யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 6

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

00:00/00:00
Error loading: "http://www.anbinmadal.org/etb/newtestament/revelation/etb-revelation-6.mp3"

அதிகாரம் 6

1 பின்னர் ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது “வா” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன்.

2 உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது. அவருக்கு வாகை சூட்டப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கொள்ள அவர் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

3 ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் இரண்டாவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.

4 அப்பொழுது சிவப்புக் குதிரை ஒன்று வெளியே வந்தது. அதன்மேல் ஏறியிருந்தவருக்கு, உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது: பெரியதொரு வாளும் அளிக்கப்பட்டது. மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.

5 ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது”வா” என்று அழைக்கக் கேட்டேன்: தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது.

6 நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, “ஒரு தெனாரியத்துக்கு கோதுமை அரைப்படி: வாற்கோதுமை ஒன்றரைப் படி: எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது.

7 ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.

8 தொடர்ந்து வெளிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரின் பெயர் சாவு. பாதாளமும் அவரோடு சென்றது. வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும் மண்ணுலகின் விலங்குகளாலும் உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

9 ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின் அடியில் கண்டேன்.

10 அவர்கள் உரத்த குரலில், “தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கேட்டார்கள்.

11 அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

12 ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது. நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது.

13 பெரும் காற்று அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன.

14 சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.

15 மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் ஆகிய அனைவரும் குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டார்கள்.

16 அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும், “எங்கள்மீது விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும் ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்:

17 ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?” என்று புலம்பினார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com