யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 2

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

அதிகாரம் 2

1 எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ' தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:

2 உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.

3 நீ மனவுறுதி கொண்டுள்ளாய்: என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்: ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

4 ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.

5 ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்: மனம்மாறு: முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம் மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

6 இருப்பினும் உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.

7 கேட்கச்செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன். '

8 “சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே:

9 உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால் உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல: சாத்தானுடைய கூட்டமே.

10 உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.

11 கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது. '“

12 “பெர்காமில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே:

13 நீ எங்குக் குடியிருக்கிறாய் என நான் அறிவேன். அங்கேதான் சாத்தானின் அரியணை உள்ளது. நீ என் பெயர் மீது உறுதியான பற்றுக் கொண்டுள்ளாய்: சாத்தான் குடியிருக்கும் இடத்தில், நம்பிக்கையுள்ள என் சாட்சியான அந்திப்பா உங்கள் நடுவே கொலை செய்யப்பட்ட காலத்தில்கூட நீ என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகவில்லை.

14 ஆயினும் உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு: பிலயாமின் போதனையில் பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர். இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள் இடறிவிழும்படி செய்யப் பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன். அதனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.

15 இதுபோலவே நிக்கொலாயரின் போதனையில் பிடிப்புள்ள சிலரும் உன் நடுவில் உள்ளனர்.

16 ஆகவே மனம்மாறு. இல்லையேல், நான் விரைவில் உன்னிடம் வருவேன்: என் வாயிலிருந்து வெளிவரும் வாள்கொண்டு அவர்களோடு போர்தொடுப்பேன்.

17 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை வெற்றி பெறுவோருக்கு அளிப்பேன்: வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும் அப்பெயரை அறியார். '

18 “தியத்திராவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'தீப்பிழம்பு போன்ற கண்களும் வெண்கலம் போன்ற காலடிகளும் கொண்ட இறைமகன் கூறுவது இதுவே:

19 உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, நம்பிக்கை, திருத்தொண்டு, மனவுறுதி ஆகியவை எனக்குத் தெரியும்: நீ இப்பொழுது செய்துவரும் செயல்கள் முதலில் செய்தவற்றைவிட மிகுதியானவை என்பதும் தெரியும்.

20 ஆயினும் உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. இசபேல் என்னும் பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய். தான் ஒரு இறைவாக்கினள் எனக் கூறிக்கொள்ளும் அவள் என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து அவர்கள் பரத்தைமையில் ஈடுபடவும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து வருகிறாள்.

21 அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ தன் பரத்தைமையை விட்டு மனம்மாற விரும்பவில்லை.

22 இதோ, அவளைப் படுத்த படுக்கையாக்குவேன். அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை விட்டுவிட்டு மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன்.

23 அவளுடைய பிள்ளைகளைக் கொன்றொழிப்பேன். அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆய்கிறவர் நானே என்பதை எல்லாத் திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்.

24 தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. “சாத்தானின் ஆழ்ந்த ஞானம்” எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.

25 நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் நான் வரும்வரை பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்.

26 என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும்,

27 “வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன். அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்:

28 குயவர்கலத்தைப் போல நொறுக்குவார்கள். ” விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.

29 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். ”

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com