செபம் செய்வோமா?

Placeholder image

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்!

தன்னிலை உணர்ந்து சமூக அக்கறை கொண்டவர்களாக வளரும் குழந்தைகள் நமக்கு வேண்டும். "செயமே வாழ்வு, வாழ்வே செபம்' என்னும் ஆன்மீக அனுபவங்களை நம் குழந்தைகள் கற்று பெற்று அனுபவிக்க வேண்டும். அதற்கு அன்றாடம் நம் குழந்தைகள் சொல்லிடும் அடிப்படை செபங்களின் அர்த்தத்தை வாழ்வோடு இணைத்து கற்றிடல் வேண்டும்.

Placeholder image

குழந்தைகளே!

பெற்றோருக்காகச் செபியுங்கள் !
நண்பர்களுக்காகச் செபியுங்கள் !
ஏழைகள் ஏற்றம் பெற செபியுங்கள் !
சமத்துவச் சமூகத்திற்காகச் செபியுங்கள் !
இயற்கை வளம் பாதுகாக்கப்படச் செபியுங்கள் !
NextPrev

முன்னுரை

குழந்தைகள் இயேசப்பா சொல்லுங்க, 
கையெடுத்துக் கும்பிடுங்க, 
தொட்டு இயேசப்பாவுக்கு உம்மா கொடுங்க. 
பெற்றோர் குழந்தைகளின் மழலைப் பருவத்தில் 
ஊட்டும் ஆன்மீகப் பாடம் இது. 
இயேசப்பா எனக்கு நல்ல புத்திய தரணும், 
நல்ல பிள்ளையா வளரணும், 
அம்மா அப்பாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கணும், 
பெரியவங்கள மதிக்கணும். 

இப்படியெல்லாம் செபிக்க வேண்டுமென்று நம் பெற்றோரும், நல்வழிப்படுத்தும் பெரியோரும் குழந்தைகளாகிய நம்மிடம் சொல்வது உண்டு. சொல்வதை நாம் செய்கையில் அதைப்பார்த்து அவர்கள் மெய் மறந்து சிரிப்பதும், சந்தோசப்படுவதும் உண்டு. அவ்வாறே, ஆலயத்தில் சத்தமாகச் செபங்களைச் சொல்லும் சிறுவர் சிறுமியர்களைக் கண்டு எல்லோரும் ஆனந்தமடைவது உண்டு.

நமது செபங்கள்

உடலிலிருந்து, உதட்டிலிருந்து, மனதிலிருந்து,ஆவியிலிருந்து. எனப் பலரும் பல நிலைகளில் செபங்களை சொல்வதுண்டு. ஆனால் உண்மையிலே செபிக்கிறோமா?

குழந்தைகளே சுயஆய்வு செய்யுங்கள்!

என் செபத்தை எந்த நிலையிலிருந்து நான் எழுப்புகிறேன்? உடல் அளவிலா? உதட்டளவிலா? உள்ளத்தளவிலா? ஆவிநிலையிலா?

எனது பக்தி முயற்சிகளின் உள்ளிட்டை நான் அறிந்திருக்கின்றேனா?

பக்தி முயற்சிகள் என் வாழ்வை வளப்படுத்துகின்றனவா? அல்லது முழுமையாக்குகின்றனவா?

குழந்தைகளே! செபம் நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம். நல்ல பிள்ளைகளாக வாழ வளர, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க, இறைபராமரிப்பை உணர, புனிதர்களாக மாறச் செபம் நமக்குத் தேவை.

செபம் என்றால் என்ன தெரியுமா?

இறைவன் எங்கும் இருக்கின்றார், அனைத்திலும் இருக்கின்றார், எப்போதும் இருக்கின்றார். அவரது உயிருள்ள உடனிருப்பை உணர்வதற்கு அடிப்படையாக இருப்பது செபம். புனிதர்கள், ஆன்மீக மனிதர்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இதனை நன்கு நாம் அறிந்து கொள்கிறோம்.

உதாரணமாக, "கடவுளை நான் நம்புவதற்குக் காரணம் தினம்தோறும் நான் செபிக்கும் செபமே" என்கிறார் கார்ல் ரானர். "செபத்தில் மிக முக்கியமானது நிறையச் சிந்திப்பது அல்ல. மாறாக, நிறைய அன்பு செய்வதே" என்கிறார் தூய அவிலா தெரசா. "செபத்தால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் வேறு எதனாலும் தீர்க்கப்பட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை தான் நான் இறைவனைத்தேடிச் செல்வதற்கான அடிப்படைக் காரணம்" என்றார். ஆபிரகாம் லிங்கன். சுருங்கக்கூறின், கடவுளால் மட்டுமே நிரப்பப்படக்கூடிய பகுதி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் உணர்ந்து கொள்வோம்.

அதே வேளையில் திருச்சபை பாரம்பரியம் சில செபங்களை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவற்றை வெறுமனே உச்சரித்தால் இறையனுபவம் நாம் பெற முடியாது.

நாம் செபிக்கும்போது பல வேளைகளில் நம் வாய் மட்டும் பேசுகிறது. நமது எண்ணங்களும் சிந்தனைகளும் எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் அன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் "தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென்!” என்ற சிலுவை அடையாளச் செபத்தின் அர்த்தம் என்ன? அது வாழ்விற்குக் கொடுக்கும் செய்தி என்ன? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

செபமாலையின்போது நாம் பயன்படுத்தும் மங்களவார்த்தைச் செபத்தின் பொருள் உணர்ந்துச் செபிக்கின்றோமா?

செபிக்கக் கற்றுத் தாரும் என்றபோது சீடர்களுக்கு இயேசு கற்றுக் கொடுத்த இறைவேண்டலின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துள்ளோமா?

இந்தப் புத்தகம்

நாம் அன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் அடிப்படைச் செபங்களை எப்படி அவற்றின் பொருள் உணர்ந்து செபிப்பது?
பொருளுணர்ந்துச் செபிக்கும்போது எப்படி இந்தச் செபங்கள் இறையனுபவமாக மாற முடியும்?
இறையனுபவம் எப்படி நம்மைச் சமூக அக்கறை கொண்ட மகனாக அல்லது மகளாக மாற்ற முடியும்?

இது போன்ற தேடல் வேட்கைக்கு உங்களை அழைத்துச் செல்வதுதான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு ஒரு சில செப முறைகளையாவது நீங்கள் கைக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அருள்பணி ம.டைட்டஸ் மோகன்