merry christmas

விண்ணிலிருந்து வரும் விடியல்

செலின் ஆரோக்கியராஜ்

கிறிஸ்மஸ் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான்! கிறிஸ்மஸ் தாத்தா தந்ததாகக் கூறிப் பெற்றோரே இரகசியமாகக் கொண்டு வைக்கும் பரிசுகளைப் பிரிப்பதில் தான் அவர்களுக்கு எவ்வளவு ஆனந்தம் !

வாலிபர்களுக்குத் தங்கள் நண்பர்களோடு சுற்றுவது மகிழ்ச்சி!

ஆகும் செலவை நினைத்துப் பெற்றோர்கள் பெருமூச்சு விட்டாலும், பிள்ளைகளின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவது வழக்கம் தானே!

இதைவிட மேலான மகிழ்ச்சி வசதி இல்லாதவர்களும் மகிழ்ச்சியாக இருக்க உதவி செய்வது தான். இதைப் பிற மதத்தினரும்கூடத் தற்போது உணர்ந்துள்ளனர்.

கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்து நம்மிடம் பிறந்து, நம்மோடு என்றும், வாழ்வது தான்.

இவர்களுக்கு தினம் தினம் கிறிஸ்மஸ் தான் !

ஏனெனில் இவர்கள் பிறரின் மகிழ்ச்சிக்காகவும, அவர்களின் நலனுக்காகவும் தங்களையே விட்டுக் கொடுக்கிறவர்கள்.

புரியலையா? புரியும்படி ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

மறதி வியாதியுள்ள வயதானத் தகப்பனை அவரது விதவை மகள் கவனித்து வந்தாள். இது வயதானவர்களுக்கு வரும் சாதரண மறதி அல்ல. நடைமுறையில் என்ன நடக்கிறெதன்றுப் புரியாதநிலை. குழந்தைகள் போல் மாறிவிடுவதால் தங்களின் முக்கியத் தேவைகள் கூடச் செய்யதெரியாதவர்களாகி விடுகிறார்கள். இவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கு இதனால் ரொம்பச் சிரமமாகிவிடுகிறது. அந்தத் தந்தை ஆடைக் கூட அணியாமல் பல சமயங்களில் எங்காவது சென்றுவிடுவது வழக்கம். அதன் பின் தேடியலைந்து அழைத்துக் கொண்டு வரும்போது அந்த மகளுக்கு அழுகையாக வரும்.

ஒருசமயம் குருவானவர் திவ்யநற்கருணைக் கொண்டு வந்தபோது அந்தச் சகோதரி "பாதர் எவ்வளவு நாள் நான் இந்தப் பாரத்தைச் சுமப்பது? மகனும் மருமகளும் இருந்தாலும் யாருமே பொறுப்பேற்க மறுத்திட்டாங்க. என் பிள்ளைகளும் "என்னிடம் நீங்க ஏம்மா இந்த வயதானக் காலத்தில் இப்படிக் கஷ்டபடுறீங்க" என்கிறாங்க, என்னாலும் முடியலை. அவருக்குப் பாத்ரும் கூட எங்கப் போகணும்னுத் தெரியலை பாதர் " என்று கூறி அழுதார்கள்.

குருவானவர் கூறினார் "மகளே உங்களால் தான் இந்த அளவுப் பொறுமையோடும் அன்போடும் பார்த்துக் கொள்ளமுடியும்னுத் தான் கடவுள் உங்களை வைத்திருககிறார். அவரே உங்களுக்குச் சக்தியும் தருவார். மகளே! ஆண்டவருக்காகத் தன்னிடமிருந்த இரண்டுகாசுகளையுமே தந்த ஏழை விதைவைப் பெண்ணை ஆண்டவர் எவ்வளவு பிரியத்துடன் ஆசீர்வதித்தார்? அதுபோல உங்களுடைய முழுச் சக்தியுமே உங்க அப்பாவுக்காக நீங்க செலவழிப்பது, இந்த உலகத்திற்கு வேணும்னாப் புரியாம இருக்கலாம், தெரியாம இருக்கலாம், ஆனால் அனைத்தையும் காணும் கடவுளின் பிரகாசமான கண்கள் நமக்குண்டு. அதற்கேற்றப் பலனை அவர் தராமல் இருக்கமாட்டார்" என்று ஆறுதல் கூறினார்.

ஆம்! நண்பர்களே! இந்தச் சுயநலமான உலகில் பிறருக்காக வாழும் மறுகிறிஸ்துக்கள் ஏராளம். பிறருக்கு ஒளியாய் அன்பையும் இரக்கத்தையும் தந்து மன அமைதியை ஏற்படுத்தும் இவர்களை உலகம் ஏளனமாய்ப் பார்க்கிறது; ஆனால் இவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவர்கள். இயேசு அவர்களோடு எப்போதும் இருப்பதால் அவர்களுக்குத் தினமும் கிறிஸ்மஸ் தான். இவர்களைத் தேடித் தான் இயேசு இவ்வுவகிற்கு வந்தார்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளித் தரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்...............

விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.