யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 20

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 20

1 பின்னர் வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன.

2 அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்:

3 பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்: இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

4 பின்பு நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை: அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதுமில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.

5 இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

6 இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்: அவர்கள் தூயோர் ஆவர். அவர்கள் மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய் இருப்பார்கள்: கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள்.

7 அந்த ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும் சாத்தான் சிறையிலிருந்து கட்டவிழ்த்து விடப்படுவான்.

8 மண்ணகத்தின் நான்கு திக்குகளிலும் உள்ள நாடுகளை, அதாவது கோகு, மாகோகு என்பவற்றை ஏமாற்றவும், அங்கிருந்து கடல் மணல் போன்ற பெருந் தொகையினரைப் போருக்கு ஒன்று திரட்டவும் அவன் புறப்பட்டுச் செல்வான்.

9 அவர்கள் மண்ணுலகெங்கும் பரவிச் சென்று, இறைமக்களின் பாசறையையும் கடவுளின் அன்புக்குரிய நகரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், நெருப்பு வானத்திலிருந்து வந்த அவர்களைச் சுட்டெரித்தது.

10 பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்ட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.

11 பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.

12 இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

13 பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

14 சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.

15 வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com