தன் முன்னால் டீபாயில் கிடந்த பத்திரிக்கையை எடுத்து பிரித்து, மீண்டும் ஒருமுறை படித்தாள் திவ்யா! சற்று முன்பு தான் விழா அழைப்பிதழைக் கையில் பிடித்திருந்தாள் திவ்யா. அவளது நினைவு பழைய நிகழ்ச்சிகளை எண்ணி பின்னோக்கிப் போனது. திவ்யா திவாகர் தம்பதியருக்குத் திருமணம் முடிந்து பத்தாண்டுகள் பிறந்து விட்டது. ஆனால் பிள்ளைப் பாக்கியம் இல்லை. எத்தனையோ பரிசோதனை, வைத்தியங்கள், ஆலயங்கள், நேர்ச்சைகள்! ஆனால் எந்தவிதப் பலனும் . இல்லை. திவ்யா குழந்தைப் பேறில்லாத பெண்ணாக மற்றவர்களால் ஏளனமாய் பார்க்கப்பட்டாள்.
அன்று ஓர்நாள் ஆலயத்தில் அமர்ந்து தனது கவலைகளைச் சொல்லி உருக்கமுடன் மன்றாடிக் கொண்டிருந்தாள் திவ்யா.
அப்பொழுது பின் பெஞ்சில் இருந்து பெரும் முனகலும் வேதனை ஒலியும் கிளம்பியது. திரும்பிப்பார்த்த திவ்யா பேரதிர்ச்சி அடைந்தாள். அங்கே ஓர் பெண் இடுப்பைப் பிடித்தபடி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். திவ்யா மிரண்டு போனாள். என்ன செய்வது? இந்தப் பெண்ணுக்கு பிள்ளை பேற்றுக்கான பேறுகால வலிபோலும் என்று எண்ணி செய்வதறியாது திகைத்தாள். வெளியில் யாரும் ஆட்கள் இல்லை. 'தண்ணீர் தண்ணீர்' என்று முனகினாள் அந்தப்பெண். தன்னிடமிருந்த பாட்டில் தண்ணீரை ஊற்றினாள். முக்கல் முனகலுடன் இருந்த அந்தப் பெண்ணை நோக்கி ஓர் மூதாட்டி ஓடி வந்தாள். அவளுடன் சேர்ந்து வலியால் துடித்த பெண்ணிற்கு உதவினாள் திவ்யா. ஒரே துடிப்பு, வலியில் இருந்த அந்தப் பெண்ணிடமிருந்து ஓர் குழந்தையின் வீல் ஒலி கிளம்பியது. ஆம் அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது. உடனே மற்றவர்கள் ஓடி வர இந்த ஜோதி என்ற பெண் குழந்தையுடன் மருத்துவமனை சென்றாள்.
இப்படிப் பிறந்த குழந்தைக்குத் தான் ஞானஸ்நான விழா! அந்த ஜோதிக்கு உதவிய திவ்யா இன்று கருத்தரித்துள்ளாள். எதிர்பாராத துன்பத்தின் போது துணை நின்ற திவ்யாவும் சில மாதங்களில் தாயாகப் போகிறாள். எல்லாம் இறைவனின் சித்தம்.
''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" லூக் 6:37.