புனித வின்சென்ட் பல்லோட்டி பள்ளி விழா கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பலூன் அலங்காரங்கள். பள்ளி வாசலில் கிறிஸ்மஸ் தாத்தா அனைவரையும் கை குலுக்கி வரவேற்றுக் கொண்டிருந்தார். கூண்டிலிருந்து விடுபட்ட வண்ண வண்ண சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் போல், அழகிய ஆடைகளில் ஓட்டமும், நடையும், சிரிப்பொலியும் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புமாக மாணவர்களின் உற்சாகம் பள்ளி வளாகத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. இந்த மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருந்தது.
பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கியராஜ் அவர்கள் இம்முறை புதுவிதமாக கிறிஸ்மஸ் விழாயை கொண்டாட திட்டமிட்டார். பகிர்தலின் அருமையை கிறிஸ்மஸ் நற்செய்தியாக அளிக்கத் திட்டமிட்டார். அதை குழந்தைகள் மூலமே செயல் படுத்தவும் நினைத்தார். மாணவர்கள் ஒவ்வொருவரும் விழா அன்று தங்களுக்குப் பிடித்தமான அல்லது நண்பர்களுக்குப் பிடித்தமான இனிப்பு வாங்கி வர வேண்டும். அதை அந்த அந்த வகுப்பில் வைத்திருக்கும் தாம்பாளத்தில் கொண்டு வைக்க வேண்டும். பின் வகுப்பாசிரியரும் தனக்குரிய பங்கை வைத்து மாணவர்களோடு பகிர்ந்து உண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி மாணவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இனிப்பு பொட்டலங்கள். முகத்திலோ பகிர்தலின் மகிழ்ச்சி என விழாக்கோலம் பூண்டது, நிறைவான காட்சியாக அமைந்தது.
கிறிஸ்மஸ் தாத்தாவை தயார் செய்ய இன்று விரைவாகவே வந்து விட்டதால், காலை உணவை உண்ண ஆசிரியர் அறைக்கு விரைந்தேன். சாப்பிட அமர்ந்தபோது என் வகுப்பு மாணவன் கருப்பசாமி தயங்கி தயங்கி வந்து நின்றான். முகத்தில் சந்தோசம் இல்லை. வாடிய முகத்தோடு நின்றான். எங்கே அழுது விடுவனோ என்பது போல் நின்றவனை 'கருப்பசாமி உள்ளே வா" என்றேன். 'வணக்கம் மேடம்" என்று சொல்லுவதற்குள் அழுகை முட்டிக் கொண்டு வந்த விட்டது.
அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து 'தண்ணீர் குடி முதலில்" என்றேன். மடமடவென்ற குடித்து அவன் நிமிர்ந்தபோது அழுகை அடங்கிப் போயிற்று.
'என்ன விசயம்? ஏன் வாடிப்போய் இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?" என்றேன். 'மேடம் நான் நல்லா இருக்கிறேன் மேடம். ஆனா நான் எந்த இனிப்பும் கொண்டு வரவில்லை" என்றான். 'ஏம்ப்பா?" என்றேன்.
'எங்கம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தாங்க. என் நண்பருக்கும் சேர்த்து வாங்கிக் கொடுனு சொன்னாங்க. காலையில் கடைவீதிக்குப் போய் வாங்கிட்டு பள்ளி வரலாம்னு கிளம்பினேன். பேருந்தில் ஏறும் போது ஒருபாட்டி ஏறவே சிரமப்பட்டாங்க. பாட்டியை கைபிடித்து ஏறுங்க பாட்டினு சொல்றதுக்குள்ள கீழ மயங்கி விழுந்துடடாங்க. தண்ணீர் பாட்டில எடுத்து தண்ணீர் தெளிச்சேன் மேடம்."
'மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சவங்க நடக்கவே முடியாம கஷ்டப்பட்டாங்க. என்ன பாட்டி எங்க போகனும்னு கேட்டேன் அதுக்கு அந்த பாட்டி நேத்து மதியம் சாப்பிட்டது தம்பி . இராத்திரியும் சாப்பிடலை, காலையிலும் சாப்பிடல அதுதான் பசி மயக்கத்துல மயங்கி விழந்துட்டேனு சொன்னாங்க. எனக்கு மனசு பதறி போச்சு மேடம். உடனே பக்கத்து கடையில இட்டிலியும், டீயும் வாங்கிக் கொடுத்தேன் மேடம். மீதி 2ரூபாயில் 2 சாக்லேட்டு தான் வாங்க முடிந்தது" என வருத்தம் இயலாமையோடு கூறி முடித்தான்.
இப்போது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கட்டி அணைத்து 'தம்பி கவலைப்படாதே. நீ கொண்டு வந்த இந்த சாக்லேட்க்கு விலை மதிப்பே கிடையாதுப்பா" என்று கூறிக் கொண்டிருக்கைளில் மணி அடிக்க 'கருப்பசாமி நீ வகுப்பிற்கு தைரியமா போ, நான் இதோ வர்றேன்" என்று கூறி அவனை அனுப்பி விட்டு நேராக அருட்தந்தை அறைக்குச் சென்றேன். நடந்ததை கூறினேன். பகிர்வின் உச்சத்தை தொட்டு விட்டு மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வந்திருக்கும் அவனை கௌரவிக்க வேண்டினேன். அருட்தந்தையும் உடனே மகிழ்ச்சியோடு சம்மதித்தார். நிச்சயமாக பாராட்டப் படவேண்டியவன் என்று கூறினார்.
காவை வழிபாடு கூடியது. அனைவரும் செபம் முடித்து கிறிஸ்மஸ் பாடல் பாடி முடித்தபின் அருட்தந்தை பேசினார்.
'அனைவருக்கும் கிறிஸ்மஸ் விழா வாழ்த்துக்கள். இன்று நீங்கள் அனைவரும் உங்கள் அன்பை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வந்துள்ளீர்கள் விழாவின் அடிப்படை நோக்கமே பகிர்வு என்பதால் அதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். இறைமகன் இயேசு மனிதனாக அவதரித்தார் என்பதைவிட மனிதனாக பிறருக்கு தன்னையே பகிர்ந்து கொண்டார் என்பதே உண்மை. பிற மாணவர்களோடு உங்கள் மகிழ்வை பகிரும்போது பகிர்தலின் மகிழ்ச்சியின் ஆழத்தை புரிந்து கொள்வீர்கள். என்ற எண்ணித்தான் இத்தகைய ஏற்பாடு செய்தேன். இந்த பகிர்வு மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. இது பகிர்தலின் அடிப்படை. இரண்டாவது பகிர்வு ஒரு படிமேல். அதாவது தன்னிடம் உள்ளதெல்லாம் தேவையிலிருப்போருக்கு பகிர்வது. இது தெய்வீகப் பகிர்வு .இது தான் இறைவனுக்கு உகந்த அன்பின் பரிசாகும். அத்தகைய அன்பின் பரிசை இன்று நம் பள்ளியிலிருந்து இறைவனுக்கு அளித்தவன் யார் தெரியுமா? 5ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி. கருப்பசாமி மேடைக்கு வாப்பா " என்று கூறி கை தட்ட மாணவர்களும் பலத்த கரவொலி எழுப்ப, கருப்பசாமி கண்களில் நீர் வழிய பயம் கலந்த மகிழ்ச்சியோடு என்னைப் பார்த்தான். முன்னாடி வா என்பது போல் நான் தலையசைக்க மெதுவாக வந்து நின்றான்.
அருட்தந்தை கை குலுக்கி தோளோடு அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தார். பின் அவன் செய்த நற்செயலை அவனே கூறும்படி கூறினார். அவன் சொல்லி முடித்ததும் மாணவர்களின் பலத்த கரவொலியால் பள்ளி வளாகமே அதிர்ந்தது. அனைவருக்கும் கரம் கூப்பி நன்றி கூறினான்.
தான் செய்த மகத்தான செயலின் மகிமை அறியாத அந்த மனிதநேயம் நிறைந்த மாணவனுக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை அவனுக்கு சேர்த்த நிறைவில் அன்றைய கிறிஸ்மஸ் விழா எனக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com