயத்ரியின் அம்மா வீடு திரும்பவே இல்லை. ஏனென்றால் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டிருந்த காயத்ரியின் அம்மா இறந்து விட்டார். எனவே காயத்ரி, ஆதரவில்லாமல் அனாதையானார். எனினும், சிறுமி காயத்ரியை மூன்றாம் பாலினத்தவராகிய கவுரி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, சொந்த மகளாக, பாசம் காட்டி வளர்த்து வருகிறார். கவுரியால் சட்டப்படி காயத்ரியை தத்தெடுக்க முடியாது. ஆயினும், காயத்ரியை அம்மாவுக்கு அம்மாவாக, அன்போடு வளர்த்து வருகிறார் கவுரி. அவரை மருத்துவராக்க விரும்புகிறார் கவுரி. ஆனால், காயத்ரியோ, தனது வளர்ப்புத் தாய் போன்று உள்ள மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட, வழக்கறிஞராக விரும்புகிறார். இதை, விக்ஸ் விளம்பரத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி அருமையாக காண்பித்துள்ளனர். இது, தாய்மைக்கு அருமையான விளம்பரம் என்று பலர் பாராட்டியுள்ளனர். இதனை, இந்தியாவில் 90 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இணையத்தில் பார்வையிட்டுள்ளனர்.
ஒவ்வொரு மனிதரும் அன்புகூரப்பட தகுதியுள்ளவர்.
தாய்மைக்குப் பாலினம் கிடையாது.
தகுதி கருதி வருவது, இரக்கம் அல்ல
ஏப்ரல்22
பேரரசன் நெப்போலியனிடம் ஒருநாள், வயதான ஒரு தாய், கலங்கிய கண்களுடன் வந்து சேர்ந்தார். படைவீரனான தன் மகன் மீது, பேரரசன் நெப்போலியன் கருணை காட்டவேண்டும் என்று அவ்வீரனின் தாய் மன்றாடினார். பேரரசன் அத்தாயிடம், "உங்கள் மகன் இரண்டாம் முறையாக மிகப்பெரியத் தவறு செய்துள்ளான். எனவே, அவனுக்கு மரண தண்டனை தருவதே நீதி," என்று கூறினார். அத்தாய் உடனே, பேரரசன்முன் மண்டியிட்டு, "நான் உங்களிடம் கேட்பது, நீதியல்ல அரசே! நான் கேட்பது, இரக்கமே!" என்று கூறினார். உடனே பேரரசன், தாயிடம், "அவன் இரக்கம் பெறுவதற்குத் தகுதியற்றவன்" என்று கூறினார். அத்தாய் மன்னரிடம், "தகுதி கருதி வருவது இரக்கம் அல்ல. தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், வெளிப்படுவதுதான் இரக்கம். அந்த இரக்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்!" என்று மன்றாடினார். சிறிது நேர அமைதிக்குப் பின், பேரரசன் நெப்போலியன் அத்தாயிடம், "நீங்கள் கேட்ட இரக்கத்தை தருகிறேன். உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினார்.
தகுதி, தரம் பார்க்காமல், தயக்கம் ஏதுமில்லாமல், இரவெல்லாம் இறங்கிவரும் பனிபோல, நம் உள்ளங்களை நனைப்பதே இரக்கம். அதிலும் சிறப்பாக, தகுதியற்றவர்களை, தவறி வீழ்ந்தவர்களைத் தேடி, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து வருவதே, இறை இரக்கத்தின் இலக்கணம்.
குறிப்பறிந்து செயல்படுபவர் தாய்
ஏப்ரல்21
அந்தச் சோளக் காட்டிலிருந்த மரம் ஒன்றில், குருவி ஒன்று கூடு கட்டி, குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. அச்சமயத்தில், ஒரு நாள் தாய்க் குருவி இரைதேடச் செல்வதற்குமுன், தன் குஞ்சுகளிடம் இவ்வாறு கூறியது. அறுவடை காலம் நெருங்கிவிட்டது. அதனால், நம் வீட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், நில உரிமையாளர் வந்தால், அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்து வையுங்கள் எனச் சொல்லிச் சென்றது. அன்று அந்தச் சோளக் காட்டிற்கு, தன் மகனோடு வந்தார் நில உரிமையாளர். அவர் தன் மகனிடம், நாளை நம் உறவினர்களுடன் வந்து சோளக் கதிர்களை அறுக்கலாம் எனக் கூறினார். அன்று மாலை கூட்டிற்குத் திரும்பிய தாயிடம், குஞ்சுகள் தாங்கள் கேட்டதைக் கூறின. சரி, இப்போது நாம் இடம் மாறத் தேவையில்லை எனச் சொல்லியது தாய். மறுநாளும், தாய்க் குருவி உணவு தேடச் செல்வதற்கு முன், முந்திய நாள் கூறியதையே குஞ்சுகளிடம் சொல்லிச் சென்றது. அன்று வீடு திரும்பிய தாயிடம், அம்மா, அந்த நில உரிமையாளர் இன்றும் வந்தார், அவர் தன் மகனிடம், நாளை, நம் வீட்டுப் பக்கத்தில் இருப்பவர்களுடன் வந்து அறுவடை செய்வோம் எனத் சொன்னார் என்றன குஞ்சுகள். அப்படியா, இப்போதும் நாம் வேறிடம் போகத் தேவையில்லை எனச் சொல்லியது தாய்க் குருவி. அதற்கு அடுத்த நாளும் முந்தைய நாளில் சொன்னதையே சொல்லி, இரை தேடச் சென்றது தாய்க் குருவி. அன்று மாலையில் குஞ்சுகள், தங்கள் தாயிடம் இவ்வாறு கூறின. அம்மா, நாளை நாமே வந்து அறுவடை செய்யலாம் என, நில உரிமையாளர், தன் மகனிடம் கூறியதைக் கேட்டோம் என்றன. ஓ! அப்படியா கதை, தங்கள் வேலையை தாங்களே செய்ய முடிவெடுத்து விட்டனரா, நாம் இன்றே நம் வீட்டின் இடத்தை மாற்ற வேண்டும் என்றது தாய்க் குருவி.
தம் பிள்ளைகளைக் காப்பாற்ற குறிப்பறிந்து செயல்படுபவர் தாய்
தாய் மனம், தாய்ப் பாசம்
ஏப்ரல்20
அந்தத் தாய்க்கு, வசந்தி, புவனா என இரு மகள்கள். கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து, இவ்விரு மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார், அந்தத் தாய். பக்கத்து ஊரில் வாழ்ந்த வசந்தியின் குடும்பம் நடுத்தரமானது. சென்னையில் வாழ்ந்த புவனாவின் குடும்பம் வசதியானது. அந்த ஆண்டு ஊர் திருவிழாவிற்கு, இரு மகள்களும் குடும்பத்தோடு அம்மா வீட்டுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் அம்மாவின் உபசரிப்பைப் பார்த்த வசந்தி, வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் வேறு மாதிரியாகவும் அம்மா நடந்து கொள்வதாக உள்ளுக்குள்ளே புழுங்கினாள். எனவே, கணவர் ஊர் திரும்பிய அன்று மதியமே ஊருக்குக் கிளம்பினாள் வசந்தி. அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. புவனா, சென்னைக்குச் சென்றவுடன், வசந்தியைப் பார்க்கச் சென்றார் அம்மா. இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தார் அம்மா. `ஏதும்மா?' என்று வசந்தி கேட்டாள். `நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனாகிட்டே வாங்கினேன். உன்னைச் சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னாதானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதாலதான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவ மனசுல தப்பான எண்ணம் வந்துடக் கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரிதான் அன்பு காட்டினேன்.. நீதான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சுதான் எனக்காகப் பணம் கேட்டேன். தங்கைகிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவமாக இருக்காது, ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது' என்றார் அம்மா.
அன்னையின் அன்பு, ஆழம் காண இயலா ஆழ்கடல்.
தாயன்புக்கு நிகரான அன்பு உளதோ?
ஏப்ரல்19
அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தன் கணவர் ராஜனிடம், அந்த முதியோர் இல்லத்தில் இருந்து வந்திருந்த கடிதத்தை நீட்டி, உங்களை நாளைக்கு அங்கு வரச் சொல்லியிருக்கிறார்கள், அங்கே போய்விட்டுத் திரும்பும்போது, அங்கிருக்கும் உங்கள் அம்மாவையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள் என எச்சரித்தார் ராஜாத்தி. சென்ற மாதம் தானே அம்மாவைப் பார்த்து வந்தேன், அதற்குள் என்ன அவசரமோ என்று, அம்மாவைப் பற்றிய இனம்புரியாத பயம் ஏற்பட்டது ராஜனுக்கு. அதேநேரம் அவருக்கு, மனைவி மீது கோபம் கோபமாயும் வந்தது. மறுநாள் காலை அம்மாவைப் பார்க்க முதியோர் இல்லம் சென்ற ராஜனிடம், அவ்வில்லத் தலைவர், சார், உங்கள் அம்மா, இந்தக் கவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று அதைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது ராஜன் பெயருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஒரு கடிதமும் இருந்தன. அதை வாசித்த ராஜன் அதிர்ந்து போனார்.
அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது, உன்னை நான் சுமையாக அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் உடல் உழைப்பைத் தர முடியவில்லை. நீ கஷ்டப்படுவதைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. இந்த நிலையில் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அப்போது செல்வந்தர் ஒருவருக்கு, அவசரமாக சிறுநீரகம் தேவைப்பட்டது. அதனால் எனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன். கடனையெல்லாம் அடைத்துவிட்டு என் பேத்தியை நன்கு படிக்க வை! அவள் நாளை, உன்னையும், உன் மனைவியையும் காப்பாத்துவாள். நீங்கள் எல்லாரும் நல்லாயிருக்க வேண்டுமென நான் அந்தக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்! நான் போகிறேன்... இப்படிக்கு உன் அன்பு அம்மா!
இது கதையல்ல, உண்மையில் நடந்தது. பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. அன்பு என்பது, அன்னையிடம் மட்டுமே எல்லாக் காலங்களிலும் அமுதமாய் கிடைக்கும். தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்க வேண்டாமே.
பழிக்குப் பழியை வென்ற பாசம்
ஏப்ரல்18
The Other Cheek, அதாவது, மறு கன்னம் என்ற வார்த்தைகளை அடித்தளமாகக் கொண்டு இணையதளத்தில் தேடும்போது கிடைக்கும் கதைகளில் பல, நம் மனதை பாதிக்கும் வலிமை பெற்றவை.. அவற்றில் ஒன்று Mindy Carter-Shaw என்ற இளம் பெண்ணைப் பற்றியது.
இளம்தாய் Mindy அவர்களின் மகன் Bridger, ஒருநாள் சைக்கிளில் சென்றபோது, அவன்மீது தவறுதலாகப் பாய்ந்து வந்து வெடித்தது, ஒரு சக்திவாய்ந்த வாணவேடிக்கை வெடி. Bridgerன் உடல் சின்னாபின்னமானது. அவனது வயிற்றுப்பகுதி பாதி கிழிந்தது, முதுகு முற்றிலும் தீய்ந்துபோனது. கால் ஒன்று முற்றிலும் வெட்டப்பட்டது. 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த விபத்திலிருந்து Bridger மீண்டபோது, அவனுக்கு வாழ்நாளெல்லாம் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. இன்றும் தேவைப்படுகின்றன. இந்த விபத்திற்கு காரணமான Craig Miller என்பவரைச் சிறையில் அடைத்து, அவர் Mindyக்கும் Bridgerக்கும் இழப்பீட்டுத் தொகை தர வேண்டுமென்று பலர் விரும்பினர். Mindyஐ வழக்கு பதிவு செய்யத் தூண்டினர். Mindy, Craigஐ சந்தித்து, அவரை எப்படியும் தண்டனையிலிருந்து தப்புவிக்க தான் முயல்வேன் என்று உறுதி அளித்தார். தான் மட்டுமல்ல, தன் மகன் Bridgerம் அதையே விரும்புவதாக Mindy கூறினார். ஒரு முறை Mindy தன் மகனிடம் எதேச்சையாகக் கேட்டார்: "மகனே, உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய Millerக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால், எவ்வகை தண்டனையை அவருக்குக் கொடுப்பாய்?" என்று கேட்டார். "வெடிகளால் வரும் விபத்துக்கள் குறித்து அவர் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதுதான் அவருக்கு நான் தரும் தண்டனை" என்று சொன்னான், 11 வயது நிறைந்த Bridger. அந்த விபத்து நடந்ததும், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார், Craig Miller. Mindy, Bridger இருவரும் கூறிய வார்த்தைகளால், மன்னிப்பும், மறுவாழ்வும் பெற்ற Craig Miller, இன்று நல்லதொரு வாழ்க்கை வாழ்கிறார்.
வெற்றிகளின் அன்னை
ஏப்ரல்17
எவ்வளவு பெரிய இருட்டாக இருந்தாலும், கிழக்கு அதை கிழிக்காமல் விடாது. கல்லறை இருட்டைக் கிழித்து, கிழக்கின் விளக்காக கிளர்ந்து எழுந்துள்ளார் கிறிஸ்து. சாவுக்குச் சாவுமணி அடித்து, சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? என்று சிந்தை மகிழ, விந்தை நிகழ, கல்லறைக் கூட்டை உடைத்து, வீர முழக்கத்துடன் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார் கிறிஸ்து. வெற்றி நாயகன் இயேசுவின் தாயாம் அன்னை மரியாவும், வெற்றிகளின் அன்னையே. ஜெகத்தை வென்ற ஜெகனின் தாயாம் அன்னை மரியா ஜெக மாதா, வெற்றிகளின் மாதா. அன்னை மரியாவை, வெற்றிகளின் அன்னை என்று அழைப்பதற்கு ஒரு வரலாறும் உள்ளது. 16ம் நூற்றாண்டில், முஸ்லிம்கள், இஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை ஆக்ரமித்து, கிறிஸ்தவ ஐரோப்பாவின் பெரும் பகுதியை அச்சுறுத்தினர். இந்த அச்சுறுத்தல், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே Ionian கடல் பகுதியில், Lepanto என்ற இடத்தில் நடந்த சண்டை உண்மையாக்கியது. இந்த ஆபத்தை உணர்ந்த அப்போதைய திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களையும், செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவர்கள் எல்லாரும் அன்னை மரியாவை நோக்கி உருக்கமாக செபமாலைச் செபித்தனர். கிறிஸ்தவ ஐரோப்பிய படைகள், போரில் வெற்றியும் பெற்றன. இது நடந்தது 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள். இதனால், திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அன்னை மரியாவை வெற்றியின் அன்னை(Our Lady of Victories) எனவும், அக்டோபர் 7ம் தேதி செபமாலை அன்னை விழா எனவும் அறிவித்தார்.
அன்னை மரியா தம் மகன் இயேசுவிடம், நம் எல்லாருக்காகவும் எப்போதும் பரிந்து பேசி வருகிறார். வெற்றியின் அன்னை மரியாவை நம்பிக்கையுடன் நாமும் நாடுவோம்.