கிறிஸ்துவில் பிரியமானவர்களே!
கிறிஸ்து பிறப்பு என்றாலே நம் உள்ளத்தில் ஓர் ஆனந்தம். நம் கண்களில் மின்னிடும் ஓர் அற்புத ஒளி, காரணம் நாம் எண்ணுவதும், நாம் எண்ணாததும் நிகழ்ந்தேறும். புத்தாடை, இனிப்பு, பரிசுப் பொருட்கள் நம் கரங்களைத் தழுவி செல்லும். நம் திருத்தந்தை இந்த நாளை அருளின் நாள், அமைதியின் நாள், அன்பின் நாள் என்று அழகாய்ச் சொல்கிறார். ஏனென்றால் கடவுளின் அருள் மனித உருவில் இம்மண்ணில் வந்த நாள், அமைதியின் அரசர் ஏழைக் குடிசையில் ஏழைக்காய் உதித்த நாள், இறைஅன்பைப் பகிர இறைமகன் இம்மண்ணில் மலர்ந்த நாள்.
ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு நமக்குப் பெருமகிழ்ச்சியை அள்ளித்தந்தது ஆனால் சில ஆண்டுகளாய் இந்த நாள் சில சங்கடமான சூழலில் நம்மைச் சந்திக்கிறது. வெறும் மனிதர்களாகிய நாம் இந்தச் சங்கடமான சூழலில் இத்தகைய கொண்டாட்டம் தேவையா? ஏன்று நம்மைக் கேள்விக் கேட்கத் தூண்டுகிறது. இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.
"ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் வருகின்றான்" என்று மகிழ்வோடு பாடும் நாம் உணர வேண்டியது யாதெனில், மன்னவன் இயேசு நம் இன்பத்தில் மட்டுமல்ல மாறாக நம் துன்பத்திலும் நம்முடன் இருக்கின்றார் என்பதைத் தான். அவர் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிவது இல்லை. ஆதலால் தான் அந்தச் சுனாமி நம்மைச் சூறையாடியபோதும், வெள்ளம் கரைப் புரண்டு நம் உறைவிடம் புகுந்த போதும், தானே, ஓகி, வர்தா, கஜா எனப் பல பெயரில் பெருங்காற்றுக் காட்டுமரங்களைக் கூரைகளையும் பிடுங்கிச் சென்றபோதும் காக்கும் இறைவன் நம்மோடு இருந்தார். உடைமைகளை இழந்த நாம் உயிரோடு உலகை உற்றுப் பார்த்துப் பெரும்மூச்சு விட்டு நிற்கிறோம். கடவுளின் அளாதீத அன்பு எந்த இயற்கைச் சீற்றத்தையும் நம்மை நெருங்கவிடவில்லை. கடவுளின் அன்பு மனித அறிவால் உய்த்துணர முடியாது. இங்கு நாம் விசுவசிக்க வேண்டியதெல்லாம் கடவுளின் அருள் இன்றும் நம்மோடு இருக்கிறது. அமைதியற்றச் சூழலிலும் அமைதியின் அரசர் நமக்கு அமைதி அருள்வார். எல்லாவற்றையும் இழந்தப் போதும் இயேசுவின் அன்பு நம்மோடு இருக்கும்.
கடல் அலைகள் சுனாமியாய் நம்மைச் சூழ்ந்தாலும்
பெருவெள்ளம் வெறிக்கொண்டு நம்மை வேட்டையாடினாலும்
கடுங்காற்று நம்மை நைய்யப் புடைத்தாலும்
'இருக்கிறவர் நாமே' என்று மோசேயிடம் மொழிந்த இறைவன் இன்றும் நம்மோடு இருக்கிறார் இம்மானுவேலனாய்.
மாட்டுக் கொட்டகையில் மானிடராம் நம் இயேசு பிறந்தார். மானிட மகனுக்கு இடம் இல்லாமல் போனது அன்று மானிடரின் உள்ளத்திலும் இல்லத்திலும் எல்லாம் கொடுத்த இறைவனிடம் இல்லை என்றுதான் சொல்கிறது மனித மனம். எல்லாம் நிறைவானவர் கடவுள் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லையென்கிறான் மனிதன். இல்லை.. இல்லை என்று கூறி இருளில் இருக்கிறோம். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். ஆம், நாமும் இன்று இருளிலே நடந்து கொண்டிருக்கிறோம்.
ஆசை, பேராசை என்னும் இருள்,
தன்னலம் தற்பெருமை என்னும் இருள்,
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் இருள்,
ஏழைப் பணக்காரன் என்னும் இருள்.
அக இருள் அகற்றி அன்பர் இயேசுவின் அன்பு ஒளியை காண்போம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழா,புதிய கிறிஸ்தவர்களின் பிறப்பு விழா, புதிய கிறிஸ்தவர்களின் பிறப்புக்கு வழியாகட்டும்.
எல்லாவற்றையும் இழந்து ஏழையாய் நிற்கும் நாம் நம் உள்ளத்தைத் திறப்போம் நம் உன்னத இயேசு பாலனை நம் இதயக் குடிலில் ஏற்க. வாக்கு மனு உருவானவர் நம்மில் குடிக்கொள்ளட்டும். நம் விசுவாச வாழ்வு நம்மில் தலைநிமிர்ந்து நிற்கட்டும். ஏனெனில் கடவுள் நம்மோடு.