பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி
பிள்ளையே ஒரு தாயின் சொர்க்கம்

ஜூன்,30

தன் சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாகி, தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு பாலைவனம் வழியாக அடுத்த நாட்டிற்கு நடந்து கொண்டிருந்தார் அத்தாய். ஜந்து மணி நேரம் தொடர்ந்து நடந்த அந்த தாய்க்கும், மகனுக்கும், களைப்பு ஏற்பட்டது. அதைவிட மேலாக, தாகமெடுத்தது. பாலவனத்தில் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்? அதிசயமாக, சிறிது தூரத்தில் ஒரு மாளிகையும், அதைச் சுற்றி தோட்டமும் தெரிந்தன. வேக, வேகமாக அதனருகே சென்ற தாயின் கண்களில் 'வயது வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற பலகை தெரிந்தது. வாசலை இலேசாகத் திறந்து, அங்கிருந்த காவலாளியிடம் கேட்டார், 'ஐயா, எனக்கும், என் மகனுக்கும், சிறிது தண்ணீர் கிடைக்குமா? என்று. ‘நீங்கள் உள்ளே வந்து எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் உங்கள் மகனுக்கு உள்ளே அனுமதியில்லை’என்றார் அந்தக் காவலாளி. 'நான் குடித்துவிட்டு என் மகனுக்கு கொஞ்சம் தண்ணீரை வெளியே எடுத்துவரலாமா?' என அத்தாய் கேட்டதற்கு, ‘உள்ளிருந்து எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை’என்று சொல்லிவிட்டார் காவலாளி. ‘இந்த இடத்தின் பெயர் என்ன?’ என அத்தாய் கேட்டபோது, 'சொர்க்கம்' என பதிலளித்தார், அந்தக் காவலாளி. ‘இது சொர்க்கமாகவே இருந்தாலும், என் மகனுக்கு கிடைக்காத தண்ணீர் எனக்கும் வேண்டாம், என் மகனுடன் நானும் தாகத்தால் சாகிறேன்' எனக் கூறிவிட்டு முன்னோக்கி நடந்தார், அத்தாய். இரண்டே நிமிடத்தில், சிறிது பள்ளத்தில் ஒரு பெரிய வீட்டைப் பார்த்து, தோட்டக் கதவைத் திறந்துகொண்டு உள்ளேச் சென்றார். அங்கிருந்த முதியவர் சொன்னார், 'தாகமாக வந்திருக்கிறீர்களா?, நீங்களும், உங்கள் மகனும், நீர் அருந்திவிட்டு, சிறிது இளைப்பாறுங்கள், அதற்குள் நான் ஏதாவது சாப்பாடு தயார் செய்கிறேன்', என்று. மகிழ்ச்சியடைந்த தாய் கேட்டார், ‘ஐயா இந்த இடத்தின் பெயர் என்ன' என்று. அவர் சொன்னார், ‘இதன் பெயர் சொர்க்கம்' என்று. அந்த தாய் கூறினார், 'ஐயா, இதற்கு முந்தைய கட்டடத்தையும் 'சொர்க்கம்' என்றுதானே கூறினார்கள்’ என்று. 'இல்லையம்மா. அதன் பெயர் நரகம். அடுத்தவர் மீது வைத்திருக்கும் அன்பை பரிசோதிக்க வைக்கப்படிருக்கும் இடம் அது. நீங்கள் உங்கள் மகனை விட்டுவிட்டு, தனியே தண்ணீர் அருந்தியிருந்தால், அந்த வீட்டிலேயே அடைபட வேண்டியிருந்திருக்கும். பிள்ளை மீது நீங்கள் கொண்டிருந்த பாசம்தான் உங்களை இந்த உண்மையான சொர்க்கத்திற்கு கொண்டு வந்துள்ளது' என்று கூறி முடித்தார், முதியவர்.
பிள்ளைக்காக பொறுமையுடன் செபிக்கும் தாய்

ஜூன்,29

வட ஆப்ரிக்காவின் தற்போதைய அல்ஜீரிய நாட்டில், தகாஸ்தே (Tagaste) எனும் ஊரில் கி.பி.331ம் ஆண்டில் பிறந்தவர் மோனிக்கா. அந்நிய தெய்வங்களை வணங்கிவந்த பத்ரீசியுஸ் என்பவருக்கு, இருபதாவது வயதில், இவர் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். கடுங்கோபக்காரரான கணவரையும், கொடுமையான மாமியாரையும் சமாளிக்க வேண்டிய சூழல் மோனிக்காவுக்கு. ஏழைகளுக்கு உதவுவது, செபிப்பது போன்ற இவரின் செயல்கள், இவரது கணவருக்கு எரிச்சலூட்டின. இத்தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளில், இரு ஆண் மற்றும், ஒரு பெண் குழந்தைகள் உயிர் தப்பினர். மோனிக்காவின் பொறுமை நிறைந்த இடைவிடா செபம் மற்றும், நற்பண்புகளால், கி.பி. 370ம் ஆண்டில், இவரது கணவர் கிறிஸ்தவரானார். அதற்கு அடுத்த ஆண்டிலே கணவர் காலமானார். அப்போது மூத்த மகனான அகுஸ்தீனுக்கு வயது 17. கார்த்தேஜ் நகரில் பயின்ற அகுஸ்தீன், சோம்பேறியாக, ஊர் சுற்றியாக மற்றும், ஒழுக்கமற்றவராக வாழ்ந்து வந்தார். மணிக்கேய தப்பறைக் கொள்கையையும் இவர் ஏற்று வாழ்ந்தார். ஒரு கட்டத்தில், தாய் மோனிக்கா, அகுஸ்தீனை தனது வீட்டில் உண்ணவோ, உறங்கவோ அனுமதிக்கவில்லை. மோனிக்கா, ஆயர் ஒருவரிடம் அடிக்கடி சென்று, தன் மகனின் நிலைக்காகக் கண்ணீர் சிந்தினார். ஒருசமயம், ஆயர் பொறுமை இழந்தவர்போல் காணப்பட்டாலும், இவ்வாறு சொன்னார். இவ்வளவு கண்ணீர் சிந்தும் ஒரு தாயின் மகன் அழிவுறவே முடியாது என்று. இந்நிலையில், ஒருநாள் மோனிக்கா, மகன் அகுஸ்தீன் விசுவாச வாழ்வை ஏற்பதாகக் கனவு கண்டார். அந்நாளிலிருந்து மகனுக்காக நோன்பிருந்து செபித்தார் தாய். மகன் விரும்பியதைவிட, அவர் மீது அதிக அன்பு செலுத்தினார். அகுஸ்தீனுக்கு 29 வயது நடந்தபோது, அவர் உரோம் நகர் சென்று, போதிக்கத் தீர்மானித்தார். அதை விரும்பாத, தாய் மோனிக்காவும், மகனுடன் செல்லத் தீர்மானித்தார். ஒருநாள், அகுஸ்தீன், தாயிடம், கப்பல் பழுதுபார்க்குமிடத்தில் தன் நண்பரிடம் சென்று பிரியாவிடை சொல்லச் செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு உரோமைக்குச் சென்றார், இதனால் மிகவும் வேதனையடைந்தாலும், மகனைப் பின்தொடர்ந்தார் தாய் மோனிக்கா. உரோம் சென்றடைந்தபோது அகுஸ்தீன் மிலான் சென்றுவிட்டதை அறிந்தார் மோனிக்கா. அக்காலத்தில் பயணம் கடினமாக இருந்தாலும், மோனிக்காவும் மிலான் சென்றார். அங்கே புனித ஆயர் அம்புரோசினால், புனித வாழ்வு வாழத் தொடங்கினார் அகுஸ்தீன். மகனுக்காக, பல ஆண்டுகள் இடைவிடாமல் மன்றாடிய தாய் மோனிக்காவின் செபத்திற்குப் பலனும் கிடைத்தது.
ஒலியையும் நிறுத்தி வைக்கும் பாசம்

ஜூன்,28

60 ஆண்டுகளுக்கு முன், ஒரு குக்கிராமத்தில் நடந்த சம்பவம் இது. எட்டு வயதான அந்த சிறுவனுக்கு தாய்தான் எல்லாம். தந்தை அடுத்த மாநிலத்தில் கட்டட வேலைக்குச் சென்று, அவ்வப்போது வருவதுண்டு. 6 மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும், ஓரிரு நாட்களில் புறப்பட்டு விடுவார். அந்த வீட்டில் பொழுதுபோக்கிற்கென இருந்தது, ஒரு பழைய காலத்து வானொலிப் பெட்டிதான். அந்த வானொலியில் ஒலிபரப்பாகும் ஒரு குறிப்பிட்டப் பாட்டை மட்டும்தான் அவனின் அம்மா விரும்பி கேட்பார்கள். அந்த பாட்டைக் கேட்கும்போதெல்லாம், அச்சிறுவனின் அம்மாவின் அம்மா, அதாவது, இவன் பாட்டி அவன் தாய்க்கு ஞாபகத்தில் வருவார்களாம். கடந்த வாரம்தான் அப்பாவும் வந்துவிட்டுச் சென்றிருந்தார். அவருக்கும் சரியான வேலை இல்லையாம். அம்மா கையிலும் காசில்லை. தினசரி வயல் வேலையில் கிட்டும் கூலி, வீட்டுச் செலவுக்கே போதுமானதாக இல்லை. மாலையில் சிறுவன் வழக்கம்போல் வானொலிக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென அவன் அம்மாவுக்கு பிடித்த அந்த பாடல் ஒலிபரப்பாகியது. 'ஐயோ, அம்மா இன்னும் வரவில்லையே’ என வருத்தமடைந்த சிறுவன், வானொலியை உடனே அணைத்து விட்டான். அம்மா வரும்வரை காத்திருந்த சிறுவன், தன் தாய் வந்ததும் வராததுமாக, வானொலிப் பக்கம் அழைத்துச் சென்று, வானொலியை இயக்கினான். 'இதோ கேளுங்கள், நீங்கள் விரும்பும் பாட்டை' என உரைத்தான். ஆனால் அங்கோ, வேறு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 'நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, நான்கூட கேட்காமல் அணைத்து வைத்திருந்தேன். எப்படி மறைந்தது' என்று அப்பாவியாக கேட்டான் மகன். தன் மகனின் பாசத்தை எண்ணி மகிழ்ந்த தாய் அவனை உச்சி முகர்ந்து, முத்தம் கொடுத்தார். மகன் நிறுத்தி வைத்த பாடல், அத்தாய்க்கு, எங்கோ தூரத்தில் கேட்பதுபோல் இருந்தது.
'நீங்கள் விலையேறப்பெற்றவர்'

ஜூன்,27

'உண்மைப் பாசம்' என்ற தலைப்பில், ஜூலி பால்மெர் (Julie Palmer)

என்ற பெண்மணி எழுதியக் கவிதையிலிருந்து சில வரிகள்:

பாசம்... பற்றுறுதியுடன் அடிமேல் அடியெடுத்து வைத்து மேலேறுகிறது.

களைப்பைப் பொருட்படுத்தாமல் மேலேறுகிறது.

கரடுமுரடான மேடு பள்ளங்களைக் கவனமுடன் கடக்கிறது.

கலங்கி நிற்கும் நீரைக் கடந்து செல்கிறது.

பாசம்... அக்கறையின்மை என்ற அலையைக் கடக்கிறது.

நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

தோல்வியால் துவண்டிருக்கும் இடங்களில்,

உற்சாகம் தரும் வார்த்தைகளைச் சொல்கிறது.

மற்றவரோடு ஒப்புமைப்படுத்தி, மனம் தளரும் சூழலில்,

'நீங்கள் விலையேறப்பெற்றவர்' என்று முழங்குகிறது.தாயான தெய்வம், ஏழைத்தாய் வடிவில்

ஜூன்,26

ஓர் இளைஞரின் அம்மா, மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாள்கள் சென்று, மருத்துவர்கள், அந்த இளைஞரிடம், அம்மாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்று கைவிரித்துவிட்டனர். அந்த இளைஞரும் மிகுந்த கவலையுடன் வீடு திரும்பினார். பின் அவர், அம்மாவைப் பார்ப்பதற்காக, மீண்டும் வீட்டிலிருந்து புறப்பட்டார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், தனது வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக நிறுத்திவிட்டு, தனது முறை வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில், பிச்சையெடுக்கும் ஒரு பெண், தனது இரு பிள்ளைகளுடன் உட்கார்ந்திருந்ததைக் கவனித்தார். அவர்கள் மூவரும் அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தனர். தலைமுடிகள் வாரப்படாமல், பார்ப்பதற்கு அவர்கள் அலங்கோலமாக இருந்தனர். உண்மையிலேயே அவர்கள், பசியினால் வாடியிருந்ததை அந்த இளைஞர் கவனித்தார். அருகிலிருந்த கடைக்குச் சென்று, சாதாரண ஒரு பிஸ்கஸ்ட் டப்பாவை வாங்கிவந்து அதைத் திறந்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, தனது வாகனத்திற்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, மருத்துவமனைக்குச் சென்றார் அவர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறையில் அம்மாவைக் காணவில்லை. அம்மா இறந்துவிட்டார்கள் என்ற பதட்டத்துடன், கையில் வைத்திருந்த பொருள்களை அப்படியே போட்டுவிட்டு, செவிலியரிடம் ஓடினார் இளைஞர். “உங்கள் அம்மா திடீரென கண் திறந்தார், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது, அதனால் அவரை, அந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு மாற்றியுள்ளோம்” என்றனர் செவிலியர். உடனே அந்த அறைக்கு ஓடிச் சென்று, அம்மாவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, அம்மா என்ன நடந்தது? எனக் கேட்டார் ஆனந்தக் கண்ணீருடன். அம்மா சொன்னார் – நான் மயக்கநிலையிலிருந்தபோது, அழுக்கான உடையணிந்த ஒரு பெண்ணும், அவரின் இரு குழந்தைகளும், கைகளை விண்ணை நோக்கி விரித்து, எனக்காகச் செபித்ததைப் பார்த்தேன் என்று. இளைஞர், வாயடைத்து நின்றார். இது ஓர் உண்மை நிகழ்வு.

தாயான தெய்வம், இளைஞரின் தாயைக் காப்பாற்ற, ஏழைத்தாய் வடிவில் தோன்றி, இளைஞரில் இரக்கம் சுரக்க வைத்துள்ளார்.
கொலையாளியும் விருந்தினரே...

ஜூன்,24

2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், லிபியா கடற்கரையில், ISIS தீவிரவாதிகளால், கழுத்து அறுபட்டு கொலையுண்ட 21 இளையோரில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது கடைசி மகன் பெஷீரும் ஊடகங்கள் வழியே பகிர்ந்துகொண்ட எண்ணங்கள், நம்பிக்கைச் செய்திகளாக நம்மை அடைந்துள்ளன.

பெஷீரின் இரு அண்ணன்களான, பிஷாய், சாமுவேல் இருவரும் கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர் என்று கூறிய பெஷீர், "என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லியபடியே இறந்தது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. ISIS குழுவினர் நினைத்திருந்தால், அந்த ஒலியை மௌனமாக்கிவிட்டு, வெறும் ‘வீடியோ’வை மட்டும் அனுப்பியிருக்கலாம். ஆனால், ஒலிப்பதிவை மாற்றாமல், அதை அப்படியே அனுப்பியதற்காக அவர்களுக்கு நன்றி" என்று தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இளையவர் பெஷீர் அந்த நேர்காணலில் தன் தாயைக் குறித்து சொன்னது, நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. தன் இரு மகன்களையும் பறிகொடுத்த தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?" என்று பெஷீர் கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பேன்" என்று கூறியதாக, பெஷீர் தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
செவிமடுக்க ஓர் உள்ளம் போதும்

ஜூன்,23

ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மனிதர். 65 வயதிருக்கும் அந்த முதியவருக்கு, சில நாட்களில் பத்து ரூபாய் கிடைப்பது உண்டு, சில நாட்களில் 50 ரூபாய்வரை கிட்டியதும் உண்டு. ஒரு நாள் கல்லூரிக்குச் செல்லும் மாணவி ஒருவர் அவரருகில் வந்தாள். ' ஐயா. ரொம்ப நாட்களாக உங்களைக் கவனிக்கிறேன். பகல் முழுவதும் இங்கேயேதான் இருக்கிறீர்கள். உங்களுக்கு சொந்த வீடு இல்லையா' என்று கேட்டாள் அப்பெண். அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்து, அவளின் கனிவான முகத்தைக் கண்ட அந்த முதியவருக்கு, கண்களில் ஈரம் கசிந்தது. தன் கதையை மளமளவென சொல்ல ஆரம்பித்தார். தான் தனியார் நிறுவனமொன்றில் கணக்கராக வேலை செய்ததும், தனக்கு குழந்தைகள் இல்லையென்பதும், மனைவி இறந்தபின் யாருக்கும் பாரமாக‌ இருக்க விரும்பாமல், ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் இங்கு வந்து விட்டதையும் கூறினார். இருவரும் கடந்த காலக் கதையில் மூழ்கி விட்டதால், நேரம் போனதே தெரியவில்லை. அன்று கல்லூரிக்குச் செல்ல முடியாத அந்த இளம்பெண், அந்த முதியவர் வைத்திருந்த ரொட்டியை அவருடனேயே பகிர்ந்து உண்டார். நான்கு மணி நேரம் அவருடன் உரையாடிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் அப்பெண். அவருக்கு பிச்சையாக எதுவும் போடவில்லை. அந்த இளம்பெண் போனபின், பக்கத்திலிருந்த கடைக்காரரிடம், அந்த முதியவர் சொன்னார், 'இன்றுதான் எனக்கு யாரோ, இலட்ச ரூபாய் பிச்சை கொடுத்ததுபோல் உள்ளது. என்னை ஓர் இரந்துண்பவனாக பார்த்தவர் மத்தியில், இந்தப் பெண்தான், என்னை ஒரு மகன்போல் நடத்தி, என் குரலுக்கு இவ்வளவு பொறுமையாகச் செவிமடுத்திருக்கிறார். சிறுவயதில் இழந்த தாயை, இன்றுதான் நான் பார்த்தேன். இந்த ஏழையின் உணவைப் பகிர்ந்து கொண்டாரே, இதைவிட என்ன அங்கீகாரம் எனக்கு இந்த உலகில் வேண்டும். யார் பெற்ற பிள்ளையோ, நன்றாக இருக்க வேண்டும்'.

கடைக்காரருக்குத் தெரியும், அந்த பெண் யாரென்று. வீட்டில் பத்து வாகனங்கள் இருந்தும், எளிமையை விரும்பி, நடந்தே கல்லூரிக்குச் செல்லும் அந்த பெண், அந்த சுற்றுவட்டாரத்திலேயே பெரிய கோடீஸ்வரரான சிவலிங்கத்தின் ஒரே மகள். அந்த தாய் சென்ற திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்..... அந்தக் கடைக்காரர்.
பெற்றால் மட்டுமா பிள்ளை தாய்க்கு!

ஜூன்,22

ஏக்நாத் என்ற இறையடியார் எப்படிப்பட்ட உணர்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர். எதற்காகவும் அவர் தனது நிலையிலிருந்து தாழமாட்டார். அவரது மனைவியும், கணவருக்கு ஏற்ற துணைவியாக இருந்தார். ஒருநாள் ஒருவன், தீய எண்ணத்துடன் ஏக்நாத் அவர்களிடம் வந்து, அவரை, தகாத சொற்களால், மனம் திருப்தியடையும்வரை திட்டி தீர்த்தான். ஆனால், ஏக்நாத் தம்பதியர் ஒரு குழப்பமும் இன்றி அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். வந்தவன் சோர்வடைந்துவிட்டான். அப்போது ஏக்நாத் அவனிடம், நண்பனே, சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டது. நீண்ட நேர வழிபாட்டிற்குப் பிறகு உனக்குப் பசி எடுத்திருக்கும், களைப்பாயும் இருக்கிறாய் என்றார். பின், ஏக்நாத் அவர்கள், தன் துணைவியாரிடம், அவனுக்கு உணவு பரிமாறச் சொன்னார். அந்த அம்மையார் குனிந்து உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கையில், வந்தவன் பின்னால் வந்து, அம்மையாரின் முதுகில் ஏறி அமர்ந்தான். ‘நிமிர்ந்து விடாதே, பையன் விழுந்து விடுவான்’ என்றார், ஏக்நாத், தன் துணைவியாரிடம். ‘உண்மைதான். நமது மகனும், சிறுவனாய் இருந்தபோது இவ்வாறுதானே விளையாடினான்’ என்றார், துணைவியார். இந்தத் தெய்வீக உரையாடலைக் கேட்டு, வந்தவன் திடுக்கிட்டான். அவர்களது காலடிகளில் விழுந்து வணங்கி, கண்ணீரால் மன்னிப்புக் கேட்டான். அப்போது அந்த அம்மையார், இதில், மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? குழந்தைகள் எப்போதும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள், நீ எங்கள் பிள்ளையல்லவா? என்றார்.

ஊரார் பிள்ளையும் தன் பிள்ளையே தாய்க்கு. பெற்றால் மட்டுமல்ல பிள்ளை, தாய்க்கு,!
பாசம் என்பது பகிர்வது

ஜூன்,21

அந்த அம்மாவுக்கு 70 வயதிருக்கலாம், கைவிடப்பட்ட சிறார்களுக்கான காப்பகத்தில் ஆயாவாக வேலை செய்து வருகிறார்கள். அனைத்துச் சிறார்களும், பாட்டி, பாட்டி என்று அந்த அம்மாவையேச் சுற்றி சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு எந்த உதவி என்றாலும், முகம் சுழிக்காமல் முன்வந்து செய்வதில், அந்த தாய்க்கு அலாதி இன்பம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், அந்தkd காப்பகத்தில் வேலை செய்யும் அந்த தாயின் பூர்வீகம் குறித்து யாருக்கும் தெரியாது. அவரை யாரும் பார்க்க வந்ததும் இல்லை. அவருடன் பணிபுரியும் ஒருவரைப் பார்க்க ஒரு நாள், நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் வந்திருந்தார். தான் பார்க்க வந்தவரைச் சந்தித்துவிட்டு, வெளியே செல்லும்போது தற்செயலாக இந்த அம்மையாரைப் பார்க்க நேர்ந்த அவர், அப்படியே அதிர்ச்சிக்குள்ளானார். ‘என்ன அம்மா, நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள், எவ்வளவு பெரிய கார் கம்பெனியின் முதலாளியம்மா நீங்க. நான் உங்க கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, உங்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் அந்த கம்பெனி, கொடி கட்டிப் பறக்கும்போது, உங்களுக்கு ஏனம்மா இந்த நிலைமை. உங்க பையனுடைய பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்திருக்கலாமே?’ என்றார் அந்த மனிதர். 'உண்மைதான். எனக்கும் வயதாகிவிட்டது, பையனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டேன். நான் அந்த வீட்டில் இருப்பதில் என் மருமகளுக்கு விருப்பமில்லை. செல்லம் கொடுத்து குழந்தைகளைக் கெடுத்து விடுவேனாம். ஊட்டியிலுள்ள தனி பங்களாவில் இருக்கச் சொன்னார்கள். சேர்ந்திருப்பது அவர்களுக்குச் சுமை. தனியாக இருப்பது எனக்குச் சுமை. அது மட்டுமல்லாமல், பாசத்தைப் பகிர்ந்துகொள்ள இதுதான் சிறந்த இடம் எனக் கண்டேன். பூவுக்குத் தேனும், மேகத்திற்கு மழையும், சிமென்ட் தொட்டிகளுக்கு நீரும், எந்தப் பயனையும் தருவதில்லை. ஏனெனில், அவை மற்றவர்களுக்காக அங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. அதுபோல்தான், ஒரு தாயின் பாசமும். இங்கே குழந்தைகளுடன், குழந்தைகளுக்காக வேலை செய்து அவர்கள் உணவையே உண்டு, அவர்களைப் பேரப்பிள்ளைகளாக வளர்த்தெடுப்பதில் கிட்டும் இன்பம், வேறு எங்கும் இல்லை. ஒதுக்கப்பட்ட எந்தத் தாய்க்கும் இப்படியொரு வடிகால் தேவை. அது விளைநிலத்திற்கு பாய்ச்சப்பட்டு பயன் தரட்டும்,’ என சிரித்துக்கொண்டேச் சொல்லி முடித்தார் அந்த தாய்.
பட்டினியிலும் பகிர்ந்த அன்னை

ஜூன்,20

புனித அன்னை தெரேசா, கொல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை, அன்னை அவர்கள் அறிந்திருந்ததால், அவரைத் தேடிச் சென்றார்.

அன்னை அவர்கள் கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து செய்தது, அன்னை தெரேசா அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை, அப்பெண், இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை தன் வீட்டில் வைத்துவிட்டு, மற்றொரு பங்கை, தன் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்கமுடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும், பல நாட்கள் பட்டினியால் துன்புறுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.
கடும்துயரிலும் கடவுளை நினைவூட்டும் தாய்

ஜூன்,19

யூதமத ரபி ஒருவர், தனது இரண்டு மகன்களிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில், வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் சந்திக்கும் மக்கள் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடுவார். அதன் பின்னே வீடு வருவார். வீட்டில் தன் மகன்களிடம் சிறிது நேரம் விளையாடிய பின்னே உணவருந்துவார். அன்று மாலை அவர் வீடு திரும்பியதும், தன் செல்லங்களை அழைத்தார். பதில் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார். பதிலே இல்லை. அன்று வழக்கத்துக்கு மாறாக, வீடு அமைதியாக இருந்தது. ஆத்திரமடைந்தார். அவர் மனைவி, அவரிடம், ஏங்க.. யாராவது என் பொறுப்பில் இரண்டு விலையுயர்ந்த முத்துக்களை ஒப்படைத்துச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் வந்து அவற்றைக் கேட்டால், நான் மறுப்பது சரியா? எனக் கேட்டார். பின், அவரை மெதுவாக, வீட்டிலுள்ள கீழ் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரண்டு மகன்களின் உடல்களும், ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தன. பகலில் அவர்கள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், ஒரு வாகனம் அவர்கள் மீது ஏறி, அந்த இடத்திலேயே அவர்களைக் கொன்றுவிட்டது. ரபி, கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அவரைத் தேற்றிய அவர் மனைவி, பிறர்க்கு உரிய உடைமைகளைக் காலம் தாழ்த்தாது உடனே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று, சிறிது நேரத்திற்கு முன்பு, நீங்கள்தானே கூறினீர்கள். நமது பிள்ளைகள் இருவரும் இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற இரு முத்துக்கள். அவர் கொடுத்தார், அவரே எடுத்துக்கொண்டார். அவர் நாமம் புகழப்படுவதாக என்றார்.

ஆம். கடும் வேதனையிலும் கடவுளை நினைவூட்டுபவர் தாய்
பிறருடன், பிறருக்காக, பிரசன்னமாகி...

ஜூன்,17

நான்கு வயது நிறைந்த சிறுவன் பிரின்ஸ் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில், ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை, அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில், ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த சிறுவன் பிரின்ஸ், அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, பிரின்ஸ் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். பிரின்ஸ் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.

எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின் மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்து, அவர் உள்ளத்தின் பாரத்தை இறக்குவதற்கு உதவிய, சிறுவன் பிரின்ஸ், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்குச் சொல்லித் தருகிறான்.

அன்பை, பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக, முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே, உன்னத அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.
விதிவிலக்குகள் விதிமுறையாக முடியாது

ஜூன்,16

தன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த மனிதன் ஒருவன், முனிவர் ஒருவரை அணுகினான். “தாயை வணங்கு; தந்தையைத் தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்" என்றெல்லாம் கூறுகிறீர்களே, குணங்கெட்ட தாய் என்று எவரும் இல்லையா, அத்தகைய தாயையும், அவர் நம்மைப் பெற்றெடுத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வணங்கத்தான் வேண்டுமா, என்று கேட்டான். அந்த முனிவர் சொன்னார், 'நீ கேட்பது முறையே. தாய் என்பது தன்னலமற்ற பாசத்தின் மறு பெயர். அங்கு பாசமே இல்லாதபோது, என்ன செய்வது? மலர் என்றால் நமக்கு வழக்கமாக, மணமும் அழகும்தான் நினைவுக்கு வருகின்றது. ஆனால், எல்லா மலரும் மணம் தருவதில்லை. துர்நாற்றம் வீசும் மலர்கூட உள்ளது. இருப்பினும் அதையும் மலர் என்றுதான் அழைக்கின்றோம். கோடியில் ஒன்று அப்படியிருக்கலாம். ஏனெனில், எந்த நியதியிலும் விதிவிலக்கு உண்டு.

‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற வாழை மரம், என்றெல்லாம் உண்டு. ஏன், சொந்தக் கன்றுகளையே முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை. கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவரும், செங்கல் பொடிகளைத் தின்று ஒருவரும் உயிர் வாழ்ந்தது உண்டு. வாழ்வில் ஒரு மணி நேரம்கூட தூங்காமல் ஒருவர் உயிர் வாழ்ந்ததும் உண்டு. ஆகவே, விதி விலக்குகளை நிரந்தரம் என ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் எப்படி இலட்சத்திலோ, கோடியிலோ ஒருவராகக் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும். அதற்காக, தாய்க்குலத்தையே வெறுக்கக் கூடாது.

பூமியைப் ‘பூமாதா’ என்றும், பசுவைக் ‘கோமாதா’ என்றும் வர்ணிக்கின்றோம்.

‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’ என்றும் சொல்கின்றோம். ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பதே மரபு.

பொறுமை, அமைதி, இரத்தபாசம், தன் வயிறைப் பட்டினி போட்டு குழந்தைக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!

தனிப்பட்ட அனுபவங்கள் ஏதாவது ஒரு சில நேரங்களில் வேறுபடலாம். அதற்காக, தாய்மையை பழித்தல் மாபெரும் தவறு” என முடித்தார் முனிவர்.
எந்நிலையிலும் ஏற்கக் காத்திருப்பவர் தாய்

ஜூன்,15

பக்தியும் பாசமும் நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தவர் அந்த இளம்பெண். தந்தையின் இறப்புக்குப் பின் அந்தக் கைம்பெண் தாய், தனது ஒரே மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தார். ஆனால் அந்த இளம் பெண், கல்லூரியில் படிக்கும்போது, தகாத நண்பர்கள் பழக்கத்தினால் தீய வழியில் சென்றாள். வேறு வகையில் வாழ்வில் இன்பம் தேடினாள். அதனால் வாழ்வுப் பாதையில் வழுக்கி விழுந்தாள். தாய் எவ்வளவோ சொல்லியும், ஓர் ஆண் நண்பரோடு வீட்டை விட்டு வெளியேறினாள். காலம் உருண்டோடியது. பணம் இருக்கும்வரைதான் அவள் நம்பிச் சென்றவன் உடன் இருந்தான். இப்போது தனி மரமானாள் அந்தப் பெண். உதவி செய்ய யாருமில்லை. தானாகவே தன் வாழ்வை முடித்துக்கொள்வதைத் தவிர, வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை. இவ்வாறு மனம் கலங்கி, அழுதுகொண்டிருந்த வேளையில், அவளின் மனதில் ஓர் ஆசை பிறந்தது. கடைசியாக, தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு ஒருமுறை செல்ல முடிவெடுத்தாள். பகலில் சென்றால் ஊர் மக்கள் பாரத்துவிடுவார்கள் என்று வெட்கி, இரவில் செல்ல முடிவெடுத்தாள். நள்ளிரவில் தன் வீட்டுக்குச் சென்றாள் அவள். ஆச்சரியம். அந்நேரத்திலும் தன் வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. மெதுவாக உள்ளே சென்று, அம்மா என்றாள் பயந்துகொண்டே. நள்ளிரவிலும் தூங்காமல் விழித்திருந்த தாயின் காலடிகளில், விம்மி அழுதபடியே விழுந்தாள். அம்மா, உங்கள் மன்னிப்புக்குக்கூட நான் தகுதியற்றவள் எனச் சொல்லி அழுதாள். எழுந்து மகளை அணைத்துக்கொண்ட அந்தத் தாய், மகளே, உன்னைப் பிரிந்த நாள் முதல், உனக்காக, இரவும் பகலும் செபித்து வருகிறேன். உன்னைப் பாதுகாப்பாக வீடு வந்து சேர்க்கும்படியாக, இறைவனிடம் எந்நேரமும் மன்றாடுகிறேன். நீ வீட்டைவிட்டுச் சென்ற அந்த நாள்முதல் இந்த வீட்டுக் கதவு பூட்டப்படவே இல்லை. நீ எந்நேரத்திலும் இங்கு வரலாம். இதில் சந்தேகமே வேண்டாம் என்றார் அந்தப் பாசக்காரத் தாய்.

பிரிந்து சென்ற பிள்ளைகளுக்காக வீட்டுக் கதவை மட்டுமல்ல, மனக்கதவையும் எப்போதும் திறந்தே வைத்திருப்பவர் தாய்.
கொலைகாரன், தாய் மடிமீது ஆறுதல் தேடுவானா?

ஜூன்,14

தாயின்மடிதான் உலகம். உலகின் வளங்கள் அனைத்தும் தரமுடியாத ஆறுதலை, அந்த மடியில் கண்டுகொள்ளலாம். தாலாட்டுவதில் இருந்து, மரணத்தில்கூட, தன் மடி கிடத்தியே அளவிடமுடியாத பாசத்தை வெளிப்படுத்திய தாய் மரியாவைத்தான், மிக்கேலாஞ்சலோ அவர்களும், 'பியெத்தா' என்ற சிற்பத்தின் வழியாகக் காட்டியுள்ளார்.

முகுந்தனுக்கு அன்று, பொழுது, நல்லபடியாக விடியவில்லை. காலையில், தெருமுனைக்கு பால் வாங்கச் சென்றவன், வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணம் ஒன்றைப் பார்த்து அலறினான். பின், பால் வாங்காமலேயே வீடு திரும்பினான். தன் தாயிடம், தான் கண்டதைச் சொல்லிவிட்டு, அந்த 24 வயது மகன், அத்தாயின் மடியிலேயே தலைவைத்துப் படுத்து, நடுங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காவல்துறை அவன் வீட்டிற்கு வந்தது. கொலையுண்ட இடத்திலிருந்து இவன் ஓடியதை யாரோ பார்த்ததாகக் கூறியதால், விசாரணைக்கு வந்தது காவல்துறை. தாய் மடி மீது படுத்து நடுங்கிக் கொண்டிருந்த முகுந்தனைப் பார்த்ததும், காவல்துறை ஆணையர், 'எவனும் கொலைச் செய்துவிட்டு வந்து, தாய்மடிமீது படுத்து ஆறுதல் தேடமாட்டான். தாய்ப்பாசம் உள்ளவன், கொலைச் செய்யத் துணிவது அரிது' என்றுரைத்தார். பின், அவனை ஆறுதல்படுத்தி, விவரங்களை மட்டும் கேட்டுக்கொண்டார்.
பனிப்புயலில் பலியான அன்னை

ஜூன்,13

பல ஆண்டுகளுக்குமுன், இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வு இது. அப்பகுதியில் உள்ள ஒரு மலைப்பாதையில், ஒருநாள், ஓர் இளம் தாய் தன் கைக்குழந்தையைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார். திடீரென அப்பகுதியில் உருவான பனிப்புயல், பயணம் செய்த பலருக்கு ஆபத்தாக முடிந்தது.

பனிப்புயல் சற்று குறைந்ததும், அப்பாதைவழியே, தேடுதல் பணிகள் துவங்கின. அப்போது, பனியால் மூடப்பட்டு, அவ்விளம் தாய் இறந்திருந்ததை, தேடும் குழுவினர் கண்டுபிடித்தனர். அவரது உடலின் மீது ஒரு மெல்லிய ஆடை மட்டுமே இருந்தது. வேறு எந்த கம்பளி உடையும் இல்லை. இதைக்கண்டு, தேடும் குழுவினர் அதிர்ச்சியுற்ற வேளையில், அருகிலிருந்த பாறைக்குப் பக்கத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடும் குழுவினர் விரைந்து சென்று அங்கு பார்த்தபோது, ஒரு சிறு குழந்தையின் உடல், ஒரு பெரிய கம்பளி உடையால் நன்கு மூடப்பட்டிருந்ததைக் கண்டனர். தான் உடுத்தியிருந்த கம்பளி உடையால் குழந்தையைப் பாதுகாத்துவிட்டு, அந்த இளம்தாய் இறந்துவிட்டார் என்பதை, அக்குழுவினர் புரிந்துகொண்டனர்.

முதல் உலகப் போரின்போது, பிரித்தானியப் பிரதமராகப் பணியாற்றி, புகழடைந்த, டேவிட் லாய்ட் ஜார்ஜ் அவர்களே, பனிப்புயலிலிருந்து தன் அன்னையால் காப்பாற்றப்பட்ட அக்குழந்தை.
அன்னை ஒரு பல்கலைக்கழகம்

ஜூன்,10

ஒரு பிள்ளைக்கு அன்னை மடியே முதல் பள்ளிக்கூடம் என்பார்கள். ஒருநாள் அந்தச் சிறுவன், தனது ஊர் மாமரத்தடியில், சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக காற்று வீசியது. அதனால் அந்த மரத்தில் பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. எல்லாச் சிறுவர்களும் அவற்றை எடுத்தது போலவே, அந்தச் சிறுவனும் அவற்றில் சிலவற்றை எடுத்து வீட்டுக்கு கொண்டுவந்து, தாயிடம் காட்டினான். அப்போது அந்தத் தாய், ‘மத்தவங்க தோட்டத்து மாங்காய், தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாதுடா’ என அவற்றை அங்கேயே போட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். உடனே அச்சிறுவன், ‘எல்லாப்பசங்களும்தான் எடுத்துட்டுப் போனாங்க., யாரும் பார்க்கலம்மா..!’ எனக் கூறியபோது, ‘உனக்கானது எதுவோ அதை மட்டும்தான் நீ அனுபவிக்க வேண்டும், எல்லாரும் செய்கிறார்கள் என்பதால், ஒரு தவறு ஒருபோதும் சரியாகி விடாது’ என்று சொல்லி, மகனின் தவறை, அவன் மனதில் ஆழமாய்ப் பதிய வைத்திருக்கிறார் அத்தாய். சிறுவயதில் அன்று கேட்ட தன் தாயின் வார்த்தைகளை, இன்றுவரை மந்திரம் போல் எண்ணி செயல்பட்டுக் கொண்டிருப்பவர், தமிழக IAS அதிகாரி உ.சகாயம் அவர்கள். இவர் தன் வாழ்வு பற்றிக் கூறுகையில், ‘நான் என் நேர்மைக் குணத்தை என் தாயின் மடியிலிருந்தே கற்றேன், என் தாயின் தூய வளர்ப்பின் வெளிப்பாடே, இப்போது நான்’ எனக் கூறியுள்ளார்.

சகாயம் அவர்களின் அன்னை திருமதி சவரியம்மாள் அவர்கள் போன்று, எத்தனையோ தாய்மார், தன் பிள்ளைகளுக்கு அமுதோடு அளப்பரிய நேர்மையையும், அறநெறிகளையும் ஊட்டி வளர்த்து வருகின்றனர். அன்னையர் புகட்டும் நல்வழிகளை, பிள்ளைகள் தொடர்ந்து தங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால், சமுதாயத்தில் பல சகாயங்கள் உருவாவர் என்பதில் சந்தேகமில்லை.
எங்கிருந்தாலும், என்றும், அவரே என் அம்மா

ஜூன்,10

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வளர்க்கப்பட்ட ஓர் இளம்பெண், தன் அன்னையைப்பற்றி எழுதிய வரிகள்: "25 ஆண்டுகளுக்கு முன், என் அம்மாவுக்கு 22 வயது. அவர் என்னைக் கருவில் தாங்கிய அதே மாதத்தில், தன் கணவரை, அதாவது, என் அப்பாவை இழந்தார். கைக்குழந்தையான என்னை, என் அப்பாவின் உறவினர்கள் குடும்பத்தில் வளர்வதற்கு அனுப்பி வைத்தார், அம்மா. பலர் அவரை, கோழை என்றும், பொறுப்பற்றவர் என்றும் அழைத்தனர். ஆனால், நான் வசதியான சூழலில் வளரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, என் அம்மா இந்தப் பெரியத் தியாகத்தைச் செய்தார் என்பது எனக்குத் தெரியும். எங்கிருந்தாலும், என்றும், அவரே என் அம்மா."
தூணிலுமிருப்பார், துரும்பிலுமிருப்பார்

ஜூன்,09

ஆண்டவனிடம் ஓர் அருள் வேண்டி, காடு, கடல் தாண்டி ஒரு மலை உச்சிக்குச் சென்றார் பக்தர் ஒருவர். பல ஆண்டுகள் தவம் செய்தபின் ஒருநாள் கடவுளும் நேரில் தோன்றினார். கண்டவுடன் பக்தர் கடவுளை நோக்கி, 'தூணிலும் இருப்பாய், துரும்பிலும் இருப்பாய் என்றும், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருவாய் என்றும் சொல்கிறார்களே, ஆனால், நீயோ என்னை இத்தனை தூரம் வரவைத்து, அதுவும் இத்தனை ஆண்டுகள் காக்க வைத்து காட்சி தருகிறாயே' என்று கேட்டார். கடவுள், பக்தரைப் பார்த்து, 'பிள்ளை வரம் வேண்டி காத்திருந்து, உன்னை பத்து மாதம் சுமந்து, உனக்கு அரணாகவும், தூக்கிப் பிடிக்கும் தூணாகவும், உன் நலனையே எண்ணி இளைத்துப்போன துரும்பாகவும் மாறிப்போன நான், பாலகனாய் நீ தூங்கியபோது உன் சிறு சலனத்தில்கூட கண்விழித்து ஓடி வந்தேனே, எப்போதாவது நான் உன்னிடம் இதற்கெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறேனா?' என்று புன்னகையோடு கேட்டார். உள்பொருளை புரிந்துகொள்ளமுடியாத பக்தர் கடவுளை நோக்கி, 'இறைவா! என் அருகிருந்து என் தாய் செய்ததையெல்லாம், நீ செய்ததாக கூறுகிறாயே, இது என்ன நியாயம்?' என்று கேள்வி எழுப்பினார். கடவுளோ, அதே புன்னகை மாறாமல், 'உண்மைதான். துரும்பிலேயே இருக்க முடிந்த என்னால், உன் தாய்க்குள், தாயாக இருக்க முடியாதா? அதை விட்டுவிட்டு, தூணிலும், துரும்பிலும் நான் இருப்பதால், உனக்கு என்ன பயன்? தாயில் சிறந்த கோவிலுமில்லை என்று சொல்லும் உங்களுக்கு, இறைவன், கோவிலில் வாழ்வான் என்பது கூடவா தெரியாது' என்று முடித்தார். தாய் என்பவர் கோவிலா, தெய்வமா என வீடு நோக்கி நடந்துகொண்டே சிந்தித்தார் பக்தர்.ஒரு தாயின் இறை நம்பிக்கை

ஜூன்,08

உரோம் நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் எண்பது வயது நிரம்பிய தாய் ஒருவர், அங்குப் பணியாற்றும் செவிலியர் ஒருவரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் எனது ஐந்து வயதில் தந்தையை இழந்தேன். அதன்பின், என் தாய், தனியாளாக, என்னை மிகவும் கஷ்டப்பட்டு அன்போடு வளர்த்து ஆளாக்கினார். பருவம் அடைந்து அழகிய இளம் பெண்ணாக வளர்ந்துவந்த நான், ஒருவரை அன்புகூர்ந்தேன். அவரும் என்மீது மிகுந்த பாசம் காட்டுவதுபோல் இருந்தது. அந்த நம்பிக்கையில் என்னை அவரிடம் இழந்தேன். நான் கருவுற்றுள்ளேன் எனக் கூறியபோது, அவர் எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என ஒதுங்கிச் சென்றுவிட்டார். திருமணமாகாமல் குழந்தைக்குத் தாயான என்னை, எனது ஊரில், பலரும் பலவாறு ஏளனமாகப் பேசினார்கள். என் தாய் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னையும், நான் பெற்றெடுத்த பெண் குழந்தையையும் ஏற்றார். என் தாயோடு நாங்கள் வாழ்ந்தோம். என் பிள்ளையை வளர்த்து, காவல்துறை பணிக்குப் படிக்க வைத்தேன். நான் என் வாழ்வின் துன்பநேரங்களில், ஓர் ஆலயம் சென்று, சிலுவையில் தொங்கும் இயேசுவிடம் செபிப்பேன். அவர்தான் எனக்கு இத்தனை காலமும் என்னை அற்புதமாய் வழிநடத்தி வருகிறார். என் மகள் அன்று உரோம் பன்னாட்டு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்காக நேர்காணலுக்குச் சென்றாள். அப்போது தனது வாகனத்தை நிறுத்துவதற்காகச் சென்ற என் மகள், இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்ததும், காத்து இருந்தாள். அந்த மனிதர் தனது வாகனத்தை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு, என் மகளிடம், நீ இப்போது எங்கே செல்கிறாய் எனக் கேட்டுள்ளார். அவளும் விவரத்தைச் சொல்ல, அங்குப் போய் என் பெயரைச் சொல் என்றுமட்டும் சொல்லி அவர் சென்றுவிட்டார். அந்த மனிதர் யார் என்றே என் மகளுக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. என் மகளும் அவ்வாறே சொல்ல, உடனடியாக என் மகளுக்கு வேலையும் கிடைத்தது. இப்போது என் மகள் அந்த விமான நிலைய காவல்துறை பணியில் வேலை செய்கிறாள். என் மகள் நேர்காணலுக்குச் சென்ற அந்த நாள் முழுவதும், நான் இயேசுவிடம் மிக உருக்கமாகச் செபித்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் தாயின் பகிர்வைக் கேட்கும்போது, நம்மிலுள்ள இறை நம்பிக்கையும் ஆழமாகிறதல்லவா!
பாசம்தான் இங்கு மருந்து

ஜூன்,07

ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் கிளம்பும்போதுதான், சுவாமிநாதனுக்கு அந்த வலி எழும். எத்தனையோ நாட்களாக இந்த செருப்பை மாற்றவேண்டும் என்று திட்டமிட்டு வந்தாலும், கையில் பணமில்லாதுபோவதால் வரும் வலி அது. என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பையும் பார்க்க வேண்டும். இது தவிர, வயதான காலத்தில், மனைவியின் மருத்துவச் செலவுகள் வேறு. புது காலணி ஒன்று வாங்கும் திட்டம், சில மாதங்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வாரம் மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்ததால், எங்கெல்லாமோ புரட்டி 500 ரூபாயை மனைவியிடம் கொடுத்திருந்தார் சுவாமிநாதன். அன்று சாயுங்காலம் அலுவலகத்திலிருந்து வரும்போது, செருப்பு எப்போது அறுந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே வீடு திரும்பினார். 'தயாராக இருக்கிறாயா, மருத்துவரைப் பார்க்க கிளம்பலாமா' என வாசல்படியிலிருந்தே குரல் கொடுத்தார் சுவாமிநாதன். 'இன்றைக்கு வேண்டாங்க, அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்றார் மனைவி. 'ஏன், என்னாச்சு, இரண்டு நாட்களாக முதுகு வலிக்கிறது என்று அரற்றிக் கொண்டிருந்தாயே' என்று அவர் கேட்க, 'இப்போது சரியாகிவிட்டது. பையன் கடந்த ஒரு மாதமாக இரண்டு சட்டைகளையே, மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு கல்லூரி போய் வருகிறான். அவனுக்கு, புதிதாக ஒரு சட்டை எடுக்க பணம் கொடுத்தேன்' என, தன் முதுகைப் பிடித்துக்கொண்டே சொன்னார், அந்த தாய்.
அன்னை ஏற்றிவைத்த ஒளி, இன்னும் ஒளிர்கிறது

ஜூன்,06

வறுமையில் வாடிய வயதான ஒருவரைச் சந்திக்கச் சென்றார், அன்னை தெரேசா. அந்த முதியவர் வாழ்ந்துவந்த அறை, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காற்றும், ஒளியும் புகமுடியாதவாறு அவர் அந்த அறையை அடைத்து வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசியது.

அன்னை அங்கு சென்றதும், அந்த அறையைச் சுத்தம் செய்து, சன்னலைத் திறந்துவிட்டு, காற்றும், ஒளியும் உள்ளே வரும்படி செய்தார். அன்னையின் முயற்சிகளை அந்த முதியவர் தடுக்கப்பார்த்தார். ஆனால், அன்னை விடுவதாக இல்லை.

அந்த அறையின் மூலையில் கிடந்த ஒரு பெட்டியில் அழகான எண்ணெய் விளக்கு ஒன்று இருந்தது. அழுக்கடைந்து கிடந்த அந்த விளக்கை அன்னை சுத்தம் செய்தபோது, "ஏன் இந்த விளக்கை நீங்கள் பயன்படுத்துவதில்லை?" என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "நான் ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? என்னைப் பார்க்க யாரும் வருவதில்லை, நானும் யாரையும் பார்க்க விரும்புவதில்லை" என்று சலிப்புடன் கூறினார். அன்னை அவரிடம், "சரி, உங்களைச் சந்திக்க யாராவது இங்கு வந்தால், இந்த விளைக்கை ஏற்றிவைப்பீர்களா?" என்று கேட்க, அவர், "நிச்சயமாக. என் வாசலில் மனிதக் குரல் கேட்டதும், நான் இவ்விளக்கை ஏற்றிவைப்பேன்" என்று பதில் சொன்னார்.

அன்னை தெரேசா நிறுவிய துறவு சபையைச் சேர்ந்த இரு சகோதரிகள், அந்த முதியவரை அடிக்கடிச் சந்திக்கச் சென்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் அங்கு சென்றபோது, அந்த முதியவர் விளக்கை ஏற்றிவைத்தார். அவரது வாழ்வில் அழகான மாற்றங்கள் உருவாயின.

சில மாதங்கள் சென்று, அவர், அச்சகோதரிகளிடம், "சகோதரிகளே, உங்கள் வருகைக்கு நன்றி. இனி, நீங்கள் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறரோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையும், ஆவலும் எனக்கு வந்துவிட்டன. ஆனால், எனக்காக ஓர் உதவியைச் செய்யுங்கள். இந்த விளக்கை முதன் முதலில் ஏற்றிவைத்த அந்த அன்னையிடம், ‘என் வாழ்வில் அவர் ஏற்றிவைத்த ஒளி, இன்னும் ஒளிர்கிறது’ என்று மட்டும் சொல்லிவிடுங்கள். அது போதும்" என்று கூறினார்.
அன்னை எப்போதும் அழகானவர்

ஜூன்,05

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்ததும், அன்று அவர், முதியோர் இல்லத்தில் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு புறப்பட்டார். அப்போது பிள்ளைகள், அப்பா, பாட்டியை எப்போது அழைத்து வருவீர்கள் எனக் கேட்டனர். வீடு திரும்பிய அவருக்கு, அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் அவர் அலுவலகம் சென்றபோது, தெருவோரத்தில் ஒரு தாய், தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவருக்கு தன் அன்னையின் ஞாபகம்.

குழந்தைப் பருவத்தில் அம்மாவை நான் படுத்திய பாடு. அதனால் அம்மா, எத்தனை தோழிகளை இழந்தார். நான் செய்த குறும்புக்காக எத்தனை பேரை அவர் சமாளித்தார். என் பிள்ளை, என் பிள்ளை! என்று, என்னை மடியில் தூக்கித் திரிந்தவர், இன்று முதியோர் இல்லத்தில், யாருமற்ற அனாதையாய் ஆனாரே! இவை அனைத்திற்கும் காரணம் என் முன்கோபம் மட்டும்தான். ஒரு மாதத்திற்குமுன், ஒருநாள் அலுவலகப் பணிச் சுமை காரணமாய், விரக்தியுடன் வீடு வந்தேன். என் அம்மாவும், மனைவியும் ஏதோ கருத்து வேறுபாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அது சாதாரணச் சண்டைதான். ஆனால் என் பணிச் சுமையால், அவர்கள் இருவரையும் திட்டிவிட்டு, என் அறைக்குப் போனேன். என் அம்மா, என் அருகில் வந்து என்னப்பா என்றார்! என் மனைவி அம்மாவின் அருகில்..... என் பணிச் சுமை, மன இறுக்கம், இவற்றால் என் நிதானத்தை இழந்து, ஒன்றும் இல்லை, நீங்கள் இருவரும்தான் பிரச்சனை என்றேன். என் மனைவி அவள் கோபத்தைக் காட்டிச் சென்றாள் சமையல் அறைக்கு!. என் அம்மா மட்டும் என் அருகில் இருந்து, என்னை வேண்டும் என்றால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடு என்றார், நான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக!... என் மனமும் அதற்கு இசைந்தது. என் பிள்ளைகளும், மனைவியும் வேண்டாம் எனத் தடுத்தும், நான் என் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தேன். அதற்குப்பின், என் அம்மா வீட்டில் இருந்தபோது இருந்த அந்த மகிழ்ச்சி, இப்போது இல்லாதது போல் உணர்ந்தேன். அம்மாவை அழைத்து வர முடிவெடுத்தேன். மறுநாள் அலுவலகம் செல்லாமல் நேரே முதியோர் இல்லத்திற்குச் சென்று, என் அம்மாவை அழைத்து வந்தேன். என் வீடு இப்போது அழகாய்த் தெரிவதாய் என் மனம் சொல்கிறது.

ஆம். அன்னை இருக்கும் இல்லம் ஆனந்தம் நடமாடும் ஆலயம்.
இதயத்திலிருந்து பிறந்த மகள்

ஜூன்,03

ஆறு வயது சிறுமி சில்வியாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. "நான் ஏன் உங்கள் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை?" என்று சில்வியா தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுடைய அம்மா, எலிசாவுக்கு, 3 ஆண் குழந்தைகள் பிறந்தபின்னர், அவரது கருப்பையில் உருவான ஒரு பிரச்சனையால், அதை நீக்க வேண்டியிருந்தது. பெண் குழந்தை வேண்டும் என்பது, எலிசாவின் பெரும் கனவாக இருந்தது. எனவே, எலிசாவும், அவரது கணவரும், சில்வியாவைத் தத்தெடுத்து வளர்த்தனர். சில்வியாவின் 6வது பிறந்தநாளன்று, அவளிடம் உண்மையைக் கூற முடிவெடுத்தனர். அம்மா சொன்னதைக் கேட்ட சில்வியா, "நானும் ஏன், என் அண்ணன்களைப் போல், உங்கள் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை?" என்று அழுதபடியே கேட்டாள். தன் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, "உன்னை என் வயிற்றில் சுமக்க முடியாது என்று டாக்டர் சொன்னதால், உன்னை என் இதயத்தில் சுமக்க முடிவு செய்தேன். நீ, என் இதயத்திலிருந்து பிறந்தவள்" என்று எலிசா கூறியதும், சில்வியா, புன்னகையுடன், தன் தாயை அணைத்துக்கொண்டாள்.
பெத்த மனம் பித்து

ஜூன்,02

ஊருக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இந்தத் தாயால், மாற்றுத்திறனாளியாகப் பிறந்த மகனை கடந்த 32 ஆண்டுகளாக தூக்கிச் சுமந்து நடக்க முடிகிறது என்று. அத்தாய்க்கும் அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘இது விதி, வேறு வழியில்லை’ என்று அதனை அவள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை உண்மையான பாசத்தோடும், புன்னகை முகத்துடனும்தான் அதனை ஏற்றுகொண்டு செயலாற்றுகிறார் அத்தாய். தன் மகன், இரு கால்களும் ஊனமாக பிறந்தவுடனேயே தன்னை விட்டு ஓடிவிட்ட தன் கணவனை எண்ணிப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வாள். பிரச்னைகளை எதிர்நோக்க தைரியமின்றி இப்படியே ஓடிக்கொண்டிருந்தால், எங்குபோய் அது முடியும் என மனதிற்குள் நினைத்துச் சிரிப்பாள். மாற்றுத்திறனாளியாகப் பிறந்தாலும், தன் மகன் தன் மீது உயிரையே வைத்திருப்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்த ஊர் திருவிழாவுக்கு தன் மகனுடன் சென்றபோதுதான் அந்த பெண்ணைப் பார்த்தாள் தாய். செவித்திறனின்றியும், வாய்ப் பேச முடியாமலும், அநாதையாக நின்றிருந்த‌ அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே அவளுக்குப் பிடித்துவிட்டது. தன் மகனுக்கு அப்பெண்ணை மணமுடித்துவைத்த அத்தாய், தனக்கு ஒரு மகளைத் தேடிக் கொண்டதாக ஊரெல்லாம் பெருமையடித்துக் கொண்டாள். ஒருவரிடம் இருக்கும் குறைபாடு இன்னொருவரால் நிறைவுச் செய்யப்படும்போது, கவலைப்பட அங்கு என்ன இருக்கிறது என, ஊரை வாயடைக்க வைத்தது அந்த பெத்த மனது.எந்நிலையிலும் பிள்ளையை ஏற்கும் தாய்

ஜூன்,01

இத்தாலியின் மிலான் நகரிலுள்ள அதிதூதர் மிக்கேல் மற்றும் புனித ரீத்தா பங்கு ஆலயச் சுவரில், சமூக விரோதி ஒருவர், “சுதந்திரமான கருக்கலைப்பு (மரியாவுக்கும்தான்)" என, கருக்கலைப்புக்கு ஆதரவான வார்த்தைகளை எழுதியுள்ளார். அந்த நபருக்கு, அந்த ஆலய பங்குத்தந்தை அந்திரேயா பெல்லோ அவர்கள், தனது முகநூலில் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம், மே 31, இப்புதனன்று ஊடகங்களில் வெளியானது.

ஆலயச் சுவரில் இந்த வார்த்தைகளை எழுதியுள்ள அன்பரே,

நீங்கள் உங்கள் தாயிடமிருந்து முன்மாதிரிகையை கற்றுக்கொள்ள தெரியாமல் இருந்தது குறித்து வருந்துகிறேன். உங்கள் தாய் துணிச்சல் மிகுந்தவர். ஏனென்றால் உங்களைக் கருத்தாங்கி, பத்து மாதம் சுமந்து, உங்களைப் பெற்றெடுத்துள்ளார். உங்களை அவர் கருக்கலைப்பு செய்திருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை. உங்கள் தாய் உங்களுக்குப் பாலூட்டி, உணவளித்து, குளிப்பாட்டி, சீராட்டி, ஆடை அணிவித்து வந்திருக்கிறார். இப்போது உங்களுக்கென ஒரு வாழ்வு இருக்கின்றது. அதுவும் சுதந்திரமான வாழ்வு. நீங்கள் பயன்படுத்தியுள்ள இச்சுதந்திரம், உங்களைப் போன்ற ஒரு மனிதர் இந்த உலகில் இல்லாமல் இருந்திருக்கலாம் என எங்களைச் சொல்ல வைத்துள்ளது. இப்படிச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன், ஆனால், நீங்கள் செய்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களின் தாயை நான் மிகவும் வியந்து நோக்குகிறேன். ஏனென்றால் உங்கள் தாய் துணிவானவராக இருந்திருக்கிறார். நீங்கள் உங்கள் தாயை எவ்வளவு புண்படுத்தினாலும், எல்லாத் தாய்மார் போலவே, அவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறார். காரணம், உங்கள் உள்ளத்தில் நல்லது ஒன்று உள்ளது, அது வெளிவர வேண்டும் என்பதற்காக.

கருக்கலைப்பை எந்தவிதத்தில் நோக்கினாலும் அது அர்த்தமற்றது. ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியிலும், வாழ்வில் முன்னோக்கிச் செல்ல துணிவைக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து வியக்கிறேன். உங்களிடம் இந்தத் துணிவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில் உம் எழுத்தில் நீவீர் யார் என்று தெரிவிக்கவில்லை. எங்கள் பகுதி ஏற்கனவே ஏராளமான பிரச்சனைகளால் நிறைந்துள்ளது. இவ்வாறு சுவர்களில் கிறுக்கி, இங்கிருக்கும் சிறிது அழகையும் கெடுத்துவிடும் மனிதர் எமக்குத் தேவையில்லை. நீர் துணிவுள்ளவராக காட்ட விரும்புகிறீரா? அப்படியானால், இந்த உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடாமல், அதனை உன்னதமாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். வெறுப்பைக் கைவிட்டு, அன்பை அணிந்துகொள்ளுங்கள். வேதனையுறும் மனிதருக்கு உதவுங்கள். வாழ்வை அழிக்காமல் அதனை வழங்குங்கள். இவைதான் உண்மையான துணிச்சல்.