header

என் நெஞ்சத்திற்கினிய உள்ளங்களே!

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
xmas greetings

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சத்திற்கினிய உள்ளங்களே! வணக்கம். இணையதளத்தின் வழியாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

இம்மாதம் நாம் நமதாண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம்மோடு நம்மவராகத் தம்மையே இணைத்துக் கொண்ட திருவிழாவை கொண்டாடுகின்றோம்.

அவரை இறைவாக்கினர் 'இம்மானுவேல்" என்று முன்னறிவித்துள்ளனர். 'இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்பது பொருள். இதைத் தான் இரத்தினச் சுருக்கமாக யோவான் தனது நற்செய்தியில் 'வாக்கு மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்" என்ற கூறியுள்ளார். இந்த வியத்தகு செயலின் பொருளைக் குறிக்க இதோ ஒரு கதை, ஒரு நிகழ்ச்சி!

பெர்சியா நாட்டை அறிவாற்றலும், அன்புள்ளமும் கொண்ட அரசர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். மக்களுக்குச் செய்யும் தொண்டை, இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்பதை மனதிற்கொண்டு பணிபுரிந்து வந்தார்.

ஒருநாள் பரம ஏழை ஒருவன் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதைக் காய வைத்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த இருவர் அவ்வேளை உணவை இவரோடு பகிர்ந்து உண்டனர். எப்படியோ அரசன் அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டார். அதிலிருந்து அரசர் தொடர்ச்சியாக அவ்விடத்திற்குச் சென்று அவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் அரசர் அவர்களைப் பார்த்து 'நான் உங்கள் அரசர். உங்களுக்கு வேண்டியது என்ன வென்றாலும் கேளுங்கள்" என்றார். அவர்கள் அரசரை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு வியப்பும், பாசமும் பொங்கும் உள்ளத்தோடு, 'அரசே நீர் உங்கள் அரண்மனையை விட்டு விட்டு, உமது புகழைக் களைந்துவிட்டு, இருண்ட இவ்விடத்திற்கு வந்து எங்களோடு ஒன்றாக அமர்ந்து எங்கள் கூழைக் குடித்து உம்மையும் எங்களோடு ஒருவராக்கிக் கொண்டீர். உமது பெருந்தன்மை ஒன்றே எங்களுக்குப் போதும். வேறொன்றும் வேண்டாம். என்றனர்.

merry xmasஅன்பார்ந்தவர்களே! இவ்வரசர் வெளி அடையாளமாகத்தான் தன்னே ஏழை மக்களோடு இணைத்துக் கொண்டார். ஆனால் இயேசுவோ கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்."(பிலி.2:6-8)

நாமும் இயேசு குழந்தையைப் போலத் தாழ்ச்சியில் வளர்ந்து, நமக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழ மன்றாடுவோம். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் மன்றாட்டும் கலந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com