1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:
2 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.
3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், “நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் “ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்: வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.
6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலைர செய்தார்கள்.
7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
8 பின்னர் தம் பணியாளர்களிடம், “திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் “ என்றார்.
10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
12 அரசர் அவனைப் பார்த்து, “தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? “ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.
13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், “அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் “ என்றார்.
14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். “
15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்: எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்: ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் “ என்று அவர்கள் கேட்டார்கள்.
18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் “ என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
20 இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? “ என்று கேட்டார்.
21 அவர்கள், “சீசருடையவை “ என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் “ என்று அவர்களிடம் கூறினார்.
22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,
24 “போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார்.
25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.
26 அப்படியே இரண்டாம் மூன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.
27 அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்னும் இறந்தார்.
28 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்? அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே “ என்று கேட்டனர்.
29 இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு மறைநூலும் தெரியாது: கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
30 ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை: அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
31 இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா?
32 “ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே “ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல: மாறாக வாழ்வோரின் கடவுள் “ என்று கூறினார்.
33 அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.
34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,
36 “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? “ என்று கேட்டார்.
37 அவர், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. “
38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
39 “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக “ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன “ என்று பதிலளித்தார்.
41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.
42 அவர், “மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்? “ என்று கேட்டார். அவர்கள், “தாவீதின் மகன் “ என்று பதிலளித்தார்கள்.
43 இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?
44 “ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்! “ என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா!
45 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி? “ என்று கேட்டார்.
46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.