merry christmas

அன்புள்ளம்....

டெய்சி மாறன்

என் வீட்டின் கதவை நெருங்கி அழைப்பு மணியை அழுத்தினேன். என் செவிபுலன்கள் கதவு திறக்கும் சத்தத்துக்காக காத்திருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. சில கணங்கள் காத்திருந்துவிட்டு பதற்றத்தோடு மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டென்று திறந்தது.

வெளிப்பட்ட மகள் சோபியாவின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னாச்சிம்மா... என்று கேட்க நினைத்த நாவை அடக்கிக்கொண்டு "அம்மா இன்னும் வரலையா?" உம் என்றேன். இல்லை என்றதோடு முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

முதலில் மனைவி மேரிக்கு போனை போடவேண்டும். ஒரே பிள்ளை என்று சோபியாவுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறாள். இல்லை என்றால் காலையில் அவள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்பதற்காக ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு தலைவிரி கோலமாய் வீட்டுல கிடப்பாளா? நான் மேரிக்கு கால் பண்ணலாமென்று வாசலுக்கு வந்தேன். கேட்டை திறந்து கொண்டு மேரியே உள்ளே வந்தாள்.

நான் கேட்பதற்குள் எல்லாவற்றையும் அவளே கொட்டினாள். "என்னங்க பண்ணுறது.... ஒத்த புள்ளன்னு செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம். இப்ப கவலைப்பட்டு என்ன பண்ணுறது? கிறிஸ்மஸ்க்கு ஒரு வாரம் தான் இருக்கு அவ கேட்ட காசை கொடுத்துடுங்க. அவளுக்கு புடிச்ச ட்ரெஸ்ஸை எடுத்துக்கட்டும்.

எனக்கு இதில் உடன்பாடு இல்லைதான். வேறு வழியும் தெரியவில்லை . மேரியிடம் பணத்தை கொடுத்துட்டு என் அறைக்குள் நுழைந்துக்கொண்டேன். ஆனாலும் பத்தாவது படிக்கும் சோபிக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்க கூடாது என்று என் உள் மனம் புலம்பியது.

அடுத்தநாள் மாலை அலுவலகம் முடிந்து பஸ்ஸில் ஏறி அமரும்போதுதான் கவனித்தேன். முன் இருக்கையில் வேலகாரம்மா பொண்ணு சுமதி, போனில் பேசிகொண்டு அமர்ந்திருப்பதை. பேச்சு சுவாரசத்தில் அவள் என்னை கவனிக்கவில்லை . ஆனால் அவள் பேசியது என் காதில் நன்றாகவே விழுந்தது. அவள் பேசியது என் மகள் சோபியை பற்றிதான். சுமதி பேச்சின் இறுதியில் என் கண்கள் கலங்கவிட்டன.

நேராக வீட்டிற்கு சென்று மகள் சோபியை அழைத்து அணைத்த முத்தமிட்டேன். அவள் ஆச்சரியத்தோடு என்னை ஏறிட்டாள். பஸ்ஸில் சுமதி பேசியதை பற்றி சொன்னேன். “சாரிப்பா...'' என்று தலைகுனிந்தாள்.

''நீ .... சாரி கேட்க கூடாதும்மா, நாங்கதான் உன்கிட்ட கேட்கணும் உன்னை புரிஞ்சிக்காம கோபப்பட்டதுக்கு..? என்றேன்.

மேரிக்கு ஒன்றும் புரியவில்லை. சோபிதான் தன் தாயிக்கு விளக்கம் சொன்னாள்.

"அம்மா..... சுமதி பாவம்மா. அவ கிட்ட ஒரு நல்ல ட்ரெஸ் கூட இல்லை . ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீன்னு என் பிரண்ட் சொன்னா..... அதை சொன்னா நீங்க திட்டுவீங்க.

அதனாலதான் நானே கடைக்கு போய் ரெண்டு வாங்கி அவளுக்கு ஒன்னு கொடுத்துட்டேன். நம்மகிட்ட இரண்டு அங்கிகள் இருந்தா ஒன்ன மத்தவங்களுக்கு கொடுக்கனுன்னு நம்ம ஏசப்பா சொல்லியிருக்கிறார் தெரியுமா? அதன்படி நாம் நடக்க வேண்டாமா?"

"ஆமாம்.. ஆமாம்... ஆனந்த கண்ணீ ரோடு இருவரும் கோரசாக தலையாட்டினோம்.

(நன்றி -விசுவாசக் குரல்)