மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 18

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 18

1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “ விண்ணரசில் மிகப் பெரியவர் யார்? “ என்று கேட்டார்கள்.

2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,

3 பின்வருமாறு கூறினார்: “ நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

6 “ என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.

7 ஐயோ! பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு! பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு!

8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

10 “ இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்: கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 (ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார், “)

12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

15 “ உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும்.

16 இல்லையென்றால் “ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் “ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.

17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்: மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.

20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். “

21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, “ ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.

22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல: எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.

24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.

25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, “ என்னைப் பொறுத்தருள்க: எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் “ என்றான்.

27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, “ நீ பட்ட கடனைத் திருப்பித் தா “ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.

29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க: நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் “ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “ பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.

34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். “

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com