கி.பி. 1616-ல் மதுரை மிஷன் திருச்சிக்கு வருகை புரிந்தது. கத்தோலிக்க விசுவாசமும் உள்நுழையவசதிவாய்ப்பு ஏற்பட்டது. மதுரை மன்னர் வரிசையில் வந்த மதுரை நாயக்கரின் தார்மீக ஆதரவு காலப்போக்கில் இயேசு சபை வேத போதகர்களுக்கு கிடைத்தது. மன்னரின் சமஸ்தான இராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் ஏற்கனவே இராபர்ட் - தே. நோபிலி என்ற தத்துவப் போதகரால் மதமாற்றம் அடைந்திருந்தனர். இவர்கள் மூலம் திருச்சியில் கிறிஸ்தவம் பரவிட வழி ஏற்பட்டது. முன்னதாக, தூய பிரான்சிஸ் சவேரியார் வழியாகவும் கிறிஸ்தவம் பரவியிருந்தது.
மதுரை மறை மண்டலத்தில் திருச்சி நகர் ஒரு துணை மறைபரப்புமையமாக (Sub Mission Station) இருந்து வந்தது. பாலக்கரை, தர்மநாதபுரம் (இருதயபுரம்), வரகனேரி ஆகிய மூன்று பகுதிகளிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. இவர்கள் உலக மீட்பர் கோயில் கட்டுவதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த மேலப்புதூர், தூய மரியன்னைப் பேராலயத்திற்கே செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செல்லும் வழியும் புல், புதர் செறிந்ததாகவும், -போக்குவரத்து வசதியின்றியும் இருந்தது. மேலும், பிரிவினைச் சபையினரால் விசவாசத்திற்கு எதிரான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.
தற்போது பழைய கோயில் என்று அழைக்கப்படும் தூய வியாகுல அன்னை கோயில் அருகிலிருந்தும், அது பதுர்வாத குருக்களின் (போர்த்துக்கீசிய குருக்கள்) வசமிருந்ததால் அங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. இவற்றின் மத்தியிலும் மக்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். எனவே, பாலக்கரை பகுதியில் புதியதோர் கோயில் கட்ட வேண்டியது இன்றியமையாததாயிற்று.
அக்காலத்தில் திருச்சி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியில் திவான் கஞ்சமலை முதலியாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அருட்தந்தை கோரிஸ் அவர்கள் திவான் கஞ்சமலை முதலியாருக்கு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக, திவான் கஞ்சமலை முதலியார் கொடுத்த இடம்தான் உலகமீட்பர் ஆலயத்தின் இடமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமாகும்.
கி.பி. 1880 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மோன்சிஞ்ஞோர் கானோஸ் அவர்களால் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பெற்றது. 1881-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி புதிய எழில்மிகு கோயில் சிறப்பான முறையில் வலுவானதாகவும், ஓவியம் போன்ற கலைகள் நிறைந்து காண்போர் வியக்கும் வண்ணம் கம்பீரமாகக் கட்டிமுடிக்கப்பட்டு, பாண்டிச்சேரி பேராயர் லூயினென் அருள் அவர்களால் அருள்பொழிவு செய்யப்பட்டது. 18 மாதங்களில் இந்த ஆலயம் கட்டப்பட்டது சிறப்பான ஒன்றாகும்.
இவ்வாலயம் எட்டுப்பட்டை அமைப்புடன் ஆலய கோபுரம் ஐந்து அடுக்குகளையுடையதாய் 128 அடி உயரமும், 192 அடி நீளம் 55 அடி அகலமும் கொண்டு திருச்சி நகருக்கே ஓர் அடையாளச் சின்னமாகவும், இரவு நேரங்களில் கோபுர உச்சியிலிருந்து உமிழும் ஒளியானது நகருக்கே கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளது. காட்சித் தோற்றத்தில் சிலுவை வடிவாய், பிரான்சு நாட்டின் "கோதிக்" பாணியில் அதை செங்கல்லாலேயே மத்திய கால கட்டடக் கலை நுணுக்கத்துடன் கலையழகு மிளிர இயேசு சபையினரால் கட்டப்பட்டுள்ளது.
05-12-2004-ல் திருச்சி மேதகு அந்தோணி டிவோட்டா அவர்கள் திருச்சி மறை மாவட்ட சகாயமாதா திருத்தலமாக உயர்த்தினார். 12-10-2006-ல் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் தமிழகத்தின் 5-வது பெருங்கோவிலாக (பசிலிக்கா)ஈ திருத்தலப் பேராலயமாக) உயர்த்தினார். இந்த மகிழ்வான செய்தியை 2701-2007-ல் அன்றைய திருத்தந்தையின் தூதர், இன்றைய சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேன்மைமிகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு அர்ப்பணமாகும் திருநிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்திலுள்ள இதர பசிலிக்காக்கள்:-
சாந்தோம் பெருங்கோவில் (சென்னை)
தூய ஆரோக்கிய அன்னை பெருங்கோவில் (வேளாங்கண்ணி)
பனிமய மாதா பெருங்கோவில் (தூத்துக்குடி)
பூண்டி மாதா பெருங்கோவில் (பூண்டி)
தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)