செபம் செய்வோமா?

01 அருள் மிகப்பெற்ற மரியே


அருள்

  • அருள் என்பதற்கு நம் தமிழ் இலக்கியத்தில் 'அன்பின் கனியென அர்த்தம். ஆங்கில அகராதியில் மகிழ்வு, இன்பம், யோகம், நன்மை எனப் பல அர்த்தங்கள் உண்டு.
  • தூய பவுல் அடிகளார் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், "தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார் தான் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோராக்கினோரைத் தம் மாட்சியில் பங்குப்பெறச் செய்தார்" (உரோ 8:30) என்கிறார்.
  • மனித மீட்பிற்காக கடவுள் மரியாவை முன் குறித்து அழைத்தார். மரியா கடவுளின் அருளால் முழுமையாக மாற்றமடைந்தார். எனவே அருள் மிகப்பெற்றவரே என்பது அன்னை மரியாவுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட தனித்துவமான ஆசீர்.
  • கடவுள் மரியாவைப் பொருத்தமட்டில் மிகவும் கரிசனையோடு தாராள மனதோடு பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். உலகில் எந்த மனிதருக்கும் கொடுக்கப்படாத பெருந்தன்மையை, அருளை கடவுள் மரியாவுக்குத் தருகிறார்.

அருள் பெற வழி

  • "இதோ ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக் 138) என்று தன்னையே இறைத்திருவுளத்திற்கு அர்ப்பணித்ததால் தந்தையின் மாட்சியில் ஆட்சி செய்யும் இயேசுவைப் போல் மரியாவும் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டு அரியணையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
  • நம் அன்னை இறைவார்த்தையை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவர். தன் மகன் இயேசுவுக்கு நாள்தோறும் இறைவார்த்தையை போதித்தவர். இயேசு 12 வயதில் போதகர் நடுவில் அமர்ந்து இறைவார்த்தையை விளக்கிக் கொண்டிருந்தது இந்த உருவாக்கமே ஆகும்.
  • அன்னை மரி நம் தாய். ஆகவே நமக்கும் அருள் பெறும் வழிமுறைகளைத் தன் வாழ்வால் கற்றுத்தருகிறார்.
  • "அருள் நிறைந்தவளே" என்று ஒவ்வொரு முறையும் அன்னையை நாம் அழைக்கும்போது இறைவனின் ஆசீரைப் பெறுகின்றோம்.
  • இறைவனின் ஆசீர் இவ்வுலகத்தில் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்பதை அன்னை வழியாக நமக்குக் கற்றுத் தருகிறது.
  • அன்னையின் பெயரை உச்சரித்துக்கொண்டு, வாழ்வின் செயல்பாடுகளில் நல்லது கண்டு, துணிவுடன் கடவுளின் அரியணையை அணுகிச் செல்வோமெனில், அவர் நம்மை எல்லா நலன்களாலும் நிரப்புவார். (2 கொரி 9:8)

குழந்தைகளே கற்க நிற்க!

  • அன்றாடம் விவிலியத்திலிருந்து குறைந்தது ஒரு அதிகாரமாவது வாசிப்போம்.
  • வாசிக்கின்ற இறைவார்த்தை சுட்டிக்காட்டும் மதிப்பீடுகளை நாம் கடைப்பிடிப்போம்.
  • இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை செபத்தின் உதவியால் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படுவோம். இவற்றைக் கடைப்பிடித்தால் அருள் வாழ்வில் நாமும் வளரலாம்.