மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 20

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 20

1 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

4 அவர்களிடம், “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்: நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் “ என்றார்.

5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், “நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? “ என்று கேட்டார்.

7 அவர்கள் அவரைப் பார்த்து, “ எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை “ என்றார்கள். அவர் அவர்களிடம், “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் “ என்றார்.

8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், “வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் “ என்றார்.

9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

12 “கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே “ என்றார்கள்.

13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, “தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? “ என்றார்.

16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் “ என்று இயேசு கூறினார்.

17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,

18 “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார் “ என்று அவர்களிடம் கூறினார்.

20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.

21 “உமக்கு என்ன வேண்டும்? “ என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும் “ என்று வேண்டினார்.

22 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? “ என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும் “ என்றார்கள்.

23 அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல: மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும் “ என்றார்.

24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.

25 இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்: இதை நீங்கள் அறிவீர்கள்.

26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் “ என்று கூறினார்.

29 அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

30 அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும் “ என்று கத்தினர்.

31 மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால் அவர்கள், “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும் “ என்று உரக்கக் கத்தினார்கள்.

32 இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? “ என்று கேட்டார்.

33 அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும் “ என்றார்கள்.

34 இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com