செபம் செய்வோமா?

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே-ஆமென்.



தந்தை


1990களில் வெளிவந்த திரைப்படக் கதை, பிறக்கும்போது தாயைப் பறிகொடுத்த பிஞ்சுக்குழந்தையை அதன் தந்தை வளர்த்து வருகிறார். ஒரு நாள் குழந்தையைத் தன் மார்பில் அணைத்தபடி வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க கடையை நோக்கிப் பேருந்திலே சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்சி மாற்றத்தால் கோபம் அடைந்த ஆளும் கட்சியினர் வன்முறை இக்குழந்தையும் தந்தையும் சென்று கொண்டிருந்தப் பேருந்தை அடித்து உடைக்கின்றனர். தந்தைக்கு பயமென்றாலும் தந்தையின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த குழந்தை சிரித்துக் கொண்டிருக்கிறது.

அவ்விடத்தைச் சுற்றிலும் ஆயிரம் வன்முறைகள் நடந்தாலும் , அக்குழந்தையோ நான் என் தந்தையின் அரவணைப்பிலிருக்கிறேன். என் தந்தையின் உடனிருப்பில் இருக்கிறேன். எனக்குக் கவலையில்லை” - இறைவன் நம்மோடு என்ற உடனிருப்பு நம்பிக்கையைக் கொடுக்கிறது

முதலில், நாம் முன் நெற்றியில் தந்தை' என்றவாறு வரையும் அடையாளம், நம் தந்தையாகிய கடவுளை நமக்கு நினைவுப்படுத்துகிறது.

  • கடவுள் யார்? நம்மைப் படைத்து, பாதுகாத்து, பராமரிப்பவர் வாழ்வின் முதலும் முடிவுமானவர். எனவே, எம்மைப் படைத்து, பாதுகாத்து, பராமரிக்கும் கடவுளே! உமக்கு நன்றி என்று மனதில் சொல்ல வேண்டும்.
  • கடவுள் நம்மை இந்த உலகத்திற்கு நம் பெற்றோர் வழியாகக் கொடுத்திருக்கிறார். எனவே தந்தை என்று சொல்லும் போது நம் பெற்றோரையும் நினைவில் கொண்டுவர வேண்டும். அவர்களை இறைவனிடம் ஒப்புக்கொடுத்து செபிக்க வேண்டும்.
  • நம் பெற்றோருக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவும், அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தரவும், இறையடி சேர்ந்திருந்தால் நிலைவாழ்வு பெறவும் இறைவனிடம் மன்றாட வேண்டும்.

தாய் தந்தைக்காக நன்றி

  • இறைவா! அன்பான பெற்றோருக்காக நன்றி.
  • இறைவா! அன்றாடம் என் வாழ்வு உயர அவர்கள் மேற்கொள்ளும் தியாகத்திற்காய் நன்றி.
  • இறைவா! என் பெற்றோருக்கு உழைக்க நல்ல உடல் நலம் கொடுத்தமைக்காக நன்றி.
  • இறைவா! என் பெற்றோருக்கு நல்ல வேலைவாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதற்காக நன்றி.
  • இறைவா! என் பெற்றோரின் அன்பான பண்பான பாசமான பகிர்வான விட்டுக் கொடுக்கின்ற கட்டி அணைக்கின்ற இல்லற வாழ்வின் பண்புகளுக்காய் நன்றி.

தாய் தந்தைக்காக வேண்டுதல்

  • இறைவா! உமது கொடையான என் பெற்றோரை நான் அவர்கள் இயல்பிலேயே ஏற்றுக்கொள்ள வரம் தாரும்.
  • இறைவா! என் பெற்றோருக்கு நல்ல உடல் உள்ள நலன்களை நாளும் பொழிந்திடும்.
  • இறைவா! அவ்வப்போது என் பெற்றோர் மத்தியில் எழும் புரிந்து கொள்ளாதத் தன்மைகளை மாற்றிடும்.
  • இறைவா! என் பெற்றோர் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்ந்திட உதவிடும்.
  • இறைவா! என் பெற்றோர் குடும்ப நலனுக்காய் மேற்கொள்ளும் முயற்சிகளை நிறைவாய் ஆசீர்வதியும்.