merry christmas

பிறப்பு சாபமாகிறதோ!

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

சந்திக்க வந்த பெற்றோர், சமீபத்தில் தங்களது மூத்த பெண் சிறுகுழந்தையை இழந்தவர்கள். அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அழைத்து வந்தவர்கள் தங்களுக்கு ஒரு பெண் குழந்தைத் தத்து எடுக்க உதவுங்கள் எனக் கேட்டனர்.

ஆறுதல் சொல்லி, வழிமுறைகளை விளக்கிக் கூறிக் கொண்டே ஆறு வயது சிறுவனைப் பார்த்து, “தம்பி அக்கா இறந்துப் போனார்களே, அவர்களுக்குப் பதிலாகப் பெற்றோர் ஒரு தங்கச்சியைத் தத்து எடுக்க விரும்புகிறார்கள், உனக்கு அது சந்தோஷம் தானே?” எனக் கேட்டமாத்திரத்திலே சிறுவனின் பதில், “எனக்கு அது பிடிக்கவில்லை” என்றான். எங்களுக்கோ அதிர்ச்சி. “என்னப்பா, ஏன் இப்படிச் சொல்லுகிறாய்?” எனக் கேட்டதற்கு, “இன்னொரு தாய் பெற்றவளை எனக்குத் தங்கையாக்கவா? அஃது எப்படி முடியும்? நடக்காது, விடமாட்டேன்” என்றான் சிறுவன். “தத்து எடுப்பது என்ன என்று உனக்குத் தெரியுமா?” என்றதற்கு “இவங்க வீட்டில் பேசும் போதே புரிந்து கொண்டேன். என்னுடைய கருத்தை அவங்கக் கேட்கவில்லை. நீங்க கேட்டிங்க நான் சொல்லுகின்றேன். இது நடக்காது. நடக்க விடமாட்டேன். எங்க அம்மாவுக்குப் பிறந்தால் சாமி, இல்லையென்றால், வேறு தங்கை எனக்கு வேண்டாம்” என உறுதியாகச் சொன்னான்.

கருவறைக் கல்லறையாக்கப்பட்ட காலம் போய், இன்றைக்குக் கள்ளக் காதலால் குழந்தைப் பெற்று, தொட்டில் குழந்தைத் திட்டத்தால் தூக்கியெறியப்படும் குழந்தைகள், மணமுறிவு நிலையால் பரிதாபமாகத் தாயோடு அல்லது தகப்பனோடு தனித்து விடப்படும் குழந்தைகளால் இன்றைக்குத் தலைநிமிர இயலாத நிலையால், இவர்களின் பிறப்புச் சாபமோ என்று கேட்கத் தோன்றுகின்றது.

இச்சையைக் கட்டுப்படுத்தாத நிலை. எப்படியும், யாருடனும் உறவுக் கொள்ளலாம். நெறிப்படுத்த தெரியாத பாலுணர்வு. கலாச்சாரச் சீரழிவினால், காமக் களியாட்டங்கள். ஊடகத்தை முறைப்படுத்தாத நிலையினால் ஊட்டப்படும் போதை எனப் பல காரணிகளால் இன்று பிறப்புச் சாபமாகின்றதோ என்று கேட்டுப் பார்க்கத் தோன்றுகின்றது.

பாவத்தால் விளைந்த சாபத்தைப் போக்க மனுவுருவெடுத்த இயேசுவின் பிறப்புக் கொண்டாட்டம், வாழ்வில் தொடரும் பாவத்தைப் போக்கவும், அதனால் விளையும் சாபத்தைப் போக்கவும் ஞானம் அருள மன்றாடுவோம்.

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா., பணியாளர், பாவூர்சத்திரம் - 627 808.