ஏற்றுக் கொள்ளும் இயேசு

மரியாளும் சூசையும்கத்தோலிக்கத் திருச்சபையின் அடிப்படை விசுவாசக் கோட்பாடுகளில் ஒன்று! “சுமைகளை, துன்பங்களை, அவமானங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல்” இறைத்தந்தை தன்மகன் இயேசுவை பிறப்பிக்கும் போது மரியா இகழ்ச்சியை ஏற்றாள்; யோசேப்பு மரியாளை ஏற்றுக் கொண்டார். தந்தை தன்மகன் “பாடுகள் பலபட்டு, மனித குலத்தை துன்பங்களின் வழியாக மீட்க” இவ்வுலகிற்கு அனுப்பினார். எனவே இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு அனைத்திலும் “ஏற்றுக்கொள்ளும்” மனப்பாங்கினைப் பார்க்கலாம்.

“ அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் “ என்ற எசாயாவின் கூற்று முற்றிலும் உண்மை. நாமும் நம் வாழ்வில், பலதுன்பங்கள், வியாதிகள் நஷ்டங்களைச் சந்திக்கிறோம். அவையனுத்தும் முழுக்க முழுக்க நாமாக உண்டாக்கிக் கொண்டவை. வாழ்க்கையில் அகலக்கால் வைத்தவன் கடனாளியாகிறான். தீயபழக்கத்திற்கு அடிமையானவன் வியாதிகளைச் சுமக்கின்றான். வந்த துன்பங்களை சுமப்பது என்பது குற்றம் புரிந்தவன் சிறைதண்டனையை அனுபவித்தது போலாகும். நல்ல கள்வன் கூறுவது போல “ நாம் குற்றம் புரிந்தோம்; தண்டனை அனுபவிக்கின்றோம். இயேசு ஒரு பாவமும் செய்யவில்லையே. அவர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? “ என்பதிலிருந்து இதை உணரலாம். துன்பங்களைக் கண்டால் விலகி ஒடுகிறோம். ஆனால் துன்பங்களை நாடிச் சென்று, வலிய கைப்பற்றி அதை அனுபவித்தவர்கள் தான் புனிதர்கள். பிச்சைக்காரர்களைக் கண்டால் எரிச்சல்படும் நாம், தொழுநோயாளிகள் கைவிடப்பட்ட குழந்தைகள், அனாதைகள், முதியோர், உடல் ஊனமுற்றோர், நோயுற்றோர்களை, காலை முதல் மாலை வரை தேடி அலைந்து, கண்டு பிடித்து தன் இல்லம் அழைத்து அவர்கள் சாகும் வரை அன்பு செலுத்தியவர் தாம் அருளாளர் அன்னை தெரசா. தொழுநோயளிகளுக்கு பணிவிடை புரிந்து, தாமும் அந்நோயினால் பாதிக்கப்பட்டு மகிழ்ச்சி அடைந்தவர் புனித தமியான்.

இளைஞர்களின் இன்னல் தீர்த்தவர் புனித தொன்கோஸ்கோ. இந்த வரிசையில் எகிப்து நாட்டு புனித அந்தோணியார், வனத்துக் சின்னப்பர், புனித பெனடிக்ட், புனித மார்ட்டின் தே போரஸ், புனித மோனிகா, அவரது மகன் புனித அகுஸ்தின், சூடான் நாட்டு ஜோசபின் பகிதா போன்ற புனிதர்கள் துன்பங்களை விரும்பி ஏற்று, பாலைநிலத்தில் வாழ்ந்து காட்டிய புனிதர்கள் நமக்கு முன்னோடிகள். இயேசுவின் வாழ்விலும், எல்லாச்சமயத்திலும், தான் “பாடுகள் பல படவும், கொல்லப்படவும், உயிர்த்தெழ வேண்டும்.” என பலமுறை கூறியுள்ளார். நாமாக இருந்தால் ஒடி ஒளிந்திருப்போம். ஆனால் இயேசு இறைத்திட்டத்தை அறிந்து, தம்மையே வெறுமையாக்கிய தாழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு தந்தையை மகிமைப்படுத்தி, தானும் மகிமை பெற்றார்.

சிரேன் ஊரைச் சார்ந்த சிமியோன் “இயேசுவின் சிலுவைப் பாதை சமயத்தில் அவருக்கு உதவ முன் வந்தாரே ஏன்? இயேசுவின் பாடுகளில் தம் பங்கினைச் செலுத்த அவர் முன் வந்தார். இயேசுவுக்கு புதிய தெம்பையும் தந்தார். நாமும் பிறருடைய கஷ்டங்களை, துன்பங்களை அவர்கள் கேட்காமலே, தாமே முன் வந்து அதைப்போக்குகிறோமா? அல்லது அவர்கள் கேட்டபின்னரும் மறுதலித்து ஏமாற்றுகிறோமா? அல்லது “பலர் பார்க்கவேண்டும்” என அவற்றைச் செய்கிறோமா?

Jesus at manger

மரியாவின் மகனாக இயேசு பிறக்க இறைதந்தை மரியாவின் அனுமதியைப் பெற்றார். யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் ஏற்றுக் கொண்டார்.

இறைத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் உள்ளங்களில் மட்டும் இயேசு பிறப்பார். இயேசு நம் உள்ளத்தில் பிறக்கக் காரணமாக இருந்தால் நாமும் அன்னை மரியாவுக்குச் சமமானவர்களே….

பேராசிரியர் அ.குழந்தை ராஜ், காரைக்குடி

icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com