பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி
ஒரு தாயின் கண்ணீர்ப் பகிர்வு

ஜூலை31

முதியோர் காப்பகம் ஒன்றில் தஞ்சம் தேடியிருந்த தாய் ஒருவர், ஊடகம் வழியே பகிரந்துகொண்டவை இதோ...

வசதியான குடும்பத்தில் பிறந்த நான், செல்லமாக வளர்க்கப்பட்டு, நல்ல பண்புடைய மனிதருக்குத் திருமணமும் செய்து வைக்கப்பட்டேன். என் கணவரோடு இருந்தவரை, அவர் என்னைப் பார்த்து, ஒருநாள்கூட, கோபத்திலும்கூட, ஒரு சுடுசொல் சொன்னதில்லை. அவர் செய்தித்தாள் ஏஜென்ட் வேலை பார்த்தார். நானும் படித்திருந்ததால் அவருடைய வேலையில் பாதியை, நானே முடித்துக் கொடுப்பேன். எங்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். பிள்ளைகளை நன்றாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என, என் கணவர் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக்கொள்ள மூன்று சிங்கக்குட்டிகள் இருக்கிறார்கள் எனச் சொல்வார் அவர். மூன்று பிள்ளைகளுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்துப்போடுவேன். தீபாவளி பொங்கல் என வந்தால், அவர்களுக்குச் செலவழிக்கிற காசுக்கு அளவேயிருக்காது. அவர்களுக்காக ஒருநாள் முழுவதும் பட்டினியாகக் கிடந்தபோதுகூட அது எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளும் நன்றாக வரவேண்டும் என, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ் எனப் பல மொழிகளையும் கற்றுக்கொள்ள வைத்தார் என் கணவர். எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாமல்தான் வளர்த்தோம். பிள்ளைகள் வளர்ந்து திருமணமானதற்குப் பிறகு, அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு தடுப்பு விழுந்தால்போன்று இருந்தது. கடவுள் புண்ணியத்தில் மூன்று பிள்ளைகளும் வசதியாகத்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள், தனிக்குடும்பங்களாக மாறினபின், என் கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், எங்களின் அடுக்குமாடி வீட்டை விற்று கடனை அடைத்தோம். கடனைக் கட்டிவிட்டு, விரக்தியில் அவர் வீட்டை விட்டே போய்விட்டார். எங்கே இருக்கிறார் என, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தனியாளாய், நாலைந்து வீட்டில் பாத்திரம் தேய்த்தேன். அதில் கிடைத்த காசை வைத்து வாடகை வீட்டில் இருந்தேன். இப்போது வயதாகி விட்டது. கண்ணும் தெரியவில்லை. வீட்டுவேலைக்கும் போக முடியவில்லை. என்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு சின்ன மகன் வீட்டுக்குப் போனேன். அவனும், அவன் மனைவியும், இங்கு எதற்கு வந்தாய் எனத் திட்டினார்கள். என்னை அவர்கள், வீட்டுக்குள்ளேயே நுழைய விடவில்லை. பெரிய பையன் சாதாரணமாவே கோபக்காரன். அவன் வீட்டுக்கும் போகப் பிடிக்கவில்லை. கட்டிக்கொடுத்த மகள் வீட்டுக்கும் நான் தஞ்சம் கேட்டுப் போக முடியாது.

தனிமையில் கண்ணீர் சிந்தும் தாய்களின் வலிகள் உணரப்படுமா?
மணலிலும்... கல்லிலும்...

ஜூலை29

நண்பர்கள் இருவர் பாலை நிலத்தைக் கடந்து சென்றனர். வழியில் அவர்களிடையே உருவான கருத்து வேறுபாட்டால், வயதில் மூத்தவர், இளையவரை அறைந்துவிட்டார். அறைவாங்கியவர், உடனே, அங்கிருந்த மணலில், "என் நண்பன் இன்று என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினார்.

சிறிது தூரம் நடந்தபின், இருவரும் ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, அறைவாங்கிய இளையவர், ஒரு சுழலில் சிக்கினார். உடனே, மூத்தவர் அவரை மீட்டு, கரை சேர்த்தார். உயிர் பிழைத்த நண்பன், தன்னிடமிருந்த உளியைக் கொண்டு, அருகிலிருந்த பாறையில், "என் நண்பன் இன்று என் உயிரைக் காப்பாற்றினான்" என்று செதுக்கி வைத்தார்.

அறைவாங்கியதை மணலிலும், உயிர் காத்ததை கல்லிலும் எழுதக் காரணம் என்ன என்று, மூத்தவர் இளையவரிடம் கேட்டபோது, "தீமைகளை மணலில் எழுதினால், மன்னிப்பு என்ற காற்று அவற்றை மெல்ல, மெல்ல அழித்துவிடும். நன்மைகளை, கல்லில் செதுக்கினால், அவை காலமெல்லாம் வாழும்" என்று பதில் சொன்னார்.

"இவ்வுலகம் அனைத்தும் உன்னைவிட்டு வெளியேறும்போது, உள்ளே நுழைபவன், உண்மை நண்பன்" என்று வால்டர் வின்ச்செல் (Walter Winchell) என்பவர் கூறியுள்ளார்.

ஜூலை 30, இஞ்ஞாயிறு, உலகின் பல நாடுகளில் 'நட்பு நாள்' (Friendship Day) சிறப்பிக்கப்படுகிறது.
புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை

ஜூலை,28

நகரத்தில் வேலைபார்த்த மாதவன், கிராமத்தில் பிறந்து வளர்ந்த புது மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்திருந்தார். சில நாட்களிலேயே அக்கம்பக்கத்து குடியிருப்புக்களைக் குறித்து குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார், மாதவனின் மனைவி வனஜா. அவர்கள் அப்படியில்லை என மாதவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் மனைவி கேட்கவில்லை. தன் அம்மாவிடம் இவ்விவரத்தைக் கூறினார் மாதவன். மருமகளுக்கு எப்படி பாடம் கற்பிப்பது என எண்ணிய மாமியார், திடீரென மருமகளுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்பது புரியாத மருமகள், தன் கணவரிடம் இதைக் குறித்துக் கூறினார். மாதவனும் மனைவியை நோக்கி, ‘சரி, அம்மாதான் உன்னிடம் பேசவில்லை, நீ பேசினாயா?’ எனக் கேட்டார். 'அம்மாவே என்னிடம் பேச விரும்பாதபோது, நான் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்?' எனக் கேட்டார் வனஜா. 'பக்கத்து வீட்டுக்காரர்களும், உன்னை ஒதுக்கி வைப்பதாகவும், உன்னிடம் பேசுவதும் இல்லை என்கிறாயே, அவர்களும் இதேப்போல், நீ பேச விரும்பாதபோது, ஏன் உன்னிடம் வலிய முன்வந்து பேசவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா? என் அம்மா உன்னிடம் பேச விரும்பவில்லை என உன்னிடம் சொன்னார்களா? அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்திருக்கலாம், அதை நினைத்துக்கொண்டு இருந்ததில், உன்னிடம் வந்து பேச நேரமில்லாமல் போயிருக்கலாம்' என்றார். தன்னிடம்தான் எங்கோ தவறிருக்கிறதோ என எண்ணிய வனஜா, அடுத்த நாள் வெளியில் வரும்போது, பக்கத்து வீட்டு பெண்மணியைப் பார்த்து இலேசாக புன்முறுவல் பூத்தார். பதிலுக்கு புன்னகை பூத்த பக்கத்து வீட்டு மாமி, 'உன்னைப்பற்றி இப்போதுதான் உன் மாமியாரிடம் விசாரித்துக் கொண்டிருந்தேன். என் மருமகள் ரொம்ப அடக்கம், பேசுவதற்கும் பழகுவதற்கும் ரொம்ப வெட்கப்படுவான்னு சொல்லிக்கொண்டிருந்தாங்க. ஒன்னும் கவலைப்படாதே, இங்கு இருக்கிற பலருக்கு இந்த ஊர் புதுசுதான். ஒருத்தருக்கொருத்தர் நாமதான் ஒத்தாசையா இருக்கணும்' என்று கூறிக்கொண்டே ஒரு தாய்க்குரிய பாசத்துடன் வனஜாவை அணைத்துக் கொண்டார்.
மகனிடம் மன்னிப்பு கேட்ட தாய்

ஜூலை,27

“மகனே, உன்னை எங்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்காக நானும், உன் அப்பாவும் மிகவும் மனம் வருந்துகின்றோம், வேதனைப்படுகின்றோம், உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றோம். மகனே, உனது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கிய நேரம் முதல், உன்னைக் காப்பாற்றுவதற்கு, எவ்வளவு முயற்சிகள் எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும், ஏறக்குறைய கடந்த 12 மாதங்களாக, எடுத்தோம். எல்லா முயற்சிகளுமே, மோசமாகவே எங்கள் வாழ்வில் நடந்தன. ஆனால், மகனே நீ எப்போதும் எங்களுக்கு மகனே. எங்களின் அழகான குட்டி மகன் இவ்வுலகைவிட்டுப் போகட்டும் எனச் சொல்வதைப் போன்ற கடினமான காரியம் வேறு எதுவும் இல்லை. நாங்கள் சொல்லவேண்டிய மிக கடினமான கூற்று இது”.

இவ்வாறு, தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, பிரித்தானிய தாய் ஒருவர், அறிக்கை ஒன்றை, இவ்வாரத்தில் வெளியிட்டுள்ளார். இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டுக்கு (Charlie Gard), சிகிச்சைகள் வழங்கும் மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சையளிப்பது பலனற்றது எனக் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில், ஒரு மூன்றுமாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரிசோதனை முறையில் சிகிச்சையளிக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டு நரம்பியல் நிபுணர் ஒருவரும், குழந்தை சார்லிக்கு, பரிசோதனை முறையில் சிகிச்சையளிப்பது எவ்விதத்திலும் பயன்தாராது என அறிவித்துவிட்டார். இந்நிலையில், சார்லியின் பெற்றோர் (Chris Gard 32, Connie Yates 31), சட்டமுறைப்படி தாங்கள் எடுத்துவந்த நடவடிக்கையை, நிறுத்திக்கொள்வதாக இத்திங்களன்று அறிவித்தனர். அதன்பின் சார்லியின் அம்மா, தன் அன்பு மகனுக்குச் சொல்வதாக விடுத்த அறிக்கையில், தங்களின் இந்த முடிவுக்காக, மகனிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, உலகின் பல இடங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள், சார்லியின் பெற்றோருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயெனும் கோவிலுக்கொரு கோவில்

ஜூலை,26

வீரத்திலும், தானத்திலும், நிர்வாகத்திலும் சிறந்த விளங்கிய தமிழ் மன்னர், இராஜேந்திரசோழன் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அம்மன்னர், தாய்ப்பாசத்திலும் சிறந்து விளங்கியதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள சில கோவில்களுக்கு தன் அன்னையின் பெயரில் நில தானம், பொன் தானம் உள்ளிட்டவற்றையும் வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. அதேவேளை, இராஜேந்திரசோழன், தனது தாய், வானவன் மாதேவி மீது கொண்ட அதீத பாசத்தினால், அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்து, சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியைத் தேர்வுசெய்து கோவில் கட்டியதாக, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. இராஜேந்திரசோழன் பதவியேற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டாலும், த‌ன் அன்னையின் நினைவாக, அவர் கட்டிய கோவில், இன்றைக்கும் புவனகிரி நகரின் சரித்திர குறியீடாக நின்று, அவரது பெயரையும், புகழையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், இன்றும் தாய்ப்பாசத்தை கோவில் கட்டி வெளிப்படுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்திற்கு அருகே, பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது, சுரேஷ்குமார் என்பவர், மறைந்த தனது தாய் தனபாக்கியம் என்பவருக்காக கட்டிய கோவில். கோவிலின் முகப்பில், "இக்கோவில் ஒரு தாய்க்காக மட்டுமே கட்டப்பட்டது அல்ல, அகிலத்து அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம்" என்ற வாசகமும், எழுதப்பட்டுள்ளது.

மேலும், நடிகரும் இயக்குனருமான இராகவா லாரன்ஸ், தன் தாய் கண்மணிக்காக, கோவில் கட்டியுள்ளார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், அவர் கட்டியுள்ள இராகவேந்திரா பிருந்தாவனத்தில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. ''என்னைக் கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு கருவறையில் சிலை வைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பதை, எனது இலட்சியமாகக் கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்குச் சொல்லவே நான் இந்த கோவிலைக் கட்டினேன்'' என உரைக்கும் இராகவா லாரன்ஸ், ''இக்கோவில், அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம்,'' எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு...

ஜூலை,25

சிறுவன் ஒருவன், தன் படிப்புச் செலவுக்குப் பணம் சேர்க்க, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு, வீடாகச் சென்று பொருள்கள் விற்றுவந்தான். அன்றும் அவ்வாறே அவன் சென்றபோது, யாரும் அவனிடம் பொருள்கள் வாங்கவில்லை. வெயில் சுட்டெரித்தது. களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தபடி, அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம் பெண்ணொருவர் வெளியே வந்ததும், அவரிடம், "குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?" என்று கேட்டான். அப்பெண்ணோ, "ஒன்றுமில்லை. அன்பாகச் செய்யும் உதவிக்கு விலை எதுவும் கிடையாது என்று எங்கள் அம்மா சொல்லித்தந்திருக்கிறார்கள்" என்று கூறினார். ஹாவர்ட் கெல்லி (Howard Kelly) என்ற அச்சிறுவன், அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, அவன் உடலில் புது சக்தி பிறந்ததைப் போல் உணர்ந்தான். அவனுக்கு, இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கை பிறந்தது. தன் படிப்பை எப்படியும் தொடர்வது என்ற உறுதியும் பிறந்தது.

ஆண்டுகள் உருண்டோடின. அந்த இளம்பெண், விவரிக்கமுடியாத ஓர் அரிய நோயினால் துன்புற்றார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அவர் இருந்த ஊரில் இல்லையென்பதால், அருகிலிருந்த நகருக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில், ஹாவர்ட் கெல்லி, மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவரிடம் அப்பெண்ணின் மருத்துவ 'ரிப்போர்ட்' கொடுக்கப்பட்டது. மருத்துவர் கெல்லி, அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றார். அவர்தான் தனக்கு ஒரு 'டம்ளர்' பால் கொடுத்தவர் என்பதை, டாக்டர் கெல்லி புரிந்துகொண்டார். ஆனால், அப்பெண்ணுக்கு, டாக்டரை அடையாளம் தெரியவில்லை.

டாக்டர் கெல்லி தீவிர முயற்சிகள் எடுத்து, அப்பெண்ணைக் குணமாக்கினார். அப்பெண்ணின் மருத்துவச் செலவுக்குரிய 'பில்'லைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். 'பில்' வந்ததும், அதில் சில வார்த்தைகளை எழுதி, அப்பெண் இருந்த அறைக்கு 'பில்'லை அனுப்பி வைத்தார், டாக்டர் கெல்லி. 'பில்'லைப் பார்க்கத் தயங்கினார், அப்பெண். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், அந்த 'பில்' தொகையை தன்னால் கட்டமுடியாது என்று அவருக்குத் தெரியும். மனதை, ஓரளவு திடப்படுத்திக்கொண்டு, 'பில்'லைப் பார்த்தார். அந்தத் தொகை உண்மையிலேயே பெரிய தொகைதான். ஆனால், அந்தத் தொகைக்கருகே, "இந்த 'பில்' தொகை முழுவதும் கட்டப்பட்டுவிட்டது, ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு" என்று எழுதப்பட்டிருந்தது.
அம்மாவின் விருப்பம்

ஜூலை,24

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில், தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த மகன், அன்று, தன் தாயோடு வங்கிக்குச் சென்றான். அங்கு வேலைகள் முடிய, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆனது. வீட்டிற்கு வந்தபின், மகன் தாயிடம், அம்மா, உங்கள் வங்கிக் கணக்கை, வலைத்தளம் வழியாக ஏன் இயக்கக் கூடாது? அவ்வாறு நீங்கள் செய்தால், இவ்வளவு நேரம் காத்திருக்கத் தேவையிருக்காதே! அம்மா, நீங்கள், கடைக்குச் சென்று சாமான்கள் வாங்குவதைக்கூட வலைத்தளம் வழியே செய்யலாம். அது உங்கள் வேலையை எளிதாக்கும்... இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி, வயதான அம்மாவை வலைத்தள உலகத்தில் அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருந்தான் மகன். மகனின் ஆர்வத்தைப் பார்த்த அம்மா சொன்னார் – மகனே, நீ சொல்வதுபடி செய்தால் நான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டியிருக்காதுதானே? என்று. ஆமாம். மளிகைக் கடைக்காரர்கூட, எல்லாப் பொருள்களையும் வீட்டு வாசலிலே கொண்டுவந்து இறக்கி விடுவார் என்றான் மகன். பின் அம்மா சொன்னவற்றைக் கேட்டு, அந்த மகன் வாயடைத்துப் போனான். இன்று நான் இந்த வங்கியில் நுழைந்த போது எனது நண்பர்கள் நான்கு பேரைச் சந்தித்தேன். நாங்கள், மகிழ்வாகப் பேசிக்கொண்டிருந்தோம். வங்கியில் வேலை செய்பவரும், எனக்கு நன்றாகப் பழக்கமாகிவிட்டார். நான் வீட்டில் தனியாக இருப்பதால், இந்த மாதிரி துணைகள் எனக்குத் தேவை. வங்கியில் வந்து பணம் எடுக்கவோ, பணம் போடவோ எனக்குப் போதுமான நேரம் இருக்கின்றது. இந்த மனித உறவுகள் எனக்குத் தேவை. சென்ற ஆண்டில் உன் அப்பா இறக்கும் நிலையில் இருந்தபோது, நான் பழங்கள் வாங்கும் கடைக்காரர் பார்க்க வந்தார். அப்பாவின் நிலையைப் பார்த்து, படுக்கையின் அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்தினார். சில நாள்களுக்குமுன் நான் சாலையில் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். என்னைப் பார்த்த மளிகைக்கடைக்காரர், ஒரு ஆட்டோவில் என்னை ஏற்றி, வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார். நீ சொல்வதுபோல் நான் செய்தால், இந்த அன்பான மனித உறவுகள் எனக்குக் கிடைக்குமா?

அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னார் - தொழில்நுட்பம், நம் மனித உறவுகளை விஞ்சும் நாளை எண்ணி அஞ்சுகிறேன். அந்நாளில், உலகம், முட்டாள்களின் தலைமுறையைக் கொண்டிருக்கும் என்று.
பாசமிகுந்த ஓநாயை வளர்க்க முயல்வோம்

ஜூலை,22

‘செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. பாசம், பரிவு, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ, அந்த ஓநாயே வெற்றிபெறும்.
மகளின் தாய்மையுணர்வு

ஜூலை,21

பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடினாள் அச்சிறுமி. 5ம் வகுப்புப் படிக்கும் அந்த 10 வயது சிறுமி, ஐந்தே நிமிடத்தில் வீட்டை அடைந்து, பாத்திரங்களை கழுவி, பின், தன் இரு தம்பிகளுக்கும் உடம்பைத் துடைத்து, தான் காலையில் செய்து வைத்துவிட்டுப்போன கேழ்வரகுக் கஞ்சியை குடிக்கக் கொடுத்தாள். இவள் தகப்பன் இவர்களை விட்டு விட்டுப்போய் 4 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த இரண்டாண்டுகளாக அம்மாவும் படுத்தப் படுக்கையாகிவிட்டார். அம்மாவின் அருகில் சென்றுப் பார்த்தார், அந்தச் சிறுமி. இவளைக் கை நீட்டி அருகே அழைத்து, அணைத்து, தலையை வருடிக் கொடுத்தார் அந்த தாய். தன் இயலாமையை எண்ணி, அந்த தாயும்தான் எத்தனை நாட்களுக்கு அழுது கொண்டிருப்பார். தனக்கிருக்கும் அந்த சிறு வயலை குத்தகைக்கு விட்டு, அதில் வரும் சிறு வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 'ஏனம்மா அழுகிறீர்கள்' என கேட்டாள் அந்த சிறுமி. ' இல்லையம்மா, இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்புக்களை சுமக்க வைத்துவிட்டேனே' என மேலும் கண்ணீர் விட்டார் அத்தாய். 'தாய்க்கும், தம்பிகளுக்கும் உதவுவது சுமையல்ல, அது சுகம்தான்' என, பெரிய மனுஷி போல் கூறிய அச்சிறுமி, தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். இங்கு, தாய் மகளாவும், மகள் தாயாகவும் மாறிப்போனார்கள்.
தன்னம்பிக்கையை ஊட்டும் தாய்

ஜூலை,20

அந்தப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, "என் அம்மா' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார், தலைமையாசிரியர். சிறந்த கட்டுரை எழுதிய மாணவியின் அம்மாவுக்குப் பரிசு என்றும் அவர் அறிவித்திருந்தார். போட்டியின் முடிவை அறிவிக்கும் நாளும் வந்தது. அன்று மாலை நான்கு மணிக்கு, மாணவிகளும், அவர்களின் அம்மாக்களும், ஆசிரியர்களும், பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனர். அந்நிகழ்வில் தலைமையாசிரியர் புன்முறுவலுடன் பேசத் தொடங்கினார். கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில், ஒருசிலர் தவிர, மற்ற எல்லாருமே அவரவர் அம்மாக்களைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கள். ஒருசிலர் மட்டும், என் அம்மா எப்போதும் "படி... படி' என்று நச்சரிக்கிறார்கள் என எழுதியிருக்கிறார்கள். இந்நிகழ்வில், இரண்டு மாணவிகள் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். மாணவி கலா இவ்வாறு எழுதியிருக்கிறார். சமையல் செய்வது, ஏனைய வீட்டு வேலைகளைச் செய்வது, அம்மாவுக்கு உதவுவது என்று, வீட்டில் எனக்கு ஓயாமல் வேலை, ஆனால் ஒருநாள்கூட என் அம்மா என்னை, ‘படி’ என்று சொன்னதில்லை, என் அம்மா எனக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறார் என்று கலா எழுதியிருக்கிறார். அடுத்து, மாணவி கமலா, எனக்குப் படிப்பைத் தவிர வீட்டில் எந்த வேலையுமில்லை, ஒரு துரும்பைக்கூட நான் அசைப்பதில்லை, சிலசமயம் உணவைக்கூட அம்மா ஊட்டி விடுவார், இப்படி அன்பை ஊட்டி வளர்ப்பதால், என் அம்மா, ‘நல்ல அம்மா’ என்று எழுதியிருந்தார். இந்த இரண்டு பேரில் ஒருவரின் அம்மா.. என்று சொல்லிய தலைமையாசிரியர், சிறிதுநேர மௌனத்திற்குப் பின், தன்னைச் சார்ந்து இல்லாமல் இருக்கும் திறனை ஏற்படுத்தியதற்கும், தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதற்கும், கலாவின் அம்மாவுக்குத்தான் பரிசு என்று அறிவித்தார். மாணவிகளின் பலத்த கைதட்டல் ஒலிகளுக்கு மத்தியில், கலாவின் அம்மா சின்னராணி எழுந்துவர, "பாரதியாரின் கவிதைகள்' என்னும் நூலைப் பரிசாகக் கொடுத்தார் தலைமையாசிரியர். கலாவுக்கு அப்பா கிடையாது. அம்மா சின்னராணி நான்கு மாடுகள் மேய்த்து, பால் வியாபாரம் செய்து, கலாவைப் படிக்க வைக்கிறார். கலா நன்றாகப் படிக்கும் மாணவி.

ஆம், தாய், தன்னம்பிக்கையை ஊட்டுபவர்.
கிளை வழியே நிறைவேறிய ஆணிவேரின் ஆசை

ஜூலை,19

அவர், அந்த கிராமத்தின் மருத்துவ முகாமுக்கு புதிதாக வந்த மருத்துவர். எந்தச் சிரமச் சூழலிலும், புன்னகை மாறாமலேயே பணிவிடை செய்து வந்தார். அவரை யாரும் வெறும் மருத்துவராகப் பார்ப்பதில்லை. மாலையானால் மரத்தடியில் அமர்ந்துகொண்டு, அந்த ஊர் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், பாடங்களைப் படிக்க உதவிக்கொண்டும் இருப்பார். “30 வயது கூட நிரம்பாத இந்த இளைஞர், தன் முழுநேரத்தையும் இந்த கிராமத்தின் மக்களுக்காக ஏன் செலவிடவேண்டும்? இதுவரை வந்து சென்ற மருத்துவர்கள்போல், ஒரு 8 மணிநேரம் மருத்துவமனையில் பணியாற்றியபின், மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி வரலாமே” என அடிக்கடி நினைத்துக் கொள்வார், 70 வயது நிறைந்த வேதமூர்த்தி. அன்று இந்த விடயம் குறித்து தன் மனைவியிடம் பேசினார், வேதமூர்த்தி. “உங்களுக்கு விடயமே தெரியாதா. அந்தப் பிள்ளையாண்டான், நம்ம கீழத்தெருவில் வசித்தாரே மலைச்சாமி, அதுதான், 40 ஆண்டுகளுக்கு முன் பக்கத்துத்தெரு மேல்சாதி பையனுடன் தன் மகள் ஓடிப்போனதும், ஊர்ப்பேச்சு தாங்காமல், தூக்குப்போட்டு இறந்துபோனாரே, அந்த மலைச்சாமியின் பேரனாம். 30 வருடங்களுக்கு முன், இவன் அப்பா இறந்த பிறகு, இந்த ஊருக்கு திரும்பிவர, அவன் அம்மா ஆசைப்பட்டாராம். ஆனால், அத்தாய் இறக்கும்வரை அது நிறைவேறவேயில்லையாம். இந்த ஊரை நினைத்தே வாழ்ந்த அவன் தாயின் விருப்பதை நிறைவேற்றவே, இந்த ஊருக்கு மாற்றல் கேட்டு வந்தானாம் இந்த பையன்” என்று அவர் மனைவி சொன்னதும் வாயடைத்துப்போனார் வேதமூர்த்தி. வாழ்வதற்காக இந்த ஊரைவிட்டு ஓடிய தன் தாயை, இங்கு வாழவைப்பதற்காக, ஆணிவேரைத் தேடி வந்த கிளையாக, அந்த இளம் மருத்துவரைப் பார்த்தார், வேதமூர்த்தி
ஒருவர் மற்றொருவருக்கு வானதூதர்!

ஜூலை,18

முதியோர் இல்லம் ஒன்றில் தன்னார்வப்பணியாளராகச் சேர்ந்த ஓர் இளம்பெண், தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்:

அந்த முதியவரைக் காண நான் சென்றபோது, அவரது அறை இருளில் மூழ்கியிருந்தது. அவர் உறங்கியிருக்கக்கூடும் என்றெண்ணியவாறு கட்டிலை நெருங்கியபோது, அவர் விழித்திருப்பது தெரிந்தது. அத்துடன், அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, முகத்தில் மிகுந்த கலவரம் காணப்பட்டது. அவரது கரங்களைப் பற்றி, அமைதிப்படுத்த முயன்றேன். ஐந்து நிமிடம் சென்று, அவர் சிறிது கண்ணயர்ந்ததும், அவ்வறையைவிட்டு வெளியேறினேன்.

இரு நாள்கள் சென்று மீண்டும் நான் அவரைக் காணச் சென்றபோது, அந்த அறை முழுவதும் வெளிச்சமாக இருந்தது. அந்த முதியவரின் மகள் கட்டிலருகே அமர்ந்திருந்தார். முதியவரும் தெளிவான முகத்துடன், என்னைப் பார்த்து சிரித்தார். இரு நாள்களுக்கு முன் நான் அங்கு வந்து சென்றதையும், ஒருவேளை அவருக்கு அது நினைவிருக்காது என்றும் நான் சொன்னேன். உடனே, அந்த முதியவர், "உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள்தான், இருள்சூழ்ந்த என் உலகில் நம்பிக்கையைக் கொண்டுவந்த வானதூதர்" என்று கூறினார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை என்பதை புரிந்துகொண்ட அவர், அன்று நான் உடுத்தியிருந்த உடை, நான் அவரைக் காணச் சென்ற நேரம், அவரிடம் சொன்ன ஒருசில வார்த்தைகள், ஆகியவற்றைத் துல்லியமாகக் கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம்.

நான் அன்று செய்ததெல்லாம், ஐந்து நிமிடங்கள் அவர் கரங்களைப் பற்றியிருந்தது ஒன்றுதான். இருந்தாலும், நான் அவரை, சாவின் வாசலிலிருந்து மீண்டும் வாழ்வுக்கு அழைத்து வந்தேன் என்றெல்லாம் அவர் கூறினார். அந்த 5 நிமிட அனுபவம் இவ்வளவு ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று முதல், வாழ்வை, நான் காணும் கண்ணோட்டம் மாறியது.

இது நடந்து, இப்போது, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், அந்த முதியவரின் நினைவு எனக்குள் நேர்மறையான மாற்றங்களை இன்றும் உருவாக்கி வருகிறது. அவரது வாழ்வில் நுழைந்த வானதூதர் என்று அவர் என்னைப்பற்றிக் கூறினார். ஆனால், அவர், என் வாழ்வில் நுழைந்த வானதூதர் என்பதை, நான் முழுமையாக நம்புகிறேன்.
அம்மா நன்றாக இருக்க வேண்டும்

ஜூலை,17

சென்னையில் டாஸ்மாக் கடை ஒன்றில், வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன், அங்குச் சென்ற ஒருவரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளான்.

எனது ஊர் நாமக்கல். இரண்டு வருடத்திற்கு முன்பு அப்பா இறந்து போனார். அம்மா சித்தாள் வேலைக்குப் போய்த்தான், என்னையும், தங்கையையும் பள்ளிக்கு அனுப்பினார்கள். நான் ஒன்பதாம் வகுப்பு முடித்ததும், விடுமுறையில், ஊரிலுள்ள துணிக்கடைக்கு வேலைக்குப் போனேன். மாதம் மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு உடுத்திக்கக்கூட நல்ல துணி கிடையாது. ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட்டதே இல்லை. கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். உடனே எனக்கும், என் தங்கைக்கும் என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். தினமும் எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத்தான் அம்மா வேலைக்குப் போவார்கள். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போவதற்குள், சுடச்சுடச் சோறு சமைத்துத் தருவார்கள். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அது தெரியாத அளவுக்கு எங்கள் இரண்டு பேரையும் அம்மா வளர்த்தார்கள். எங்களை யாரும் விளையாட்டுக்குக்கூட திட்டவிட மாட்டார்கள். நமது குடும்பம் இப்போது இருக்கின்ற மாதிரி பின்னாளில் இருக்கக் கூடாது. நீ நன்றாகப் படித்து, உன் தங்கையையும் படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் நமது கஷ்டம் தீரும் என அடிக்கடி சொல்லுவார்கள். அம்மாவுக்காகத்தான் நான் நன்றாகப் படித்தேன்.

பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோது அம்மாவுக்குத் திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அப்போதிலிருந்து அம்மா வேலைக்குப் போகவில்லை. கடன் வாங்கியே எங்களுக்கு சோறு பொங்கிப் போடுவார்கள். அம்மா இப்படி இருக்கும்போது எனக்குத் தொடர்ந்து படிக்க பிடிக்கவில்லை. வேலைக்குப் போகிறேன் எனச் சொன்னதும், உன்னை விடுமுறையில் வேலைக்கு அனுப்பினது தவறாகிவிட்டது என அம்மா வருத்தப்பட்டார்கள். அக்கம்பக்கத்தார் சொன்னபின், கனத்த இதயத்தோடு எனக்கு உத்தரவு கொடுத்தார்கள். என் ஊர் ஆள் ஒருவரோடு சென்னைக்கு வந்து, ஓர் உணவகத்தில் வேலை செய்தேன். மாதம் ஐந்தாயிரம் கொடுத்தார்கள். பின், இந்த டாஸ்மாக் கடையில் ஆறாயிரம் சம்பளம் என, உணவக முதலாளி இங்கே என்னை அனுப்பினார். நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. வந்த புதிதில், இங்கு வருகிறவர்கள் எல்லாம் குடித்துவிட்டு, அருகில் வந்து பேசும்போது குமட்டும். சாப்பிடவே விருப்பமிருக்காது. வாந்தி எடுத்துவிடுவேன். இப்போது எல்லாமே பழகிவிட்டது. நான் இங்கு வேலை செய்கிறேன் என, இப்போதுவரை அம்மாவிடம் சொல்லவில்லை. சென்னையில், நகல் எடுக்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கிறேன் எனச் சொல்லி வைத்திருக்கிறேன். நான் இவ்வளவு கஷ்டத்தில் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னால், அம்மா அழுவார்கள். சோற்றைக்கூட தொடமாட்டார்கள். என் கஷ்டம் என்னோடு போகட்டும். அம்மா நல்லாயிருக்க வேண்டும். பாவம் அம்மா. எங்களுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போயிருக்கிறார்கள்.
வாழ்வோம்... வாழவைப்போம்...

ஜூலை,15

நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை, திருவாளர் மைக்கிள் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர், அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது மைக்கிள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம் நிருபருக்கு வியப்பாக இருந்தது. மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே அந்த வியப்பான விவரம்.

"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, மைக்கிள் அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக்கதிரின் மகரந்தத்தூள் காற்றில் கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக்கதிர்களில் மகரந்தச்சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில் தரக் குறைவான சோளக்கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும், நல்ல சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான், நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று அவர் சொன்ன பதில், ஆழ்ந்ததோர் உண்மையைச் சொல்லித் தருகின்றது.

நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இவ்விதம் வாழ்ந்துகாட்டிய மாமனிதர் காமராஜர் அவர்கள் பிறந்தநாள், ஜூலை 15.
குடும்பத்தின் இணைப்புப் பாலம், தாய்

ஜூலை,14

விடுமுறைக்குப்பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது. 3ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும், வகுப்பு ஆசிரியருக்காகக் காத்திருந்தார்கள். எப்படியும் இன்று வகுப்பு நடத்தப்போவதில்லை, விடுமுறையை எப்படிச் செலவிட்டீர்கள் என்பது பற்றித்தான் கேட்கப் போகிறார்கள் என அந்த சிறுவர்களும் சிறுமிகளும் காத்திருந்தபோது, அறைக்குள் நுழைந்த ஆசிரியை விமலா, அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒருபக்க கட்டுரை எழுதுங்கள் எனக் கேட்டது, வித்தியாசமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எழுதியபோது, ஒவ்வொரு உறுப்பினர்களுடனும், ஏதாவது ஒரு வகையில், அவர்கள் தாய் தொடர்புப்படுத்தப் பட்டிருந்தார். 'அப்பா எங்களை வெளியேக் கூட்டிகொண்டு போவார்' என அப்பா பெருமையைச் சொல்லிவிட்டு, 'வெளியிலிருந்து திரும்பும்போது, அம்மா சாதம் செய்து தயாராக இருப்பார்கள்' என்றும், 'என் தம்பி ரொம்ப சுட்டி, எப்போதும் அம்மா மடியில்தான் படுத்து தூங்குவான்' என்றும், 'எங்க அண்ணன் அம்மா செல்லம்' என்றும் ஒவ்வொன்றிலும் தாயை தொடர்பு படுத்தியே குழந்தைகள் எழுதியதைப் பார்த்தபோது, ஆயாவின் கண்காணிப்பில் விட்டுவந்த, தன் 2 வயது இரட்டைக் குழந்தைகளின் நினைவு வந்து, கண்கள் பனித்தன, ஆசிரியை விமலாவுக்கு.
வறுமையிலும் வாழ்த்தும் தாய்

ஜூலை,13

வெளிநாட்டில், சில நிறுவனங்களுக்கு அதிபராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் பார்ப்பதற்காக வந்தார். தனது வீட்டில் சில நாள்கள் தங்கினார். வானம் பொய்த்துப் போனதால், கிராம மக்கள் வறுமையில் வாடுவதை நோக்கினார். அம்மக்களுக்கு உதவ நினைத்த அவர், ஒரு முக்கிய நாளில் அவர்களைத் தன் வீட்டிற்கு வரவழைக்கத் திட்டமிட்டார். அதேபோல், ஒருநாளைக் குறிப்பிட்டு, இன்று, எனது மகளின் பிறந்த நாள், நீங்கள் எல்லாரும் எனது வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்நாளில் வருகை தந்த மக்களிடம், உங்களுக்குப் பரிசுகள் கொடுக்க விரும்புகின்றேன், விரும்பியதைக் கேளுங்கள் என்றார் அவர். பசியால் வாடிய அம்மக்கள் ஒவ்வொருவரும் கேட்ட பொருள்களை இன்முகத்துடன் அளித்தார் அவர். ஒருசிலர், வீட்டுமனை, குடியிருக்க வீடு போன்றவற்றைக்கூட கேட்டார்கள். மக்கள் வரிசையாக நின்று இப்படி பொருள்கள் வாங்குவதையும், அந்தச் செல்வந்தர் மலர்ந்த முகத்துடன் கொடுத்துக்கொண்டிருப்பதையும் கவனித்துக்கொண்டிருந்தார் தாய் ஒருவர். எதுவுமே கேட்காமல், ஓரத்தில் நின்றுகொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தாயைக் கவனித்தார் அந்தச் செல்வந்தர். கேட்டவர் அனைவருக்கும் பொருள்களைக் கொடுத்து முடித்த பின்னர், அந்தத் தாயை அணுகி, அம்மா, உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார் அவர். அதற்கு அந்தத் தாய், நானும் ஓர் ஏழைதான் ஐயா. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் நோக்கி, ஓரிரு வார்த்தைகள் பேசி, அவர்கள் கேட்பதைக் கொடுத்த அழகையும், கருணையையும் கண்டு மகிழ்கின்றேன், எனவே உங்களிடம் எதையும் கேட்பதற்கு மனம் இசையவில்லை, உங்களை வாழ்த்தவே மனது துடிக்கின்றது என்றார். வறுமையிலும் வாழ்த்தத் துடித்த அந்தத் தாயின் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்து போனார் அவர். இத்தாயை, தனது சம்பந்தியாக ஏற்கவும் தீர்மானித்தார் செல்வந்தர்.
பகல் முழுவதும் நம்முடனேயே...

ஜூலை,12

இருவருக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பாக்கியம்தான் இன்னுமில்லை. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்துவிட்டனர். அவர்கள் சுற்றாத கோவில்களும் இல்லை. ‘இருவரிடமும் குறையில்லை, சீக்கிரமே வாரிசு ஒன்று பிறக்கும்’ என்ற நம்பிக்கையைத்தான் ஒவ்வொருவரும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தனக்கு குழந்தை பிறக்காதா, என்ற ஏக்கத்திலேயே இருந்த அந்தப் பெண், ஒரு காரியம் செய்தார். பக்கத்து வீடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை, தான் வீட்டிலிருந்து பார்ப்பதாக முன்வந்தார், அதுவும், இலவசமாகவே பார்ப்பதாக அறிவித்தார். பக்கத்து வீட்டு தம்பதிகளுக்கு ஒரே ஆனந்தம். இலவசமாகவே பிள்ளைகளை கவனித்துக்கொள்ள ஒரு நல்ல ஆயா கிடைத்துவிட்டாரே என மகிழ்ந்தனர். குழந்தையில்லாத அத்தம்பதியின் வீட்டில் இப்போது 14 குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு மழலைப் பள்ளியின் சூழல் அங்கு உருவாக்கப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் அந்த பெண்ணின் கணவர், மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பிவிடுகிறார், குழந்தைகளோடு சிறிது நேரம் விளயாடுவதற்காக. வேலையிலிருந்து திரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும்போதுதான் இந்த தம்பதியருக்கு, மனதுக்கு சிறிது வருத்தமாக இருக்கும், குழந்தைகளைப் பிரிய வேண்டுமே என்று. ஆனால், சில குழந்தைகளும் இவர்களைப் பிரிய மனமின்றி செல்வதைப் பார்க்கும்போது, அதுவே ஆனந்த சுகமாகிவிடும். இருவரும் நினைத்துக் கொள்வார்கள், 'இதுவரை நம்முடன் இருந்த நம் குழந்தைகள், இரவில் வேறு வேறு வீடுகளில் தூங்க மட்டும் சென்றிருக்கின்றன’ என்று.
துயருறுவோர், ஆறுதல் பெறுவர், தருவர்...

ஜூலை,11

தன் மகனின் மரணத்தால் மனம் நொறுங்கிப்போன ஓர் இளம் தாய், ஊருக்கு நடுவிலிருந்த கோவிலுக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஒரு குருவிடம், "என் மகனை மீண்டும் உயிரோடு கொண்டுவர உங்களிடம் மந்திரங்கள் உள்ளனவா?" என்று அழுதபடியே கேட்டார், அந்தத் தாய்.

குரு அவரிடம், "ஊருக்குள் போ, மகளே... எந்த ஒரு வீட்டில், இதுவரை, துயரம் எதுவும் நுழையவில்லையோ, அந்த வீட்டிலிருந்து ஒரு கோதுமை மணியைக் கொண்டுவா. அதை வைத்து நாம் மந்திரம் சொன்னால், உன் மகன் உயிர் பெறுவான்" என்று சொல்லி அனுப்பினார்.

இளம் தாய் உடனே புறப்பட்டுச் சென்றார். அழகு நிறைந்த ஒரு மாளிகை அவர் கண்ணில் பட்டது. அங்கு கட்டாயம் துயரம் எதுவும் நுழைந்திருக்காது என்று எண்ணிய தாய், அங்கு சென்று, "துயரம் நுழையாத ஓர் இல்லத்தைத் தேடி வந்துள்ளேன்" என்று சொன்னதும், அங்கிருந்தோர் அவரிடம், தங்களுக்கு நேர்ந்த துயரங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தனர். துயரத்தில் இருக்கும் தன்னால் இவர்களுக்கு தகுந்த ஆறுதல் தரமுடியும் என்று எண்ணிய தாய், அந்த மாளிகையில் இரு நாள்கள் தங்கி, அங்கிருந்தோருக்கு ஆறுதல் கூறிவந்தார்.

துயரமற்ற இல்லமாக இருக்கக்கூடும் என்றெண்ணி, அவர் நுழைந்த அனைத்து இல்லங்களிலும் துயரம் இருந்ததைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலேயே தன் நேரத்தையெல்லாம் செலவிட்டார், அந்த இளம் தாய். அவர் உள்ளத்தை நிறைத்திருந்த துயரம், அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றதை உணர்ந்தார்.

"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்" (மத்தேயு 5: 4) என்று இயேசு கூறியுள்ளார். ஆறுதல் பெறுவதால் மட்டுமல்ல, ஆறுதல் தருவதாலும் அவர்கள் பேறுபெற்றவராவர்.
பாசத்தை உணர்த்திய தாய்

ஜூலை,10

அக்கினி நட்சத்திர வெயிலில், வீட்டின் மேல்கூரை ஓடுகளை மாற்றிக் கொண்டிருந்தார் கமலன். மாலைக்குள் வேலையை முடித்துவிடும் நோக்கத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, மும்முரமாய் ஈடுபட்டிருந்தார் கமலன். வீட்டின் உள்ளேயிருந்த கமலனின் அம்மா, மகன் இப்படி கொளுத்தும் வெயிலில், வேலை செய்வதைக் காணப் பொறுக்காமல், அடிக்கடி வெளியே வந்து பார்த்துக்கொண்டே இருந்தார். மகனே, சிறிது நேரம் கீழே இறங்கி வந்து இளைப்பாறு, மோர் குடி. பிறகு வேலை செய், உனக்கு இவ்வளவு வெயில் ஆகாதுடா கண்ணா என்று சொன்னார். அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை கமலன். ஓடு மாற்றுவதிலே மூழ்கி இருந்தார் அவர். கொளுத்தும் வெயிலில் மகன் வேலை செய்வதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை தாய்க்கு. வீட்டிற்குள் சென்ற தாய், தனது இரண்டு வயது பேரக் குழந்தையைத் தூக்கிவந்து வெளியே சிமெண்ட் தரையில் நிற்க வைத்தார். சூடு பொறுக்க முடியாமல் குழந்தை அழுதான். இதைப் பார்த்த கமலன், வேக வேகமாக கீழே இறங்கி வந்து, தன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார். பின், நீயெல்லாம் ஒரு மனுஷியா, ஒரு தாயா என, தன் அம்மாவைத் திட்டினார். அம்மா சொன்னார் – உன் மகன் வெயிலில் கஷ்டப்படுவதைப் பொறுக்க முடியாமல் எப்படித் துடிக்கிறாய், நீ என் மகன் ஆயிற்றே, நீ வெயிலில் கஷ்டப்படுவதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும், இதை உனக்கு உணர்த்தவே, உன் மகனை வெயிலில் நிற்க வைத்தேன் என்று.

ஆம். அம்மாவின் பாசம், கீழ்நோக்கிப் பாயும் நீரைப் போன்றது. அந்தப் பாசம், மகன், மகள், பேரப்பிள்ளைகள் என்று, கீழ்நோக்கியே பாயும்.
சுதந்திர தேவதையின் வரவேற்பு

ஜூலை,08

தங்கள் நாடுகளில் அடக்குமுறை பிரச்சனைகளைச் சந்தித்த பல்லாயிரம் மக்கள், 18 மற்றும், 19ம் நூற்றாண்டுகளில், சுதந்திரத்தைத் தேடிச்சென்ற ஒரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கியது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் கனவுடன், இம்மக்கள், அமெரிக்கக் கடற்கரையை நெருங்கியபோது, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திரத் தேவதையின் சிலை, அவர்களை வரவேற்றது. அச்சிலை வைக்கப்பட்டுள்ள மேடையில், கவிதையொன்று பொறிக்கப்பட்டுள்ளது. எம்மா இலாசரஸ் (Emma Lazarus) என்ற கவிஞர் இயற்றியுள்ள அக்கவிதையின் ஒரு சில வரிகள், சுதந்திர தேவதை, மனித சமுதாயத்திடம் நேரடியாகப் பேசுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. கனிவு ததும்பும் அவ்வரிகள் இதோ:

"உங்கள் நடுவே களைப்புற்று, வறுமையுற்று,

சுதந்திரத்தைச் சுவாசிக்க ஏங்கும் மக்களை எனக்குக் கொடுங்கள்.

உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற

மக்களை எனக்குக் கொடுங்கள்.

வீடற்று, புயல்சூழ்ந்த கடலில் தத்தளிக்கும்

மக்களை என்னிடம் அனுப்புங்கள்..."

சுதந்திர தேவதையின் மேடையில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், மத்தேயு நற்செய்தியில் நாம் கேட்கும் இயேசுவின் அழைப்பை எதிரொலிப்பதாக அமைந்துள்ளன:

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28)
அருகாமை தரும் ஆனந்தம்

ஜூலை,07

அன்று, ஸ்ரீராமின் அம்மாவுக்கு 75வது பிறந்த நாள். அலுவலகத்திற்கு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டார் ஸ்ரீராம். ஏனெனில், போகிற வழியில், பூக்கடையில் நிறுத்தி, 250 மைல்களுக்கு அப்பால், முதியோர் இல்லத்தில் இருக்கும் அம்மாவுக்கு மலர்க்கொத்து அனுப்ப வேண்டும். கடைக்குள் சென்று முகவரியைக் கொடுத்து, பணமும் கொடுத்து, மலர்க்கொத்தை அனுப்பச் சொல்லிவிட்டு, வெளியே வந்த ஸ்ரீராமுக்கு, சாலையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்த ஒரு சிறுமி தெரிந்தாள். அருகில் சென்று விசாரித்தபோது அவள் சொன்னாள், ' என் அம்மாவுக்கு ஒரு பூ வாங்கவேண்டும், ஒரு பூவின் விலை 2 ரூபாய் சொல்கிறார்கள். ஆனால், என்னிடம் ஒரு ரூபாய்தான் இருக்கிறது' என்று. அச்சிறுமியை கடையினுள் அழைத்துச்சென்ற ஸ்ரீராம், ஒரு பூவை வாங்கிக் கொடுத்ததுடன், அவளை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறினார். அவளும் காரில் ஏறிக்கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பகுதியைச் சொல்லி, அங்கு காரை விடச் சொன்னாள். ஆம். அது ஒரு மயானம். அங்கு சென்று, புதிதாக தோன்றியிருந்த ஒரு கல்லறையில் அந்த பூவை வைத்தாள், அச்சிறுமி. கல்லறை மண் இன்னும் காய்ந்திருக்கவில்லை. நிச்சயமாக இந்த பெண்ணின் அம்மா இறந்து இரண்டு அல்லது மூன்று நாடகள்தான் ஆகியிருக்க வேண்டும். அந்த சிறுமியின் தாய்ப் பாசத்தைக் கண்டதும் ஸ்ரீராமின் கண்கள் கலங்கின. நேராக அந்த பூக்கடைக்குச் சென்று, தான் அனுப்பச் சொன்ன மலர்க்கொத்தை அனுப்பவேண்டாம் என கூறிவிட்டு, மலர்க்கொத்து ஒன்றை கையில் வாங்கிக்கொண்டு, 250 மைல் தூரத்தில் உள்ள தன் தாயைப் பார்க்க காரை ஓட்டினார் ஸ்ரீராம்.
கண்ணீர் சிந்திய அகிதா அன்னை (Our Lady of Akita)

ஜூலை,06

1973ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியன்று, ஜப்பானின் அகிதா (Akita) நகரில், திருநற்கருணையின் ஊழியர் அருள்சகோதரிகள் இல்லத்தில், செவித்திறனற்ற அருள்சகோதரி ஆக்னஸ் (Agnes Katsuko Sasagawa) அவர்கள் செபித்துக்கொண்டிருந்தபோது, திருநற்கருணை வைக்கப்பட்டிருந்த பீடத்திலிருந்து, சுடர்விடும் ஒளியையும், அதைச் சுற்றி பெருமளவான வானதூதர்களையும் கண்டார். பின், அதே மாதத்தின் இறுதியில், ஒரு வானதூதர் தோன்றி, அச்சகோதரியோடு பேசி, செபிக்கத் தொடங்கினார். ஓ இயேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பினின்று ஆன்மாக்களைக் காப்பாற்றும், அனைத்து ஆன்மாக்களையும், குறிப்பாக, உமது இரக்கம் அதிகம் தேவைப்படுகின்றவர்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் (போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் மூன்று சிறாருக்கு அன்னை மரியா கற்றுக்கொடுத்த செபம்) என, அடிக்கடி செபிக்குமாறு கூறிச் சென்றார் தூதர். பின் சகோதரி ஆக்னசுக்கு, இடது உள்ளங்கையில், சிலுவை வடிவில் காயங்கள் தோன்றி இரத்தம் வடியத் தொடங்கியது. சிலநேரங்களில் அவை மிகுந்த வேதனையைக் கொடுத்தன. ஜூலை 6ம் தேதி வானதூதர் மீண்டும் சகோதரிக்குத் தோன்றி, செபிப்பதற்கு ஆலயம் செல்லுமாறு கூறி, அவரும் உடன் சென்றார். ஆலயம் சென்றவுடன் தூதர் மறைந்துவிட்டார்.

அச்சகோதரி செபித்துக்கொண்டிருக்கையில், ஆலயத்திலிருந்த அன்னை மரியா திருவுருவம் பேசத் தொடங்கியது. முந்தைய நோயினால் பல ஆண்டுகளாக முழுவதும் செவித்திறனையிழந்திருந்த அச்சகோதரி, அன்னை மரியா பேசுவதைக் கேட்டார். அன்று அவரும் குணமடைந்தார். அன்னை மரியா, அச்சகோதரியோடு சேர்ந்து செபிக்கவும் தொடங்கினார். வானதூதரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். அடுத்த நாளிலிருந்து அன்னை மரியா திருவுருவக் கரத்திலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. சில நேரங்களில், இவ்விருவரின் கரங்களிலிருந்து ஒரே நேரத்தில் இரத்தம் வடிந்தது. சகோதரி ஆக்னசின் காயம், அதே ஆண்டு ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை நீடித்தது. அன்னை மரியா திருவுருவக் கரத்திலிருந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இரத்தம் வடிந்தது. மேலும், அன்னை மரியா உருவத்திலிருந்து முத்து முத்தாக வியர்வையும் வடிந்தது. இது, இனிய ரோஜா மலரின் நறுமணமாக வீசியது.

1973ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி அன்னை மரியா, சகோதரி ஆக்னசுக்குக் காட்சியளித்தபோது, மக்கள் மனந்திரும்பி, வாழ்வைச் சீரமைக்காவிட்டால், மனித சமுதாயத்தின் மீது பயங்கரமான தண்டனை அனுப்பப்படும் என எச்சரித்தார். 1975ம் ஆண்டு சனவரி 4ம் தேதி அன்னை மரியா திருவுருவம் அழத் தொடங்கியது. முதல் நாளில் மூன்று முறை அழுதது. இதை, 1979ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, ஜப்பான் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 1981ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வியாகுல அன்னை விழாவன்று, இத்திருவுருவம் கடைசி முறையாக, 101 முறைகள் அழுதது. இந்தக் கண்ணீரை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இது மனிதக் கண்ணீர், ஆனால் புதுமை என அறிவித்தனர். அன்னை மரியா கரத்திலிருந்து வடிந்த இரத்தம், B குரூப்பையும், வியர்வையும், கண்ணீரும் AB குரூப்பையும் சேர்ந்தவை என அறிவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அகிதா நகர் அன்னை மரியாவிடம் செபிக்கும் பலர், பல்வேறு விதமான உடல் மற்றும், உள்ள நோய்களிலிருந்து குணமடைவதாகச் சாட்சி பகர்ந்துள்ளனர்.
பெரியது எது? தாய்ப் பாசமா? தந்தைப் பாசமா?

ஜூலை,05

பத்து வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்துவிட்டு, அன்றிலிருந்து ஒரு சிறார் காப்பகத்திலேயே படித்து வளர்ந்தவர் நாகராசன். இப்போது நல்லபடியாக வேலையில் அமர்ந்து, திருமணமும் முடிந்து, ஒரு குழந்தையும் இருக்கிறது அவருக்கு. தன் எட்டு வயது மகனை அவ்வளவு செல்லமாக வளர்த்தார் அவர். தனக்கு இளவயதில் கிட்டாத பெற்றோர் பாசத்தையெல்லாம் தன் மகனுக்கு அளவுக்கதிகமாகவே கொடுத்தார். அலுவலகத்திற்கு போய்விட்டு வந்தபின், ஒவ்வொரு மணித்துளியையும் அவனுக்காகவே செலவிட்டார். அவர் மனைவி, அலுவலகத்திலிருந்து, எப்போதும், மாலை ஏழு மணிக்குத்தான் வருவார். ஆகவே, பெரும்பாலான நேரங்களில், மாலை சிற்றுண்டியை இவரே மகனுக்குத் தயாரித்து தந்துவிட்டு, இரவு உணவைத் தயாரிக்க ஆரம்பித்து விடுவார். தன் மனைவி மீது அவர் கொண்டிருக்கும் பாசமும், மகன் மீது கொண்டிருக்கும் பாசமும், அந்த உணவு தயாரிப்பில் தெரியும். அவர் மனைவியும், குழந்தை மீது மிகவும் பாசமாகத்தான் நடந்து கொள்வார். ஆனால், அவர் மனைவி வேலை செய்யும் அலுவலகம், பக்கத்து ஊரில் இருந்ததால், அவரால், மகனுடன் குறைவான நேரத்தையே செலவிட முடிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மகனுடன் தோட்டத்தில் விளையாடினார் நாகராசன். நண்பகலில் மூவரும் உணவருந்திவிட்டு, கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நாகராசன் தன் மகனைப் பார்த்துக் கேட்டார், ‘ஆமாம், உனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்குமா, அல்லது, அம்மாவைப் பிடிக்குமா’ என்று. பையன் உடனே சொன்னான், 'அம்மாவைப் பிடிக்கும்' என்று. இதைக் கேட்டு நாகராசன் வருத்தப்படவில்லை. தன் 10 வயதில், தன் பெற்றோர் இறப்பதற்கும் சில மாதங்களுக்கு முன்னர், தன் தந்தை இதே கேள்வியைக் கேட்டதும், அதற்கு, 'அம்மாவைத்தான்' என்று, தான் கூறியதும் நினைவுக்கு வந்தது. தன் தந்தைதான் தனக்கு மகனாக வந்து பாடம் சொல்லித் தருகிறாரோ என்ற ஒரு நிமிட மனப்பிரமை அவருக்கு. மகனைப் பெருமிதத்தோடு பார்த்தார் நாகராசன்.

மகன் சொன்னான், 'அப்பா, என்னைப் பொருத்தவரையில், தந்தையிலும் தாயிலும் எந்த வித்தியாசமுமில்லை. அது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் நீங்கள் அந்தக் கேள்வியை விளையாட்டாகக் கேட்டபோது, நானும் விளையாட்டாகவே பதில் சொன்னேன். அது குறித்து நீங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில், உங்களைப் பொருத்தவரையில், நான் உங்களிடம் அதிகப் பாசம் காட்டி அம்மாவின் மீதான பாசத்தைக் குறைத்துவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது. நான் உங்களிடம் அளவுகடந்த பாசத்தோடு இருப்பது உங்களுக்குத் தெரியும். அதே அளவு பாசத்தைத்தான் அம்மாவிடமும் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தவே, இந்த பதிலைச் சொன்னேன்' என்றான். இப்போது நாகராசனுக்குப் புரிந்தது, தன் தந்தையும் தன் பதிலை நிச்சயம் அன்று புரிந்திருப்பார் என்று.
இழப்பின் வலியறிந்தோர் பேறுபெற்றோர்...

ஜூலை,04

"வெளிச்சம் வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதியுள்ள ஒரு கவிதை இதோ...

சாலையைக் கடந்து செல்வதற்காகக் காத்திருந்தார்கள்.

சிக்னல் கண்ணசைத்ததும் பரபரப்போடு பறந்தார்கள்.

பார்வையில்லாத வயோதிகர் ஒருவர்,

சாலையின் குறுக்கே, தன்னுடைய ஊன்று கோலையே கண்களாக்கி,

ஊர்ந்து கொண்டிருந்தார்...

அருகிலிருந்தோர் அவசரமாய்ப் பறக்க...

பார்வையில்லாத அவர் பாதியில் திகைக்க...

மாறப் போகிறேன் என்றது சிக்னல்;

பாயப் போகிறேன் என்றது பஸ்.

சட்டென்று வேகமாய் வந்த இளம் பெண்ணொருத்தி,

அவரைக் கையில் பிடித்து இழுத்தபடி, விரைந்து சாலையைக் கடந்தாள்.

உதவியாய் அவருடன் நடந்தாள்.

தெருவோரம் சென்றவள் திரும்பியபோதுதான் தெரிந்தது,

அவளுக்கு உள்ளதே அந்த ஒரு கைதான் என்று.

இரு கைகளும் இருந்த பலர், பார்வை இழந்தவருக்கு உதவி செய்யாமல் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு கை மட்டுமே உள்ள அந்தப் பெண்ணால் மட்டும் எப்படி அந்த உதவியைச் செய்ய முடிந்தது? அவருக்குத்தான், இழப்பின் வலி தெரிந்திருந்தது. இழப்பின் வலியுடன் வாழ்ந்த மற்றொருவருக்கு வழிகாட்டத் தெரிந்திருந்தது.
தாய் ஒரு ‘மனித தெய்வம்’

ஜூலை,03

தனது அன்னை குறித்து, பிரபல தணிக்கையாளரும், பத்திரிகையாளருமான சு.குருமூர்த்தி அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்...

என் தாயின் மேன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தில் வேறுபட்ட, பல குடும்பங்களிலிருந்து வந்த அவருடைய நான்கு மருமகள்களிடமும் பேசினாலே போதும். என் தாய் பள்ளிக்கூடம் சென்றதில்லை. படிக்கத் தெரியும் அவ்வளவுதான். தனது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதன் என்பவரை, தனது ஒன்பதாவது வயதில், கணவராக ஏற்றார் அவர். 1950களில், பல ஆண்டுகள் மழை பெய்யாததால், நிலங்களை ஒன்றுக்குப்பின் ஒன்றாக விற்க வேண்டியதாயிற்று. குடும்பம் வறுமைக்கோட்டுக்குள் நுழைந்தது. அந்த நிலையில், 1955ம் ஆண்டில் கணவரை இழந்து, கைம்பெண்ணானார் என் தாய். அப்போது அவருக்கு வயது 39. அதற்குப் பிறகு வறுமையுடன் போராட்டம். உற்றார், உறவினர்களின் உதாசீனம். நான் பள்ளிப்படிப்பு படித்து முடிக்கும்வரை கிராமத்திலேயே இருந்துவிட்டு, அதன் பிறகுதான் சென்னை வந்தார் என் அம்மா.

சென்னையில் 12 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடுதர யாரும் முன்வராமல் இருந்த சோதனையான காலக்கட்டத்தையும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டார் என் தாய். நான்கு பிள்ளைகளும் படிப்படியாக நல்ல நிலைக்கு வந்து, திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பிறகுதான், சொந்த வீடு வாங்கினோம். அதன்பின் அம்மாவின் ஆசி பெற, உற்றார் உறவினர் மற்றும், பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், என் தாயின் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் கிடையாது. வறுமையில் அவர் எப்படி துவளவில்லையோ, அதேபோல் பெருமைகளும் அவரை மதிமயங்க வைக்கவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்ட அவர், குடும்பத்தில் வாழ்ந்த துறவி. அவருக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம், நெறிதவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான். தாய் ஒரு "மனித தெய்வம்"
மேன்மையான விருந்தோம்பல்

ஜூலை,01

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்" என்றார். (அரசர்கள் 2ம் நூல் 4: 8-10)

சூனேம் நகரப் பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, விவிலிய ஆய்வாளர், அருள்பணி இயேசு கருணா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை:

மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம்.