பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி
கண்மூடித்தனமான பாசம் கண்டிக்கத்தக்கது

மே 31

தன் குறும்புகளால் பலருக்கும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தன் 10 வயது மகனை அழைத்துக்கொண்டு ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார் தாய் ஒருவர். 'ஐயா இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லித் திருத்துங்கள். ஏனெனில், இவனின் குறும்புத்தனம் அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது' என புகார் செய்தார் அத்தாய். அச்சிறுவனை கூர்ந்துப் பார்த்த அந்த ஞானி, அவனிடம் விசிறியைக் கொடுத்து, சிறிது நேரம் தனக்கு வீசச் சொன்னார். சிறுவனும் வீசினான். அந்த இதமான காற்றில் சிறிது நேரத்தில் தூங்கிப் போனார் ஞானி. தன் மகனிடமிருந்து விசிறியை வாங்கி, தானே வீசத் துவங்கினார் தாய். சிறிது நேரத்தில் விழித்த அந்த ஞானி, தாய் விசிறிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை நோக்கி, ' அம்மா, தாயன்பு, குழந்தைக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும் செய்யாது, கற்பிக்கவும் செய்யாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்களே’ என்று கூறினார். 'அவன் செயல்களை அவனையேச் செய்யவிடுங்கள். அவன் செய்ய வேண்டியவற்றை, பாசமிகுதியால் நீங்கள் செய்யும்போது, அவனுக்கு குறும்புகள் செய்ய நீங்களே நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கிறீர்கள். பாசம் தவறிழைப்பது இங்குதான்' என முடித்தார் ஞானி.
துன்புறும் அன்னையரைச் சந்திக்கும் மரியா

மே 30

மே 31, கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தத் திருநாள். "மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" (லூக்கா 1: 39) என்று இத்திருநாளின் நற்செய்தி ஆரம்பமாகிறது. தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை, அன்று தேடிச்சென்ற மரியா, இன்றும், தேவையில் இருப்போரைத் தேடி வருகிறார்.

தன் கருவிலும், கரங்களிலும் குழந்தை இயேசுவைத் தாங்கியவண்ணம், மரியன்னை மேற்கொண்ட பயணங்கள் கடினமானவை. கருவில் இயேசு உருவான அத்தருணமே, உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க, யூதேயா மலைப்பகுதியில் பயணமானார். தன் பேறுகாலம் நெருங்கிய வேளையில், பெத்லகேம் என்ற ஊருக்கு கடினமானதொரு பயணம் மேற்கொண்டார். இயேசுவின் உயிரைக் காப்பாற்ற, பச்சிளம் குழந்தையைச் சுமந்தவண்ணம், இரவோடிரவாக எகிப்துக்குத் தப்பித்துச் சென்றார். எருசலேமில் விழா கொண்டாடச் சென்றவர், அங்கு சிறுவன் இயேசு தொலைந்துபோனதை அறிந்து, மீண்டும், பதைபதைப்புடன் அவரைத் தேடி, எருசலேமுக்குச் சென்றார். இறுதியாக, தன் மகன் சிலுவை சுமந்து சென்றபோது, அவருடன் அச்சிலுவைப்பாதை பயணத்திலும் பங்கேற்றார். அன்னை மரியா மேற்கொண்ட இந்த துயரமான பயணங்களை, இன்றும், ஆயிரமாயிரம் அன்னையர் மேற்கொள்கின்றனர்.

நெருக்கடியானச் சூழல்களிலும், கருவில் வளரும் குழந்தையைக் கலைத்துவிடாமல் வாழும் அன்னையரை நினைவில் கொள்ள...

பிறந்தநாளன்றே, பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, புலம்பெயர்ந்து செல்லும் அன்னையரை நினைவில் கொள்ள...

திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, பரிதவிக்கும் அன்னையரை நினைவில் கொள்ள...

அநியாயமாகக் கொல்லப்படும் மகன்களை தங்கள் மடியிலேந்தி, மனம்நொறுங்கும் அன்னையரை நினைவில் கொள்ள...

மே 31ம் தேதி, தகுந்ததொரு தருணம்.
எந்நேரமும் கண்காணிக்கும் அன்னை மரியா

மே 29

8

04 மீட்டர் உயரமுடைய ஃபிகோஞ்ஞா (Figogna) என்ற மலை, இத்தாலி நாட்டின் வடமேற்கிலுள்ள, புகழ்பெற்ற ஜெனோவா துறைமுக நகருக்கு ஏறக்குறைய இருபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையிலுள்ள, அன்னை மரியா திருத்தலம், இத்தாலியில் திருப்பயணிகள் அதிகமாகச் செல்லும் திருத்தலங்களில் ஒன்றாகும். மத்திய காலத்தில், ஜெனோவா துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களையும், படைகளையும் இந்த ஃபிகோஞ்ஞா மலையிலிருந்து கண்காணித்து வந்தனர். இதனால், இத்திருத்தலம், கண்காணிப்பு அன்னை திருத்தலம் (Nostra Signora della Guardia) என அழைக்கப்படுகின்றது. இத்திருத்தலத்திற்கு ஒரு வரலாறும் உள்ளது. 1490ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, பெனெதெத்தோ பரேத்தோ (Benedetto Pareto) என்ற விவசாயிக்கு, அன்னை மரியா தோன்றி, இந்த ஃபிகோஞ்ஞா மலையில் தனக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதைக் கேட்டு வியப்படைந்த பரேத்தோ அவர்கள், நானோ ஏழை, ஆலயத்தை என்னால் கட்ட இயலாது என்று சொன்னார். அதற்கு அன்னை மரியா, அஞ்ச வேண்டாம் என்று, அவரிடம் சொன்னார். அன்று வீடு திரும்பிய பரேத்தோ அவர்கள், இக்காட்சி பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சில நாள்கள் கழித்து, பரேத்தோ அவர்கள் ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அன்னை மரியா மீண்டும் அவருக்குத் தோன்றினார். அவரும் அற்புதமாக குணமடைந்தார். இந்த நிகழ்வுக்குப் பின், அவர், அன்னை மரியா தனக்குத் தோன்றி கேட்டுக்கொண்டது பற்றி, எல்லாரிடமும் கூறி, ஆலயம் கட்டுவதற்கு உதவி கேட்டார். அன்னை மரியா தோன்றிய இடத்தில் முதலில் சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் பரேத்தோ. அங்குச் செல்லும் திருப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அவ்விடத்தில் பெரிய ஆலயம் கட்டப்பட்டு, 1890ம் ஆண்டு மே 26ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. பின்னர், பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, 1903ம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. ஜெனோவாவைச் சேர்ந்த திருத்தந்தை 15ம் பெனடிக்ட், 1915ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, இந்த ஆலயத்தை பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார். திருத்தந்தையர் புனித 2ம் ஜான் பால் (செப்.22,1985), 16ம் பெனடிக்ட் (மே,18,2008) ஆகிய இருவரும், இத்திருத்தலத்திற்குச் சென்றுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 27, கடந்த சனிக்கிழமையன்று இத்திருத்தலத்தில் ஜெனோவா பகுதி இளையோரைச் சந்தித்தார்.

அன்னை மரியா, தாய்க்குரிய பாசத்துடன், எவ்வேளையிலும் நம்மைக் கண்காணித்து பராமரித்து வருகிறார்.
இல்லத்தில் துவங்கும் நற்செய்தி

மே 27

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் புகழ்பெற்ற விவிலியப் போதகர், பில்லி கிரஹாம் (Billy Graham) அவர்கள் ஆற்றியுள்ள உரைகள், பல கோடி மக்களின் உள்ளங்களைத் தொட்டன. அவரது உரையை தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி, ஒருநாள், கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார். "அன்பு ஐயா, கடவுள் தன் நற்செய்தியைப் போதிக்கும்படி என்னை அழைப்பதை நான் உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.

சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து, இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் உங்களை அழைக்கிறார் என்பதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட, எனக்கு, கூடுதல் மகிழ்வு என்னவென்றால், உங்கள் நற்செய்தி போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே, உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.

உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப் போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருளாக அமைந்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒரு குரு

மே 26

ஊரை விட்டு நகருக்குள் வந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவ்வப்போது தாயைச் சென்று பார்த்து வருவதோடு, ஊர்ப்பாசம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக அவர் அனுபவிக்காத துன்பங்களே இல்லை என்று சொல்லலாம். தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது. சந்நியாசியாகப் போய்விடலாமா என்று கூட எண்ணினார். பக்கத்து மலையில் குடிகொண்டிருந்த சுவாமியாரைச் சந்தித்து, தன் துன்பங்களை எடுத்துக்கூறி, அவற்றை அகற்றும் வழி கேட்டார். ஞானியோ அவரிடம், 'துன்பங்களை தவிர்ப்பது, எதிர்கொள்வது, தாங்குவது, என எல்லாவற்றையும் என் குருவிடமிருந்தே கற்றேன். மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு, கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறார். நாம்தான் அந்த குருவை கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் தவறிவிடுகிறோம். முதலில் உன் குருவை அங்கீகரிக்க முன் வா. என்னுடைய நடைமுறை ஞானமெல்லாம் நான் என் குருவிடமிருந்து கற்றதே. இப்போது, என் குருவை காண விரும்புகிறாயா' என்று கேட்டு, உள்பக்கம் திரும்பி 'அம்மா' என அழைத்தார். ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய்தான் குரு என அடையாளம் காட்டினார் அந்த ஞானி. ஊரிலிருக்கும் தன் அம்மாவிடம் தன் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்காமல் போனது குறித்து நொந்து கொண்டார், தீர்வு தேடிச் சென்றவர்.
சிக்கல்கள் தீர்க்கும் அன்னை மரியா

மே 25

புனித இரேனியுஸ் அவர்கள்(கி.பி.125-202), லியோன் ஆயராகப் பணியாற்றி, 202ம் ஆண்டில், மறைசாட்சி மரணம் அடைந்தவர். இவர், அன்னை மரியா பற்றி தியானிக்கையில், மனிதகுலத்தின் முதல் பெண் ஏவாளையும், அன்னை மரியாவையும் ஒப்பிட்டு இவ்வாறு சொல்லியிருக்கிறார். ஏவாள், தனது கீழ்ப்படியாமையால், மனிதகுலத்திற்கு, வீழ்ச்சியைக் கொணர்ந்த முடிச்சைப் போட்டார். மாறாக, மரியா, தனது கீழ்ப்படிதலால், அந்த முடிச்சை அவிழ்த்துவிட்டார். இந்தச் சிந்தனையை அடிப்படையாக வைத்து, ஜெர்மன் நாட்டின் பவேரியா மாநிலத்தில் வாழ்ந்த Johann Georg Melchior Schmidtner (1625-1707) என்ற ஓவியர், ஏறக்குறைய 1700ம் ஆண்டில், அன்னை மரியா திருவுருவம் ஒன்றை வரைந்தார். மரியா, வானதூதர்கள் புடைசூழ, பிறைநிலவின்மேல் நிற்பதுபோலவும், அவரின் தலைமீதுள்ள வட்டவடிவ விண்மீன்கள் மகுடத்திற்குமேல், தூய ஆவியார் புறா வடிவில் அசைந்தாடுவது போலவும், அவர் நீளக்கயிற்றிலுள்ள முடிச்சுகளை கைகளால் அவிழ்ப்பது போலவும், அக்கயிறுகளை தூதர்கள் தாங்கியிருப்பது போலவும், அதேநேரம், மரியாவின் பாதங்களில் முடிச்சுகள்போன்று பின்னிச் சுருண்டு கிடக்கும் பாம்பை மிதிப்பது போலவும் வரைந்தார். இதற்கிடையே, ஓவியர் Johann Georg அவர்களின் தாத்தாவான Wolfgang Langenmantel(1586-1637), தனது மனைவி Sophia Rentz (1590-1649) அவருடன் மனவருத்தம் ஏற்பட்டு அவரைவிட்டுப் பிரியும் நிலையில் இருந்தார். அச்சமயத்தில், Wolfgang அவர்கள், Ingolstadt நகரிலிருந்த இயேசு சபை அருள்பணியாளர் Jakob Rem அவர்களின் உதவியை நாடினார். அந்த அருள்பணியாளர் அன்னை மரியாவிடம், அம்மா மரியே, இத்தம்பதியரில் உருவாகியுள்ள திருமண உறவின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்தருளும் என உருக்கமாகச் செபித்தார். உடனடியாக, அந்தத் தம்பதியர்க்கிடையே சமாதானம் நிலவியது. அதன்பின், அவர்களின் திருமண உறவில் பிரச்சனையே ஏற்படவில்லை. இந்தப் புதுமையின் நினைவாக, ஓவியர் Johann Georg அவர்கள், தான் வரைந்த ஓவியத்தை, Augsburg நகரிலுள்ள புனித பேதுரு துறவு ஆதீனத்திற்கு நன்கொடையாக அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்றபோது இந்த ஓவியத்தைப் பார்த்து, அந்த அன்னை மரியா பக்தியை தனது அர்ஜென்டீனா நாட்டில் பரப்பினார். அன்னை மரியா சிக்கல்களைத் தீர்ப்பவர், துன்பம் என்னும் முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்ற பெயரில் இந்த அன்னை மரியா பக்தி, தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

ஒவ்வொரு நாளும், தீர்வுகளைக் காண முடியாமல் எத்தனையோ பிரச்சனைகளையும், போராட்டங்களையும் நாம் வாழ்வில் சந்திக்கிறோம். இந்தப் பிரச்சனைகளாகிய முடிச்சுகளை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்போம். அத்தாய் அம்முடிச்சுகளை அவிழ்த்து வைப்பார், தீர்க்க முடியாத நம் சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்.
பொறுப்புகள் தானே வரும்

மே 24

நேற்றுதான் தேர்வு முடிந்திருந்தது ரமேஷுக்கு. படிப்பில் அதிக அக்கறை எடுத்துவரும் மகனைக் குறித்து பெருமிதம் அடைந்தார் தாய் மரகதம். இனி வேலை தேடப்போவதாகச் சொல்லி விட்டான் மகன். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்து, தந்தை முகம் பாராமலேயே கடந்த 20 ஆண்டுகள் வளர்ந்துவிட்ட ரமேஷ், சுட்டித்தனத்திற்கு பெயர்போனவன்தான். தேர்வுகள் முடிந்த அடுத்த நாள் காலை, தாய் விழிப்பதற்கு முன்னரே எழுந்துகொண்ட ரமேஷ், வீதியில் உள்ள குழாயில் போய் தண்ணீர் பிடித்து வந்தான். அவனே வீட்டையும் பெருக்கி, சுத்தம் செய்துவிட்டு, பால் வாங்கிவர கடைக்குச் சென்றான். அம்மாவுக்கு ஒரே வியப்பு.

கரண்ட் பில் கட்ட ஐந்து ரூபாய் இலஞ்சம் கொடுத்தால்தான் செல்லும் ரமேஷா இவன்? அம்மாவுக்காக இதைச் செய்டா என்று கெஞ்சினால்கூட, அடுத்த தெருவுக்குச் சென்று, ஒரு லிட்டர் பால் வாங்கி வராத மகனா, இன்று தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறது? மகன் வந்தவுடனேயே கேட்டார் தாய், ‘என்னடா ஆச்சு உனக்கு’ என்று. ‘படிப்புதான் முடிந்து விட்டதே அம்மா. இனி தேர்வு முடிவுகள் வந்து வேலை கிடைக்கும்வரை சும்மாதானே இருக்க வேண்டும். அதனால் என் அம்மாவுக்காக இதையெல்லாம் செய்யலாம் என்று நினைத்தேன்’ என்று சொன்னான் ரமேஷ். தன் மகனின், மறைத்து வைக்கப்பட்டிருந்த பாசத்தைக் கண்டபோது, தன் கண்களை சேலை தலைப்பால் துடைக்க வேண்டியிருந்தது அந்த தாய்க்கு.
"கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா"

மே 23

மே 24ம் தேதி, சகாய அன்னையின் திருநாளைக் கொண்டாடுகிறோம். சகாய மாதா, சகாயத்தாய் என்று சுருக்கமாக வழங்கப்படும் இந்த அடைமொழியின் விரிவான விளக்கம், "கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா" (Mary, Help of Christians) என்பதே.

முதல் நூற்றாண்டிலிருந்தே, கிறிஸ்தவ சமுதாயத்தில், அன்னை மரியாவுக்கு, இரு அடைமொழிகள் வழங்கப்பட்டு வந்தன. 'மரியா, இறைவனின் தாய்' என்பதும், 'மரியா, உதவி செய்பவர்' என்பதும் அவ்விரு அடைமொழிகள்.

4ம் நூற்றாண்டில் வாழ்ந்த, புனித ஜான் கிறிசோஸ்தம் அவர்கள், தன் மறையுரைகளில், மரியன்னையை, உதவி செய்பவராக அறிமுகப்படுத்தி, அதை ஒரு பக்தி முயற்சியாக வளர்த்தார்.

16ம் நூற்றாண்டில், ஐரோப்பிய கிறிஸ்தவ சமுதாயத்தை, இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற, சகாயத்தாயின் உதவிகேட்டு, மக்கள் செபிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை 5ம் பத்திநாதர். அவ்வேளையில் கிடைத்த வெற்றியும், பாதுகாப்பும், மரியன்னையின் பரிந்துரையால் கிடைத்தன என்பதை, மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

19ம் நூற்றாண்டில், திருத்தந்தை 7ம் பத்திநாதர் அவர்கள், மன்னன் நெப்போலியானால் கைது செய்யப்பட்டு, பின்னர், விடுவிக்கப்பட்டார். தன் விடுதலைக்கும், திருஅவையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்தவர் அன்னை மரியா என்று கூறிய திருத்தந்தை 7ம் பத்திநாதர், தான் விடுதலையடைந்த மே 24ம் தேதியை, சகாயத்தாயின் திருநாளாக உருவாக்கினார்.

இத்தாலியின் தூரின் நகரில் உள்ள பசிலிக்காவில், 'கிறிஸ்தவர்களின் உதவியான மரியா' மகுடம் சூட்டப்பட்டு, பீடமேற்றப்பட்டுள்ளார். புனித தொன் போஸ்கோவால் பிரபலமாக்கப்பட்ட சகாயத்தாயின் பக்தி முயற்சி, சலேசிய சபைத் துறவிகளால் இன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

இதே மே 24ம் தேதி, இயேசுசபையினர், ‘வழித்துணையாகும் நமது அன்னை’ என்று போருள்படும், ‘Madonna Della Strada’ திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்தவ சமுதாயம், அன்னை மரியாவை, 'இறைவனின் தாய்' என்றும், 'உதவி செய்பவர்' என்றும் ‘வழித்துணையாகும் நமது அன்னை’ என்றும் கொண்டாடுவதில், ஆச்சரியம் எதுவுமில்லையே!
அன்புக்காக ஏங்கும் அன்னையர்

மே 22

மீன்களை, பறவைகளை, விலங்குகளை.. இப்படி எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்கு, தம் படைப்பில் திருப்தி ஏற்படவில்லை. அதனால் மனிதனைப் படைத்தார் கடவுள். அதிலும் மனநிறைவு இல்லாமல், தமது சக்தி முழுவதையும் பயன்படுத்தி, குறையே இல்லாத, ஓர் உன்னதமான படைப்பை உருவாக்கினார். அப்படைப்புதான் பெண். அதாவது தாய். தம் படைப்பு வேலை முடிந்தபின் விண்ணகம் சென்ற கடவுள், தம் படைப்புக்களைப் பார்வையிடுவதற்காக, சிறிது காலம் கழித்து பூமிக்கு வந்தார். அப்போது, தமது உன்னதப் படைப்பாகிய பெண்ணைப் பார்த்தார். அம்மா, உனக்கு ஏதாவது குறை இருக்கிறதா? எனக் கேட்டார் கடவுள். அதற்கு அந்த அம்மா, சுவாமி, என் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய இரண்டு கைகள் போதவில்லை, அதனால் இன்னும் இரண்டு கைகளைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். உடனே கடவுள் இதோ அதற்கான வரம் கொடுக்கிறேன் என்றார். அந்த அம்மாவுக்கு மேலும் இரண்டு கைகள் கிடைத்தன. நான்கு கைகளால் அந்த அம்மா பிள்ளைகளுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்து கடவுள் திருப்தியோடு திரும்பிச் சென்றார். சிறிது காலம் சென்று, மீண்டும் அந்த அம்மாவிடம் வந்து நலம் விசாரித்தார் கடவுள். அந்நேரத்தில் அந்த அம்மா, சுவாமி, ஓடி ஓடி வேலை செய்ய இரண்டு கால்கள் போதவில்லை என்றார். சரியம்மா, மேலும் இரண்டு கால்களைப் பெற்றுக்கொள் என கடவுள் வரமளித்துச் சென்றார். மீண்டும் சிறிது காலம் கழித்து, தன் தூதர் ஒருவருடன் பூமிக்கு வந்த கடவுள், அந்த அம்மாவைப் பார்த்தார். அப்போது அந்த அம்மா, ஒரு சுவரில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்தத் தூதர், கடவுளே, கைகளையும், கால்களையும் கொடுத்த நீங்கள், கண்ணீரை எதற்குக் கொடுத்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு கடவுள், கண்ணீரை நான் கொடுக்கவில்லை, அதைக் கொடுத்தது அந்த அம்மாவின் பிள்ளைகள் என்றார். இது ஒரு நாட்டின் நாடோடிக் கதை.

ஆம். பிள்ளைகளின் அன்பின்மையால் கண்ணீரில் காலம் தள்ளும் நிலையில் இன்று பல தாய்மார்.
தேடிவந்து பரிசளிக்கும் தாயான இறைவன்

மே 20

ஓர் ஊரில், வாழ்ந்துவந்த ஒரு முக்கிய புள்ளி, எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கும் நிலைகொள்ளாமல் தவிப்பார். தொழுகையின் இறுதிவரை தங்காமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக்கொண்டிருந்த யூத குரு, ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார். அந்த முக்கிய புள்ளி, குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ், இவற்றைத் தேடி, எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்" என்று கூறினார்.

"சரியான பதில் இது" என்று கூறிய குரு, மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன், நீங்கள் எப்போதும் இவற்றைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச்செல்லும் பரிசுகள், உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக்கொண்டு வரலாம் இல்லையா? கடவுள், இந்தப் பரிசுகளையெல்லாம் ஏந்திவருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர், உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக்கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல், திரும்ப வேண்டியிருக்குமே!" என்று, அந்த யூத குரு கூறினார்.

செல்வத்தையும் புகழையும் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, தாயான இறைவன், இவற்றையெல்லாம் நமக்குத் தருவதற்கு, நம்மைத் தேடி வரக்கூடும் என்பது, அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.
காணாமல்போன உறவுகள்

மே 19

முந்தைய இரண்டு நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. அன்றுதான் வானம் ஓரளவு வெளிச்சமாகத் தெரிந்தது.

மகன் தன் தந்தையிடம் கேட்டான், 'அப்பா, இன்றைக்கு மழை வருமா?, ஏன்னா நாங்க சாயங்காலம் கிரிக்கெட் மாட்ச் வைத்திருக்கிறோம்' என்று. தந்தை யோசித்தார், என்ன சொல்வதென்று. 'பொறுடா, செய்திகளுக்குப்பின் டிவியில் வானிலை அறிக்கைச் சொல்வார்கள்தானே' என்றார் தந்தை. வாய்தான் பதில் சொன்னதே தவிர, அவரின் எண்ணமெல்லாம், கிராமத்தில் தான் செலவிட்ட தன் இளமைப் பருவக் காலங்களைச் சுற்றியே இருந்தது.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடியில காயிற வத்தல எடுத்துட்டு வா' என பாட்டி கூறுவது, இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமா? ஓர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தன் சித்தப்பாவின் மூத்த மகள், கணவரிடம் கோபித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, பாட்டி அவளைப் பார்த்து, 'அந்த காலத்துல உங்க தாத்தா செய்யாத சேட்டையா, வீட்டுக்கு வீடு வாசப்படி தான்' என, இதமாக அறிவுரை கூறியதும், இன்னும் தூரத்தில் கேட்பதுபோலவே இருந்தது. அதெல்லாம் ஒரு கனவுக்காலமாகத் தெரிந்தது.

பாட்டியின் வானிலை அறிக்கையின்றி, தாத்தா, பாட்டிகளின் அனுபவக் கதைகளின்றி, வீட்டோடு ஒரு மருத்துவப் பாட்டி இன்றி, மூத்தோர் சொல் இன்றி உழன்று கொண்டிருக்கும் இன்றைய குடும்பங்களில், கீரை இல்லாத சோறும், நாகரீக வழக்கமாகிவிட்டது. மண்பானைச் சோறு, இடிந்து போன திண்ணைகள், தானியக் கிடங்கான மரக்குதிர் என்ற வரிசையில் காணாமல் போனது நம் தாத்தா, பாட்டி உறவு முறையும்தான்.

தாத்தா,பாட்டி இல்லாத வீடு இக்காலப் பெற்றோருக்கு வேண்டுமானால் சுதந்திரமாய் இருக்கலாம். ஆனால், இக்காலப் பேரப்பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சொர்க்கமானதாக இருக்காது.
எதையும் எதிர்பாராதது தாயன்பு

மே 18

ஒரு நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். வேலையின்றி இருப்பவர்கள் யாரானாலும் விண்ணப்பிக்கலாம், இதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ கிடையாது என, அவர் விளம்பரம் கொடுத்திருந்தார். இதை வாசித்த பலர், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்திற்கு, அந்த நிறுவனத்திற்கு வந்தனர். நிறுவனத் தலைவர், எல்லாரும் கூடியிருந்த இடத்தில் நடுவில் வந்து அமர்ந்தார். நேர்முகத் தேர்வுக்கு ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைப்பார் என எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கேள்விகளை ஆரம்பித்தார். உங்களில் இருபத்திநான்கு மணி நேரமும் ஓய்வின்றி வேலை செய்ய யாரும் தயாராக இருக்கின்றீர்களா? என்று அவர் கேட்டார். அங்கே நிசப்தம் நிலவியது. சிறிதுநேர அமைதிக்குப் பின், ஓர் இளைஞர் எழுந்து, நல்ல சம்பளமா சார்? மாதச் சம்பளமா? அல்லது நாள் கூலியா? என்று கேட்டார். தம்பி, இந்த வேலைக்கு கூலியே கிடையாது என்றார் தலைவர். சரி, வார விடுமுறை, மாத விடுமுறை, நோய்க்கு விடுப்பு.. இப்படி ஏதேனும் உண்டா? சார் என மீண்டும் கேட்டார் இளைஞர். அதுவும் கிடையாது என்றார் அவர். சாப்பாடு கிடைக்குமா சார் ? என்று கேட்டதற்கு, அதுவுமே சந்தேகம்தான் என்றார் அவர். சார், இந்த வேலைக்கு எப்படி.. என இழுத்தார் அந்த இளைஞர். அங்கு வந்திருந்த எல்லாருமே அந்த இளைஞர் சொல்வது சரி என்பதுபோல் தலையசைத்தனர். உடனே அந்நிறுவனத் தலைவர், ஐயாமாரே, தம்பிகளே, பிரதிபலன் பாராமல், இருபத்திநான்கு மணி நேரமும், ஓய்வின்றி, ஊதியமின்றி, வேலை செய்பவர், நம் ஒவ்வொருவரின் தாய்தான். தனது உடல்சுகம், பசி, விருப்பம் என எதையும் எதிர்பாராமல் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகத் தன்னையே மெழுகுதிரியாய் அர்ப்பணிப்பவர் அன்னை எனச் சொன்னார். இவ்வாறு அவர் சொன்னதும் பலரின் கண்களிலிருந்து கண்ணீர்.

எதையும் எதிர்பாராமல் தன்னையே தகனமாக்குவது தாயன்பு
தாயைப் போல பிள்ளை

மே 17

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அம்மா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட ஜெனியை அதிக பாசம் காட்டியே வளர்த்து வந்தார் அத்தாய். இருவரும் உணவு உண்ட பிறகு, "அம்மா... இந்தப் புத்தாண்டுக்கு எனக்குப் புது ஷூ வாங்கித்தாங்கம்மா, அதுவும் விலையுயர்ந்த ஷூ வேணும்...'' என்றாள் ஜெனி.

ஜெனி கேட்டபடியே, புத்தாண்டு அன்று காலை புது ஷூ வாங்கிக் கொடுத்தார் அம்மா. சிறிது நேரம் கழித்து, அந்தப் புது ஷூவை பரிசுப் பொருளாக வண்ணத்தாளில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள் ஜெனி. இதைக் கவனித்த அம்மா, ""யாருக்கு இந்தப் பரிசைக் கொடுக்கப் போற ஜெனி?'' என்று கேட்டார்.

"அது வந்தும்மா.... அடுத்த தெருவுல இருக்கிற ராணிக்குத் தரப்போறேன். பாவம்மா அந்தப் பொண்ணு! அவகிட்ட ஒரே ஒரு ஷூதான் இருக்கு. அதுவும் கிழிஞ்சிருக்கும்மா...'' என்று தயக்கத்தோடு சொன்னாள் ஜெனி.

"ரொம்ப நல்ல காரியம் ஜெனி. கண்டிப்பாகச் செய். ஆனா, என்கிட்டே பரிசு உனக்குன்னு ஏன் பொய் சொல்லிக் கேட்டே?'' என்று அம்மா செல்லக் கோபத்துடன் கேட்டார்.

"ஒருவேளை நான் சொல்லியிருந்தா, நீங்க, அடுத்த பொண்ணுக்குத்தானே என்று மலிவான விலையில் வாங்கி வரக்கூடும். அதனாலதான் எனக்கு வேணும்னு பொய் சொன்னேன்...'' என்று துணிச்சலாகச் சொன்னாள் ஜெனி.

தன்னுடைய புத்தாண்டுப் பரிசை ராணியிடம் கொடுப்பதற்காகக் கிளம்பிச் சென்றாள் ஜெனி. ஆனால் போன சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள்.

இதைக் கவனித்த அம்மா, "என்ன ஜெனி, ராணி வீட்டுல இல்லையா? அதுக்குள்ளேயே வந்திட்டியே?'' என்றார்.

"நான் ராணிகிட்டே பரிசை கொடுக்கலைம்மா. அவுங்க வீட்டுக் கதவுகிட்ட வெச்சிட்டு ஓடி வந்துட்டேன்... ஏன்னா, நான் அந்தப் பரிசைக் கொடுத்தா ராணி ஒருவேளை வாங்கிக் கொள்வாள். ஆனால் அதுக்குப் பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் நன்றியுணர்ச்சியோடு பார்ப்பாள். இயல்பாப் பழகமாட்டா, ஓர் உதவியாளனாகத்தான் என்னைப் பார்ப்பாள். கடவுளுக்கு, உண்டியலில் போடும் காசுக்கு விளம்பரம் தேவையா?'' என்றாள் பிஞ்சுக் குரலில் ஜெனி.

பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் தன்னைப் போலவே, தனது பதின்மூன்று வயது மகளுக்கும் இருப்பதை எண்ணி நெகிழ்ந்து போனார் அம்மா!
அன்னை மரியாவுக்கு நீங்கள் தேவை

மே 16

ஆடு மேய்த்த சிறார்களான, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா என்ற இருவரையும், 2000மாம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அருளாளர்களென அறிவித்தார். 2017ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, இவ்விரு சிறாரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களென அறிவித்தார். 2000 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகளிலும், மே 13ம் தேதி, சனிக்கிழமையாக அமைந்தது, நமக்குள் ஓர் அழகிய எண்ணத்தை விதைக்கிறது.

பொதுவாகவே, வார நாள்களில், சனிக்கிழமைகள், அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள்கள் என்பது, நம் வழிபாட்டில் நிலவும் ஒரு மரபு. திருஅவை வரலாற்றில், மறைசாட்சிகள் அல்லாத புனிதர்கள் வரிசையில், மிகக் குறைந்த வயதில் பீடங்களில் ஏற்றப்பட்டுள்ள தன் குழந்தைச் செல்வங்களுக்கு, அருளாளர், புனிதர் என்ற மகுடங்களைச் சூட்டி மகிழ்வதற்கு, அன்னை மரியா, தனக்கென ஒதுக்கப்பட்ட சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்தார் என்பது, அன்னைக்கே உரிய பாசத்தைக் காட்டுகிறது.

2000மாம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், பாத்திமா திருத்தலத்தில், பிரான்சிஸ்கோ, ஜசிந்தா இருவரையும் அருளாளர்களாக அறிவித்தத் திருப்பலியில் கலந்துகொண்ட பல சிறுவர், சிறுமியர், அவ்விரு சிறாரைப்போல் உடையணிந்திருந்தனர். அவர்களைக் கண்ட திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில் இவ்வாறு கூறினார்:

"அன்பு சிறுவர், சிறுமியரே, உங்களில் பலர், இன்று, பிரான்சிஸ்கோவைப் போல, ஜசிந்தாவைப் போல உடுத்தியிருப்பது, காண்பதற்கு அழகாக உள்ளது. ஆனால், இன்னும் சில மணி நேரங்களில், அல்லது, நாளை, இந்த உடைகளை நீங்கள் களைந்துவிடுவீர்கள்... சிறு இடையர்கள் காணாமல் போய்விடுவர்.

அவர்கள் காணாமல் போய்விட வேண்டுமா? கூடாது. நமது அன்னை மரியாவுக்கு நீங்கள் தேவை. உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா இருவரும், செபமும், தியாகமும் செய்வதற்கு மரியன்னை அவர்களைத் தூண்டினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அதேபோல், பாவிகளை மனம் திருப்புவதற்கு, உங்கள் செபங்களும், தியாகங்களும் மரியன்னைக்குத் தேவை. மரியன்னை, இவ்விரு சிறாருக்கும் பாடம் புகட்டிய அதே ‘பள்ளியில்’ உங்களைச் சேர்த்துவிடும்படி, உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்" என்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், சிறுவர், சிறுமியருக்கு அறிவுரை வழங்கினார்.
தொலைக்கக் கூடாத பொக்கிஷம்

மே 15

முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட தாய் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். எனக்கு இப்போது வயது அறுபத்தெட்டு. எனக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். என் மகன்கள் மூவரும் எப்போதும் நல்லவர்கள். ஆளுக்கொரு மாதம் என, என்னை அவர்கள் வீட்டில் வைத்து உணவு கொடுத்தார்கள். இப்போது நான் அவர்கள் மனைவிகளுக்குச் சுமையென இங்கே என்னை விட்டுவிட்டார்கள். என் மகன்கள் கொடுமைக்காரர்கள் என்றால், என்னை இதற்கு முன்பே கொலை செய்திருப்பார்கள் அல்லவா? பிள்ளைகள் எனக்கு ஒருபோதும் பெரும் பாரமாக இருந்ததில்லை. நான்தான் அவர்களுக்குப் பெரும் பாரமாகி விட்டேன். இந்தத் தள்ளாத வயதிலும், என் இதயத்தில் தூளிகட்டி, அவர்களுக்கு இன்னும் தாலாட்டுப் பாடுகின்றேன். என் பிள்ளைகளைத் திட்டாதீர்கள். ஏனென்றால், அவர்கள், தன் பிள்ளைகளால் நாளைக்கு இங்கு வரக்கூடாது. போ என, என்னைப் புறந்தள்ளி விட்டாலும், உள்ளத்தில் என்றும் நான் அவர்களை உட்கார வைத்திருப்பேன். நான் பெற்ற பிள்ளைகள் நலமோடு இருக்கட்டும். நான் எதிர்கொண்ட தொல்லைகளை, என் மகன்கள் அனுபவிக்காமல் வாழட்டும்.

உனது மனைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரியதொரு பரிசு. எனவே விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்காக, பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே. இது பெரியோர் அறிவுரை.
சூரியனின் அற்புதப் புதுமை

மே 13

ஐரோப்பா எங்கும், முதல் உலகப் போர் தீவிரமாய் நடந்துகொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில், போர்த்துக்கல் நாடு, நடுநிலை வகிக்க இயலாமல், நேச நாடுகளுடன் போரில் இணைந்தது. ஏனென்றால், போர்த்துக்கல் நாடு, ஆப்ரிக்காவில் தன் காலனி நாடுகளைப் பாதுகாக்கவும், பிரித்தானியாவோடு வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தவும் வேண்டியிருந்தது. இப்போரில், ஏறக்குறைய இரண்டு இலட்சத்து இருபதாயிரம் போர்த்துக்கல் குடிமக்கள் இறந்தனர். கடும் உணவு பற்றாக்குறை மற்றும், இஸ்பானிய காய்ச்சலால் ஆயிரக்கணக்கில், மக்கள் துன்புற்றனர். அதோடு அந்நாட்டில் 18ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றன. 1911ம் ஆண்டுக்கும், 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய இரண்டாயிரம், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும், அருள்சகோதரிகள் கொல்லப்பட்டனர். இச்சூழலில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று இடையர் சிறாருக்கு அன்னை மரியா முதல் முறையாக காட்சியளித்து, மக்கள் கடவுள்பக்கம் திரும்ப வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இச்சிறார், அன்னை மரியாவின் இக்காட்சி பற்றி, ஊர் மக்களிடம் தெரிவித்தபோது பலர் அதை நம்ப மறுத்தனர்.

முதல் காட்சியில் அன்னை மரியா கேட்டுக்கொண்டபடி, இச்சிறார் தொடர்ந்து அதே தேதியில் அதே இடத்திற்கு வந்தனர். ஜூலை 13ம் தேதி, மூன்றாவது முறையாக இடம்பெற்ற காட்சியின்போது லூசியா அன்னைமரியாவிடம், இக்காட்சியை மக்கள் நம்புவதற்கு ஒரு புதுமை வேண்டும் என்று கேட்டார். அச்சமயத்தில் அன்னைமரியா உறுதியளித்தபடி, அக்டோபர் 13ம் தேதியன்று அந்தப் புதுமை நடந்தது. அச்சிறாருடன் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கூடியிருந்தனர். எல்லாரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அன்னை மரியா அச்சிறாருடன் சிறிது நேரம் பேசிய பின்னர், தனது ஒளி சூரியனின் மீது வீசச் செய்தார். அதற்குமுன் கொட்டிக்கொண்டிருந்த பருவமழை நின்றது. வானம், பலவண்ணங்களால் ஒளிர்ந்தது. சூரியன் விண்ணில் அங்குமிங்கும் அசைந்தாடியது. ஒரு கட்டத்தில் சூரியன் பூமியின்மீது விழுவதுபோல் ஆடி, பின் அதன் இடத்தை அடைந்தது. சூரியனின் அற்புதம் என்ற, இப்புதுமையை அங்கிருந்தவர்கள் தவிர, மற்றவர்களும் பார்த்து அதிசயித்துள்ளனர். இது, அக்காலத்திய கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டிருந்த அரசுகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இப்புதுமை, அன்னை மரியா பாத்திமாவில் அளித்த காட்சியையும், அவர் உலகுக்கு விடுத்த செய்தியையும் மக்கள் நம்புவதற்கு காரணமானது. 1917ம் ஆண்டில் ஆறுமுறை அன்னை அளித்த அக்காட்சிகளில் கூறியவை நிறைவேறியுள்ளன என்று சொல்லலாம்.
அற்புதங்களின் அன்னை

மே 12

பிரேசில் நாட்டில் 2013ம் ஆண்டில் ஒரு நாள், ஐந்து வயது நிரம்பிய லூக்கா, தனது சிறிய சகோதரி எத்வார்தாவுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, லூக்கா, ஜன்னல் வழியாக, கீழே தரையில் விழுந்துவிட்டான். ஜன்னல், தரையிலிருந்து 6.5 மீட்டர் உயரத்திலிருந்தது. மருத்துவ அவசர சிகிச்சை வாகனத்தில் சிறுவனை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதற்கு ஒருமணி நேரம் ஆகியது. அதற்குள் சிறுவன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். இருமுறை மாரடைப்பும் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இவன் உயிர் பிழைப்பது கடினம். அப்படியே பிழைத்தாலும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாகவோ அல்லது எதுவுமே செய்ய இயலாத ஓர் ஆளாகவோதான் இருப்பான் எனச் சொல்லிவிட்டனர். இதற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ஜூவாவோ பாப்டிஸ்டா (Joao Baptista), அவனின் அம்மா, பிரேசில் நாட்டிலுள்ள கார்மேல் சபை அருள்சகோதரிகள் ஆகிய எல்லாரும் சேர்ந்து, அருளாளர்கள் ஜசிந்தா மற்றும், பிரான்சிஸ்கோவிடம் உருக்கமாக, இடைவிடாமல் செபித்துவந்தனர். அதன் பயனாக, லூக்காவுக்குப் பொருத்தியிருந்த மருத்துவக் கருவிகளை, அடுத்த ஆறு நாள்களுக்குப் பின், மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். லூக்கா நன்றாக எழுந்து பேசத் தொடங்கினான். அவனது சிறிய சகோதரி பற்றி அவன் கேட்டான். அடுத்த ஆறு நாள்களில் அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் மருத்துவர்கள். இவன் குணமானது பற்றி மருத்துவர்களால் விவரிக்க இயலவில்லை. இப்போது லூக்கா வழக்கம்போல் நன்றாக உள்ளான். இந்தப் புதுமையே, பாத்திமாவில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட அருளாளர்கள் ஜசிந்தா மற்றும், பிரான்சிஸ்கோ, புனிதர்களாக உயர்த்தப்பட காரணமாக அமைந்துள்ளது. தன் மகன் அற்புதமாய் குணமடைந்தது பற்றி, பாப்டிஸ்டா அவர்கள், மே 11, இவ்வியாழனன்று, பாத்திமா திருத்தலத்தில் அனைவர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தாயின் கைம்மாறு கருதா அன்பு

மே 11

ஜப்பான் நாட்டில் பழங்காலத்தில் விநோதமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. பெற்றோர்கள் முதுமையடைந்து, மற்றவர்களுக்கு எந்தவித நன்மையுமே செய்ய முடியாது என்ற ஆற்றாமை நிலையை எட்டும்போது, அவர்களை உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய் வைத்துவிடும் பழக்கம் அது. அந்த மலையில், அந்த வயதான பெற்றோர் எதுவுமே செய்ய இயலா நிலையில், தனிமையில், பசி தாகத்தால் வாடி வதங்கி, மடிந்து போவார்கள். இப்படி ஒரு மகன், தன் வயதான தாயை ஓர் உயரமான மலையில் விட்டுவிடுவதற்காக, மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதி வழியே தூக்கிக்கொண்டு சென்றான். அவ்வாறு செல்லும்போது, அந்தத் தாய், வழியில் மரக்கிளைகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே சென்றார். அப்போது அந்த மகன் தாயிடம், ஏனம்மா இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அந்தத் தாய், மகனே, நீ என்னை மலை உச்சியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது வழியைத் தவறவிடாமல், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறேன் என்றார். தனியே பரிதவிக்கவிட்டுவிட்டு திரும்பும் மகன் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டும் என நினைக்கும் தாயின் பாசத்தை நினைத்து, மனம் உருகிப் போனான் அந்த மகன். அதற்குப் பிறகு, அவன் தன் தாயை வீட்டுக்குச் சுமந்துவந்து பாசத்தோடு பராமரித்து வந்தான். இந்த நிகழ்வோடு ஜப்பானில் நிலவிவந்த அந்தக் கொடூரப் வழக்கம் நின்றுபோனது.

தன் பிள்ளை நல்லவனா, கெட்டவனா என அறிவதற்கு முன்னரே, தன் வயிற்றில் கருவாக வளர அனுமதிப்பவர் தாய். வாழ்வில் எவ்வளவு பணம் சேர்த்தாலும், இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்றால், அது தாயின் கருவறைதான். எவ்வளவோ துன்பங்கள், அவமானங்கள் மத்தியிலும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, எச்சூழ்நிலையிலும் கைவிடாமல் இருப்பதே, பிள்ளை தாய்க்குச் செய்யும் கடனாகும்
பணி வழி சுகம்

மே 10

அன்று வீட்டில் மீண்டும் ஒரு கலகம். வீட்டை ஒழுங்குபடுத்திய அம்மா, அன்று தன் பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை எங்கோ மறதியாக எடுத்து வைத்து விட்டார்களாம். மகனும் மருமகளும் எல்லாப் புத்தகங்களுக்கிடையிலும் தேடியாகி விட்டது, ஒரு புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. பேரப்பிள்ளைகளுக்கு புத்தகத்தைக் காணவில்லையே என்ற கவலை மட்டும்தான் இருந்தது. பாட்டி மீது கோபம் வரவில்லை. ஏனெனில் ஒரு நாளும் அவர்கள் இரண்டு பேரும் தாங்கள் படித்த புத்தகங்களை அடுக்கி வைத்ததேயில்லை. அவர்கள் அம்மாவுக்கும் நேரமில்லை. எல்லாம் பாட்டிதான் செய்வார்கள். மருமகளுக்கோ மாமியார் மீது அடக்க முடியாத கோபம். சும்மாவே சண்டை போடும் மருமகளுக்கு, இப்படியொரு காரணம் கிடைத்ததும் வீடு இரண்டாகி விட்டது. மனைவியை சமாதானப்படுத்த முடியாத மகன், அம்மாவை நன்றாகத் திட்டிவிட்டான். தாயும், தன் மகனின் நிலை உணர்ந்து, அவன் மீது கோபப்படவில்லை. 'நீங்கள் ஒரு வேலை செய்தால் அது எங்களுக்கு இரண்டு வேலை ஆகிறது. பேசாமல் மூலையில் முடங்க வேண்டியதுதானே' என மகனும் மருமகளும் கடுமையாகக் கூறியபோதுதான், அந்த தாயின் கண்களில், கண்ணீர் எட்டிப் பார்த்தது. 55 வயதில் போய் மூலையில் முடங்குவதா? ஏழு வயது இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டியாக இருந்து, தான் செய்யும் பணிகளில் கிடைக்கும் சுகத்தை மகனுக்கும் மருமகளுக்கும் எப்படி புரிய வைப்பது எனத் திணறினார்.
'பாத்திமாவின் திருத்தந்தை'

மே 09

1917ம் ஆண்டு மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில் மரியன்னை முதல் முறை காட்சியளித்த அதே நாளில், வத்திக்கான் சிஸ்டின் சிற்றாலயத்தில், யூஜேனியோ பச்செல்லி (Eugenio Pacelli) என்ற அருள்பணியாளரை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் பேராயராகத் திருப்பொழிவு செய்தார்.

பேராயர் பச்செல்லி அவர்கள், கர்தினாலாக மாறி, 1939ம் ஆண்டு, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12ம் பத்திநாதர் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியை ஆற்றிவந்த இவர், பாத்திமா அன்னையின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால், 'பாத்திமாவின் திருத்தந்தை' என்ற புனைப்பெயரையும் பெற்றார்.

பாத்திமா அன்னையின் காட்சிகளுக்குச் சான்றாக விளங்கிய மூவரில் ஒருவரான இறையடியார், அருள்சகோதரி, லூசியா அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி, 'பாத்திமாவின் திருத்தந்தை'யான வணக்கத்திற்குரிய 12ம் பத்திநாதர் அவர்கள், 1948ம் ஆண்டு, உலகின் அனைத்து மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், குடும்பங்கள் ஒவ்வொன்றையும் மரியன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணம் செய்தார்.
உயிரைப் பணயம் வைத்த அன்னை

மே 08

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா தெய்ஸ் (Christina Gillin-Theiss) என்ற அன்னை ஒருவருக்கு, இரண்டு வயதில் Tristin என்ற மகனும், நான்கு வயதில் Brandon என்ற மகனும் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டின் கோடையில் ஒருநாள், அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள சிங்கர் (Singer) தீவில், பெருங்கடல் பவளப்பாறை (Ocean Reef Park) பூங்கா அருகிலுள்ள கடற்கரைக்கு, தன் மகன்கள் மற்றும், நண்பர் ஒருவருடன் சென்றார். அந்தக் கடற்கரைப் பகுதி, தடுப்புச்சுவர் இல்லாத, பாதுகாப்பு குறைவான இடம். அவர்கள் நால்வரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் இரு சிறுவர்கள், ஒருவர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு மிதந்துகொண்டிருந்ததைக் கண்டார், தாய் கிறிஸ்டினா. அவ்விரு சிறுவரின் தலைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. அப்போது நடக்கவிருந்த ஆபத்தை உணர்ந்த கிறிஸ்டினா, தன் இரு மகன்களையும் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் குதித்து, அவ்விரு சிறாரையும் உயிரோடு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வளவுக்கும் கிறிஸ்டினாவுக்கு நன்றாக நீந்தத் தெரியாது. ஆயினும், இவர், தன் உயிரைப் பணயம் வைத்து, அதேநேரம், தன் பிள்ளைகள் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டுள்ளார். 36 வயது நிரம்பிய தாய் கிறிஸ்டினா, அச்சமின்றி துணிச்சலுடன் செயல்பட்டதைக் கவுரவித்து விருது வழங்கியுள்ளது, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம். கடந்த ஆண்டில் Palm கடற்கரையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 120 பேருக்கு இந்த விருதை வழங்குகிறது. இவ்விருது, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் கையொப்பமிட்ட ஒரு உயரிய தேசியச் சான்றிதழாகும். மே 08, உலக செஞ்சிலுவை, செம்பிறை தினம். இந்நாளில் இரத்த தானம் ஊக்குவிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டில் இத்தினம் முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. போரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கென, முதல் உலகப் போருக்குப் பின்னர், சுவிட்சர்லாந்து நாட்டு Henry Dunant அவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார். இவரின் பிறந்த நாளான மே 8ம் தேதி இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

*நெஞ்சினில் ஈரம், கண்களில் கருணை, கைகளில் ஆதரவு, சொல்லில் கனிவு, இந்தப் பண்புகளையெல்லாம் கொண்ட எல்லையற்ற அன்புக் கடல் அன்னை.
தாய்மை உள்ளம் கொண்ட தலைவன்

மே 06

மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள், நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். “வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை” என்று கூறியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், தாய்மை உள்ளம் கொண்ட தங்கள் தலைவனை, பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.
தாய் சொல்லின் வல்லமை

மே 05

வெளியூரில் வேலை தேடப் புறப்பட்ட தன் ஒரே மகனை ஆசீர்வதித்து, வழிப்பயணத்துக்காக மகனின் பையில் சில ரொட்டித் துண்டுகளை வைத்தார் அம்மா. பிறகு மகனிடம், அன்பு மகனே, இந்த ரொட்டித் துண்டுகளை உனக்காக மட்டுமே என நீ வைத்துக் கொள்ளாதே. பசி என்று யார் உன்னிடத்தில் வந்தாலும், அவர்களுக்கு நீ இவற்றில் சிறிது கொடு. அவை ஒருபோதும் குறையாது. நீ இந்த ரொட்டித் துண்டுகளை யாருக்கும் கொடுக்காமல், நீ மட்டும் எப்போது உண்கிறாயோ, அப்போது இவை வேகமாகக் குறைந்து விடும் என்ற அறிவுரையையும் சொன்னார் அம்மா. ஆகட்டும் எனச் சொல்லிப் புறப்பட்டான் மகன். வழியில் பசிக்கின்றது என்று யார் வந்தாலும், அவன் தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்டான். இதனால் அவனிடம் இருந்த ரொட்டித் துண்டுகள் குறையாமல் பெருகிக் கொண்டே இருந்தன. இதற்கிடையில், அந்நாட்டு அரசர் தனது மகளுக்கு வரன் தேடினார். தன்னிடம் இருந்த பொன் நகைகளை எல்லாம் ஒரு பெரிய தராசின் ஒரு தட்டில் வைத்து, இன்னொரு தட்டில் அதற்கீடாக பொன் நகைகளை வைப்பவருக்கு, தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். அரசரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பக்கத்து நாடுகளின் இளவரசர்கள் எல்லாம் தங்களிடம் இருந்த பொன் நகைகளை, தராசின் அடுத்த தட்டில் வைத்தார்கள். ஆனால் யாருடைய பொன் நகைகளும், அரசர் வைத்த நகைகளுக்குச் சரிசமமாக இல்லை. இதனால் கவலையடைந்த இளவரசி, அரண்மனைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரைக்குப் போனார். அங்கே, வேலை தேடிவந்த அந்த இளைஞன், தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னிடமிருந்த ரொட்டித் துண்டுகளை இளவரசிக்குப் பகிர்ந்து கொடுத்து உண்டான். அவளும் அதை அன்போடு வாங்கிச் சாப்பிட்டார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது இளைஞன், ஆற்றங்கரையை விட்டு சந்தைவெளிக்குச் சென்றான். அப்போது அரசரின் அந்த அறிவிப்பு பற்றிக் கேள்விப்பட்டான். அரசரிடம் சென்று, தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதாகச் சொன்னான் இளைஞன். அவனின் நிலையைப் பார்த்து சற்றுத் தயங்கிய அரசர், பின் போட்டிக்குச் சம்மதித்தார். அந்தத் தராசின் அடுத்த தட்டில், தான் வைத்திருந்த ரொட்டித் துண்டுகளில் ஒன்றை எடுத்து வைத்தான் இளைஞன். சிறிது நேரத்தில் அந்த ரொட்டித்துண்டு பொன் நகையாக மாறியது. அதோடு, அது அரசர் வைத்த பொன் நகைகளின் எடையை விடவும் அதிகமாக இருந்தது. இதைப் பார்த்த எல்லாருக்கும் வியப்பு. அப்போது, அந்த இளைஞன், “இது சாதாரண ரொட்டி துண்டு கிடையாது, பசியாய் இருப்பவர்க்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாத ரொட்டித்துண்டு, அதனால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது”என்றான். அந்த இளைஞனுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுத்தார் அரசர். அன்றிலிருந்து பசியாய் வந்த அந்நாட்டு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றினார் அரசர்.

தன் பிள்ளைகளை நற்பண்புகளில் வளர்ப்பவர் தாய்
புறக்கணிப்பிலும் மகனை வாழ்த்திய தாய்

மே 04

ஆப்ரிக்கத் தாய் ஒருவர் ஒருநாள், தனது குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அதிகாலையில், தண்ணீர் எடுக்கச் சென்றார். அந்நேரத்தில், அவரின் ஆறு வயது மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். இருபது நிமிடங்கள் கழித்து தண்ணீருடன் திரும்பி வந்தபோது, குடிசை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்பெண்ணின் கணவரும் ஊர் மக்களும் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் உள்ளே தனது ஒரே மகன் தூங்குகிறான் என்பதை உணர்ந்த தாய், பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டில் நுழைந்து மகனை தூக்கி வந்தார். மகனுக்கு இலேசான தீக் காயங்கள். ஆனால் தாயின் முகத்திலும், மற்ற பகுதிகளிலும் பலத்த தீக்காயங்கள். இந்நிலையில் தந்தை அவ்விருவரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

சிகிச்சை முடிந்து மகனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தார் தாய். மகனும் நன்றாகப் படித்தான். உயர் படிப்புக்காக நகரத்திற்கு அனுப்பினார் தாய். படித்து பட்டம் பெற்ற மகன், அதன்பின் தாயைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவன் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினான். பலருக்கு அதில் அவன் வேலை கொடுத்தான். மகனின் இந்நிலை பற்றி அறிந்த தாய் பெருமிதம் அடைந்தார். ஒரு நாள், தீக்காயம் பட்ட தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு அவனைப் பார்க்கச் சென்றார் தாய். மகனின் நிறுவனத்தின் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், உங்கள் நிறுவனத் தலைவரைப் பார்க்க வந்துள்ளேன், நான் அவரின் தாய் என்றார். அந்தப் பெண்ணும், தலைவரின் அறைக்கு தகவல் சொல்லி அனுப்பினார். அப்போது அந்த மகன், எனக்கு அம்மா கிடையாது, அந்தப் பெண்ணை திருப்பி அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பினான். ஆனால், அந்நேரத்திலும் அத்தாய் சொன்னார் - நான் என் மகனை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இவன் இந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காகவே நான் உழைத்தேன் என்று.
தியாகத் தாய், வீரத் தாய்

மே 03

மாக்ஸ் (Max) எலிசபெத் ஜாய்ஸ் (Elizabeth Joice), இவ்விருவரும் மகிழ்வாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆயினும், இவர்கள் மகிழ்வில் அந்தச் செய்தி இடியென விழுந்தது. 2010ம் ஆண்டில், எலிசபெத்தை புற்றுநோய் தாக்கியது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து, ஹீமோ சிகிச்சையும் எடுத்துக் கொண்டார் எலிசபெத். இந்நிலையில் இத்தம்பதியர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டு எனவும் விரும்பினர். ஆனால் எலிசபெத் கருவுறுதலுக்கு வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இருந்தபோதிலும், எலிசபெத் கருத்தரித்தார். 2013ம் ஆண்டு கோடையில் குழந்தை பிறக்கும் என்பதை அத்தம்பதியர் அறிந்தனர்.

ஆனால், இந்த நற்செய்தியை அறிந்த ஒரு மாதம் சென்று, எலிசபெத் மீண்டும் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்தார். மூன்றாண்டுகளுக்கு முன் அவரைத் தாக்கியிருந்த அந்நோய், மீண்டும் அவர் உடலில் பரவத் தொடங்கியது. கருவில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்துவிட்டு, உடனடியாக நோய்க்குச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும், அல்லது, குழந்தையைப் பாதுகாக்க விரும்பினால் அவசர மருத்துவ சிகிச்சையைத் தாமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். தனது வாழ்வா, குழந்தையின் வாழ்வா இவை இரண்டுக்கும் இடையில் எலிசபெத்! இறுதியில், கருவில் வளரும் குழந்தையைப் பாதுகாப்பதற்காக, சிகிச்சையைத் தள்ளிப்போட்டார் எலிசபெத். 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறக்கவேண்டிய குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து, சனவரியில் பிறக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். தனக்குப் பிறந்த அழகான பெண் குழந்தைக்கு, லில்லி எனப் பெயர் சூட்டிக் கொஞ்சினார் எலிசபெத். அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி, 37 வயதை எட்டுவதற்கு ஒரு வாரம் இருந்தபோது, இறையடி சேர்ந்தார் எலிசபெத்.
மரணத்திலும் துணைவரும் அன்னை

மே 02

சாலமோன் ரோசன்பெர்க் (Solomon Rosenberg), அவரது மனைவி, இரு மகன்கள், வயது முதிர்ந்த பெற்றோர் என, ஆறு பேரும் நாத்சி வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகாம் அதிகாரிகள் அவர்களுக்கு விதித்திருந்த ஒரே சட்டம்: "வேலை செய்ய முடியும்வரை வாழலாம்; இல்லையேல், சாகலாம்".

சாலமோனின் பெற்றோரால் ஒரு வாரம் வேலை செய்யமுடிந்தது. பின்னர், அவர்கள் இருவரும் நச்சுவாயு உலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். சாலமோனின் முதல் மகன், யோசுவா, நல்ல உடல்நலமும், வலிமையும் பெற்றிருந்தான். ஆனால், இளைய மகன் தாவீதோ, உடல்நலம் குன்றியிருந்தான். எனவே, தாவீதை, அவர்கள், எந்நேரமும் இழுத்துச் செல்லக்கூடும் என்ற அச்சம், அக்குடும்பத்தை ஆட்டிப்படைத்தது.

ஒவ்வொருநாளும் மாலையில், சாலமோன், முகாமுக்குத் திரும்பியதும், தன் மனைவியும், இரு குழந்தைகளும் வேலையிலிருந்து உயிரோடு திரும்பியிருந்தால், நால்வரும் சேர்ந்து, இறைவனுக்கு நன்றி கூறி செபித்தனர்.

ஒருநாள் மாலை, சாலமோன், வேலையிலிருந்து திரும்பியபோது, முகாமில், மூத்த மகன் யோசுவா மட்டும், அழுதபடியே அமர்ந்திருந்ததைக் கண்டார். நடந்ததென்ன என்று கேட்ட தந்தையிடம், "தாவீது, வேலை செய்யமுடியாமல் போனதால், அவனை இழுத்துச்சென்றனர்" என்று சொன்னான், யோசுவா.

"அம்மா எங்கே?" என்று அவர் கேட்டபோது, "தாவீதை அவர்கள் இழுத்துச் சென்றபோது, அவன் பயத்தில் அலறினான். உடனே அம்மா, அவனருகே சென்று, 'தாவீது, பயப்படாதே. என் கரங்களைப் பிடித்துக்கொள்' என்று சொல்லி, அவர்களும் தாவீதுடன் நச்சுவாயு உலைக்குள் போனார்கள்" என்று, யோசுவா கண்ணீரோடு கூறி முடித்தான்.

மரணத்திலும் துணைவரும் துணிவு, அன்னையருக்கு உண்டு.
ஒரு தாயின் எதிர்பார்ப்பு

மே 01

ஒரு தாய் தன் மகனுக்கு எழுதும் கடிதமாக, karampon என்ற இணைய பக்கத்தில் பதிவாகியிருந்த வரிகள் இதோ...

எனதருமை மகனே!, நான் உன்னை மிகவும் அன்புகூர்கின்றேன். முதுமையின் வாசலில் நான் முதலடி வைக்கையில், தள்ளாட்டம், என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்! அதிகம் புரிந்துகொள்!

நான் சாப்பிடுகையில் கை நடுங்கி, சாதம் சிந்திவிட்டேனா? சத்தம் போடாதே... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாள்களை நினைத்துப்பார்!

என் முதுமை பார்த்து முகம் சுளிக்காதே! ஆடை மாற்றுகையில் அவதிப்படுகிறேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே.....படுக்கை முழுதும் நீ செய்த ஈரங்களின் ஈர நினைவுகளை இதயத்தில் நிறுத்து!

ஒரே பேச்சை, கீறல் விழுந்த இசைத்தட்டு போல், ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவிக் கதையை, ஒரு நூறு முறை என்னைப் படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை நினைவில்கொள்!

நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே.... உன்னை குளிக்க வைக்க நான் செய்த யுக்திகளை எனக்காகப் புதுப்பித்துக் கொள்!

புதிய தொழில்நுட்பம், புதிய பயன்பாடுகள், உன் புயல்வேகப் புரிந்துகொள்ளல், சத்தியமாய் எனக்குச் சாத்தியமில்லை! கேவலப்படுத்தாதே..கற்றுத்தா! கவனித்துப் பழக அவகாசம் தா!

இனி, சில காலத்தில், மூப்பினால், என் நினைவுகள் அறுந்து போகலாம், உரையாடல் உடைந்து போகலாம்! நிறைய வேலை இருக்கிறதென்று நேரம் பார்க்காதே..... என் அருகிருந்து ஆசுவாசப்படுத்து!

என் கால்கள் என்னை ஏமாற்றுகையில், நீ முதல் நடை பழக, என் விரல் நீண்டது போல், கைகொடுத்து எனக்கு உதவி செய்!

ஒரு நாள் சொல்வேன் நான், வாழ்ந்தது போதுமென்று! வருத்தப்படாதே.....சில வயதுவரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை... சில வயதுக்குமேல் வாழ்வதில் அர்த்தமில்லை... காலம் வரும்போது, நீயும் இதைப் புரிந்து கொள்வாய்!

இனி நான் வேண்டுவதெல்லாம், நீ என்னைப் புரிந்துகொண்ட புன்னகையே!

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனதருமை மகனே! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்..... என் வாழ்வு, அமைதியோடும், உன் அரவணைப்போடும் முற்றுப்பெற முயற்சியேனும் செய்வாயா?