
A.C.டிசில்வா, வெலிங்டன், ஊட்டி
எனது மகன் ஒரு விண்ணப்பத்துடன் என் முன் நின்றான். அப்பா நாளை என் நண்பன் ராஜேஷின் பிறந்தநாள். அவன் வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்து இருக்கின்றான் நான் சென்று வரவா? எனக் கேட்டான். நான் அவனை அன்போடு அழைத்து மகனே ஒரு நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடச் செல்லும்போது, அவனுக்குப் பிடித்தமான - ஏதாவது ஒரு அன்பளிப்பை நீ அவனுக்குக் கொடுத்து வாழ்த்த வேண்டும்… அதுதான் மற்றவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முறை என்று கூறினேன். சரி, என்று கூறியவன்… சற்று நேரம் யோசித்தவனாக - நின்றுகொண்டிருந்தான்.
என்ன யோசனை? என்று கேட்டதற்கு….. ஆமாம் நேற்று நாம் எல்லோரும் கடைக்குச் சென்றிருந்தோமே, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடை, அலங்காரப் பொருட்கள் என வாங்கினோம் அது மட்டுமின்றிக் கிறிஸ்மஸ் அன்று விருந்து படைக்கத் தேவையான பொருட்களையும் அம்மா வாங்கினார்கள். நீங்களோ கிறிஸ்துமஸிற்குத் தேவை என்று வரும் வழியில் அடுமனைக்குச் சென்று “பிளம்கேக்” ஆர்டர் செய்தீர்கள்…. இப்படி வாங்கிய எல்லாமே நமக்காகத்தானே வாங்கினீர்கள்… இவைகளை நாம் தானே அணிந்து, உண்டு கிறிஸ்துமஸ் அன்று மகிழப் போகின்றோம். அப்படி இருக்க ராஜேஷின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு மட்டும்… அவனுக்கு விருப்பப்பட்ட அன்பளிப்போடு நான் ஏன் செல்ல வேண்டும் என்றான். அதற்கு, நான் - யாரையும் வெறுங்கையோடு காணச் செல்வது நமக்கு மரியாதை குறைவு என்றேன். சரி நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பை நான் நிச்சயம் என் மரியாதையைக் காப்பாற்றும் வண்ணம் எடுத்துச் செல்வேன் என்றான்.
சற்று நேரம் அவனது அறைக்குள் சென்று விட்டு மீண்டும் என் முன் வந்து நின்றான். இப்போது என்ன பிரச்சனை? என்று வினவ அவன் அமைதியாக என்னை நோக்கிக் கிறிஸ்துமஸ் விழா யாருடைய பிறந்தநாள் என்று கேட்க… என்ன நீ, இதுகூடத் தெரியாமலா இருக்கின்றாய்? அது நமது ஆண்டவர் இயேசு பாலகனாகப் பிறந்தநாள். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் திருநாள்… என்று கூறினேன். அதைக் கேட்ட அவன் அமைதியாக… நல்லது, சாதாரண அடுத்த வீட்டு நண்பன் ராஜேஷ் உடைய பிறந்த நாளுக்கே அன்பளிப்போடு போக வேண்டும் என்று கூறிய நீங்கள் இயேசு பாலகனின் பிறந்த நாளன்று, நான் மட்டும் புத்தாடைகள் அணிந்து கொண்டு ஆலயத்தில் அவரை வெறுங்கையோடு எந்த அன்பளிப்புமின்றிப் பார்க்கப் போலாமா? என் மரியாதை என்னாவது?.. எனக்கு ஒரு நல்ல விலை உயர்ந்த அன்பளிப்பை வாங்கிக் கொடுங்கள் கிறிஸ்து பாலகனுக்குக் கொடுக்க நான் கொண்டு போக வேண்டும் என்றான்…
என் மகனிடம் நண்பனைக் காண வெறும் கையுடன் போகக் கூடாது என்று கூறிய எனக்கு என் தேவன் இயேசுவைப் சந்திக்க எப்படிப்போக வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க மறந்தது எப்படியென யோசிக்க ஆரம்பித்தேன். … அதேவேளை… திருப்பாடல்கள் 50:12ல் ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. என்கிறார் ஆண்டவர். அப்படி இருக்க எதை?... எப்படி?.. எப்போது…? அவருக்குத் தருவது என்ற கேள்வி என்னுள் தொடர்ந்தது.
இதோ…
என்ன கொடுப்பேன் நான் உனக்கு… சின்னக் குழந்தை இயேசுவே…என்ற பாடல் மாலை திருப்பலியின் அழைப்பாக ஆலயத்தில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. ஆலயம் நோக்கி - என்னையே கொடுத்தாவது விடைத்தேட விரைகின்றேன். …எனக்கு உதவிட நீங்களும் விரைந்திடுவீர்கள் - என்ற நம்பிக்கையில்.
மன்னிப்பை கொடுத்து அன்பை பெற ஆசைப் பட்டார்.... நாமோ அன்பைக் கொடுத்து மன்னிப்பைப் பெற (அயலானுடன்) கரங்களை இணைப்போம்… ஆம்
அன்பு இறைவனுக்குச் சமமானது…