இதயக் குடிலில் இயேசு பாலன்

கவிஞர் மரிய. விசுவாசம்

1. பாவஇருள்‌ போக்கிய
பிதா,மனித உடலெடுத்து
தேவபாலன்‌ ஏசுவாக
தோன்றியதே கிறிஸ்துமஸ்‌!

2. உலகிற்கே ஒளியாய்
உண்மையின்‌ வழியாய்‌ 
சிலுவைப்‌ பலியாய்‌ 
சேசுராஜா பிறந்தார்‌!
 
3. "இதயத்தில்‌ இடமிருந்தால்‌
எங்கும்‌ஓர்‌ இடமுண்டு!” என
உதயஒளிஏசு உரைத்திடவே
உதித்தார்‌ தொழுவத்திலே! 

4. மாதங்களில்‌ மார்கழியே 
மகத்துவம்‌ பெற்றது. ஆம்‌!
மாமரியாள்‌ மணிவயிறு
மனுமகனைப் பெற்றதனால்‌

5. உலகுக்கே போர்வைதந்த
உன்னதர்‌ஏசு தொழுவத்தில்‌
நடுங்குகிறார்‌ கடுங்குளிரில்‌
நாம் பாவத்தில்‌ குளிர்காய்கிறோம்‌! 
6. வைரம்ணித்‌ தொட்டில்கட்டி
வாழ்த்துப்பா பாடவில்லை!
வைக்கோல்‌ மெத்தையிலே
வரந்தரும்‌ஏசு வரலாறானார்‌

7. பசும்புல்‌ பனியுடுத்தி
பரிசுத்தரை வரவேற்றது!
விசும்பும்‌ விரிநிலமும்‌
விமலனை ஆராதித்தது! 

8. ஏழ்மையும்‌ வறுமையுமே 
இயேசுவின்‌ இருகண்கள்‌!
தோழமையும்‌ தூங்மையுமே
திருக்குடும்ப இருதூண்கள்‌!

9. நம்‌இதயக்‌ குடில்தனில்‌
நிமலன்‌ஏசு பிறந்தால்தான்‌
நம்வாழ்வு சிறந்திடும்‌ 
நல்வாழ்வு பிறந்திடும்‌!

10. உலரட்டும்‌ கவலைப்பணி
உழைப்புக்கே . காலம்‌இனி !
புலரட்டும்‌. - புத்தாண்டு
பூரிக்கட்டும்‌ மனிதநேயம்‌!