1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,
2 “ “ மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது “ என்று பறைசாற்றி வந்தார்.
3 இவரைக் குறித்தே, “ பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் “ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.
4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்: தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
5 எருசலேமிலும் யtதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.
6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “ விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?
8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
9 “ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை “ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.
10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.
11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்: தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்: ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் “ என்றார்.
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
14 யோவான், “ நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்: நீரா என்னிடம் வருகிறீர்? “ என்று கூறித் தடுத்தார்.
15 இயேசு, “ இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை “ எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.
17 அப்பொழுது, “ என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் “ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.