செபம் செய்வோமா?

06 இயேசுவும் ஆசி பெற்றவரே


  • "தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை" என்பது நம் முன்னோர் வாக்கு.
  • தாயைப் போல அல்லது தந்தையைப் போல இருக்கிறான்(ள்) என்று பலரும் நம்மைப் பாராட்டியிருப்பார்கள்.
  • தாய் தந்தையரின் குணநலன்களை வைத்துப் பிள்ளையையும், பிள்ளை வளரும் முறையினைக் கொண்டு தாய் தந்தையரையும் புகழ்வது இயல்பு. அவ்வாறே அன்னை மரியாள் மற்றும் இயேசுவின் தாய் - சேய் உறவும் இருந்தது.
  • உடன்படிக்கையின் பேழையைப் போல மனுவுருவரன வார்த்தையைத் தாங்கியதால் ஆசீர்வதிக்கப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஆலயமானார் அன்னை மரியாள்.
  • புனிதப்படுத்தப்பட்ட ஆலயத்தில் கருவாகி உருவானதால் குழந்தை இயேசுவும் ஆசீர் பெற்றவரே!

இயேசுவின் பெயர்

  • "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார் உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" (லூக் 1:31-33).
  • இவ்வாறு முதன் முதலில் இயேசு' என்னும் பெயரைச் சூட்டுமாறு கபிரியேல் தூதர் அன்னைக்கு அறிவுறுத்தியிருந்தார்.
  • இயேசு என்னும் பெயர் கடவுளால் தன் மைந்தனுக்கு சூட்டப்பட்ட பெயர்.
  • இப்பெயர் தம் அன்பு மகனுக்கு தந்தை கனிவோடு சூட்டிய பெயர். எனவே இப்பெயர் வல்லமை மிகுந்தது. பொருள் நிறைந்தது. பூமியில் மானிடருக்கு உயர்வை என்றும் பொழிவது.
  • இக்கருத்தையே தூய பவுலடியார், "கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறித்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்" (பிலி 2:9-11) என்கிறார்.
  • நற்செய்தியில் இயேசுவின் பெயருக்கு பேய்கள் அஞ்சுவதையும், இயேசுவின் பெயரை உச்சரிப்பதால் நோய்கள் குணமாவதையும் காண்கிறோம். சுருங்கக்கூறின், வலிமையுடன் செயலாற்றும் இயேசுவின் பெயர் தன்னலத்தையன்றி பிறர் நலத்தையே போதிக்கின்றது.

குழந்தைகளே கற்க நிற்க!

இயேசுவும் ஆசி பெற்றவரே என்று பறைசாற்றும்போது நம் பெயர்களையும் நினைவில் கொண்டு வருவோம். இன்று சிலரது பெயர்களைக் கேட்டாலே பீதியும் பேதியும் வந்து விடுகிறது.

  • எல்லா மனிதருடைய பெயர்களும் மதிப்பு வாய்ந்தவை. ஏனெனில் மனிதர் கடவுளின் சாயல். இந்த உணர்வு நம்மிடம் உள்ளதா?
  • மற்றவர்களைப் பட்டப் பெயர்களாலும், இழிவான பெயர்களாலும் அழைப்பது அநாகரீகம் என்பதை உணர்ந்துள்ளோமா?
  • திரைப்பட நடிகர் நடிகைகளின் பெயர்களைத் தங்களது பெயராக மாற்றிக் கொள்ளத் துடிக்கும் போலி முகங்களைக் களைய வேண்டாமா?
  • நமது பெயரின் அர்த்தம், பெற்றோர் பெயரிட்ட விதம், நம் பெயர் கொண்ட வரலாற்று மனிதர்கள் இவற்றையெல்லாம் கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?
  • நமது பெயரினைக் கேட்பவர்கள் அல்லது உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணங்களை நம் செயல்பாடுகள் கொடுக்கின்றன?
  • நமது நற்செயல்பாடுகளால் நற்பெயரினைக் கொடுக்கின்றோமா?
  • இயேசுவின் பெயரைக் கேட்டவர்களும் உச்சரித்தவர்களும் நலம் அடைந்தனர்; வளம் அடைந்தனர். நமது பெயரைக் கேட்பவர்கள் நலமும் வளமும் அடைகின்ற விதத்தில் நாம் செயல்படுகின்றோமா?