மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 1

1 ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு: ஈசாக்கின் மகன் யாக்கோப்பு: யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்: பெரேட்சின் மகன் எட்சரோன்: எட்சரோனின் மகன் இராம்.

4 இராமின் மகன் அம்மினதாபு: அம்மினதாபின் மகன் நகசோன்: நகசோனின் மகன் சல்மோன்.

5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு: போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது: ஓபெதின் மகன் ஈசாய்.

6 ஈசாயின் மகன் தாவீது அரசர்: தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

7 சாலமோனின் மகன் ரெகபயாம்: ரெகபயாமின் மகன் அபியாம்: அபியாமின் மகன் ஆசா.

8 ஆசாவின் மகன் யோசபாத்து: யோசபாத்தின் மகன் யோராம்: யோராமின் மகன் உசியா.

9 உசியாவின் மகன் யோத்தாம்: யோத்தாமின் மகன் ஆகாசு: ஆகாசின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே: மனாசேயின் மகன் ஆமொன்: ஆமொனின் மகன் யோசியா.

11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்: செயல்தியேலின் மகன் செருபாபேல்.

13 செருபாபேலின் மகன் அபியூது: அபியூதின் மகன் எலியாக்கிம்: எலியாக்கிமின் மகன் அசோர்.

14 அசோரின் மகன் சாதோக்கு: சாதோக்கின் மகன் ஆக்கிம்: ஆக்கிமின் மகன் எலியூது.

15 எலியூதின் மகன் எலயாசர்: எலயாசரின் மகன் மாத்தான்: மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு: தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு: பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ““யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ““ என்றார்.

22 “ இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

23 இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்முடன் இருக்கிறார் “ என்பது பொருள்.

24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com