யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 17

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 17

1 ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள் ஒருவர் வந்து என்னோடு பேசி, “வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன்.

2 மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறி கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

3 அப்பொழுது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பெற்ற என்னை அந்த வானதூதர் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றார். அங்கே கருஞ்சிவப்பு விலங்கின்மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். அவ்விலங்கின் உடல் முழுதும் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.

4 அப்பெண் செந்நிற கருஞ்சிவப்பு ஆடைகளை அணிந்திருந்தாள்: பொன், விலையுயர்ந்த கல், முத்து ஆகியவற்றால் அணி செய்யப்பட்டிருந்தாள். அவளது பரத்தைமையின் அருவருப்பும் அழுக்கும் நிறைந்த பொன் கிண்ணம் அவளது கையில் இருந்தது.

5 மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதப்பட்டிருந்தது: “பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும் மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே தாய்” என்பதே அதன் பொருள்.

6 அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருக்கக் கண்டேன். நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன்.

7 அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: “நீ வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.

8 நீ கண்ட விலங்கு முன்பு உயிரோடு இருந்தது: இப்போது இல்லை. படுகுழியிலிருந்து அது ஏறிவரவிருக்கிறது: ஆனால் அழிந்துவிடும். உலகம் தோன்றியமுதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள்: ஏனெனில் அது முன்பு உயிரோடு இருந்தது, இப்பொழுது இல்லை. ஆனால், மீண்டும் உயிர் பெற்று வரும்.

9 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது: அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்: ஏழு அரசர்களையும் குறிக்கும்.

10 இந்த அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர். இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார். இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை. அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய முடியும்.

11 முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த விலங்கு எட்டாவது அரசரைக் குறிக்கும். அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும் அழிந்துவிடுவார்.

12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை. ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.

13 அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள்.

14 அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால், அது அவர்களை வென்றுவிடும்: கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்: ஏனெனில் ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர். ”

15 வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.

16 நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்: அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.

17 ஏனெனில் கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.

18 நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும். ”

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com