செபம் செய்வோமா?

உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!


 • இறைவனின் திருவுளம் எது என்பதைத் தங்கள் வாழ்வில் ஆய்ந்து அறிந்து நடைமுறைப்படுத்தியவர்கள்தான் இன்று புனிதர்களாக, மறைசாட்சிகளாக, விசுவாசிகளாகப் போற்றப்படுகின்றனர்.
 • பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தொடங்கி புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாள் எனப் பலர் இறைவனின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்திருக்கிறார்கள்.
 • இறைவனின் திருவுளம் தங்கள் வாழ்வில் அரங்கேற வழிவகுத்திருக்கிறார்கள்.
 • "இதோ ஆண்டவரின் வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்ற அன்னையின் வார்த்தைகள் அவர் இறைவனின் திருவுளத்திற்குத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்ததற்கு ஓர் உதாரணம்.

நாம் உரைப்பது

 • ஒவ்வொரு முறையும், உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல “மண்ணுலகிலும் நிறைவேறுக” என்று வானகத் தந்தையிடம் வேண்டும்பொழுது இரண்டு செயல்பாடுகளுக்கு நம்மை நாம் அர்ப்பணிக்கின்றோம்.
 • ஒன்று, இறைவனின் விருப்பத்திற்கு நமது விருப்பங்களை அடிபணியச் செய்பவராக மாறுகின்றோம்.
 • மற்றொன்று இறைவனின் திருவுளம் நம் வழியாகச் செயல்பட ஆம் என்ற பதில் மொழியினைக் கொடுப்பவராக மாறுகின்றோம்.

இறைவனின் விருப்பம்

முதலாவது, இறைவனின் விருப்பத்திற்கு நமது விருப்பங்களை அடிபணியச் செய்தல்.

 • மனித இயல்பில் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பு வெறுப்புகள் உண்டு.
 • நாம் நினைக்கின்ற விருப்பங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று ஆவல் கொள்வதும், அவை நடந்தேறுகின்றபோது மகிழ்வு அடைவதும் இயல்பு.
 • அதே வேளையில், நாம் நினைத்தது நடக்காதபோது வருத்தம் கொள்வதும், இறைவன் கைவிட்டு விட்டதாக நினைப்பதும் உண்டு.
 • ஆனால் இறைவனின் திருவுளம் நம் வழியாகச் செயல்படவே இவை யாவும் நிகழ்கின்றன என்ற ஆணித்தரமான நம்பிக்கை பிறக்கின்றபோது மகிழ்ச்சி பிறக்கிறது.

குழந்தாய் உரசிப்பார்!

நமது விருப்பத்தை இறை விருப்பத்தற்கு அடிபணியச் செய்யும் போதுதான் “உமது திருவுளம் நிறைவேறுக” என்று வேண்டுவது அர்த்தம் பெறுகிறது.

 • ஒவ்வொரு நாளும் இறைவன் விரும்புகிற படி நமது கடமைகளை நிறைவேற்றுகிறோமா?
 • பல்வேறு நேரங்களில் நம் வாழ்வில் ஏற்படும் சரிவுகளையும் நெளிவுகளையும், தோல்விகளையும், இழப்புகளையும் இறைவனின் திருவுளம் என்று யோபுவைப் போல ஏற்றுக் கொள்கிறோமா?
 • இல்லை, வழக்கம்போல் இறைவன் கைவிட்டு விட்டதாய் எண்ணிப் பில்லி சூனியத்திலும், கணக்குக் கேட்பதிலும், சோசியம் பார்ப்பதிலும் நாட்களை வீணடிக்கிறோமா?

இறைவனின் திருவுளம்

இரண்டாவது, இறைவனின் திருவுளம் நம் வழியாகச் செயல்பட “ஆம்” என்ற பதில் மொழியினைக் கொடுப்பது.

 • எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதும், இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதும் இறைவன் தன் மக்களுக்காகக் கொண்டிருக்கின்ற அன்பின் நிலைப்பாடும் திருவுளமும்.
 • இந்த நிலைப்பாட்டில் வாழ்வதற்காக நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் வழியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே ஆண்டவருடைய திருவுளம் நம் வழியாகச் செயல்பட நாம் ஒரு கருவியாக மாற வேண்டும்.

குழந்தாய்! உரசிப்பார்!

 • புத்திக்கூர்மையுடன் திட்டமிட்டு இயலாத மனிதர்களுக்கு இன்முகத்தோடு உதவுவோம்.
 • நல்ல ஆலோசனையைக் கேட்டு பிறருக்கு மரியாதை அளிக்கப் பழகுவோம்.
 • வாழ்வில் தடுமாற்றத்தால் தன்னந்தனியாக அழுபவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவோம்.
 • துன்பப்படுவோருக்கு துணிச்சலோடு உதவி செய்யப் பழகுவோம்.
 • முள் போன்ற வார்த்தைகளை, தடுக்கி விழச்செய்யும் கோபத்தை மாற்றி அன்பு, உழைப்பு நேர்மை நிலவ பாடுபடலாமே சின்னச் சிட்டுகளே!