1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4 பேதுரு இயேசுவைப் பார்த்து, “ ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? “ என்றார்.
5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “ என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் “ என்று ஒரு குரல் ஒலித்தது.
6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “ எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் “ என்றார்.
8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது “ என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், “ எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி? “ என்று கேட்டார்கள்.
11 அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ' எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் “ என்றார்.
13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.
14 அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,
15 “ ஐயா, என் மகனுக்கு இரங்கும்: அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.
16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்: அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை “ என்றார்.
17 அதற்கு இயேசு, “ நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் “ என்று கூறினார்.
18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.
19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “ அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? “ என்று கேட்டார்கள்.
20 இயேசு அவர்களைப் பார்த்து, “ உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து “ இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ “ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் "
21 ( “ இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது “) என்றார்.
22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “ மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.
23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்: ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார் “ என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.
24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திரக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “ உங்கள் போதகர் இரண்டு திரக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.
25 அவர், “ஆம், செலுத்துகிறார் “ என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “ சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா? “ என்று கேட்டார்.
26 “ மற்றவரிடமிருந்துதான் “ என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “ அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.
27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு: முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து “ என்றார்.