3.இயேசுவின் இறைவேண்டல்


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.


குழந்தைகளே! இயேசு தாம் பாடுபடுவதற்கு முன்பாக கெத்சமனி என்னும் பெயர் கொண்ட தோட்டத்துக்குச் செபிக்கச் சென்றார் என்பது நமக்கு தெரியும் எருசலேம் நகரை ஒட்டி தெற்குப் பகுதியில் கெதரோன் பள்ளத்தாக்கு உள்ளது. கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்தவுடன் நாம் காண்பது கெத்சமனி தோட்டம். கெதரோன் பள்ளத்தாக்கின் கிழக்கே ஒலிவ மலை உள்ளது. இந்த ஒலிவ மலையில்தான் இயேசு தம் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக் கொடுத்தார்.

இங்கு கி.பி. 1875-இல் ஒரு கோவில் கட்டப்பட்டது. இதனை கர்த்தர்கற்பித்தசெப ஆலயம் என்கிறோம். இது உரோமானிய முறைப்படி கட்டப்பட்டதாகும். நாற்புறங்களிலும் தாழ்வாரங்கள் உள்ளன. இந்தத் தாழ்வாரங்களில் ஏறக்குறைய 62 மொழிகளில் பல வண்ணப் பளிங்குக் கற்களில், பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் தமிழ் மொழியிலும் அந்த செபம் எழுதப்பட்டிருப்பது நமக்குப் பெருமையே!