இதுதாங்க நம்ம கிறிஸ்மஸ்!

xmas tree with family கிறிஸ்மஸ் என்று சொல்லும்போது சிறுவயது ஞாபகம் வருது. அந்த வயதில் கிறிஸ்மஸ் என்றால், புதுத் துணிமணிகள், தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள், அதுவும் 'கிறிஸ்மஸ் தாத்தா' இரவில் நாம் தூங்கும் போது நமக்கு வேண்டிய பரிசுகளை கொண்டு வந்து தலையணைக்கு பக்கத்தில் அல்லது கிறிஸ்மஸ் மரத்திற்கு அடியில் இருக்கும்படி செய்வார். அதில் நம் பெயர் எழுதியிருக்கும். அதை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இதையே எங்கள் பிள்ளைகளிடமும் சொல்வேன். "கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட என்ன பரிசு வேண்டும் என்று சொல்லுங்க, மனசுக்குள் அல்ல சத்தமாக சொல்லணும்" என்பேன். (அப்பத்தானே நாங்க அதை முதலிலேயே வாங்கி, மறைச்சு வைத்து கிறிஸ்மஸ் இரவில் கிறிஸ்மஸ் தாத்தா வைக்கிற மாதிரி பிள்ளைகளுக்கு அருகில் வைக்கலாம் அல்லவா? பிள்ளைகள் வளர்ந்த பிறகு இதை அவர்கள் கண்டுபிடிச்சப்போது எவ்வளவு சிரிப்பு; மகிழ்ச்சி.)

இன்றைக்கும் நாம் சின்ன பிள்ளைகள் போல இருக்கிறோம். கிறிஸ்மஸ் என்றால்- புதுத்துணி, தின்பண்டங்கள், சாப்பாடு, கொண்டட்டம் இதுதான் கிறிஸ்மஸ் என்று நினைக்கிறோம். இதெல்லாம் தேவை இல்லையா? தேவை தான். ஆனால் அது மட்டுமே கிறிஸ்மஸ் அல்ல. கிறிஸ்து உங்களுக்காக - எனக்காக பிறந்தார் என்று நம்புவதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதன் முழுமையான 'அர்த்தம்' நமக்கு புரியவும் இல்லை, புரிந்து கொள்ள முயல்வது இல்லை. அவர் நமக்காக பிறந்தார் என்பதை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்கிறோம். ஏன் அவர் நமக்காக பிறக்க வேண்டும்? நாம் அவ்வளவு நல்லவங்களா? இல்லையே! நம்மிடம் நல்ல குணங்களும் உண்டு; கெட்ட குணங்களும் உண்டு. அப்படி இருந்தும் அவர் நம்மை ஏற்றுக் கொண்டார் என்றால் அவர் எவ்வளவு நல்லவர்; இனியவர் என்பது நமக்கு புரிகிறதா? "ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்" திபா 34:8 என்று ஆவியானவர் அழைப்பு விடுக்கிறார்.

நம் நாவில் கசப்பு, இனிப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு என்று அறுசுவைகள் உண்டு: அது போல மனிதர்களிடையேயும் அந்த குணங்கள் உண்டு. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியலை. அல்லது ஏற்றுக் கொண்ட மாதிரி நடிக்கிறோம். ஏற்றுக் கொள்ளாத நாம் வஞ்சனையும் கோபமும் பொறமையும் கொண்டவர்களாக மன்னிக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களை ருசிக்க முடியலை; ருசிக்கவும் பிடிக்கலை. ஆனால் விவிலியம் என்ன சொல்கிறது தெரியுமா? (1பேதுரு2:1)"ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால் எல்லாவகையான தீமையும், வஞ்சகத்தையும், வெளிவேடம், பொறமை, அவதூறு ஆகியவற்றையும் அகற்றுங்கள்" என்று கட்டளை அல்லவா கொடுக்கிறது.

எனக்கு தெரிந்த சகோதரி ஒருவர் இருந்தார்கள். இப்போது அவர்கள் பரலோகத்தில் ஆண்டவரை ருசித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி சொல்வது என்னவென்றால் பாவற்காயை பச்சையாக சாப்பிட பிடிக்கும் என்பார். அவர் சொல்வதை கேட்டும்போது ரொம்ப ஆச்சரியமாக எனக்கு இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் இனிப்பை விட அதிக கசப்பும் காரத்தையும் காட்டுகிற மக்களிடையே வாழ்ந்த சகோதரி. அந்த மக்களை ஏற்றுக் கொண்ட அளவுக்கு அந்த மக்கள் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.

இது மாதிரி நம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களின் ருசிகளை அறிந்து ஒதுக்கிவிடாமல், ஏற்றுக் கொள்ள, பழக அது கஷ்டமான ஒன்றாக இல்லாமல் சாதாரணமானதாக மாறமுடியும். மனிதர்களை சகித்துக் கொள்ள இயேசு நமக்கு கற்று கொடுத்தார். அவருக்கும் துரோகம் என்றால் என்ன, அவமானம் என்றால் என்ன? என்று தெரியும். புளிமாவு போல் நடிக்கிற மக்களை தெரியும். இழிநிலை அடைந்த அவர் அதை பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் தனக்கு அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு ஏற்றுக் கொண்டார். அந்த சிலுவை அவர் வாழ்ந்த 33வருடமும், ஒவ்வொரு நாளும் அவர் சுமந்த சிலுவை. அந்த சிலுவைக்கு சுகம் உண்டு எனபதால் தான் அனுதினமும் இந்த சிலுவையை சுமந்து கொண்டு பின்பற்றி வரச் சொன்னார். கசப்புகளையும் காரமான மனிதர்களையும் நாம் சந்திக்கும்போது சோர்ந்து போக கூடாது. இனிப்பு என்றும் கசப்பு என்றும் ஒதுக்கவேண்டாம். எல்லாவற்றையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள பழகுவோம். அவமானத்தையோ, பிறரின் அசட்டைதனத்தையோ கேலியையோ பொருட்படுத்தாத இயேசுவை எண்ணி பாருங்கள். அப்போர் நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போகமாட்டீர்கள் என்று ஆவியானவர் உறுதியாக நம்மிடம் சொல்கிறார்.(எபி12:2,3)

ஆண்டவரை உதவிக்கு கூவி அழைக்கும் போது தாங்கி கொள்ள பெலன் தருவார். திருப்பாடல்க்ள 38ல் ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்து பாருங்கள் என்று சொன்னபோது, அவரை நோக்கி பார்த்போர் அவமானத்திற்கு உள்ளாவதில்லை என்று தொடர்ந்து இந்த ஏழை கூவி அழைத்தான் .ஆண்டவர் அவனுக்கு செவி சாய்த்தார். அவர் எல்லா நெருக்கடியினின்று அவரை விடுவித்து காத்தார் என்று வரிசையாக ஐந்து காரியங்களை சொல்கிறார். (தி பா 38:5-8)

madonnaஆகவே எனக்காக கிறிஸ்து பிறந்தநாளில் நாமும் மற்றவர்களுக்காக மறுபடி பிறப்போம். மற்றவர்களை சகித்துக் கொள்ள, உதவி செய்ய நல்ல மனதைக் கேட்போம். அட...போங்க ஜாலியாக இருக்கிறதை விட்டுவிட்டு ..... இதெல்லாம் நடக்கிற காரியமா? என்கிறீர்களா? அப்படின்னா உங்களுக்கு இந்த கிறிஸ்மஸ் எப்போதும் போலதான் இருக்கும். புதியதாய் பிறந்த நாம் இயேசுவோடு புது வருடத்திற்குள் அடியெடுத்து வைக்க ஆயத்தமா? எத்தனை தடவை தோற்று போனலும் மறுபடி எழுந்து நிற்க ஆண்டவர் பெலன் தருவார். அன்பைத்தருவார். இதுதாங்க கிறிஸ்மஸ்!. புதிதாய் பிறக்க - மற்றவர்களுக்காக பிறக்க ஆயத்தமா? உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! இயேசு நமக்காக பிறந்தார் -நாமும் பிறருக்காகப் பிறக்கவேண்டும். இதுதாங்க நம்ம கிறிஸ்மஸ்.

திருமதி செலின் ராஜ் கோடம்பாக்கம் சென்னை24

icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com