செபம் செய்வோமா?

உமது பெயர் தூயது எனப் போற்றம் பெறுக

இயேசுவின் செபம் முதலில் இறைவனின் பெயருக்கு வணக்கம் செலுத்த அழைக்கின்றது. இறைவன் மோசேக்குக் கொடுத்தக் கட்டளைகளை விடுதலைப்பயண நூலில் காண்கிறோம். அதில் இரண்டாவது கட்டளை, "உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே" (விப 2007) என்பதாகும். இறைப்பெயருக்கு நாம் கொடுக்கும் வணக்கமும், மரியாதையும் ஆழ்ந்த நிரந்தர இறை உணர்வை நாம் கொண்டுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பெயர்

  • யூதர்களுக்குப் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
  • ஒருவர் பெயர் அவரது குணத்தையும ஆளுமையையும் பாரம்பரியத்தையும் குறிக்கும்.
  • எரியும் முட்புதரில் இறைவன் மோசேயை அழைத்து அவருக்குப் புதியதொரு பணியைக் கொடுக்கின்ற போது மோசே ஆண்டவரிடம் எழுப்பிய கேள்வி, "இதோ இஸ்ரயேல் மக்களிடம் சென்று, உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவன் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால் அவர்களுக்கு என்ன சொல்வேன்? என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.
  • கடவுள் மீண்டும் மோசேயை நோக்கி, "நீ இஸ்ரயேல் மக்களிடம், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர் தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே (விப 3:13-15).

இறைவனின் பெயர்

இறைவன் தன் பெயரை இரண்டு விதங்களில் தெளிவுப்படுத்துகிறார்.

  • ஒன்று “இருக்கின்றவர் நானே” என்று தனது பெயரைக் கொடுத்து தனது குணத்தையும் ஆளுமையையும் அறிவாற்றலால் புரிந்து கொள்பவர்களுக்குச் சொல்கிறார்.
  • மற்றொன்று சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலே, அவர்களின் பாரம்பரியப் பின்னணியில் "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவர், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் என்று வெளிப்படுத்துகின்றார்.
  • இயேசுவும் சதுசேயருக்கு உயிர்த்தெழுதலைப் பற்றியும் இறைவனின் உண்மையான தன்மை பற்றியும் விளக்கம் அளிக்கையில், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள். என்று இறைவனே தன்னைப் பற்றி கூறியிருக்கிறார் என்றும் அவர் இறந்தோரின் கடவுள் அல்ல மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார் (மத் 22:31-32)

குழந்தாய் உரசிப்பார்!

இறைவன் முற்றிலும் தூயவர், நீதியானவர், அவரைத் தந்தையெனப் பிரகடனம் செய்த இயேசுவும் தூயவர், நீதியானவர் இறைவனுக்குரிய தூய்மையும், நீதியும் மனிதராகிய நமது வாழ்விலும் மிளிர வேண்டும். “இறைவனின் திருப்பெயர் தூயதெனப் போற்றப் பெறுக” என நாம் வேண்டுகிறபோது பின் குறிப்பிடப்படுவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

  • இறைவன் என்றும் தம் பெயருக்கேற்ப தூயவராக வாழ்கின்றார் என்பதை நாம் நம்பி ஏற்றுக் கொள்கின்றோம். அதே வேளையில், "உமது பெயரை அறிந்தவர்கள் உமது பேரில் நம்பிக்கை வைக்கிறார்கள்" (திபா 9:10) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப அவரை அறியாத மக்களுக்கு நம் தூய செயல்பாடுகளின் வழியாக அறிவிக்கிறோம் என்ற நிறைவினையும் பெறுகிறோம்.
  • எத்தகைய இறைவன் நம் ஆண்டவர் என்பதையும் நாம் அறிக்கையிடுகிறோம். நாம் வணங்கும் இறைவன் நீதியுள்ளவர், தூயவர், நேர்மையுள்ளவர், அன்புள்ளவர். இந்த இறைவனின் தூயப் பண்புகளை நம் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்த உறுதிமொழி எடுக்கிறோம்.
  • நாம் வணங்கும் கடவுள் தூயவரெனில் அவர் படைத்த அனைத்தும் தூயது. தூயதாக அவர் நம்மிடம் கொடுத்த படைப்புக்களை நம் தீவினைகளால் அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? நம் சிந்தனைகள், செயல்பாடுகள் என்றும் தூயதாகத் துலங்கும் போதுதான் தூயவரான கடவுளை நாம் நம் வாழ்வில் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று அர்த்தம்.
  • நாம் ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்யாமல் தூய இதயம் கொண்டு வாழ்கின்றபோது இறைவனின் பெயர் போற்றப்படுகின்றது. நீதிக்கான செயல்பாடுகளில் களம் இறங்கும் போதும், அநீதி நடக்கின்றபோது தட்டிக் கேட்பதிலும், நேர்மையை இடைக்கச்சையாக அணிந்துகொண்டு செயல்படுவதன் மூலமும், முழுமனித விடுதலைக்காக ஒன்றுபட்டு உழைக்கின்ற போதும் அவரது நாமம் வாழ்த்தப்படுகிறது.