header

கிறிஸ்துமஸ்
ஓர் அன்பின் பகிர்வு

பெறுவதைக் கட்டிலும் தருவதே இன்பம் என்ற ஆண்டவர் இயேசு கூறியதாக திருத்தூதர் பணி நூலில் 20:35 காணலாம். கடவுளுக்கு நாம் எதைக் கொடுப்பது, என்ன கொடுப்பது என்று யாருக்கும் தெரியாது. கடவுளுக்கு நாம் கொடுப்பதாகச் சொல்லி சகமனிதர்களுக்குத் தான், பணம், உடை, உணவு, உழைப்பைத் தருகின்றோம். கடவுளுக்குக் கொடுப்பது மட்டுமின்றி மனிதனை தெய்வமாகப் பாவித்துக் கொடுத்தல் பலன் தரும். அன்பு என்பது ஒரு வினைச்சொல். அது செயலில் காட்டப்படவேண்டியது. அன்பைப் பற்றி அத்தியாயங்கள் பல எழுதினாலும், ஒரு அன்பான செயலுக்கு அது ஈடாகாது.

கடவுள் உலகைப் படைத்தார். பின்பு இவர் அதன் அலங்கோலத்தைக் கண்டார்.mreey xmas இதை எப்படி மீட்பது? படைத்த உலகை அழிக்கக் கடவுளுக்கு மனமில்லை. கடவுள் தான் படைத்ததை ஆசீர்வதித்ததை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. மனிதனுக்கு இவ்வளவு வரம், வசதிக் கொடுத்திருந்தும், ஏனோ அவன் எதிர்திசையில் செல்கிறான் என்பது விளங்கவில்லை. கடவுள் ஒரு முடிவெடுத்தார். தன் ஒரே மகனை மண்ணுலகிற்கு, மரியாளின் மைந்தனாக அனுப்பினார். ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து வானத் தூதரின் மூலம் ஒப்புகைப் பெற்று, சாதாரணத் தச்சனின் இல்லத்தில் பிறக்கச் செய்தார். முதன்முதலாகப் பார்த்தவர்கள் எதார்த்த இடையர்கள், எங்கிருந்தோ வந்த ஞானிகள் பரிசளித்து மகிழ்ந்தனர். வானவர்கள் கீதம் பாடினர்.

கிறிஸ்துமஸ் என்றாலே அன்புப்பகிர்வு எனப்பொருள்படும்;. வாழ்த்து அட்டை, புனித அசிசியார் ஏற்படுத்திய குடில், பலகாரம், புத்தாடை, கிறிஸ்மஸ் தாத்தா பரிசளிப்பு எனப் பல, அன்பை வெளிப்படுத்தும் பகிர்வு. கடவுளே நீர் இவ்வுலகத்தை எவ்வளவு அன்புச் செய்கிறீர் என்று கேட்டதற்கு நான் இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று சிலுவையில் தன் கைகளை முற்றிலுமாக விரித்துக் காட்டினார்.

முழு விவிலியம் சுமார் 280 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் சுமார் 800 மொழிபெயர்ப்புகள் உண்டு. நான்கு நற்செய்திகள் மட்டும் எறத்தாழ 1200, யோவான் மட்டிலும் தனியாக 1800. ஆனால் ஒரே ஒரு வசனம் (அதுதான் யோவான் 3:16) உலகில் உள்ள சுமார் 3000 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

உலகில் அன்புக்குத் தான் பஞ்சம் ஏற்படும் என்கிறார். இன்று நாடுகளிடையே கோவில்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளுக்குக் குறைவில்லை. எல்லார்க்கும் ஏராளமான வருவாய் உண்டு. ஆனால் பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவர்கள், அதிகாரி-ஊழியர், முதலாளி-தொழிலாளி, கணவன்-மனைவி, அண்ணன்-தம்பி, முதியவர்-இளைஞர், ஆட்சிச் செய்வோர்-ஆளப்படுவோர், இவர்களுக்கிடையே அன்புப் பரிமாற்றம் இல்லையே.

கடவுளுக்குத் தெரியாத ஒன்று அன்பு செய்யாமல் இருப்பது! கயவர்கள், நாத்திகர்கள், ஊழல் புரிபவர்கள், ஓழுக்கமுடையோர் அனைவரையும் ஒன்றாகவே கடவுள் நடத்துகின்றார். வளமையில் கொழிக்கும், செழிக்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் அண்டை நாடுகளின் அவலநிலையைப் போக்காமல் வான்கோள்களுக்குப் பயண ஆராய்ச்சி மேற்கோள்வதேன்? கறுப்புதங்கம் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள், தங்கள் அருகில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை மறப்பதேன்? வளமையான பங்குத்தலங்கள் வசதியில்லாத பக்கத்துப்பங்கைப் பாராமலிருப்பதேன்? வசதியான மறைமாவட்டங்கள் மலைவாழ் மக்கள் நிறைந்த மறைமாவட்டங்களைத் தத்து எடுத்துக் கொள்ளாதது ஏன்?

ஆதிகாலக் கிறிஸ்தவர்கள், பாதளச்சுரங்களில் வாழ்ந்து, தினந்தோறும் உழைப்பின் பயனை, மூப்பர்களின் காலடியில் வைக்க, தேவைக்கேற்றாற் போலப் பகிர்ந்து வாழ்ந்த நிலை வேதாகமத்தில் மட்டும் தான் உள்ளது.

இந்தப் பகிர்வு உணர்வைத் தானே இறைவன் நம்மிடம் எதிர்பார்த்து இருக்கின்றார். அதற்குத் தானே அன்பின் பெருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

பகிர்வோம் உள்ளதை! மகிழ்வோம் உள்ளத்தாலே!
கிறிஸ்து பிறப்பு பெரு விழா நல் வாழ்த்துக்கள்.

சிந்தனைச் செல்வர்: பேராசிரியர் அ.குழந்தைராஜ்.
காரைக்குடி

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com