மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 15

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 15

1 அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,

2 “ “உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே “ என்றனர்.

3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?

4 கடவுள், “ உன் தந்தையையும் தாயையும் மதித்து நட “ என்றும், “ தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் “ என்றும் உரைத்திருக்கிறார்.

5 ஆனால் நீங்கள், “ எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று “ என்றால்,

6 அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.

7 வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.

8 அவர், “ இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.

9 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் “ என்கிறார் “ என்றார்.

10 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, “ நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.

11 வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது: மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்.

12 பின்பு சீடர் அவரை அணுகி, “ பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா? “ என்றனர்.

13 இயேசு மறுமொழியாக, “ என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர் “ என்றார்.

15 அதற்குப் பேதுரு அவரை நோக்கி, “நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும் “ என்று கேட்டார்.

16 இயேசு அவரிடம், “ உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?

17 வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா?

18 வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.

19 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.

20 இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது “ என்றார்.

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்: என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் “ எனக் கதறினார்.

23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் “ என வேண்டினர்.

24 அவரோ மறுமொழியாக, “ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் “ என்றார்.

25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும் “ என்றார்.

26 அவர் மறுமொழியாக , “ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல “ என்றார்.

27 உடனே அப்பெண், “ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே “ என்றார்.

28 இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் “ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.

30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.

31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

32 இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை: இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை: அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம் “ என்று கூறினார்.

33 அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்? “ என்று கேட்டார்கள்.

34 இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன? “ என்று கேட்டார். அவர்கள், “ ஏழு அப்பங்கள் உள்ளன: சில மீன்களும் இருக்கின்றன “ என்றார்கள்.

35 தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

36 பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

37 அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

38 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.

39 பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு எல்லைக்குள் சென்றார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com