செபம் செய்வோமா?

உமது ஆட்சி வருக

டேக் ஹேமரால்டு-1953 முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டவர். கிறித்துவாலும் கிறித்தவ மதிப்பீடுகளாலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக ஆப்பிரிக்கா செல்லும் போது விமான விபத்தில் சிக்கி உயிர் துறந்தார்.

அவர் இறந்த பின்பு அவருடைய அறை காலி செய்யப்பட்ட போது ஒவ்வொரு நாளும் அவர் எழுதி வந்த குறிப்பேடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தன் இறப்பிற்கு பின் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டுகோள் வைத்திருந்தார்.

Markings" என்ற பெயரில் புத்தகமாக அவை வெளியிடப்பட்ட போது இலட்சக்கணக்கான பிரதிகள் விரைவில் விற்றுத் தீர்ந்தன. அந்தப் புத்தகத்தில் ஒரு பகுதியில் பின்வருமாறு எழுதபபட்டிருநதது. "இறைவா! உம் பெயர் புகழப்படுவதாக! என் பெயர் அல்ல, - உம் அரசு வருக! என் அரசு அல்ல,உம் விருப்பம் செய்யப்படுவதாக! என் விருப்பம் அல்ல"

இறையாட்சி

 • அவர் ஆண்டார் இவர் ஆண்டார் எல்லார் ஆட்சியிலும் சனங்களே மாண்டார்கள் என்று சொல்லுமளவிற்கு இவ்வுலக ஆட்சிகள் உள்ளன. ஆனால் ஆண்டவரின் ஆட்சி அப்படிப்பட்டதல்ல; மாறாக, இறையாட்சி.
 • "ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக் 4:18-19) என்று கடவுளின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவ வந்ததை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
 • எசாயா (61:1-2) இறைவாக்கினரின் இந்த வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறியதையும் நாம் காண்கிறோம்.

நம்மிடம் இறையாட்சி

 • இறையாட்சி என்பது விடுதலை வாழ்வு இன்றைய காலச்சூழலில் இறைவனின் ஆட்சி இறையாட்சிடையே குடிகொள்ள வேண்டுமென்றால் நாம் இரண்டு தளங்களில் விடுதலைப் பெற வேண்டும். ஒன்று அகவிடுதலை, மற்றொன்று புறவிடுதலை.
 • நீ விடுவிக்கப்பட வேண்டுமானால் உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு' என்று எரேமியா (414) சொல்வது அகவிடுதலையைப் பற்றியே. நம் இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஊனியல்பின் செயல்கள் (கலா 5:19-21) அனைத்தும் நம் அகத்தைப் பாதிக்கின்றன.
 • நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதி மத இன வேறுபாடுகளைக் களைவதும் உயர்ந்தவன் தாழ்ந்தவன், படித்தவன் படிக்காதவன் வேற்றுமைகளை உடைத்தெறிவதும் புறவிடுதலைக்கான தளங்களாகும்.
 • இத்தகைய பாதிப்புகளிலிருந்து நாம் விடுதலை பெற்று இறைவனின் ஆட்சியைக் கட்டி எழுப்புவது அவசியம்.
 • அகவிடுதலைத்தான் புறவிடுதலைக்கு ஊன்றுகோல்,
 • குழந்தாய்! உரசிப்பார்

  “உமது ஆட்சி வருக” என்று சொல்லிக்கொண்டே அன்றாட வாழ்வில் சாத்தானின் ஆட்சிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தால் நாமும் இயேசுவின் காலத்துப் பரிசேயர்களே! நாமும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே!

  குழந்தைகளே! உமது ஆட்சி வருக என முழக்கமிடும் ஒவ்வொரு வேளையும் நாமும் இறையாட்சி இம்மண்ணில் மலரத் தேவையான செயல்பாடுகளில் களமிறங்க வேண்டும். பல்வேறு தீவினைச் சக்திகளால் கட்டுண்டு கிடக்கின்ற சமூகத்தைச் சீர்படுத்த களமிறங்க வேண்டும். இதுவே இறையாட்சியின் நோக்கம். அப்படியெனில் இனி வரும் நாட்களில்,

  • சாத்தானின் செயல்பாடுகளான சாதீய மதவெறித் தனங்களிலிருந்து விடுபடுவோம் (கொலோ 113-14). வேற்றுமைப் பாராட்டி மனிதத்தைப் பிரிப்பதை விலக்குவோம்.
  • சாவின் தன்மைகளான உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் போன்ற பேதமைகளை ஒழிக்கப் பாடுபடுவோம். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம்.
  • சண்டை, பிரிவினை, கட்சி மனப்பான்மைகள் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்போம் (எபி 214-15).
  • பாவத்தின் கூறுகளான பண்பற்ற - பாசமற்ற, அன்பற்ற - ஆறுதலற்ற உறவற்ற - உண்மையற்ற தன்மைகளை விலக்குவோம் (1 தெச 110).
  • படித்துச் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் சமூகத்தில் மக்கள் பணியாற்றும் நல்ல தலைவர்களாக மாறவும் முடிவெடுப்போம்.
  • சமூக நலன் சார்ந்த உயர் கல்விகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம்.