யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 8

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

அதிகாரம் 8

1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.

2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.

3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.

4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.

5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.

6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.

7 முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது: மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது: பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது.

8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.

9 கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது: கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.

10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.

11 அந்த விண்மீனுக்கு எட்டி" என்பது பெயர். ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். "

12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது: பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று.

13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், “மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!” என்று கத்தக் கேட்டேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com