யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

அதிகாரம் 1

1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.

2 அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார்.

3 இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

4 ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

5 இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்: மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.

6 ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

7 இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

8 “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.

10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.

11 “நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.

12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.

13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.

14 அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.

15 அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது.

16 அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.

17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.

18 வாழ்பவரும் நானே. இறந்தேன்: ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.

19 எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.

20 எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவே: ஏழு விண்மீன்கள் ஏழு திருச்சபைகளின் வான தூதர்களையும், ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு திருச்சபைகளையும் குறிக்கும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com