செபம் செய்வோமா?

05 உம்முடைய திருவயிற்றின் கனியாகிய


 • அன்னை மரியாள் மாசற்றவர். கருவிலே மாசின்றி உருவானவர். தனிப்பட்ட சலுகை வழி அருள் பெற்றாரென திருச்சபை பறைசாற்றுகிறது.
 • லூர்து நகரில் அன்னை மரியாள் பெர்னதெத்துக்குக் காட்சியளித்தபோது, "நாமே அமல உற்பவம்" எனத் தம்மை வெளிப்படுத்தினார்.
 • எனவே பிறக்கும் பொழுதே மாசில்லாதவராகத் தோன்றிய அன்னை மரியாள், தூய ஆவி வழி ஆலயமாக அர்ச்சிக்கப்படுகின்றார்.
 • கடவுள் நம்மைப் படைத்திட நம் பெற்றோர், குறிப்பாக அன்னையர் தியாகம் பல செய்கின்றனர்.
 • பத்து மாதம் நம்மைத் தம் கருவறையில் தாங்கிய தாயின் கருப்பை உண்மையில் பேறுபெற்றது.
 • கடவுளின் படைப்புத் திட்டம் தன் வழியாய் நடப்பதற்கு இசைவு தெரிவிப்பதால் அது ஆசீர்வதிக்கப்பட்டது.
 • கருவிலே வளரும் குழந்தை பிறந்த பின் வளரும் விதத்தால், நன்னடத்தையால் மீண்டும் அவனை(ளை)த் தாங்கிய கருவறைக்குப் பெருமையே!
 • இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணொருத்தி, "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவள்" (லூக் 11:27-28) என்று குரலெழுப்பியது அன்னைக்கு பெருமையே!

அன்னைமரியின் தியாகம்

அன்னைமரி தன் திருவயிற்றின் கனியாகிய இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக எத்தகைய தியாக முயற்சிகளை மேற்கொண்டார் என்பது நமக்குத் தெரியும்.

 • கணவரை அறியாச் சூழலிலும், கபிரியேல் தூதரின் மங்கள வார்த்தைக்கு, "இதோ ஆண்டவரின் அடிமை" (லூக் 138) என்று சொல்லி தன்னையே கடவுளுக்கு முழுமையாக அர்ப்பணித்தார்.
 • ஏரோது அரசனால் குழந்தைக்கு ஆபத்து என்று உணருகின்றபோது குழந்தையைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
 • இறைவார்த்தையை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தது மட்டுமல்லாமல் தன் மகன் இயேசுவுக்கு நாள்தோறும் அதை எடுத்துரைத்தார்.

குழந்தைகளே கற்க நிற்க

இறைமாட்சியைத் தாங்கும் பேறுபெற்ற ஆலயமே என அன்னையை வாழ்த்துகின்றோம். இந்த வாழ்த்தொலி நம் அன்னையருக்கும் குழந்தைகளாகிய நமக்கும் பொருந்துவது எப்போது?

 • கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்று கண்டறியும்முயற்சியை புறந்தள்ளும்போது, கருவிலிருக்கும் சிசு விற்கு கல்லறைக் கட்டும் போக்குகளைக் கைவிடும்போது, கருவிலிருக்கும் சிசுவினை நன்கு பாதுகாக்கநம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, நம் அன்னையரின் திருவயிற்றில் உருவாகும் கனியும் ஆசி பெற்றதாக அமையும்.
 • சமைஞ்ச பிள்ள மாதிரி இலட்சணமாய் இரு, சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பொம்பள சிரிச்சா போச்சி புகையிலை விரிச்சா போச்சி, அடித்தாலும் புருசன் அனைத்தாலும் புருசன், பொட்டக்கழுத, சனியன், செலவு போன்ற ஆணாதிக்க மனநிலைகளை, சொல்லாடல்களை வேரறுக்கும்போது தாயின் வயிற்றில் வளரும் கனி ஆணோ பெண்ணோ எதுவாக இருப்பினும் ஆசி பெறும்.
 • தொட்டிலை ஆட்டுகின்ற கரங்களே உலகை ஆளுகின்ற கரங்கள்(டபுள்யு), கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால்தான் தாயைப் படைத்தார் (யூத பழமொழி), என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றிற்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன் (ஆபிரகாம் லிங்கன்). இப்படிப்பட்ட பெண்மையின் தியாக அனுபவங்களை நாம் உணரும்போது ஒவ்வொரு தாயின் கருவறையும் உயிர்பெறும்.
 • குழந்தைகளாகிய நாமும் பெற்றோரை அன்பு செய்து, மதித்து நல்லொழுக்கத்துடன் வாழும் போது நம்மை பெற்றெடுத்த கருவறையும் ஆசீர் பெறும்.
 • "உங்களுக்கு என்னத் தெரியும்" என்று கேட்டு பெற்றோரை மனநோகச் செய்யாமல் அவர்களது தியாகங்களை உணர்ந்து செயல்படும்போது நம் அன்னையரின் கருவறையும் இன்புறும்.