மழலை மன்னவா - தாலாட்டு கவிதை

மழலை மன்னவா வெண்
பனியில் மலர்ந்தவா-வாடை
குளிர் உனை வாட்கிறதா
வெண்சாமம் கொண்டு பேதை நான்
 
தாலாட்டு பாடறேன்! ஆராரோ
நான் பாடுவேன்! வானவர் கீதம்
இசைக்க கொஞ்சு மொழியில் நான்
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ பாடுறேன்!
பாலகா

கடும் குளிர் உனை வாட்டும் வேளை
வாடை காற்றும் வீசும்வேளை
எம் குலமாந்தர் வீணை மீட்டிட
என் ஆசை ரோசாவே அயராமல் கண்ணுறங்கு

மண்ணகம் வந்து இறங்கிய புதுமலரே!
மாந்தர் துயர் துடைக்க நின் பிறப்பே!
கபிரியேலின் வார்த்தையின்
சொல் வண்ணம் நீ தானே!

கடவுளின் கைவண்ணம் நின் வரவே!
காத்திருக்கும் கடை மாந்தரின் ஒளியே!
நின் பிறப்பை பறை சாற்றிவே
வால் நட்சத்திரம் காண வந்ததுவோ!

மழலை மன்னவா மடியில் வந்தவா
மாட்டுத்தொழுவம் உனக்கு மாளிகையோ
மாறாக என் மலர் மஞ்சம் நான் தாரேன்
மயங்காமல் கண்ணுறங்கு என் மணியே!

பொன்னான கண்மணியே கண்ணுறங்கு
மரியின் மைந்தனே ஆராரோ ஆரிராரோ
சுந்தரியின் மைந்தனே ஆராரோ
சுந்தரி நான் தாலட்டு பாடறேன் நீ உறங்கு

என் மனச் சோகமெல்லாம் நின்
கண் அசைவில் காணாமல் போனதுவே
இறைமகனாய் நீ இருக்க பேதை
நான் எப்படி தாலாட்ட

என் ஆசானாய் நீ இருக்க
எளியவள் நான் எப்படி யாழிசைப்பேன்
என் உயிர் ராசாவே நின் பணி
ஆற்ற நான் உண்டு அயராமல் நீ உறங்கு!

எமை காண புவி இறங்கிய மன்னவா
எம் பாட்டு உம் செவிக்குள் பாய்ந்தோட
எம் பாட்டு எம்மாத்திரம் இருந்தாலும்
ஆராரோ அரிராரோ நான் பாடறேன்!

நின் பிறப்பை கேட்ட மாத்திரத்தில்
நொடிந்து போனானே ஏரோது!
மூன்று ஞானியருக்கு காட்சி பொருளானாய்
இரவோடு இரவாக பறந்து போனாயோ

எகிப்து உன்னை வரவேற்று தாலாட்டு
பாடியதா! நின் அம்மையப்பனும்
பதறி போனதின் பொருள் என்னவோ
நின் வரவு வறியோரின் தாகம் தீர்க்கவோ

ஆராரோ ஆரிராரோ கண்ணான
கண்மணியே கண்ணுறங்கு மன்னா
மாமணியே கண்ணுறங்கு - தாலாட்டு
பாடறேன் நீயுறங்கு பாலகா

பிறந்த நாள் வாழ்த்து
எழுதும் என் எழுதுகோல்
உன் ஆற்றலால்
இயங்கிட வேண்டும் எந்நாளும்!

திருமதி அருள்சீலி அந்தோணி
  
icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com