
அருள்பணி. மாணிக்கம் விமல், திருச்சி.
அண்மையில் ஒரு ஆங்கில திரைப்படத்தின் சுருக்கத்தை என்னுடைய முகநூல் பக்கத்தில் பார்த்தேன். விமானம் ஒன்றில் ஏறக்குறை 100 பேர் செல்கிறார்கள். அப்போது எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெரியவரும், நடுதர வயது பெண்ணும் பேச தொடங்கினர். பேச்சை ஆரம்பித்த நொடி பொழுது முதல் அவ்விருவரின் உரையாடலும் தென்பட்ட ஒரு பெயர் கபிரியேல். யார் இந்தக் கபிரியேல்? அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர். அவரைப் பற்றிதான் பேசினார்கள். அத்தகைய உரையாடலில் அப்பெரியவர் சொன்னார்: ‘அவனின் முதல் பாடலை நான்தான் ஆய்வுச் செய்தேன். அது சரியாக இல்லை. எனவே விமர்சித்தேன். அன்று அவமானப்பட்டான்’. அவர் சொல்லி முடிப்பதற்குள், அப்பெண்மணி சொன்னாள்: ‘அவன் என் முன்னாள் காதலன். அவனின் நடத்தைப் பிடிக்கவில்லை. எனவே அவனை நிராகரித்துவிட்டேன்’. இப்படியாக அவர்கள் பேசிக் கொணடு இருக்கும்போது இவர்கள் உச்சரித்த அதே பெயரை அவ்விமானத்தில் வந்த அனைவருமே ஒருசேர எனக்கும் அவனை, அவரை, அந்த நபரைத் தெரியுமென்று சொன்னார்கள். அது வியப்பாய் இருந்தது. கொஞ்ச நேரத்தில் விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண் ஓடி வந்து, ஓட்டுநர் இருக்கும் கதவு அடைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒரு உள்ளே இருந்து கொண்டு விமானிகளைத் தொந்தரவு செய்து, விமானத்தை விபத்துக்குள்ளாக்க பார்க்கிறாரெனச் சொல்கிறார். இதைக் கேட்ட அனைவரும் பயத்தின் உச்சக்கட்டத்தில் நின்றவர்களாய் பதறுகிறார்கள். அப்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது. விமானத்தில் வந்த அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் கபிரியேல் என்னும் அந்த மனிதரின் வாழ்வில் துன்பத்தைக் கொடுத்தவர்கள் என்று. எல்லாருக்கும் அவனே இலவச டிக்கெட் அனுப்பி இந்த விமானத்தில் பயணிக்க வைத்திருக்கின்றான். அந்த விமானத்தைக் கூலிப்படையை ஏவிவிட்டு மலையில் போக வைத்திருக்கிறான். காரணம் இவர்கள் என் வாழ்வில் செய்த அந்நியாயத்தை, துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை. ஆகவே அனைவரும் சாகட்டும் என்கிற எண்ணத்தில் வளர்ந்தான், இன்று நிறைவேற்றிவிட்டேன். அவன் நினைத்தது போன்றே அருகில் இருந்த பாறை ஒன்றில் விமானம் போதி வெடித்து சிதறியது. அவமானப்பட்டாலும் படிபடியாய் முன்னேறிச் சிறந்த பாடகரான கபிரியேல் தன் இருட்டறைக்குள் மீண்டும் போனதால் இறுகிய அவனது மனதால் அனைவரும் இறப்பைச் சந்தித்தனர். நல்ல முறையில் பாடினான். பெயர், புகழ், பெருமை ஆகியவற்றைச் சம்பாதித்தான். ஆனால் கடைசியில் அதுவெல்லாம் வீணாய் போனது, அவன் போககூடாத நிலைமைக்குச் சென்றதால்... நாம் எங்கே போக வேண்டும்? எங்கே போகக் கூடாது? சிந்திப்போமா!
ஞானிகளின் வருகையும், ஏரோதின் தேடலும் உண்மையிலேயே மிகச் சிறப்பான இறைத்திட்டம். உலக மக்கள் அனைவருக்குமான பிறப்பாய் இயேசுவின் பிறப்பை உருவாக்கிய தந்தையாம் இறைவன், தன் ஒரே மகனைக் காப்பாற்ற வேண்டுமென்கிற ஆழமான உறவை எவ்வாறு நம் கண்களுக்கு முன் வடிக்கிறார் என்றால், அது ஞானிகளின் ஞானத்தின் அடிப்படையில் நாம் ஞானம் பெற்றிட அழைப்பு தரப்படுகிறது. ‘ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்’ (சீராக் 1:14) என்ற இறைவார்த்தைக்கேற்ப ஞானம்மிக்க மனிதர்களாய் திகழ்ந்தால் என்னவோ அவர்கள் ஞானிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
இறையச்சமே இணையற்ற வாழ்விற்கான மையம் எனலாம். நம்முடைய முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன்னுடைய மறைக்கல்வி உரையில் ஒருமுறை சொன்னார்: ‘21ஆம் நூற்றாண்டில் இறைவன் மீதான அச்சம், அதாவது கடவுள் பயமே இல்லாமல் பலர் வாழ்கிறோம்’. எவ்வளவு ஆழமான உண்மை. கடவுள்மீது கொள்ளும் அச்சம்தான் நாம் ஞானம் மிகுந்த வாழ்வைப் பெற வழிகோலும் என்று பார்க்கிறோம். ஞானிகள் மூவரும் இயேசுவைக் காண வந்தார்கள். வருகிற வழியில் அடையாளம் கேட்டு ஏரோதின் அரண்மணைக்குள் நுழைகிறார்கள். தாங்கள் கண்ட விண்மீன் வழிகாட்ட வந்தவர்கள், இப்போது அதைக் காணாமல் திகைக்கிறார்கள். என்னாயிற்று, அதுவரை சரியாக போனவர்கள், இப்போது தவறாக போகிறார்கள். ஆனால் பின்பு என்ன நடந்தது பார்ப்போமா!
ஞானிகளைப் பற்றி மத்தேயு 2:1-12இல் மிக விவரமாக படிக்கிறோம். இந்தப் பகுதியில் கடைசி இறைவார்த்தையை மட்டும் எடுத்துத் தியானிக்கலாம். ‘ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்க்ள நாடு திரும்பினார்கள்’ (2:12). ஞானிகள் மூவருமே விண்மீன் எழக் கண்டோம். அரசராய் பிறந்திருக்கிற குழந்தையை வணங்க வந்தோம் என்று ஏரோதிடம் சொன்னபோது, அவன் கதிகலங்கினான். ஏரோது மட்டுமல்ல, நாடே கலங்கிற்று என்று விவிலியம் சொல்கிறது. அப்படியானால் மகிழ வேண்டியவர்கள் மனம் குமுறலுக்கு ஆளாகிறார்கள். ஞானிகளுக்கு மகிழ்ச்சி, ஏரோதுக்கு... ? ஆனால் ‘நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்’ என்று ஏரோது சொன்னதில் உண்மை இருக்கிறதா? ஏரோதின் தேடலுக்கும், ஞானிகளின் தேடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. பார்போமா?
ஏரோதின் தேடல் - பொறாமைக்கான தேடல்
எனக்கு எதிராக ஒரு அரசன் தோன்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாய் அவன் கருதினான். எனவேதான் அக்குழந்தையைக் கொல்ல தேடினான். பொறாமை உள்ளத்திலும் இல்லத்திலும் இருந்து அகற்றப்பட வேண்டிய முதன்மையான ஆமை.
ஏரோதின் தேடல் - வஞ்சகத்திற்கான தேடல்
வஞ்சகம் நிறைந்த மனிதனாய் ஏரோது தன்னை வெளிப்படுத்துகிறார். தனக்கு இன்னொருவர் போட்டியா என்கிற வஞ்சகம் குணம் அவன் வாசல் தொடங்கி அந்நகரம் முழுவதும் வீசுகிறது.
ஏதோதின் தேடல் - அழிப்பதற்கான தேடல்
ஏரோது ஆசையில் இயேசுவைக் காண வேண்டுமென்று ஞானிகளிடம் கூறவில்லை. பிறந்திருக்கிற குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய் அறிந்து என்னிடம் சொல்லுங்கள் என்பதுதான் அவனின் சொல்லாடல். இது எதைக் குறிக்கிறது: இயேசுவை ஆராதிப்பதற்கா இல்லை அழிப்பதற்கு. தனக்கெதிராக யாரும் இருந்து விடக் கூடாது என்கிற எண்ணமே அழிவிற்கான வாய்க்காலாய் அமைகிறது.
ஏதோதின் தேடல் - பதவிக்கான தேடல்
யூதரின் அரசராய் பிறந்திருக்கிறவர் எங்கே, அவரது விண்மீன் எழக் கண்டோம் என ஞானிகள் உரைத்தது, ஏரோதின் பதவியைக் குறி வைத்த செயலாய் அமைந்தது. ஆகவேதான் தன் பதவி பறிப்போய் விடுமோ என்கிற நோக்கத்தில் பதவிக்குப் பங்கு போட வந்த இயேசுவைப் பங்கிட்டு ஆற்றில் வீசச் சொன்னான். இவ்வாறாக ஏரோதின் தேடல் அமைந்தாலும், ஞானிகள் மிகவும் ஞானமுள்ளவர்கள். ஆண்டவரின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையினால் அவர்கள் அவ்விடம் விட்டுத் தங்கள் நாட்டிற்கு வேற்றுப் பாதை வழியாக சென்றார்கள் என விவிலியம் பறைசாற்றுகிறது. அப்படியென்றால் ஞானிகளின் தேடல் எதுவாய் அமைந்திருந்தது.
ஞானிகளின் தேடல் - நம்பிக்கைக்கான தேடல்
இயேசுவைக் காண வேண்டுமென்ற நம்பிக்கையோடு விண்மீனின் வழிகாட்டுதலில் அவர்கள் வருகிறார்கள். முன்பு எழுந்த விண்மீனைக் காணோமே என்கிற சிந்தனை அவர்களின் நம்பிக்கைக்கான தொடர் பயணத்தை உருவாக்குகிறது. அதே நம்பிக்கையில் அவர்கள் தங்கள் ஆண்டவரை வணங்குகிறார்கள்.
ஞானிகளின் தேடல் - ஆராதிப்பதற்கான தேடல்
ஞானிகள் மூவருமே குழந்தையை அதன் தாய் தன்னிடத்தில் வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண் கிடயாய் விழுந்து வணங்கினர். அதாவது நாம் ஞானியாய் அரசராய் இருந்தாலும் அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவை ஆராதிக்க அவர்கள் தேடினார். தேடலின் விளைவு வணங்கினார்கள்.
ஞானிகளின் தேடல் - இறைத்திட்டதிற்கான தேடல்
ஞானிகள் மூவருமே இறைத்திட்டத்திற்கு தங்களைக் கையளித்தார்கள். அவர்கள் பயணம் ஆரம்பித்த நாள் தொடங்கி இயேசுவை வணங்கிவிட்டு நாடு திரும்பும் வரை இறைத்திட்டத்தின் தேடலைத் தங்களுக்குள் வைத்திருந்தனர்.
ஆக நம்முடைய வாழ்வு ஏரோதைச் சார்ந்து நிற்கிறதா? அல்லது ஞானிகளைச் சார்ந்து நிற்கிறதா? சிந்திப்போம். போனவர்கள் பொறாமையையும், வஞ்சகத்தையும், அழிப்பதற்கான ஆர்வத்தையும், பதவிக்கான மோகத்தைக் கண்டார்கள். ஆனால் மீணடும் போகவில்லை காரணம் அவர்களின் நம்பிக்கையும், ஆராதனை செய்த ஆண்டவரின் துணையும், இறைத்திட்டத்திற்கு தங்களைக் கையளிக்கும் முழுமையான மனமும் பெற்றதால் அவர்கள் மீண்டும் போகவில்லை. நாம் எப்படி?