பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி




இயேசு அடியானில் தெரிந்த இறைச்சாயல்

செப்டம்பர் 30

புகழ்பெற்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர் அவர்கள், ஒருமுறை, மேடையில் பகிர்ந்துகொண்ட உண்மை நிகழ்வு இது:

குமரி முனையில் வாழ்ந்துவந்த ஓர் இளையவரின் பெயர், இயேசு அடியான். அவ்விளைஞர் நீச்சலில் அதிகத் திறமை பெற்றவர். எனவே, பாறைகள் நிறைந்த கடல் பகுதிகளில் நீந்தி, பலரது உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். சில வேளைகளில், பாறைகளுக்கிடையே சிக்கி இறந்தோரின் உடலை மீட்டுக் கொணர்ந்துள்ளார்.

ஒருமுறை, ஆக்ராவிலிருந்து, செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தினர், குமரி முனை வந்தபோது, அவர்களின் இளைய மகன் பாறைகளுக்கிடையே சிக்கினார். இயேசு அடியான் அவர்கள், அந்த இளையவரை உயிரோடு மீட்டுக் கொணர்ந்தார். தன் மகனின் உயிரைக் காத்த இயேசு அடியான் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருவதாக தந்தை கூறியபோது, அவர் மறுமொழியாக, "எனக்கு எதுவும் தேவையில்லை. உயிர்களைக் காப்பது என் கடமை" என்று பணிவாக மறுத்துவிட்டார்.

சில மாதங்கள் சென்று, அத்தந்தை மீண்டும் குமரிமுனைக்குச் சென்று, இயேசு அடியான் அவர்களை தன்னுடன் ஆக்ராவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அச்செல்வந்தரின் வீட்டு பூசையறையில், இயேசு அடியானின் படம், ஏனைய தெய்வங்களின் படங்களுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார். பின்னர் அத்தந்தை, இயேசு அடியானிடம், "நீங்கள் என் மகனை உயிருடன் மீட்டதற்காக மட்டும் இங்கு உங்கள் படத்தை நான் வைக்கவில்லை. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல், உயிர்களைக் காத்துவரும் உங்களிடம், கடவுளையேப் பார்ப்பதுபோல் நாங்கள் உணர்கிறோம். அதனால்தான், உங்கள் படம் எங்கள் பூஜையறையில் உள்ளது" என்று கூறினார்.

பலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், உயிர்களைக் காக்கும் உன்னத மனிதர்கள் வழியே, இறைவன் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்கிறார்.




பயம் போக்கிய தாய்

செப்டம்பர் 29

அந்தச் சிறுமி தனது ஆறு வயதில் வீணை கற்றுக்கொள்ளத் துவங்கினார். இப்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னும் மேடையேறி வீணை வாசித்ததில்லை. ஆனால் அவரின் பெற்றோருக்கோ தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஒரு சின்ன அரங்கேற்றம் செய்துவிடவேண்டும் என தீராத ஆசை. அச்சிறுமிக்கோ மேடை என்றாலே பயம். அப்பா, அம்மாவின் முன்னிலையில் எத்தனையோ முறை பயமின்றி சிறப்பாக வாசித்திருக்கிறார். இப்போதோ மற்றவர்கள் முன்னிலையில் வாசிக்கப் பயமாக இருந்தது. ஒருநாள் அவர் அம்மா கூறினார், 'சுமதி, நீ மேடையில் வீணை வாசிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. உனக்கு பயம் என்றால் மற்றவர்கள் யாரும் வேண்டாம். நானும் அப்பாவும் மட்டும் வந்து அரங்கில் அமர்கிறோம். நீ மேடையில் வாசிப்பதை, அப்பா போட்டோ எடுப்பார்கள், சரியா' என்று கேட்டார். பயப்படவும் தேவையில்லை, பெற்றோரின் நெடுநாள் ஆசையையும் நிறைவேற்றியதுபோல் ஆகும், என மகிழ்ச்சியுடன் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டார் சுமதி. அந்த நாளும் வந்தது. மேடைக்குப் பின்புறம் வந்து அலங்கரித்துக்கொண்டு தயாராக சுமதி நிற்க, திரை விலகியது. சிறுமியும் கும்பிட்டுவிட்டு மேடையில் அமர்ந்தார். தந்தையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். முன்னால் பார்த்தார் சுமதி, எதுவுமே தெரியவில்லை. ஒரே இருட்டு. முன்வரிசை இலேசாகத் தெரிந்தது. அதில் அவர் பெற்றோர் அமர்ந்திருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது. பின் வரிசையில் யாருமில்லை, ஒரே இருட்டாக இருந்தது. பயமின்றி, சந்தோசமாக வீணை வாசித்தார் சுமதி. பல்வேறு இராகங்களை ஒரு மணிநேரம் இசைத்தபின், அரங்கில் விளக்குகள் போடப்பட்டன. ஒரே கைதட்டல். ஐந்து நிமிடங்களுக்கு கைதட்டல் நீடித்தது. ஆம். முதல் மூன்று வரிசைகள் காலியாயிருக்க, மீதி அனைத்தும் மக்களால் நிரம்பி வழிந்திருந்தது. இவ்வளவு கூட்டத்திற்கு முன்னாலா வாசித்தேன் என அசந்துபோன சுமதி, அன்றுமுதல் மேடை பயத்திற்கு விடை கொடுத்தார். அம்மாவைப் பார்த்தார் சுமதி. அந்த தாய் சொன்னார், ‘சுமதி மன்னித்துவிடு. உனக்குப் பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான், நீ வருவதற்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்னரே நம் நண்பர்களையும், உறவினர்களையும் வரச்சொல்லி அமைதியாக இருக்கச் சொல்லி விளக்குகளை அணைத்துவிட்டோம். மேடையில் பிரகாசமான விளக்குகள் உன்னை நோக்கி இருந்ததால், இருட்டுப் பகுதியில் அமர்ந்திருந்த மக்களை உன்னால் பார்க்க முடியவில்லை. உன் நிலையையும் எங்கள் வேண்டுகோளையும் புரிந்து, மதித்து நடந்த நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நாம் நன்றி கூறவேண்டும்' என்றார். தாய் செய்த இந்த ஏற்பாட்டை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டார் சுமதி.




துணைவருக்கேற்ற துணைவியார்

செப்டம்பர் 28

திருவள்ளுவர் சாப்பிடும்போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஓர் ஊசியும் வைத்துக்கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அவரின் துணைவியார் வாசுகி அம்மையாருக்கு விளங்கவே இல்லை. ஆனால் அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வாசுகி அம்மையார் நினைத்ததால், இதற்கு காரணத்தைக் கேட்கவில்லை. எனினும், வாசுகி அம்மையார் இறக்கும் தருவாயில்தான் இதற்குரிய காரணத்தை கேட்டாராம். அப்போது வள்ளுவர், அவை இரண்டும், சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே. ஆனால், நீ பரிமாறுகையில் சோற்றுப்பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்குத் தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகச் சொன்னாராம். ஒருநாள் வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனராம். அப்போது வள்ளுவர், தன் துணைவியாரிடம் சோறு சூடாக இருக்கிறது, விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? வாசுகி அம்மையார் கேள்வியே கேட்கவில்லையாம். விசிற ஆரம்பித்து விட்டாராம். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். ஒருநாள் அந்த அம்மையார், கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாராம். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டுவிட்டு வந்தாராம். குடத்துடன்கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய அன்பு மனைவி, காலமானபோது, ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவர், மனைவியின் பிரிவைத் தாங்காமல் கண்கலங்கி விட்டாராம்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்

திருவள்ளுவர் வாசுகி தம்பதியர் பற்றி நினைத்துப் பார்க்கலாமே.




தாய் காட்டிய பாசத்திற்கு மறுமொழி

செப்டம்பர் 27

அன்று பள்ளியில் இலவச மதிய உணவருந்திவிட்டு, மாணவர்கள் அனைவரும் ஒருவித தூக்க கலக்கத்தில் பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் சரவணன் என்ற சிறுவன் எழுந்து, 'டீச்சர், என் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாயைக் காணவில்லை. சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கிவிட்டுப் போவதற்காக வைத்திருந்தேன்' என்று முறையிட்டான். ஆசிரியருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொருவராகக் கேட்டுப் பார்த்தார். எவருமே எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த வரிசையில் நின்றிருந்த இராமுவின் முறை வந்தபோது அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அனைவரின் பார்வையும் அவன் மீது விழுந்தது. அந்தப் பள்ளியிலேயே மிகவும் ஏழை மாணவன் அவன்தான். ஆகவே, அவன் எடுத்திருக்க வாய்ப்பு அதிகம் என சந்தேகப்பட்டனர். இல்லையென்றால் அவன் இவ்வளவு நடுங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லையே!. ஆசிரியர், அவன் கால்சட்டை பாக்கெட்டில் கைவிட்டு துழாவினார். ஒரு பொட்டலம் இருந்தது. ‘இதில் என்ன வைத்திருக்கிறாய்’ என்றார் ஆசிரியர். நடுங்கிக்கொண்டே, பதில் சொல்லாமல் நின்றான் இராமு. அதைப் பிரித்துப் பார்த்தார் ஆசிரியர். அதில் சிறிய அளவு இலவச மதிய உணவிருந்தது. 'எதற்காக பள்ளியில் கொடுத்த மதிய உணவைப் பொட்டலமாகக் கொண்டு போகிறாய்' என்று ஆச்சரியமாகக் கேட்டார் ஆசிரியர். 'இல்லை டீச்சர். எங்க அம்மாவுக்கு மூன்று நாட்களாக உடம்பு சரியில்லை. அதுதான், எனக்குக் கொடுத்த மதிய உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை எடுத்துப் போகிறேன். மன்னிச்சுடுங்க டீச்சர்' என்றான் இராமு. ஆசிரியைக்கு கை நடுங்கியது. மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டு தானும் இராமுவை முதலில் சந்தேகப்பட்டது குறித்து மனம் கலங்கினார் ஆசிரியர்.




"இன்னும் ஒரு 5 நிமிடங்கள், ப்ளீஸ்..."

செப்டம்பர் 26

இளம் தந்தையொருவர், 5 வயது மகன், ஹென்றியை அழைத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு முன்புறம் அமைந்திருந்த பூங்காவுக்குச் சென்றார். அங்கு, ஹென்றி ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்ததை, அருகிலிருந்த 'பெஞ்சில்' அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தார் தந்தை. அவர் அருகே மற்றொரு இளம் தாய் வந்தமர்ந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின், அப்பெண், "சிவப்பு சட்டை போட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். இளம் தந்தை, "அப்படியா? அவனுக்கருகே அடுத்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று கூறினார். அரைமணி நேரம் இருவரும் பல விடயங்கள் குறித்துப் பேசினர். பின்னர், இளம் தந்தை எழுந்து, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவண்ணம், தன் மகனிடம், "ஹென்றி, வா போகலாம்" என்று கூற, சிறுவன் அவரிடம், "இன்னும் ஒரு 5 நிமிடங்கள் அப்பா" என்று கெஞ்சினான். 5 நிமிடங்கள் சென்று, தந்தை மீண்டும் அழைக்க, ஹென்றி மீண்டும், "ப்ளீஸ் அப்பா. இன்னும் ஐந்தே நிமிடங்கள்" என்று கூறினான். இவ்வாறு, நான்கு, அல்லது, ஐந்து முறை நடந்தது.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் தாய், "நீங்கள் உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி" என்று புகழ்ந்தார். அந்த இளம் தந்தை, அப்பெண்ணிடம், "என் மகன் கேட்கும் ஐந்து நிமிடங்கள் அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும்தான்" என்று கூறியதும், அப்பெண் புரியாமல் அவரைப் பார்த்தார். இளம் தந்தை, தொடர்ந்து விளக்கம் அளித்தார்: "ஹென்றியின் அண்ணன் ஜூலியன், சென்ற ஆண்டு, இதே பூங்காவுக்கருகே, சாலை விபத்தில் இறந்தான். எங்கள் வீடு, பூங்காவுக்கு எதிரே இருப்பதால், என் மகன் ஜூலியன், பூங்காவில் சைக்கிள் ஓட்ட விரும்பி, என்னையும் அழைத்தான். ஆனால், நான் அப்போது வேலையில் மூழ்கியிருந்ததால், அவனோடு செல்ல மறுத்துவிட்டேன். ஜூலியன் வீட்டைவிட்டு, பூங்காவிற்குச் செல்ல, சைக்கிளில் சாலையைக் கடந்தபோது, குடிபோதையில் கார் ஒட்டி வந்த ஒருவர், ஜூலியன் மீது மோதியதால், வீட்டுக்கெதிரிலேயே அவன் இறந்துபோனான். என் மகன் ஜூலியன் என்னிடம் கேட்டதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள்தாம். அதை அவனுக்கு அன்று நான் கொடுத்திருந்தால், அவன் ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருப்பான். இப்போது, ஹென்றி கேட்கும் ஐந்து நிமிடங்கள், அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான். இந்தப் பூங்காவில் நான் அமரும் நிமிடங்கள் எல்லாம், என் ஜூலியனுக்காக நான் செலவிடும் நிமிடங்கள்" என்று அந்த இளம் தந்தை, கலங்கிய கண்களுடன் கூறி முடித்தார்.




நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

செப்டம்பர் 25

அந்த ஊரில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. ஊரில் கடும் பஞ்சம். மக்கள் பசியால் வாடினர். ஆதலால் பக்கத்து ஊரில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த பணக்கார கைம்பெண் ஒருவரிடம் ஊர் மக்கள் சென்று, அம்மா, பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் பசியால் வாடும் எங்கள் சிறுபிள்ளைகளுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சினர். இளகிய உள்ளம் படைத்த அந்த அம்மா, ஊர் பெரியவர்களிடம், உங்கள் ஊரில் சிறார் யாரும் பசியால் வாட வேண்டாம், தினமும் ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு நான் ஏற்பாடு செய்கிறேன், நாளை என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் தனது மாளிகை திரும்பிய அந்த அம்மா, தனது ஊழியர் ஒருவரை அழைத்து, அந்த ஊரிலுள்ள சிறார் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும், அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது, ஒரு கூடையில் சரியான எண்ணிக்கையில் ரொட்டிகளை வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே நாளையிலிருந்து அமர்ந்திரு என்று சொன்னார்.

மறுநாள் அங்கு வந்த சிறார், கூடையிலிருந்து பெரிய ரொட்டியை எடுப்பதில் போட்டிப் போட்டனர் ஆனால் ஒரு சிறுமி மட்டும் ஒதுங்கி நின்று, எல்லாரும் எடுத்தபின் கடைசியில் கூடையில் இருக்கும் சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றாள். இப்படியே தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்தன. இதை அந்த பணக்கார அம்மா கவனித்துக் கொண்டிருந்தார். ஐந்தாவது நாளில் கடைசியில் சிறிய ரொட்டியை எடுத்துச் சென்ற சிறுமி, வீட்டிற்குச் சென்று தாயிடம் கொடுத்தாள். சிறுமியின் தாய் அதைப் பிரித்தார். அதிலிருந்து தங்கக்காசு கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு உடனே பணக்கார அம்மாவிடம் வந்து கொடுத்தாள் சிறுமி. அப்போது அந்த அம்மா, மகளே, உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் கொடுத்த பரிசு இது. இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல் என்றார். சிறுமியும் துள்ளிக் குதித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் காட்டினார்.




இரக்கத்தின் கன்னி மரியா

செப்டம்பர் 23

வெயில், மழை, காற்று, தூசி என்று பல்வேறுத் தாக்குதல்களிலிருந்து குழந்தையைக் காக்க, அன்னையர் பயன்படுத்தும் ஓர் அற்புதக் கேடயம், முந்தானை அல்லது, துப்பட்டா.

அன்னையர் உடுத்தும் மேலாடைகள், குழந்தையின் கண்ணீரைத் துடைக்க, அல்லது, அடிபட்டக் குழந்தையின் காயத்தைக் கட்ட... என்று, பல வழிகளில் துயர் துடைக்கும்; பாதுகாப்பு வழங்கும்.

அன்னை மரியா, இதே பண்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உருவமே, இரக்கத்தின் கன்னி மரியா (The Virgin of Mercy). கன்னி மரியா தன் மேலாடையை, இருகரங்களாலும் விரித்தபடி நிற்க, அந்த மேலாடை தரும் பாதுகாப்பில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், குழந்தைகள், அருள் சகோதரிகள் என்று பல குழுவினர் அடைக்கலம் புகுந்திருப்பதுபோல், மரியாவின் உருவம் பல தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு முதல், இத்தாலி, இஸ்பெயின், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்களிடையே பரவியுள்ள பக்தி முயற்சியாக இது இருந்து வருகிறது.

இரக்கத்தின் கன்னி மரியாவின் திருநாள், செப்டம்பர் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.




ஒருவர் ஒருவரைச் சார்ந்தது உலகு

செப்டம்பர் 22

அந்த தாயின் பெயர் தமயந்தி. அவருக்கு ஒரே மகன். பிள்ளையை, பொன்னைப்போல் போற்றி பாதுகாத்தார் அத்தாய். வெள்ளிக்கிழமைதோறும் மாலையில், அவன் பள்ளி விட்டு வந்தவுடன், கை பிடித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவன் கைகளில் கொஞ்சம் சில்லறைக் காசுகளைக் கொடுத்து, கோவிலுக்கு வெளியே தர்மம் கேட்டு அமர்ந்திருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொல்வார், அத்தாய். இது சில ஆண்டுகளாகவே பழக்கமாக இருந்தது. ஒரு நாள் அச்சிறுவன், தாயிடம் கேட்டான், 'அம்மா! வேலைச் செய்யாமல், இப்படியே அமர்ந்திருப்பவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? நம்மிடமும் காசில்லை, நாமும் ஏழைதான். இவ்வளவு குறைவாகக் காசு கொடுப்பதால், அவர்களின் ஏழ்மை நீங்கி விடவாப்போகிறது?' என்று. தாய் கூறினார், 'மகனே, அவர்களின் ஏழ்மையை நீக்கவேண்டும் என்பதற்காக உன்னிடம் காசு கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொல்லவில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உன்னில் வளர வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன். போதிய வசதியில்லாத நாம், உன் மாமாவின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது, உனக்குத் தெரியும்தானே. அதேப்போல், நமக்கும் பிறருக்கு உதவும் கடமை உள்ளது. ஏனென்றால், ஒருவர் ஒருவரைச் சார்ந்தே இந்த உலகம் உள்ளது. இதை எப்போதும் நினைவில் கொள்’ என்று.

படிப்பறிவு இல்லையெனினும், அம்மாவின் அந்த பரந்த அறிவு குறித்து உள்ளம் பூரித்தான் மகன்.




மனிதரின் மதிப்பை உணர்த்திய ஆசிரியர்

செப்டம்பர் 21

அன்று சிறுவன் அருண், தன் வகுப்பு ஆசிரியர் விமலாவிடம், தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, தன் நண்பர்கள் தன்னை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறி அழுதான். தான் செய்த தவறை உணர்ந்து, தன் நண்பர்களின் அன்புக்காக அருண் ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர், அருணுக்கு உதவ நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்ற ஆசிரியர், ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைக் கையில் வைத்துக்கொண்டு, இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். உடனடியாக எல்லா மாணவர்களும் துள்ளி எழுந்து கைகளை உயர்த்தினர். மாணவர்களின் செய்கையைப் பார்த்த ஆசிரியர், அந்த ரூபாய்த் தாளைக் கசக்கி, இப்போது இந்த ரூபாய்த் தாள் யாருக்கு வேண்டும் எனக் கேட்டார். அப்போதும் மாணவர்கள், கைகளைத் தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர். பின், அந்த ரூபாய்த் தாளை காலில் மிதித்த ஆசிரியர், அதே கேள்வியை மீண்டும் கேட்டார். மாணவர்களின் கைகள் தூக்கியபடியே இருந்தன. பின் கையில் அந்த ஐம்பது ரூபாய் தாளை எடுத்த ஆசிரியர், இந்த ரூபாய்த் தாள் அழுக்காக இருந்தாலும், கசங்கி இருந்தாலும், அதன் மதிப்பு குறைவதே இல்லை. அதேபோல், சிலநேரங்களில் நாம் தெரியாமல் செய்த தவறுகள் நம் மதிப்பைக் குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு. அவன், தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அருண் சந்தர்ப்ப சூழலால் ஒரு தவறைச் செய்துவிட்டான். அந்தத் தவறு ரூபாய்த் தாளின்மீது பதிந்திருக்கும் அழுக்கு போன்றது. அதனால் அருணின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே அருணை ஒதுக்காமல் அவனோடு எப்போதும்போல் பழகுங்கள் என்றார் ஆசிரியர் விமலா. பின் சக மாணவர்கள் அருணிடம் மன்னிப்புக் கேட்டு, அவனைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.




தாயன்பை அறியாத உன்னதத் தாய்

செப்டம்பர் 20

அப்பாவின் அன்பைமட்டுமே கண்டு, அனுபவித்து வளர்ந்த அவ்விளம் பெண்ணுக்கு, அம்மா இல்லையே என்பது, வெகுநாள் ஏக்கமாகவே இருந்தது. 'என் அம்மாவை எங்கு சென்று நான் தேடுவேன்' என்று தனக்குள்ளேயே அவர் அடிக்கடி கேட்டுக்கொள்வார். 6 வயதிலிருந்து எத்தனை இடம் மாற்றியாகிவிட்டது! சித்தப்பா வீட்டில் ஓராண்டு, சித்திக்குப் பிடிக்காததால், அத்தை வீட்டில் நான்கு ஆண்டுகள், அதன்பின், ஓர் அனாதை இல்லத்தில் 11 ஆண்டுகள் என்று, காலம் வேகமாக ஓடிவிட்டது.

கடந்த மாதம்தான் அவ்விளம்பெண்ணுக்கு திருமணம் நிகழ்ந்தது. அந்தக் குடிசை வீட்டில், அம்மா என்று அழைக்க, மாமியாரும் இல்லை. ஏன் தனக்கு மட்டும், யாரையும் அம்மா என்றழைக்கும் பாக்கியத்தை இறைவன் தரவில்லை என்று மனதிற்குள்ளேயே ஏங்கினார், அவ்விளம்பெண்.

அம்மாவின் அன்பை அனுபவிக்க வழியற்ற அவர், அம்மாவானபோது, அவருக்கு இவ்வுலகமே ஒளிமயமாகத் தெரிந்தது. அம்மாவைத் தேடிய தான், ஓர் உன்னத அம்மாவாகத் திகழவேண்டும், தன் குழந்தைக்கு, அம்மாவின் அனைத்து அன்பையும் அள்ளித்தந்து, அக்குழந்தைக்கு எவ்வித ஏக்கமும் வராமல் வளர்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார்.

அம்மாவின் அன்பை சுவைக்கும் பாக்கியம் பெறவில்லையெனினும், அங்கு ஓர் உன்னத அம்மா உருவாகியிருந்தார்.




சலேத்து மாதாவின் கண்ணீர்

செப்டம்பர் 19

18ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்ற பிரெஞ்சு புரட்சி, பிரெஞ்சு சமுதாயத்தை பெருமளவு காயப்படுத்தியிருந்தது. மக்களிடம் இறை நம்பிக்கை தொலைந்து போயிருந்தது. செபித்துவந்த உதடுகள், நாள் முழுவதும், இறைவனையும், அடுத்தவரையும் சபித்தவண்ணம் இருந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கோவிலை மறந்துவிட்டு, தங்கள் பணிகளிலும், கேளிக்கைகளிலும் மூழ்கினர்.

இச்சூழலில், 1846ம் ஆண்டு, செப்டம்பர் 19ம் தேதி, சனிக்கிழமை, மாக்ஸிமின் (Maximin) என்ற சிறுவனும், மெலனி (Melanie) என்ற சிறுமியும், ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில், லா சலேத் ஃபல்லவோ (La Salette Fallavaux) என்ற ஊருக்கருகே ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில், அந்த மலைச் சரிவில், ஒரு பாறையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து, தன் கரங்களில் முகத்தைப் புதைத்தவண்ணம் அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நிலவிய ஒளி, எதோ சூரியனே இறங்கிவந்து அங்கு அமர்ந்திருந்ததைப்போல் இருந்தது.

மக்கள் செல்லும் தவறான பாதைகளால் தானும், தன் மகனும் மிகவும் துயரடைந்திருப்பதாகக் கூறிய அப்பெண், மக்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளவில்லையெனில், வறட்சி, வியாதி, பட்டினி என்று பல துயரங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். பின்னர் அங்கிருந்து மறைந்துபோனார்.

மாக்ஸிமின், மெலனி இருவரும் தாங்கள் கண்ட காட்சியைப்பற்றி சொன்னபோது, அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஒருவரும் நம்பவில்லை. அவ்விருவரையும் சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டியபோதிலும், அவ்விரு சிறாரும் தாங்கள் கண்டது உண்மையான காட்சி என்பதில் உறுதியாக இருந்தனர்.

நாட்கள் செல்ல, செல்ல, அன்னை மரியை அவ்விரு சிறாரும் கண்டனர் என்று மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அன்னை காட்சி கொடுத்த இடத்திற்கு திருப்பயணிகள் சென்றனர். 5 ஆண்டுகளில், அப்பகுதியில் வியக்கத்தக்க மாற்றங்கள் உருவாயின. மக்கள் மீண்டும் கோவிலை நாடிச் சென்றனர். சபிக்கும் பழக்கம் குறைந்தது.

1851ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அந்தக் காட்சிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பக்தி முயற்சிகளையும் உண்மையென ஏற்றுக்கொண்டார். அந்தக் காட்சி நிகழ்ந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோவிலில் பீடமேற்றப்பட்டிருந்த அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு மகுடம் சூட்டுவதற்கு, 1879ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் உத்தரவளித்தார்.

லா சலேத் என்ற இடத்தில் அன்னை மரியா தோன்றியதால், அவர் லா சலேத் அன்னை, அல்லது, சலேத்து மாதா என்று வணங்கப்படுகிறார். சலேத்து மாதாவின் திருநாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.




கரம்பிடித்தவரைக் காப்பாற்றத் துணிந்த தாய்

செப்டம்பர் 18

2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் பாராமதி நகரில் நடந்த, மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில், 60 வயதைத் தாண்டிய, மூத்த குடிமக்களுக்கான பிரிவில், மூன்று கி.மீ. தூரம் ஓடி, முதல் பரிசை தட்டிச் சென்றார், 66 வயது நிரம்பிய லதா பாக்வான் கரே (Lata Bhagwan Kare). அவர் வயதை ஒட்டிய பலரும், பந்தயத்தில் ஓடுவதற்குரிய உடைகளை அணிந்திருந்த நிலையில், லதா அவர்கள், காலில் செருப்புகூட அணியாமல், தலையில் முக்காடுடன், மராத்தியப் பாரம்பரிய ஒன்பது முழ பாரம்பரியச் சேலையை உடுத்தியபடி, பந்தயத் தூரத்தை முதலில் கடந்து பரிசுத் தொகையைப் பெற்றார்.

இவர் தன் வாழ்நாளில் வேகமாகக்கூட நடந்ததில்லையாம். அப்படியிருந்தும் வெறும் காலோடு இந்த ஏழைத்தாய் மாரத்தானில் ஓடுவதற்குத் துணிந்ததே, நோயுற்றிருந்த தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். லதா அவர்கள் சொன்னார் : “என் கணவரைக் காப்பாற்ற, இதற்குமேல், எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று. புல்டானா மாவட்டத்தில் பிம்ப்லி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. இவரும் இவரது கணவரும் கடினமாக உழைத்து, தங்களின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். மகள்களின் திருமணங்களுக்குப் பின், இத்தம்பதியர், வயல்களில் தினமும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

ஒருநாள் லதாவின் கணவர் கடுமையாய் நோயால் பாதிக்கப்பட்டார். கையில் பணமில்லை. தனது கிராமத்திற்கு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்றார் லதா. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக, பாராமதிக்குப் போகச் சொன்னார்கள். தன் கரங்களிலே தன் கணவர் இறப்பதைப் பார்க்க விரும்பாத லதா, கண்ணீருடன் தனக்குத் தெரிந்தவர்களிடம் கெஞ்சி சிறிது பணம் சேர்த்தார். பாராமதியில், மருத்துவர்கள் மேலும் சில பரிசோதனைகள் செய்யச் சொன்னார்கள். அதற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாயக் கூலி வேலை மூலம், தினம், நூறு ரூபாய் சம்பாதிக்கும் இவரிடம், பணம் இல்லை. பணத்திற்கு எங்குச் செல்வது? யாரிடம் கையேந்துவது? கனத்த இதயத்துடன் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த லதா தம்பதியருக்கு, பசி வயிற்றைக் கிள்ளி எடுக்க, சாப்பிடுவதற்கு ஆளுக்கொரு சம்சா பலகாரம் வாங்கினர்.

அது சுற்றப்பட்டிருந்த துண்டு தினத்தாளில் மாரத்தான் பற்றி தடித்த எழுத்துக்களில் வெளியாகியிருந்ததை வாசித்தார் லதா. தனது கணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். இவரின் பரிதாப நிலையைப் பாரத்து, மாரத்தானில் ஓடுவதற்கு நிர்வாகிகள் முதலில் அனுமதிக்கவில்லை. லதா கண்ணீருடன் கெஞ்சி அனுமதி பெற்றார். கணவரின் மீதுள்ள அன்பால் வெறுங்காலோடு ஓடி பரிசுப் பணத்தையும் பெற்றார் லதா.




மனதை அரித்துவிடும் அமிலமான வெறுப்பு

செப்டம்பர் 16

2008ம் ஆண்டு Laura Waters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."




அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளையா நடந்துக்க

செப்டம்பர் 15

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர். பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின. பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட முற்பட, வாசல் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள். தம்மை பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர், அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார். அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க "என்ன, யாரை பார்க்க வந்தீங்க?"" என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... அந்தச் சிறுமி தயங்கி பேசினாள், "உங்களைத் தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள்.

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி, "அம்மா தான் அனுப்பிச்சாங்ளா? " என்று காமராஜர் கேட்க, அந்த குழந்தைகளோ "இல்லை அய்யா, நாங்களாகத் தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க. அதுலதான் எங்களை படிக்க வைக்கிறாங்க, என்று சொல்ல, அதற்கு மேல் கேட்க முடியாமல் மாடிக்கு சென்ற அவர், ஒரு கவருடன் வந்தார். அதை சிறுமியிடம் கொடுத்து, "இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்", என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர். உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார். "வாங்க வாங்க" என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள், "பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா. அந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்று காமராஜரிடம் அந்த இரசீதை நீட்டினார்கள். காமராஜர் கண் கலங்கி விட்டார்.

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகளை நன்முறையில் வளர்த்துவரும் அத்தாயைக் குறித்து பெருமைப்பட்டார்.

குழந்தைகள் அவரை வணங்கினார்கள். அவரும் குழந்தைகளை வணங்கி, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.




தாயின் ஆழமான விசுவாசம்

செப்டம்பர் 14

பிரபல புற்றுநோய் சிறப்பு மருத்துவரான மாற்கு அவர்கள், தனது அரிய மருத்துவக் கண்டுபிடிப்பிற்காக அறிவிக்கப்பட்டிருந்த விருது ஒன்றைப் பெறுவதற்காக, விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அது புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், பக்கத்து விமான நிலையத்தில் தரை இறங்கியது. வேறு வழியின்றி, வாடகைக்கு, கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் மருத்துவர். அச்சமயத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, புயல் உண்டானது. கனமழை பெய்ததால் அவரால் காரை ஓட்ட இயலவில்லை. இரண்டு மணிநேரம் காரை ஓட்டிய பின்புதான், தான் வழி மாறியதை உணர்ந்தார் அவர். இளைப்பாறுவதற்கு இடம் தேடி, ஒரு வீட்டைக் கண்டு, கதவைத் தட்டினார் அவர். அங்கு ஓர் ஏழைப் பெண் கதவைத் திறந்தார். அப்பெண்ணிடம் தன் நிலையைக் கூறி, அவரது தொலைப்பேசியை பயன்படுத்துவற்காக உதவி கேட்டார் மருத்துவர். அப்பெண்ணோ, தன்னிடம் தொலைப்பேசி இல்லை, வேண்டுமானால் மழை நிற்கும்வரை தன் வீட்டில் இருந்துவிட்டு போகுமாறு கேட்டுக்கொண்டார். பின், மருத்துவருக்கு குடிப்பதற்கு டீயும், பிஸ்கட்டும் கொடுத்துவிட்டு, செபிக்கத் தொடங்கினார். அப்பெண் செபிப்பதைப் பார்த்த மருத்துவர், உனக்கு கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அப்பெண், “தொட்டிலில் கிடப்பது என் மகன். அவனை ஒரு புதுவிதமான புற்றுநோய் தாக்கியுள்ளது. இதற்கு மருந்து, மருத்துவர் மாற்கு என்பவரிடம் மட்டும்தான் உள்ளதாம். அவரால்தான் சிகிச்சையும் அளிக்க முடியுமாம். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. அவரும் வேறு ஊரில் இருக்கிறார், என் தேவன், என் வேண்டுதலை இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் கைவிடமாட்டார். ஏதாவது ஒரு வழிகாட்டுவார், நான் அவர் மீது உள்ள நம்பிக்கையை கைவிட மாட்டேன்” என்று கூறினார். மருத்துவர் மாற்கு, அதிர்ச்சியில் உறைந்துபோனார். அந்நாளில் தனக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். அந்தக் குழந்தைக்கு இலவசமாக சிகிச்சையும் அளித்தார். அந்தத் தாயின் ஆழமான விசுவாசத்தைக் கண்டு வியந்தார்.

இது ஓர் உண்மைச் சம்பவம்.




தலை சாய்க்க இடம் தா!

செப்டம்பர் 13

அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள், அவன் தாய் அவனிடம் கேட்டார், ‘மகனே, உன் உடம்பில் முக்கியமான உறுப்பு என்று எதைக் கருதுகிறாய்?’ என்று. அவன் சொன்னான், ‘அம்மா, அது என் காதுதான். ஏனென்றால், அதன் வழியாகத்தானே நீங்கள் பேசுவதை நான் கேட்க முடிகிறது’ என்று. ‘அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது’, என்று கூறிவிட்டு விடை சொல்லாமலேயே மௌனம் காத்தார் அத்தாய். ஓர் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே கேள்வி அவனிடம் கேட்கப்பட்டது. ‘கண்தான் முக்கியம்’, என்றான் அவன். தவறு என்று கூறிய தாய், ‘விடை தேடிக்கொண்டேயிரு’ எனக் கூறி அமைதியானார். அவனுக்கு 11 வயதிருக்கும்போது அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. 'நாக்கு’ எனக் கூறி, ‘இது இல்லையென்றால் உங்களுடன் பேச முடியாதே’ என்றான் மகன். ‘அதைவிடவும் உயர்ந்தது ஒன்றுண்டு’, எனக் கூறிய தாய் மௌனமானார். 15 வயதில் அதே கேள்வி கேட்கப்பட்டபோது, ‘வாழ்வதற்கு உதவும் மூச்சுக்காற்றை இழுக்கும் மூக்கா, இரத்தத்தை அனுப்பும் இதயமா, அல்லது மூளையா’ என இவனே தாயைப் பார்த்து கேள்வியைக் கேட்டு உண்மையை அறிய விரும்பினான். 'இவைகளும் முக்கியம்தான், ஆனால், இவைகளைவிட முக்கியமான ஒன்று உள்ளது’ என்று கூறினார் தாய். அவனின் 20ம் வயதில் அவன் தாத்தா காலமானார். அவரின் உடலருகே கண்ணீரோடு நின்ற தாய், அவனை நோக்கி வந்தார். அவன் அருகே வந்து மெதுவாக, ‘மகனே, இப்போதாவது தெரிகிறதா உடலின் முக்கிய உறுப்பு எதுவென்று’, எனக் கேட்டார். மகனுக்கோ அந்த துக்கத்திலும் ஆச்சரியமாக இருந்தது. இந்த துக்க நேரத்தில் இப்படி ஒரு கேள்வியா, என்று. தாயே பதிலைக் கூறினார். 'மகனே, ஒவ்வொருவருக்கும், தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், சாய்ந்து அழவும் ஒரு தோள் வேண்டும். ஒரு தாயின், தந்தையின், சகோதரனின், சகோதரியின், தோழனின் உறவினர்களின் துயர்களை ஏற்றுக்கொண்டு, தலைசாய்த்து அழ உன் தோள்களில் இடம்கொடுக்க முடியும். உனக்கும் பல நேரங்களில் அழ ஒரு தோள் தேவைப்படும். தோள் கொடுப்பான் தோழன் என நீ கேள்விப்பட்டதில்லையா?. எல்லா உறுப்புக்களுமே சுயநலத்திற்காகப் பயன்பட, தோள்தான் பிறர் தலை சாய்க்க உதவுவதாக உள்ளது. ஆகவே, அதுதான் என்னைப் பொறுத்தவரையில் உயர்ந்த உறுப்பு’, என்ற தாய், அவன் தோள்களில் சாய்ந்து அழுதார்.

ஆம். மரணத்துயர்களை எவராலும் குணப்படுத்த முடியாதுதான்,

அதே வேளை, அன்பின் நினைவுகளை எவராலும் திருடவும் முடியாது.




மனதை அரித்துவிடும் அமிலமான வெறுப்பு

செப்டம்பர் 12

2008ம் ஆண்டு Laura Waters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."




அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளையா நடந்துக்க

செப்டம்பர் 15

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர். பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின. பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட முற்பட, வாசல் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள். தம்மை பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர், அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார். அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க "என்ன, யாரை பார்க்க வந்தீங்க?"" என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... அந்தச் சிறுமி தயங்கி பேசினாள், "உங்களைத் தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள்.

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி, "அம்மா தான் அனுப்பிச்சாங்ளா? " என்று காமராஜர் கேட்க, அந்த குழந்தைகளோ "இல்லை அய்யா, நாங்களாகத் தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க. அதுலதான் எங்களை படிக்க வைக்கிறாங்க, என்று சொல்ல, அதற்கு மேல் கேட்க முடியாமல் மாடிக்கு சென்ற அவர், ஒரு கவருடன் வந்தார். அதை சிறுமியிடம் கொடுத்து, "இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்", என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர். உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார். "வாங்க வாங்க" என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள், "பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா. அந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்று காமராஜரிடம் அந்த இரசீதை நீட்டினார்கள். காமராஜர் கண் கலங்கி விட்டார்.

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகளை நன்முறையில் வளர்த்துவரும் அத்தாயைக் குறித்து பெருமைப்பட்டார்.

குழந்தைகள் அவரை வணங்கினார்கள். அவரும் குழந்தைகளை வணங்கி, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.




தாயின் ஆழமான விசுவாசம்

செப்டம்பர் 14

பிரபல புற்றுநோய் சிறப்பு மருத்துவரான மாற்கு அவர்கள், தனது அரிய மருத்துவக் கண்டுபிடிப்பிற்காக அறிவிக்கப்பட்டிருந்த விருது ஒன்றைப் பெறுவதற்காக, விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அது புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், பக்கத்து விமான நிலையத்தில் தரை இறங்கியது. வேறு வழியின்றி, வாடகைக்கு, கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் மருத்துவர். அச்சமயத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, புயல் உண்டானது. கனமழை பெய்ததால் அவரால் காரை ஓட்ட இயலவில்லை. இரண்டு மணிநேரம் காரை ஓட்டிய பின்புதான், தான் வழி மாறியதை உணர்ந்தார் அவர். இளைப்பாறுவதற்கு இடம் தேடி, ஒரு வீட்டைக் கண்டு, கதவைத் தட்டினார் அவர். அங்கு ஓர் ஏழைப் பெண் கதவைத் திறந்தார். அப்பெண்ணிடம் தன் நிலையைக் கூறி, அவரது தொலைப்பேசியை பயன்படுத்துவற்காக உதவி கேட்டார் மருத்துவர். அப்பெண்ணோ, தன்னிடம் தொலைப்பேசி இல்லை, வேண்டுமானால் மழை நிற்கும்வரை தன் வீட்டில் இருந்துவிட்டு போகுமாறு கேட்டுக்கொண்டார். பின், மருத்துவருக்கு குடிப்பதற்கு டீயும், பிஸ்கட்டும் கொடுத்துவிட்டு, செபிக்கத் தொடங்கினார். அப்பெண் செபிப்பதைப் பார்த்த மருத்துவர், உனக்கு கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அப்பெண், “தொட்டிலில் கிடப்பது என் மகன். அவனை ஒரு புதுவிதமான புற்றுநோய் தாக்கியுள்ளது. இதற்கு மருந்து, மருத்துவர் மாற்கு என்பவரிடம் மட்டும்தான் உள்ளதாம். அவரால்தான் சிகிச்சையும் அளிக்க முடியுமாம். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. அவரும் வேறு ஊரில் இருக்கிறார், என் தேவன், என் வேண்டுதலை இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் கைவிடமாட்டார். ஏதாவது ஒரு வழிகாட்டுவார், நான் அவர் மீது உள்ள நம்பிக்கையை கைவிட மாட்டேன்” என்று கூறினார். மருத்துவர் மாற்கு, அதிர்ச்சியில் உறைந்துபோனார். அந்நாளில் தனக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். அந்தக் குழந்தைக்கு இலவசமாக சிகிச்சையும் அளித்தார். அந்தத் தாயின் ஆழமான விசுவாசத்தைக் கண்டு வியந்தார்.

இது ஓர் உண்மைச் சம்பவம்.




தலை சாய்க்க இடம் தா!

செப்டம்பர் 13

அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள், அவன் தாய் அவனிடம் கேட்டார், ‘மகனே, உன் உடம்பில் முக்கியமான உறுப்பு என்று எதைக் கருதுகிறாய்?’ என்று. அவன் சொன்னான், ‘அம்மா, அது என் காதுதான். ஏனென்றால், அதன் வழியாகத்தானே நீங்கள் பேசுவதை நான் கேட்க முடிகிறது’ என்று. ‘அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது’, என்று கூறிவிட்டு விடை சொல்லாமலேயே மௌனம் காத்தார் அத்தாய். ஓர் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே கேள்வி அவனிடம் கேட்கப்பட்டது. ‘கண்தான் முக்கியம்’, என்றான் அவன். தவறு என்று கூறிய தாய், ‘விடை தேடிக்கொண்டேயிரு’ எனக் கூறி அமைதியானார். அவனுக்கு 11 வயதிருக்கும்போது அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. 'நாக்கு’ எனக் கூறி, ‘இது இல்லையென்றால் உங்களுடன் பேச முடியாதே’ என்றான் மகன். ‘அதைவிடவும் உயர்ந்தது ஒன்றுண்டு’, எனக் கூறிய தாய் மௌனமானார். 15 வயதில் அதே கேள்வி கேட்கப்பட்டபோது, ‘வாழ்வதற்கு உதவும் மூச்சுக்காற்றை இழுக்கும் மூக்கா, இரத்தத்தை அனுப்பும் இதயமா, அல்லது மூளையா’ என இவனே தாயைப் பார்த்து கேள்வியைக் கேட்டு உண்மையை அறிய விரும்பினான். 'இவைகளும் முக்கியம்தான், ஆனால், இவைகளைவிட முக்கியமான ஒன்று உள்ளது’ என்று கூறினார் தாய்.

அவனின் 20ம் வயதில் அவன் தாத்தா காலமானார். அவரின் உடலருகே கண்ணீரோடு நின்ற தாய், அவனை நோக்கி வந்தார். அவன் அருகே வந்து மெதுவாக, ‘மகனே, இப்போதாவது தெரிகிறதா உடலின் முக்கிய உறுப்பு எதுவென்று’, எனக் கேட்டார். மகனுக்கோ அந்த துக்கத்திலும் ஆச்சரியமாக இருந்தது. இந்த துக்க நேரத்தில் இப்படி ஒரு கேள்வியா, என்று. தாயே பதிலைக் கூறினார். 'மகனே, ஒவ்வொருவருக்கும், தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், சாய்ந்து அழவும் ஒரு தோள் வேண்டும். ஒரு தாயின், தந்தையின், சகோதரனின், சகோதரியின், தோழனின் உறவினர்களின் துயர்களை ஏற்றுக்கொண்டு, தலைசாய்த்து அழ உன் தோள்களில் இடம்கொடுக்க முடியும். உனக்கும் பல நேரங்களில் அழ ஒரு தோள் தேவைப்படும். தோள் கொடுப்பான் தோழன் என நீ கேள்விப்பட்டதில்லையா?. எல்லா உறுப்புக்களுமே சுயநலத்திற்காகப் பயன்பட, தோள்தான் பிறர் தலை சாய்க்க உதவுவதாக உள்ளது. ஆகவே, அதுதான் என்னைப் பொறுத்தவரையில் உயர்ந்த உறுப்பு’, என்ற தாய், அவன் தோள்களில் சாய்ந்து அழுதார்.

ஆம். மரணத்துயர்களை எவராலும் குணப்படுத்த முடியாதுதான்,

அதேவேளை, அன்பின் நினைவுகளை எவராலும் திருடவும் முடியாது.




'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'

செப்டம்பர் 12

செப்டம்பர் 11,2017 இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, வத்திக்கானுக்குத் திரும்பினார். பல ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த அந்நாட்டினருக்கு, நம்பிக்கை தரும் வகையில் அமைந்த திருத்தந்தையின் பயணத்திற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இதே செப்டம்பர் 11, மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த நினைவில் ஆழப்பதிந்த ஒரு வேதனை நாளாகவும் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரிலிருந்த உலக வர்த்தகக் கோபுரங்கள் மீது, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, இரு விமானங்கள் மோதியதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சி, உலகெங்கும், ஊடகங்கள் வழியே, மீண்டும், மீண்டும் காட்டப்பட்டது.

இந்த நிகழ்வும், இதைத்தொடர்ந்து உலகின் முதல்தர நாடுகள் சில, சக்தியற்ற சில நாடுகள் மீது மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களும், சிறுவர், சிறுமியரின் உள்ளங்களில் விடைதெரியாத கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்.

இளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக, டெக்லான் கால்ப்ரெய்த் (Declan Galbraith) என்ற 10 வயது சிறுவன், 2002ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அழகிய பாடலின் தலைப்பு - 'Tell Me Why' அதாவது, 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'. அக்கறையற்ற இவ்வுலகைப்பற்றி கூறும் அப்பாடலில் கேட்கப்பட்டுள்ள ஒரு சில கேள்விகள், இதோ:

என் கனவில் குழந்தைகள் பாடுகின்றனர்,

ஒவ்வொரு சிறுவன், சிறுமிக்காகவும் பாடப்படும் அன்புப்பாடல் அது.

என் கனவில், வானம் நீல நிறமாக, பூமி பசுமையாக உள்ளது.

சிரிப்பே இவ்வுலகின் மொழியாக உள்ளது.

பிறகு நான் விழித்தெழுகிறேன்.

இவ்வுலகில் தேவைகள் அதிகம் உள்ள மக்களே நிறைந்துள்ளனர்.

இது ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்.

 
நான் ஒரு மனிதன் என்பதை நிரூபிக்க, என்ன செய்யவேண்டும்?

நான் என்பதை நிலைநாட்ட, சண்டையிட வேண்டுமா?

போர்களால் சூழப்பட்ட இவ்வுலகில், என் வாழ்வை வீணாக்க வேண்டுமா?

யாராவது எனக்குப் பதில் சொல்லுங்கள்.
 

அக்கறை கொண்டுள்ளோம் என்று சொல்வது ஏன்?

அதேநேரம், அக்கறையின்றி, நின்று வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

புலிகளை ஓட, ஓட விரட்டுவது ஏன்?

காடுகளை எரிப்பது ஏன்?

கடல்களை இறந்துபோக விடுவது ஏன்?

'டால்பின்கள்' அழுவது ஏன்?

அடுத்தவர் மீது பழியைப் போட்டு, கண்களை மூடி அமைதியடைவது ஏன்?

எங்களுக்குப் புரியவில்லை. யாராவது ஏன் என்று சொல்லுங்கள்.



நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழியே

செப்டம்பர் 7

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான தாய் அமர்ந்து, வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் இளைஞர் ஒருவர், நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த வயதான தாயிடம் "அம்மா, இந்த ஊர் மக்கள் எப்படி? நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் இருப்பாங்க. எப்படா அந்த ஊரைவிட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்கிறேன், இந்த ஊர் எப்படி?" என்று கேட்டார்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உனது ஊரைவிட ரொம்ப மோசம். போட்டி, பொறாமை, சாதிச் சண்டை, கலவரம்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர்ற, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி" என்று கூறி அந்த இளைஞரை வெளியே வழியனுப்பி வைத்தார், அந்த வயதான தாய். சிறிது நேரம் கடந்து, அவ்வழியாக வந்த வேறோர் ஆள், அந்த மூதாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டார்.

"அம்மா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"

" உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? ஏன் இந்த ஊருக்கு வர்ற? " என்றார் அத்தாய்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினார்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி அவரை ஊருக்குள் வரவேற்றார் அத்தாய்.

அந்த அம்மாவின் அருகில் இருந்து, இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், உடனே அவரிடம், "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அனுபவங்கள் பல கண்ட அத்தாய் அவரிடம், "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.




வீண் கவலை எதற்கு?

செப்டம்பர் 6

இரண்டு நாட்களில் பள்ளி திறக்க இருந்ததால், அந்த ஊரின் ஆண்கள் அனைவரும் அந்த பள்ளி வளாகத்தினுள் வளர்ந்திருந்த புதர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். விடுமுறையில் இருந்த குழந்தைகள் சிலர், அங்கு விளையாடிக்கொண்டும் இருந்தனர். புதரிலிருந்து தப்பியோட முயன்ற கொடிய விடமுடைய பாம்பு ஒன்று, சிறுவன் முகிலன் அருகே வந்தது. நெளிந்து வளைந்து ஓடிய அந்த பாம்பினால் வரும் ஆபத்தை அறியாமல், அதனை கைகளால் இறுக்கமாகப் பிடித்தான் அச்சிறுவன். கழுத்தை கைகளுக்குள் இறுக்கப் பிடித்துக்கொண்டு, தன் தந்தையிடம் பெருமையாகக் காண்பித்தான் முகிலன். 'ஐயோ' என அலறிய தந்தை, என்ன செய்வதெனத் தெரியாமல் திணறினார். ஏனெனில், சிறுவனின் கைகளை ஏற்கனவே அந்த பாம்பு, தன் உடலால் சுற்றியிருந்தது. அங்கிருந்தோர் அனைவரும், ஆளுக்கொரு யோசனை கூறினார்கள். பாம்பின் கழுத்தை சிறுவன் சிறிதளவு தளர்த்தினாலும் அது அவனை கொத்திவிடும் நிலையிலிருந்தது. அந்த ஊர் மக்கள் அனவரும் அவனைச் சுற்றி அமர்ந்து, என்ன செய்வதென விவாதித்துக் கொண்டிருந்தனர். சில மணி நேரங்கள் இப்படியே நகர்ந்தது. அப்போது அங்கு வந்த அந்த ஊர் வயதான பாட்டி, அந்த சிறுவனை அணுகி, அந்த பாம்பை கையில் வாங்கி கீழே போட்டார். அது ஏற்கனவே செத்துப்போயிருந்தது. 'சிறுவனின் இறுக்கமான பிடியில் ஒரு மணி நேரத்திலேயே இறந்துபோன இந்த பாம்பை வைத்துக்கொண்டு, சிறுவனையும் பயமுறுத்தி, நீங்களும் பயந்துகொண்டு சில மணி நேரங்களை வீணடித்திருக்கிறீர்கள். இப்படித்தான், உயிரே இல்லாத விடயங்களை மனதிற்குள் போட்டு குழப்பி, மகிழ்ச்சியை சாகடித்துக் கொண்டிருக்கிறீர்கள். வீண் கவலைகளை அகற்றி, மகிழ்ச்சியை பகிருங்கள்' என்று அறிவுரை கூறினார் அந்த பாட்டி.




வானதூதராக வழியனுப்பி வைத்த அன்னை

செப்டம்பர் 5

1979ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட வேளையில், அவர் வழங்கிய ஏற்புரையில், தன் வாழ்வு அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒன்று, இதோ:

"வீதியில் கிடந்த ஒருவரை எங்கள் இல்லத்திற்குக் கொணர்ந்தபோது, அவர் சொன்னதை நான் ஒருநாளும் மறக்கப்போவதில்லை. அவரது உடல் முழுவதும், காயங்களால் நிறைந்து, புழுக்கள் மண்டிக்கிடந்தது. முகம் மட்டுமே புழுக்களின் தாக்குதலிலிருந்து தப்பித்திருந்தது. அந்நிலையில் இருந்த அவர், எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்ததும், 'நான் இதுவரை வீதியில் ஒரு மிருகத்தைவிட கேவலமாகக் கிடந்தேன். இப்போது, ஒரு வானதூதரைப்போல் இறக்கப்போகிறேன்' என்று சொன்னார். சில நாள்கள் சென்று, அவர் இறைவன் இல்லத்தில் வாழச் சென்றார். ஆம், மரணம் என்பது, இறைவனின் இல்லம் செல்வதுதானே!"

மனிதர்கள் என்றுகூட மதிக்க இயலாதவாறு உருக்குலைந்திருந்தோரை, வானதூதர்களாக மாற்றி, வழியனுப்பி வைத்த அன்னை தெரேசா, 20 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி இறைவனின் இல்லம் சென்றார். கொல்கத்தா வீதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, அன்னையின் இல்லத்தில் சில நாள்கள் தங்கியபின், வானதூதர்களாக இறைவனின் இல்லம் சென்றிருந்த பலர், அன்னையை வரவேற்க அங்கு காத்திருந்தனர் என்று உறுதியாகக் கூறலாம்.

அன்னை தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்த செப்டம்பர் 5ம் தேதியை, அகில உலக பிறரன்பு நாள் என ஐ.நா.அவை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.




அன்பின் மறுஉருவம் அன்னை

செப்டம்பர் 4

கொல்கத்தாவில் அன்று, நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், பணவசதி இல்லாததால் ஏற்பட்ட காலதாமதத்தால், அந்தப் பெண் இறக்க நேர்ந்தது. தான் எதிர்கொண்ட இந்தக் கசப்பான அனுபவத்தால், சிறிய மருத்துவமனை ஒன்று ஆரம்பிப்பது என, அன்றே முடிவு செய்தார் புனித அன்னை தெரேசா. இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளைக் கொடுத்து உதவுங்கள், எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்”என்று உதவிக் கேட்டார் அன்னை தெரேசா. அன்னையவர்கள், அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தெரு தெருவாகப் போய் தர்மம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்குமுன் சென்று நின்று தர்மம் கேட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு, பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார் அன்னை தெரேசா. கடைக்காரர் அன்னையைக் கோபமாகப் பார்த்துவிட்டு, அன்னை தெரேசா அவர்கள் நீட்டியிருந்த கையில் எச்சிலைத் துப்பினார். அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!, நீங்கள் கொடுத்தது எனக்கு, என் காப்பகத்தில் தங்கியிருக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார் அன்னை. அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்”என்று கூறிவிட்டு, நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா அவர்கள் நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, தனது பயணத்திற்காகப் பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னைக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அன்னைக்கோ, சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை. அதேநேரம் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டார் அன்னை. அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்து, அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார் அன்னை.

கருவுற்றால் ஒரு குழந்தைக்குத்தான் தாய், கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறார் புனித அன்னை தெரேசா.

செப்டம்பர் 04, இத்திங்கள், அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு. செப்டம்பர் 05, இச்செவ்வாய், புனித அன்னை தெரேசா இறைவனடி சேர்ந்த இருபதாம் ஆண்டு நிறைவு.




"அன்னை... வேண்டும்; ஆசிரியர்... வேண்டாம்"

செப்டம்பர் 2

புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட திருமடல்களில், “Mater et Magistra” என்ற மடல், புகழ்பெற்ற ஒரு மடல். சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra”, அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற அந்த திருமடல். அம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு: "அன்னை... வேண்டும்; ஆசிரியர்... வேண்டாம்" (“Mater sí, Magistra no!”) என்று அமைந்திருந்தது.

அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப்பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்ட வேளைகளில், அன்னையின் அணைப்பை உணர்வதற்கு, நாம், கோவிலையும், திருஅவையின் பணியாளர்களையும் நாடிச் சென்றுள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக, திருஅவை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.




இறந்த குழந்தைக்கு உயிர் தந்த தாய்

செப்டம்பர் 1

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2010ம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆண், பெண் என, இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தனர். இதில், பெண் குழந்தை உயிர்பிழைத்தது; ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கேட் ஓக்கிடம் கூறினர். பிறந்த சில மணிநேரங்களிலேயே தான் பெற்ற குழந்தை இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் குழந்தையை தன்னிடம் கொண்டு வரும்படி கூறினார். கொண்டு வந்த குழந்தையை தனது மார்போடு கட்டியணைத்தபடி, தொடர்ந்து இரண்டு மணிநேரம் தனது உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது குழந்தை மூச்சுவிடுவதை உணர்ந்த அவர், உடனடியாக மருத்துவர்களை அழைத்தார். மருத்துவர் ஒருவர் குழந்தையை சோதித்து பார்த்தபோது, குழந்தை உயிருடன் இருந்தது. இதைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியதுடன், மற்ற மருத்துவர்களையும் அழைத்து, குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததால், சிறிது நேரத்தில் குழந்தை கண்விழித்தது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கேட் ஓக் கூறுகையில், தங்கள் நாட்டில் தாய் கங்காரு குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கும் என்ற கதைகளை தான் சிறு வயதில் கேட்டதாகவும், கங்காரு குட்டி பிறந்தவுடன் தாயின் கதகதப்போ, வாசமோ, இதயத்துடிப்பின் ஓசையோ கேட்கவில்லை என்றால் அது துடிதுடித்து உயிரிழந்துவிடும் என்பது தெரியும் எனவும் கூறினார். ஒரு தாய் கங்காரு எப்படி தனது குட்டியை வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள பைக்குள் அரவணைத்து வைத்திருந்து கதகதப்பு ஏற்றுமோ, அதேபோல் எனது சருமத்தின் கதகதப்பில் பிரிந்துப்போன எனது குழந்தையின் உயிர் மீண்டும் உடலில் குடியேறும் என நான் முழுமையாக நம்பியதாகவும், அது வீண் போகவில்லை, தன் குழந்தை உயிருடன் வந்துவிட்டான் எனவும், நெகிழ்ச்சியுடன் உரைத்தார்.