செபம் செய்வோமா?

ஆமென்

 • ஆங்கில அகராதியில் ஆமென் என்ற சொல்லிற்கு "ஆம், அப்படியே ஆகட்டும் என்று பொருள்.
 • எபிரேய மொழியில் இதற்கு உண்மை, உறுதி, பிரமாணிக்கம், நாணயம், நேரிய நடத்தை, மாறாத்தன்மை, உறுதியாயிருத்தல் எனப் பலவகையில் பொருள் உண்டு.

அர்த்தம் என்ன?

 • நாமும் இந்த ஆமெனை அன்றாட திருப்பலியிலும் செபங்களிலும் உச்சரிக்கின்றோம். அதன் பொருள் என்ன?
 • மனுக்குலத்தில் முதன்முதலில் ஆண்டவர் இயேசுவின் ஆமெனைச் சொன்னவர் தூய அன்னை மரியா.
 • மீட்பின் திட்டத்திற்குத் துணை நிற்க வேண்டுமெனக் கேட்டபொழுது, ஆமென் என்றார் (லூக் 1:38).
 • குழந்தையின் உயிரைக் காக்க எகிப்துக்கு ஒட வேண்டும் (மத் 2:13-18), பாஸ்கா விழாவிற்கு எருசலேம் செல்ல வேண்டும் (லூக் 2:29-52), திருமண விழாவிற்கு கானாவூர் செல்ல வேண்டும் (யோவா 2:1-11). இவற்றிற்கெல்லாம் அவருடைய ஒரே பதில் ஆமென்'
 • இறுதியாக, மகனைக் கல்வாரி அழைத்த போது துன்பகரமானச் சூழலிலே சீடர்களோடு துணையாயிருக்க வேண்டும் என்ற நிலையில் அங்கேயும் அதே சொல்லை உச்சரித்துத் தன் வாழ்வு முழுவதையும் கிறித்துவின் ஆமென் மயமாக்கினார் நம் அன்னை.
 • அவ்வாறே இறைமகன் இயேசுவும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற ஆமென்' என்று தன்னையே கையளித்தார்.

நம்முடைய “ஆமென்”

 • அன்னையும் ஆண்டவர் இயேசுவும் ஆமென் என்று வாழ்வையே உகந்த ஏற்புடைய காணிக்கையாகக் கடவுளுக்கு செலுத்தியதே திருப்பலி
 • திருப்பலியில் ஆண்டவர் இயேசு நம் சார்பில் தந்தைக்குச் செலுத்தும் புகழை ஆமோதிக்கும் வண்ணம் ஆமென் என்று சொல்கிறோம். இது நாம் ஆண்டவருக்கே பணிவிடை செய்கிறோம் என்பதன் வெளிப்பாடு.
 • செபமாலை செபிக்கும் பொழுதும் ஆமென் சொல்கிறோம். இந்த ஆமென் அன்னையின் புகழுக்கும் அவரது வேண்டுதலுக்கும் சொல்லப்படுவது மட்டுமல்ல. மாறாக அன்னை வழி கிறித்துவினுடைய செபத்திற்குச் சொல்லப்படும் ஆமென் ஆகும். ஏனெனில் கிறித்துவின் வழியாகச் செபிக்காத செபம் உண்மை செபம் இல்லை. இவ்வுண்மைகளை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில் 'ஆமென்' என்னும் பொக்கிஷத்தைப் பயன்படுத்துவோம்.

நாம் சொல்லும் “ஆமென்” வரும் நாட்களில்

 • அன்பு, பொறுமை, கீழ்ப்படிதல் உள்ளவர்களாக நம்மை மாற்றட்டும்.
 • காலத்தை உயிராகக் கருதி வீணாக்காது வாழும் வீரக்குழந்தைகளாக நம்மை வழி நடத்தட்டும்.
 • பொய்த்தனங்களை, கோள்மூட்டும் பேச்சுக்களை விடுத்து பொறுப்புள்ள பிள்ளைகளாக நம்மை வளர்க்கட்டும்.
 • மன இறுக்கங்கள் விட்டு பெற்றோர் - பிள்ளை உறவென்ற நெருக்கத்தை நமக்குள் உருவாக்கட்டும்.
 • மகிழ்ச்சியூட்டும் நற் சுதந்திரத்தை நமக்குள் முயற்சியாக்கட்டும்.
 • அருவியைப் போல இறைவனுக்குப் பிரியமுள்ள பிள்ளைகளாக நமை காக்கட்டும்.