மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 27

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 27

1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.

2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,

4 “பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் “ என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் “ என்றார்கள்.

5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.

6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல “ என்று சொல்லி,

7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.

8 இதனால்தான் அந்நிலம் “இரத்த நிலம் “ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

9 “இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து

10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் “ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

11 இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா? “ என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர் “ என்று கூறினார்.

12 மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.

13 பின்பு பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? “ என்றான்.

14 அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

15 மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம்.

16 அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.

17 மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா? “ என்று கேட்டான்.

18 ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

19 பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் “ என்று கூறினார்.

20 ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.

21 ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? “ எனக் கேட்டான். அதற்கு அவர்கள் “பரபாவை “ என்றார்கள்.

22 பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? “ என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும் “ என்று பதிலளித்தனர்.

23 அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன? “ என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும் “ என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

24 பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் “ என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.

25 அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் “ என்று பதில் கூறினர்.

26 அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்: இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

27 ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்:

28 அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.

29 அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க! “ என்று சொல்லி ஏளனம் செய்தனர்:

30 அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்:

31 அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

32 அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்: இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.

33 “மண்டையோட்டு இடம் “ என்று பொருள்படும் “கொல்கொதா “வுக்கு வந்தார்கள்:

34 இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

35 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்:

36 பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்:

37 அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு “ என்று எழுதப்பட்டிருந்தது.

38 அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.

39 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.

40 நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா “ என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.

41 அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.

42 அவர்கள், “பிறரை விடுவித்தான்: தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.

43 கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் “ என்றானே! “ என்று கூறினார்கள்.

44 அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.

46 மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி? “ அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? “ என்று உரத்த குரலில் கத்தினார்.

47 அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் “ என்றனர்.

48 உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.

49 மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம் “ என்றார்கள்.

50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது: நிலம் நடுங்கியது: பாறைகள் பிளந்தன.

52 கல்லறைகள் திறந்தன: இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.

53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.

54 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன் “ என்றார்கள்.

55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

57 மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.

58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.

59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,

60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்: அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

61 அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

62 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.

63 அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது “மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் “ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.

64 ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, “இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் “ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் “ என்றனர்.

65 அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் “ என்றார்.

66 அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com