இசைப்பணி -தமிழக இயேசு சபையாளர்களின் இசையருவி
- அருள்பணி. புகழ் சே.ச.
இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாக நாம் கொண்டாடுகிறோம். முத்தமிழின் ஒவ்வொரு (0) துறையிலும் இயேசு சபையாளர்களின் பணி அளப்பரிது. தமிழுக்கு உரைநடை தந்தது முதல் தமிழில் முதல் அச்சகம் நிறுவியது, எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தது, முதல் தமிழ் அகராதி படைத்தது மற்றும் அறிவாலயா, கலைக்கண் போன்ற இயக்கங்கள் வாயிலாக சமூக அக்கறை கொண்ட நாடகங்கள் வரை இயேசு சபையினர் எண்ணிலடங்காத் தொண்டாற்றியுள்ளனர்.
திருவழிபாடு கடவுளுக்கும் மனிதருக்கும் குருவுக்குமிடையே நிகழக்கூடிய முப்பரிணாமத் தொடர்பு, நற்கருணை வழிபாடு, மக்களுக்குப் புரியாத இலத்தீன் மொழியில் இருந்தது. இதனால், திருப்பலி நேரங்களில் மக்கள் செபமாலை சொல்லுவதும் மற்ற செபங்களைச் சொல்லுவதுமாக இருந்தனர். இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு அவரவர் தாய்மொழியில் திருப்பலியில் பங்கேற்பதற்கும் இறைவார்த்தையை அறிந்து அனுபவிப்பதற்கும் வாய்ப்பு அமைந்தது. தொடக்க கால கட்டத்தில் இலத்தீன் இசைக்குத் தமிழ் வார்த்தைகளை வார்த்து பாடல் அமைத்தனர். படிப்படியாகத் தமிழிசையின் சாரமேற்றி, பக்திப்பற்றுதல் குன்றாது தமது இறையனுபவத்தையும் இணைத்து பாடல் அமைத்தனர். "பூசை பலிபோல் பாக்ய செல்வம் புவியில் இல்லையே புவிநிரம்ப பொன் தந்தாலும் அதற்கு ஈடில்லையே” என்று திருப்பலியின் மேன்மையை அதன் உன்னதத்தை அருள்பணி ஜி. அம்புரோஸ் சே.ச. அவர்களின் பாடல் உணர்த்துகின்றது. இப்பேர்ப்பட்ட திருப்பலியில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்க திருப்பலிப் பாடல்கள் பெரிதும் உதவுகின்றன.
1973-76 ஆண்டுகளில் புனித பவுல் குருமடத்தின் அதிபராக அருள்பணி மைக்கேல் அமலதாஸ் இருக்கையில் இசையருவி என்ற அமைப்பை நிறுவி, அதன் வழியாக இசையார்வமிக்க இளம் குருமாணவர்களை ஊக்கப்படுத்தி, முறையாக இசையில் அவர்களைப் பயிற்றுவித்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தவக்காலம் போன்ற காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை, பஜனைப் பாடல்களை, திருப்பலிப் பாடல்களைக் குருமாணவர்கள் பங்கு மக்களிடையே எடுத்துச் சென்று பிரபலப்படுத்தினார்கள். திருச்சபையின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச்செல்லும் சாதனங்களாக இப்பாடல்கள் விளங்கின.
அருள்பணி மைக்கேல் அமலதாசும் அருள்பணி ஆனந்த் அமலதாசும் இசையில் ஆர்வமிக்க குரு மாணவர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குப் பயிற்சிப் பாசறை நடத்தி அதன் விளைவாக முப்பது நாற்பது பாடல்களை இயற்றினர். அதிலிருந்து தலைச்சிறந்த பாடல்களைத் தொகுத்து “இசையருவி” என்ற பெயரில் இசைத்தட்டுகளாக வெளியிட்டனர். இசைக் குறிப்புகளைக் காலாண்டிற்கு ஒரு முறை இதழாக வெளியிட்டனர். இதன் விளைவாக, பாடல்களின் இசை பிழையின்றி மக்களைச் சென்றடைந்தது. தமிழக மக்கள் நடுவில் இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. திருப்பலி பாடல்களை மட்டுமல்லாது, சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும் இயற்றி, மக்களுக்கு ஊக்கம் அளித்தனர்.
ஒவ்வொரு படைப்பாளியும் பல நூறு பாடல்களை இயற்றியிருப்பினும், என்றும் பசுமையாக, நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு சில பிரபலமான பாடல்களே கீழ்க்காணும் பட்டியலில் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பாடல்களும் படைத்தவரின் ஆன்மிக அனுபவம். ஒவ்வொன்றும் ஒரு நம்பிக்கை பகிர்வு: இவையே புதிய திருப்பாடல்கள். நாமும் விண்ணகத் தூதர்களோடு இணைந்து இறைப்புகழ் பாடுவோம்.